பேரறிஞர் அண்ணாவின் ஆளுமை

திராவிடர் தலைவர்; இந்த நாட்டின் செல்வம்; சிந்தை அணு ஒவ்வொன்றும் சிலிர்த்திடச் செய்யும் செந்தமிழ்க் காவலர்; சிங்க நடையும், சிங்காரத் தென்றல் நடையும், பொங்கு கடல்நடையும், புரட்சிக் கவிநடையும், புதிய உரைநடையில் கண்ட பூமான்; பூரிப்பால் தம்பிமார் படை மீது விழியோட்டும் கோமான்; தங்கத்துள் தங்கம் தனித் தங்கம் அறிஞர் அண்ணா அவர் புகழ் வாழ்க!

அண்ணாவினுடைய ஆளுமை எனும் பொழுது, தலைவர் சொன்ன Multiple Personality என்ற பொருளில் சொன்னது தவறில்லை. ஆனால் நான் நினைத்தப் பொருள். அதற்கு நான் கூறும் பொருள். அண்ணாவினுடைய Personality. Total Personalityயை சொல்வது எனது நோக்கம்.

மகாத்மா காந்தி சொன்னார், வாழ்க்கை என்பது முழுமையானது. மனித வாழ்க்கையை நீங்கள் கூறுபோட்டுப் பார்க்கக்கூடாது என்று. நான் பேசுகிறபோது பேச்சாளர் ஓர் இராமலிங்கம், வழக்கறிஞர் ஓர் இராமலிங்கம், ஒரு இராமலிங்கம் தந்தை, ஒரு இராமலிங்கம் படித்தவன், ஒரு இராமலிங்கம் அண்ணன், ஒரு இராமலிங்கம் தம்பி, ஒரு இராமலிங்கம் அரசியல்வாதி என்றில்லை. ஒரே இராமலிங்கம் தான் இத்தனையும் செய்கிறான். அப்படி வாழ்க்கையை முழுமையாகப் பார்க்கவேண்டும்.

அந்தப் பொருளிலே நான் அண்ணாவை முழுமையாகப் பார்க்கிறேன். முழுமையாக அறிய வேண்டுமென ஆசைப்படுகிறேன்.

ஏனென்றால், அண்ணாவின் வாழ்க்கை என்பது முழுமையாக அறியப்படவேண்டியது. அவருடைய வாழ்க்கையில் மறைக்கப்பட வேண்டியது எதுவுமில்லை. அவர் வாழ்க்கையில் பொய் சொல்ல வேண்டியதில்லை. அவர் வாழ்க்கையில் நடந்ததை நீங்கள் அப்படியே சொல்லுங்கள்.

எது தேவை, எது தேவையில்லை. அவர் பெரியவரா, சின்னவரா என்கிற விஷயத்தை கேட்பவர் முடிவு செய்வார். அண்ணாவின் வாழ்க்கையில் மறைத்துச் சொல்ல வேண்டியது எதுவுமில்லை.

அண்ணா எழுதியதும் பேசியதும் பொதுமக்களுக்காக. அவர் இரகசிய கிரந்தம் எழுதவில்லை. அவர் பேனா எழுதியதெல்லாம் மக்களுக்காக. அவர் பேசியதெல்லாம் மக்களுக்காக. சொல்வதற்காகத் தான் அவர் வாழ்ந்தார். மறைப்பதற்கு என்று அவரிடம் ஒன்றுமில்லை. எனவே, அவரை முழுமையாகப் பார்ப்பது நல்லது. பார்க்கமுடியும். பலருடைய வாழ்க்கையை முழுமையாகப் பார்க்க முடியாது. அதற்கு பயப்படுபவர்கள் பார்க்க முடியாமல் போகலாம்.

அண்ணாவின் ஆளுமை என்ன என்று அறிய அவர் மறைவை நினைத்துப் பாருங்கள். இரண்டாண்டு காலம் மட்டுமே முதலமைச்சராக இருந்தார். அதில் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் நோயாளி. அவருடைய இறுதிக்காலத்தில் படுக்கையில் கிடந்தார். அவர் முழுமையாக ஆண்டது ஓராண்டு ஒன்றரை ஆண்டாக இருக்கலாம்.

ஆனால், அவர் மறைந்த பொழுது உலக வரலாற்றில் மிக அதிகமான மக்கள் கலந்துகொண்ட சவ ஊர்வலம் அண்ணாவின் இறுதி ஊர்வலம் என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதிவாகியுள்ளது.

அவர் மறைந்தபோது தமிழகம் அழுதது. இது வெறும் கற்பனையல்ல, அலங்காரமல்ல, பச்சை உண்மை. அண்ணா மறைந்தபோதுதான் தமிழகத்தில் உள்ள அத்தனை மக்களும் சென்னைக்கு வரவேண்டுமென்று வந்தார்கள். யாரும் திட்டமிடாமல் யாரும் சொல்லிக் கொடுக்காமல், கிடைத்த வாகனத்தில் வந்தார்கள். லாரியிலே வந்தார்கள், பேருந்திலே வந்தார்கள், இரயிலிலே வந்தார்கள், இரயிலின் கூரை மீது வந்தார்கள். அதிகாரிகள் சொன்னதைக் கேட்காமல் வந்ததால் சிதம்பரத்தின் பக்கத்தில் 70 பேர் இறந்தனர். அண்ணா நோய்வாய்ப் பட்டுள்ளார் என்பது தமிழகத்திற்குத் தெரியும். அவர் இறந்து விட்டதாக ஒரு வாரத்திற்கு முன்னதாகவே செய்தி வந்தது.

அங்கே இருந்த டாக்டர் சாந்தா, அவருக்கு செயற்கை சுவாசம் தந்து பிழைக்கவைத்தார். மீண்டும் ஒரு வாரம் உயிர்ப்பிழைத்தார். ஆக தமிழ்நாட்டு மக்களுக்கு அண்ணா சாகக்கிடக்கிறார் என்பது தெரியும். இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டபோது மக்களால் அதைத் தாங்கமுடியவில்லை.

அவர் உடலைப் பார்ப்பதற்கு லாரியிலும், பேருந்திலும், இரயிலிலும் வந்த கூட்டம் எவ்வளவு பெரிய கூட்டம்! வந்தவர்கள் மட்டுமல்ல. என்னைப் போல் வராதவர்களும் உண்டு. இருந்த இடத்தில் எத்தனை பேர் செத்தனரோ?

அண்ணாவின் உடல் ராஜாஜி ஹாலில் உள்ள வைக்கப் பட்டது. உள்ள வைத்த உடனே கூரைமேல் ஏறி அவர்கள் கையாலேயே கூரையைப் பெயர்த்தனர். அண்ணாவின் உடம்பில் ஒரு கல் விழுகிறது. அதற்குப் பிறகுதான் நமது திருச்சி ராபின் என்னையா உள்ள வச்சிருக்கிங்க, வெளியே வைங்க என்று சொன்ன பிறகு அண்ணாவை வெளியே கொண்டுவைத்தார்கள்.

அண்ணாவைப் பார்க்கவும் அண்ணாவின் உடலைத் தொட்டுவிடவும் அவ்வளவு ஆசை.

அடங்கொணாதப் பாசமும் அந்தப் பரிவும் இருந்ததால் அந்தத் துன்பத்தை அவர்களால் தாங்கமுடியவில்லை.

வெளியே அண்ணாவின் உடலை வைத்தவுடன் கட்டுமஸ்தான உடலுடைய எட்டுப்பேர் அண்ணாவைப் பார்த்தவுடனே அந்த இடத்தில் செத்தனர். இது வரலாறு. பார்க்க வந்தவர் அண்ணாவின் உடலைப் பார்க்க முடியவில்லை. எத்தனை பேர் வந்தார்கள்! கோடீஸ்வரன் வந்தான், பஞ்சைப் பராரி ஏழைகள் வந்தார்கள், கிறிஸ்தவன் வந்தான், முஸ்லீம் வந்தான். இந்து வந்தான்.

பரம நாத்திகனான அண்ணாவுக்கு எல்லா கோயில்களிலும் பூசை செய்து அவருக்குத் திருநீறும் பிரசாதமும் அனுப்பப்பட்டன. தேவலாயங்களிலே பிரார்த்தனை நடந்தது. பள்ளிவாசலிலே தொழுகை நடந்தது. அந்த நாத்திகனுக்கு ஏன் அப்படி நடந்தது? .இராமமூர்த்தி நாடாளுமன்றத்தில் அண்ணா இறப்பைப் பற்றி பேசும்போது, ஏழைகள் அடித்துக்கொண்டு அழுதார்கள அதைவிட என்ன மரியாதை நாம் செய்யமுடியும் என்றார். கேரளத்தின் அமைச்சர் நம்பூதிரி பாத் தலையில் துண்டுப் போட்டுக் கொண்டு அண்ணாவின் சவ அடக்கத்தில் வெய்யிலில் நின்றார். அவ்வளவு பேரும் கதறி, கதறி அழுதார்கள். அது ஏன் நடந்தது? எப்படி இத்தனை மக்கள் கூடி அழுதார்கள்? என்ற கேள்வியை நீங்கள் கேட்டால் எது வெளிப்படுகிறதோ அது அண்ணாவின் ஆளுமை. அண்ணா யார் என்பதை அவர் மறைவிலே தெரிந்து கொள்ளலாம்.

உலக வரலாற்றில் இல்லாத அளவுக்கு இப்படி மக்கள் இறுதி ஊர்வலத்திற்கு வரக்காரணம் என்ன? ஒரே காரணம். இந்த மக்கள் நம்மை வாழ்விக்க வந்த, நம்மை கடைத்தேற்ற வந்த, நமக்கென்று பொது வாழ்க்கையில் உள்ள ஒரே தலைவன் பேரறிஞர் அண்ணா என்று அவர்கள் உள்ளத்திலே எழுதப்பட்டு விட்டது. அந்த நம்பிக்கையோடு அண்ணாவைப் பார்த்தார்கள். அவர் நெற்றியிலே எழுதப்பட்டிருந்தது. மக்களுக்கு முன்னால் நான்தான் உங்களுக்கு இருக்கிற மனிதன் என்ற அந்த நெற்றியில் எழுத்து பொறிக்கப்பட்டு இருந்தது. அதைத்தான் மக்கள் பார்த்தார்கள்.

அண்ணா அவர்கள் அதை உருவாக்கி காப்பாற்றி வைத்திருந்தார். ஏனென்றால், அவர்களுக்காகவே பொது வாழ்க்கையில் இருந்தார். நமக்கென்று இருக்கின்ற ஒரே தலைவன் போய்விட்டானே இனி நமக்கு கதி யார்? எனக் கதறி அழுதார்கள்.

இனி அந்த அழுகையை வேறொரு தலைவனுக்கு இனியாரும் அழப்போவதில்லை. ஏன் அப்படி அழுதார்கள். அப்படி அழச் செய்தது என்ன?

அவர் என்ன கடவுளின் அவதாரமா? வரம் வாங்கி வந்தவரா? ஒரு ஏழை நெசவாளிக் குடும்பத்தில் பிறந்தவர். அவருக்கு என்று பின்னணி இல்லை. பெரிய வரலாறும் இல்லை. அவர் வீட்டில் யாரும் படித்தவர் இல்லை. அவருக்கு உயர்ந்த எண்ணங்கள உருவாக்கி பயிற்சி தர ஆளில்லை. மூன்று தாய்களுக்கு ஒரு ஆண்மகன். பட்டம்மாள், பங்காரம்மாள், இராசாமணி அம்மையார் என்ற மூன்று அக்காள் தங்கைக்கு கிடைத்த ஒரே பிள்ள அண்ணா.

அவருக்கு எதிர்காலத்தில் புகழ் உறவு வரப்போகிறதோ என்னவோ, என தெரிந்தே அண்ணாதுரை என்று பெயர் வைத்தனரோ, அந்தப் பெயரே உறவை மக்களிடம் உருவாக்கியது. அப்படிப்பட்ட ஏழைக் குடும்பத்தில் பிறந்த அண்ணா, இறக்கும்போது தமிழக மக்களின் அன்பை அள்ளிக்கொண்டு போனது அவர் வாழ்க்கையில் செய்த சாதனை.

இந்திய வரலாற்றில் யாருடனும் சண்டையிடாமல், பதவிக்குப் போட்டியிடாமல், வஞ்சனை செய்யாமல், பொய் சொல்லாமல், ஏமாற்றாமல், எந்த எத்துத்தனமும் செய்யாமல் தலைவர்களாக மலர்ந்தவர்கள் இரண்டே பேர், ஒன்று அண்ணா மற்றொருவர் மகாத்மா. தாமரை மலர் இருக்கிறது. அது மொட்டாக இருக்கிறது, மொட்டு மலர்ந்து பிறகு முழு மலராகிறது. மலர்வது என்பது அந்தத் தாமரைச் செடியின் பண்பு. அதனுடைய இயற்கை. தான் மலர்வதற்காக அது யாரையும் அழுந்துவதில்லை. யாருடனும் அது போட்டி போடுவதில்லை. தன்னுடைய உள்ளீடாக உள்ள பண்பு இருக்கிறது. அந்தப் பண்பு வெளிப்படுகிறது. இயல்பாக அது மலர்வதற்காகச் சண்டைபோடுவதில்லை. அவ்வாறு தலைவர்களாக மலர்ந்தவர்கள் தான் மகாத்மாவும், அண்ணாவும். அவர்கள் தலைவர்களாக மலர்நததை மக்கள் அடையாளம் கண்டு கொண்டு தங்கள் தலையிலே வைத்துக் கொண்டார்கள். தலைவராக அவர்கள் போட்டி போட்டவர்கள் இல்லை. யாரை வஞ்சித்தார்கள்? யாருடன் சண்டை போட்டார்கள்? இல்லை. காங்கிரஸ் இயக்கம்? அதற்கு முன்னதாகவே இருந்தது. இருக்கிற இயக்கத்துக்குள்ள மகாத்மா வந்தார். தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். அவருடைய இறுதிக்காலத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கூட இல்லை. ஆனால், அவரில்லாமல் காங்கிரஸ் இல்லை என்ற நிலை உருவாகியது.

அதைப்போல தந்தை பெரியார்தான் திராவிடர் கழகத்தின் தலைவர். சுயமரியாதை இயக்கத்தின் தலைவர். அண்ணாவின் பொது வாழ்க்கை நீதிக்கட்சியில்தான் தொடங்கியது.

பெரியாரை தலைவராக்கி நீதிக்கட்சியை திராவிடர் கழகம் எனப் பெயரை மாற்றினர். திராவிடர் கழகம் என்ற பெயரைக் கொடுத்து அதற்கு கருப்பு வண்ணக் கொடியை உருவாக்கியவரும் அண்ணாதான். பெரியாரை வாழ்நாள் தலைவர் என அறிவித்து அதற்கு ஆதரவு திரட்டியவரும் அண்ணாதான். தான் பதவிக்கு வரவேண்டுமென்று அவர் எதுவுமே செய்யவில்லை. தனக்குத் தலைவர் பெரியார் என்று சொல்லிக் கொண்டார்.

அண்ணா, தமக்குத் தலைவர் பெரியார் என்று சொன்னார் மக்கள், தமக்குத் தலைவர் அண்ணா என்று ஏற்றுக்கொண்டனர். திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார், வளர்த்தார், அவர்தான் எல்லாம் செய்தார். அண்ணா உருவாக்கிய குழந்தை, வளர்த்த குழந்தை அவர் கண்ணீரும் செந்நீரும் சிந்தி வளர்த்த குழந்தை, திராவிட முன்னேற்றக் கழகம்.

ஆனால், அந்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நான் தலைவன் என்று அவர் சொன்னதில்லை. என்னுடைய கட்சி என்று சொன்னதில்லை. என்னுடைய சொத்து என்று சொன்னதில்லை. அவர் வாழ்நாளிலே அவரால் உருவாக்கப்பட்ட நாராயணசாமியாக இருந்து இவரால் நெடுஞ்செழியனாக உருவாகியவரை தி.மு.கவிற்குப் பொதுச் செயலாளராக்கினார். பொதுச் செயலாளர் தான் மாநட்டிற்குத் தலைமை தாங்க வேண்டும். எல்லா கூட்டத்துக்கும் தலைமை தாங்கவேண்டும். அந்த அடிப்படையில் திருச்சியில் நடந்த இரண்டாம் கழக மாநாட்டிற்குத் தலைமை ஏற்க வைத்து, தன்னால் உருவாக்கப்பட்ட நெடுஞ்செழியனை தன்னுடைய தம்பியை தலைமை ஏற்கவைத்து இரண்டு வாக்கியம் தான் பேசினார். தம்பி வா, தலைமை தாங்க வா, ஆணையிடு உம் வழி நடக்கிறோம் என்று சொன்னார். மூன்றே மூன்று சின்ன வாக்கியம். அந்த வாக்கியத்தில் உள்ள பொருள் என்ன? நெடுஞ்செழியன் தம்பிதான். ஆனால் அண்ணா சொன்னார், நான் ஒரு கட்சியின் உறுப்பினர். எனவே உன்னுடைய ஆணைக்கு நான் கட்டுப்படுகிறேன் என்றார். இந்தக் கட்சி என்னுடையது என்று அவர் சொல்லவில்லை, கருதவில்லை.

தி.மு.க. ஒவ்வொரு கட்சித் தொண்டனுக்கும் சொந்தம் என்றுதான் வளர்த்தார். உழைப்பு, அறிவு, ஆற்றல் எல்லாம் அண்ணாவுடையது. ஆனால், அந்தக் கழகம் கட்சித் தொண்டனுக்கு சொந்தமானது. பிறகு கட்சித் தொண்டனுக்கும் தாண்டி மக்களுக்குச் சொந்தமானது. அண்ணா அறிவித்தார்: இந்த இயக்கம் உங்களுடையது; நீங்கள் விரும்பினால் இது செயல்படும்; நீங்கள் விரும்பாவிட்டால் இது செயலற்றுப் போகும் என்று. ஏனென்றால் கழகமே பொது மக்களுக்காக; கழகமே பொதுமக்கள் சொத்து. அப்படி உருவாக்கப்பட்டது கழகம்.

அவர் பொது வாழ்விற்கு வந்தது எதற்காக? அந்தப் பின்னணியைப் பாருங்கள். அவரைப் படிக்க வைத்தது எதற்காக? அவர் பண்டித நேரு அல்ல. டாக்டர் மோகன் குமாரமங்கலம் அல்ல, கோடிக்கணக்கான ரூபாய் குவித்து வைத்த மோதிலால் நேருவின் செல்லப்பிள்ள பண்டிதநேரு. அவர் சம்பாதித்து வீட்டில் அடுப்பு எரிய வேண்டாம். எல்லாம் கோடீஸ்வர வீட்டுப் பிள்ளகள். அது தியாகம் இல்லை என்று சொல்லவில்லை. ஆனந்தபவனையே கொடுத்தார்கள். அந்தத் தியாகத்தில் அவர்கள் வீடு பட்டினி கிடக்காது, வறுமை இருக்காது.

ஆனால் அண்ணா ஏழை வீட்டிலே பிறந்து, இந்தக் குடும்பத்தை வாழ வைப்பார் என்று படிக்க வைக்கப்பட்ட பிள்ள. பச்சையப்பன் கல்லூரியில் கிடைத்த உதவித் தொகையை வைத்துக்கொண்டு எம்.ஏ. படித்தார் அண்ணா. அவருக்குப் பணம் தேவை, வேலை தேவை, அந்தக் குடும்பத்துக்கு சம்பாத்தியம் தேவை. அப்படிப்பட்டச் சூழலில் அண்ணா வேலை தேட முயற்சி செய்தார்.

குமாஸ்தா வேலை பார்த்தார், பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தார், அவ்வளவு பெரிய ஜீனியஸ், அங்கே போய் வேலை செய்ய இயலுமா? பாசுதேவ் என்கிற நீதுக்கட்சி மற்றும் தொழிற் கட்சித் தலைவராக இருந்தவருக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தார். இவர் இல்லாமல் அவர் பேசுவதே இல்லை. இப்படி வளர்ந்தவர், பிறகு நீதிக்கட்சியில் செயலாளராக வந்தார். வேலை வேண்டும் என்கின்ற போது குமார ராஜா சர் முத்தையா செட்டியார் தமக்கு உதவியாளராக இருக்கச் சொன்னார். ஆனால், அண்ணா அவர்கள் ஏழ்மையில் இருந்தாலும் கோடீஸ்வரன் பக்கத்தில் இருக்க முடியவில்லை.

இவர் மக்களுக்குச் சேவை செய்ய வந்த தலைவர். அவர் எப்படி மற்றவரிடம் கைகட்டி வேலை செய்வார்? இறுதிக்காலம் வரை எந்தப் பணக்காரனுக்கும் கையாளாக வாழவில்லை; இறுதிவரை பணக்காரருடைய ஆதரவில் அவர் வாழவில்லை என்பது மட்டுமல்ல தன்னுடைய கழகத்தை எந்த பணக்கார ஆதரவாளனாலும் வளர்க்கவில்லை. அவர் காலத்தில் எந்த பணக்காரனிடமும் ரூ.5,000/, ரூ.10,000/ என்று நிதி சேர்த்தது இல்லை. இது வரலாறு.

இன்றைய தேர்தலில் நிற்கிற வேட்பாளரிடம் அறிவிக்கப்பட்ட சொத்து கணக்கில் அறுவரில் ஒருவர் கோடிஸ்வரன். நமது இந்திய ஜனநாயகம் ஏழை மக்களுக்காக உருவானது. பாமர மக்களுக்காக உருவாக்கப்பட்டது. இதில் அறுவரில் ஒருவர் கோடிஸ்வரன் என்பது அறிவிக்கப்பட்டக் கணக்கு.

கோடிஸ்வரனாக இருந்தால்தான் தேர்தலில் சீட்டுக் கிடைக்கும். இது எல்லாக் கட்சிக்கும் இலக்கணம். எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல. ஆனால் ரூ.5,000/, ரூ.10,000/ என்று ஒரு பணக்காரனிடமும் அண்ணா பணம் வாங்கவில்லை. அதுமட்டுமல்ல பணக்காரன் கையிலிருந்து வாங்குகின்ற பணம் குஷ்ட ரோகியின் கையிலிருந்து வாங்கும் வெண்ணெய்க்குச் சமம் என்றார். இது அவர் கடைப்பிடித்தக் கொள்கை.

அவர் சொன்னார் ஆங்கிலேயர் வீட்டில் ஒரு வாசகம் இருக்கும். Long Live the king என்று எழுதப்பட்டிருக்கும். படம் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் அந்த வாசகம் அப்படியே இருக்கும். அதுபோல் இந்த நாட்டில் பணக்காரனுடைய வீட்டில் ஒரு வாசகம் இருக்கிறது. அது நாங்கள் அரசாங்கத்தின் பக்கம் என்று அரசாங்கம் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் அந்த வாசகம் அப்படியே இருக்கும் என்று சொன்னார்.

அப்படி பணக்காரர்கள் யாரிடமும் கையேந்தவில்லை. வெளிப்படையான ஒரு செய்தி, விருகம்பாக்கம் மாநாட்டில், 1967இல் முழு வெற்றி அடைவதற்கு முன்னால் கூடிய மாநாட்டில், அப்போது தி.மு.க.வின் ஒட்டுமொத்த தேர்தல் நிதி வெறும் 11 இலட்சம் ரூபாய். 234 தொகுதிக்கான தேர்தல் நடத்த நிதி 11 இலட்சம்.

அகில இந்திய காங்கிரஸ் அகில இந்தியாவையும் ஆட்டிப் படைக்கும் சக்தி; கோடிஸ்வரன் கட்சி அதை எதிர்த்து நிற்கும் தி.மு.க.வுக்கு 11 இலட்சம் மட்டுமே தேர்தல் நிதியாக இருந்தது.

அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் விருகம்பாக்கம் மாநாட்டில் மேடையில் நான் கழகத்திற்குத் தேர்தல் நிதியாக இரண்டு இலட்சம் ரூபாய் தருகிறேன் என்று அறிவித்தார்.

அண்ணா அவர்கள் மாநாட்டில் நீங்கள் கொடுக்கும் இரண்டு இலட்சம் வேண்டாம் என்றார். கழகத்தைக் காக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் முகத்தை காட்டினால் முப்பது இலட்சம் ஓட்டு கிடைக்கும். நடந்து போங்கள் நாற்பது இலட்சம் ஓட்டு கிடைக்கும் என்று இங்கிதமாகச் சொன்னார்.

நான் இதை மேடைகளில் பல இடங்களில் எம்.ஜி.ஆர். கொடுத்தப் பணத்தை வேண்டாம் என்றார் என்று சொல்லியிருக்கிறேன். ஏன் சொன்னார் என்று பலருக்குத் தெரியாது.

நான் சொன்ன விளக்கம் இதுதான். எந்த ஒரு தனிமனிதனிடமும் தி.மு.க. அடகு வைக்கப்படக்கூடாது என்று அண்ணா கருதினார் என்று பலமுறை சொல்லியிருக்கிறேன். நேரே தெரியாது. அது நேரே உறுதி செய்யப்பட்டது. அண்ணா மறைந்து பல ஆண்டுகள் கழித்தபின் அன்பில் தர்மலிங்கம் என்னிடம் சொன்னார். இது வெளியே தெரியாது. யாரும் பதிவு செய்யாதது. அவர் சொன்னது. அண்ணாவுடைய செல்லப்பிள்ள அன்பில் மறுநாள் காரில் சென்று கொண்டு இருக்கும் போது, என்னங்க அண்ணா நீங்க, நம்பகிட்ட பணமே இல்லை. அவருக்குப் பணத்துக்கு பஞ்சம் இல்லை. பணம் தரேன்னு சொன்னார். வேண்டாமுன்னு சொல்லிட்டிங்கள என்றார் அன்பில்.
அண்ணா, அறிவு இருக்கா, இன்னிக்குப் பணம் கொடுப்பார்கள். நாளக்கு கட்சி எனக்கு சொந்தம் என்பார்கள் என்றார் அவர். அந்த இரண்டு லட்சத்திற்குப் பின்னால் கழகம் அடிமைப்படுவது அண்ணாவுக்கு தெரிந்தது. இன்றைக்குப் பணம் தெரிகிறது. இலட்சியம் தெரியவில்லை. கூட்டம் தெரிகிறது. கொள்கை தெரியவில்லை.

நாம் என்று ஒரு சின்ன தொகுப்பு இருக்கும். அண்ணா எழுதியது. அதில் நமக்கு பணம் முக்கியமில்லை. மக்கள் மனம் முக்கியம் என்பார். 2000 வேண்டும் என்றால் 4000 பேரிடம் எட்டணா வசூல் செய்யுங்கள். பணத்தை எங்கு வேண்டுமானாலும் வாங்கலாம் பணத்துக்குப் பின்னால் உள்ள அந்த மனம் முக்கியம். இதில் இன்னொரு விஷயம் உண்டு. அதைச் சொன்ன பிறகு மக்களாடு இணைந்து விட்டார். எனவே பணத்தை நம்பி அரசியல் நடத்தவில்லை.

அவர் பணக்காரர் இல்லை. அண்ணா அவர்கள் பணம் இல்லாதவர்கள்தான். புகழ்மிக்க தலைவராக விளங்கியவர். உலகத் தமிழ் மக்களுக்கு எல்லாம் அண்ணா தலைவர். மில்லர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் முன்னால் அவருக்கு ஆயிரக்கணக்கில் தந்தி வந்தது. ஒன்றும் புரியவில்லை. தமிழகத்தில் இருந்து தந்தி சென்றால் பரவாயில்லை. உலகத்தில் உள்ள எல்லா திக்குகளிலிருந்தும், இலங்கை, மலாய், தென்ஆப்பிரிக்காவிலிருந்து அந்த உயிர் தேவை என்று தந்தி அடித்தார்கள். மில்லருக்குப் புரியவில்லை. என் வாழ்நாளில் இப்படியொரு மனிதனுக்கு சிகிச்சை செய்யவில்லை என்று சொன்னார். உலகத் தமிழர்களின் அடையாளம் அண்ணா. ஏனென்றால் தமிழர்களுக்கு தமிழன் யார் என்று அடையாளம் காட்டியவர். நமக்கு நம்மைப் பற்றி சொன்னவர் அண்ணா.

ஏன் அப்படி அவர் இறந்த பொழுது அழுதார்கள் அவருடைய திறமை, அறிவு, ஆற்றல் நமக்காகவே கொடுத்தார். முழுமையாகக் குடும்பத்திற்கு என்று கூட வைத்துக் கொள்ளாமல் தன்னுடைய வாழ்க்கை முழுவதும் மக்களுக்காக அர்ப்பணித்த ஒரு தலைவர் அண்ணாதான்.

அதனால்தான் அந்த மக்களுக்குத் தெரிந்தது அண்ணாவினுடைய சுட்டுவிரல் அசைவுக்குத் தமிழகம் நடந்தது. கற்பனையாகச் சொல்லவில்லை. இரண்டு மூன்று நிகழ்ச்சிகள சொல்ல விரும்புகிறேன்.

கடற்கரையில் அண்ணா பேசுகிறார். பேசுகிறபோது நான் என் சுண்டுவிரலை காட்டுவேன். நீங்கள் எழ வேண்டும். மறுபடியும் காட்டுவேன். உட்கார வேண்டும் என்று சொன்னார். எப்போது என்றால் நேருவுக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடந்தது. அப்போது F.V. அருள் சென்னையின் அப்போதைய கமிஷனர் அண்ணாவை காவல் நிலையத்தில் வைத்து சாதாரண குற்றம் சாட்டப்பட்டவனை நடத்துவதுபோல நடத்தினார். அவர் மரியாதைக்குத்தான் துண்டு போட்டு இருப்பார். அதை எடுத்தார் அருள். அப்புறம் விடுதலையாகி வந்த பிறகு நடந்தது கடற்கரைக் கூட்டம். அப்பொழுதுதான் அந்த சர்க்கஸ் நடத்தினார்.

அப்படி எல்லாம் அண்ணா செய்பவரில்லை. இதை நான் ஏன் செய்தேன் என்றால் ஆளுகிறவர்களுக்கு எனது சக்தி என்னவென்று தெரிவிக்க நான் விரும்பினேன். நம்முடைய போலிஸ் கமிஷனருக்கு அருள் இருக்கிறது பெயரிலேதான். அவர் குணத்தில் அது இல்லை என்றார். இதைக் காட்டுவதற்காக அந்தக் கூட்டம் எழுந்து நின்றது.

அண்ணாவின் ஒவ்வொரு அசைவும், செயலும், சொல்லும் ஒவ்வொரு தொடர்களும், பொதுமக்களுக்குப் போய் சேர்ந்தது.

1962ஆம் ஆண்டு தேர்தலிலே, இன்றைய சென்னைப் பல்கலக்கழகத் தமிழ்த்துறையில் வாக்கு எண்ணுகிறார்கள். நெடுஞ்செழியனுக்கு உதவியாளனாக நான் இருந்தேன். தேர்தல் முடிவுக்கு வெளியே உட்கார்ந்திருந்தோம். ஒரு தோழர் பேசிக் கொண்டிருக்கும்போது எங்கள் பகுதியில் ஒரு சோமாறி இருக்கிறான் சார்; அவன் காங்கிரஸ்காரன்; அடிக்கிறான் சார் என்றார். நீயும் அடிக்க வேண்டியதுதானே என்றேன். அடிச்சிடலாம் ஆனால் அண்ணா மனசு நோகுமே என்றார்.

இவர் ஓர் ஒரு மூலையில் இருக்கிறார். தான் அடித்தால் அண்ணா மனம் நோகுமென்று ஒரு தொண்டன் நினைத்தான். அவர் காந்தியை தலைவராகச் சொன்னதில்லை. ஆனால், உண்மையான காந்திய அஹிம்சைவாதி. அண்ணா, அஹிம்சை என்று வாயால் சொல்லவில்லை. ஒவ்வொரு தொண்டனையும் அஹிம்சையைப் பின்பற்ற வைத்தார். அதற்கு இது சாட்சி. அடிக்கக் கூடாது என்று ஒவ்வொரு தொண்டன் மனதிலும் விதைத்தார் அண்ணா.

ராஜ்ய சபையில் ஒரு உறுப்பினர் மக்களின் நாடித் துடிப்பை தெரிந்த ஒரே தலைவர். மகாத்மாவுக்குப் பின்னால் அண்ணாதான் என அந்த வடநாட்டுத் தலைவர் சொன்னார். எனவே ஒவ்வொருவர் உள்ளத்திலும் தன்னை அவர் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.

அப்படி மக்களாடு ஐக்கியப்படுவதற்கும் மக்கள் இவரோடு ஐக்கியப்படுதற்கும் காரணம் அவரிடம் இருந்த உண்மை. அவர் தாம் நம்பாத விஷயத்தை மக்களுக்குச் சொல்லவில்லை. தாம் நம்புவதற்குரிய செய்திகளச் சொல்ல பயந்ததில்லை. இவர் திராவிட நாடு பிரிவனைக் கேட்டார். பிரிவினையை கைவிட்டார். மீண்டும் தி.மு.க. இருந்தது.

திராவிட நாடு பிரிவினை என்பது எங்கள் இரத்தத்திலே ஊறிப்போனக் கொள்கை. இன்று வரையில் எனது இந்தியா என்று நினைக்க முடியவில்லை. பிரிவினை பேச முடியாது. கேட்டா ஜெயிலுக்குப் போகனும். நான் ஜெயிலுக்குப் போகத் தயார். அது இரத்தத்தில் ஊறிப்போன ஒன்று. ஆனால், என்னை அந்தக் கழகத்தைவிட்டு அண்ணா போகவிடவில்லை.

நண்பர்கள் கேட்பதற்கு என்று புத்தகம் எழுதினார். நான் சொன்னால் கேள் என்று சொல்லுகிற தலைவர் அல்ல. நான் இதைச் செய்தேன். இதில் என்ன லாபம்? இந்தக் கழகத்தைக் காப்பாற்ற வேண்டும். தமிழர்களுக்கு இந்தக் கழகம் வேண்டும். உலகத் தமிழர்களுக்கு அடையாளம் வேண்டும். அதற்கு தி.மு.க. வேண்டும்.

இன்று இலங்கைத் தமிழர்கள் இவ்வளவு துன்பப்படும் போது யாரைப் பார்த்து கேள்வி கேட்கிறார்கள்? கலைஞரைக் கேள்வி கேட்கிறார்கள். ஏன்? கலைஞர் என்பதால் அல்ல. அவர் தமிழனுக்கு என்றிருக்கிற பேரியக்கத்தின் தலைவர்; உனக்கு கடமை இருக்கிறது; ஏன் இதைச் செய்யவில்லை என்று உரிமையுடன் கேட்கிறான். இந்த முத்திரையை அண்ணா கொடுத்தார்.

அதைக் கப்பாற்றும்போது அண்ணா வாழ்வார். இலங்கையில் சிங்களவர்கள் சிங்கள எழுத்தான ஸ்ரீயை பெண்களின் மார்பில் சூடுபோட்டார்கள். இலங்கைத் தமிழர்களின் கறி விற்கப்படும் என்று கடை போட்டான். அண்ணா, தி.மு.க. தொண்டர்களுடன் இலங்கை தூதரகத்துக்கு ஊர்வலமாய்ச் சென்று குரல் எழுப்பினார். இலங்கை இறையாண்மை என்று சொல்கிறார்கள்.

இலங்கையின் உள்நாட்டு அரசியலில் ஈடுபடாதே என்று சொன்னபோது அண்ணா ஒரு உவமை சொன்னார். பக்கத்து வீட்டில் கணவன்மனைவிக்கு இடையே பல தகராறு நடக்கலாம். தொல்லை நடக்கலாம். அதில் தலையிடுவது நாகரிகமல்ல, ஒத்துக் கொள்கிறேன். ஆனால், இரவு 12 மணிக்கு கழுத்தை அறுக்கிறான். உயிர் போகிறது என்று சத்தம் போட்டால் போய்ப் பார்க்க வேண்டாமா? என்று கேட்டார்.

உலகத்தில் தமிழர்கள் பர்மாவில் இருந்து செட்டியார்கள் சொத்து பிடுங்கப்பட்டு இந்தியா வந்தபோது குரல் கொடுத்தவர் அண்ணாதான்.

மார்வாடி வந்தால் விட்டு இருப்பாயா? குஜராத்தி வந்தால் விட்டு இருப்பாயா? தமிழன் மட்டும் அவன் சொத்தை விட்டு விட்டு வரவேண்டுமா என்று கேட்டார். தந்தையாக தமிழனுக்கு என்ன வேண்டும் என்று தெரிந்து பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து தமிழனுக்குப் பாடுபட்டார். அவ்வளவு திறமையும் ஆற்றலும் காங்கிரசுக்குப் போயிருந்தால்! அவர் பொது வாழ்விற்கு வரும் காலத்தில் காங்கிரஸ் ஓர் உன்னதமான ஒரு விடுதலை இயக்கம். மகாத்மா என்ற தனிநபர் தலைமையில் நடக்கும் இயக்கம். புகழ் வேண்டுமானால் அதற்குப் போயிருக்க வேண்டும். பொருள் வேண்டும் என்றால் நீதிக் கட்சித் தலைவருடன் போயிருக்க வேண்டும். நீதிக் கட்சியின் செயலாளராக இருந்து ஆங்கிலேயரின் பதவி பட்டங்கள ஏற்கக்கூடாது என்று ஆணை போட்டார்.

நீதிக்கட்சியில் இருக்கும்போதே வெள்ளயர் ஆதிக்கம் கூடாது என்றார். 1945இல் பேசுகிறபோது அரசியலை ஆங்கிலேயரிடத்திலும், பொருளாதாரத்தை வட இந்தியனிடத்திலும், ஆத்மாவை ஆரியனிடத்திலும் ஒப்படைத்து விட்டு அடிமையாக இருக்கிறோம் என்றார்.

இலங்கையில் தமிழர்கள் வாடுகிறார்கள் என்று சொல்லும் போது நம் இரத்தத்தில் இரத்தம், தசையின் தசை அங்கே வாடுகிறது என்று பேசினார். இதெல்லாம் யாரும் சொல்லிக் கொடுத்தோ, இதையெல்லாம் ஓட்டு கிடைக்கும் என்றோ பேசியதில்லை. அக்காலகட்டத்தில் வாக்கு கேட்கவில்லையே. 1949ல் தி.மு.க.வை தொடங்குகிறபோது அது தேர்தலில் நிற்கிற கட்சியல்ல. 1957ல் தான் தேர்தலில் நிற்பதாக முடிவு.

பெரியாருடைய அதே சமூக சீர்திருத்தக் கொள்கைகளுடன் அண்ணா கட்சியை வளர்த்தார். அண்ணாவை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், அண்ணாவின் காலத்துடன் பார்க்க வேண்டும். இன்றைய நிலையை வைத்துக்கொண்டு அண்ணாவை மதிப்பிடாதீர்கள்.

அண்ணா என்பவர் சராசரி அரசியல் தலைவரில்லை. அவர் தமிழர்கள வாழ்விக்க வந்த மகான் என்ற உணர்வுடன் பார்த்தால்தான் புரியும். நீங்கள் பக்தியே இல்லாமல் திருவாசகத்தை படித்தால் இதில் என்ன இருக்கிறது? என்று கேட்டால் எப்படி இருக்கும். பைபிள் படிக்க வேண்டும் என்றால் கிறித்தவனாக இருக்கவேண்டும், குரான் படிக்க முஸ்லிமாக இருக்க வேண்டும். தேவாரம் படிக்க சைவனாக இருக்க வேண்டும். சைவ நூலைத் தெரியாமல் அதைப் படித்தால் எப்படி விளங்கும்.

எவன் ஒருவன் மக்களுக்குத் தலைவனாக இருக்கிறானோ அவன் அவனுக்கு அடிமை செய்யட்டும் என்று ஏசு சொன்னார். அப்படி உழைப்பதற்கு என்று தன்னை பலி கொடுப்பதற்கு என்று வந்தவர் அண்ணா.

(சென்னை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா கருத்தரங்கத்தில் பேசியது 06.05.2009. சொற்பொழிவைத் தொகுத்தவர் முனைவர் மு.வளர்மதி)