அரசியல் பின்னணியில் பாரதிதாசன் பாடல்கள்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பாடல்கள் பல்வகைக் கருத்துக்கள உள்ளடக்கியவை. அவற்றில் அரசியல், பொருளாதாரம், சமயம், சமூக சீர்திருத்தம், மொழி ஆகியவை பற்றிய அழுத்தமான கருத்துக்களும் கொள்கைகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தலைப்பின் கீழ் அவருடைய பாடல்களில் வெளிப்படுத்தப் பட்டுள்ள அரசியல் கருத்துக்களும் கொள்கைகளும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மேலும் கவிஞருடைய அரசியல் தொடர்பான பாடல்கள் எழுவதற்கான அரசியல் நிகழ்வுகளும், அப்பாடல்கள் ஏற்படுத்திய அரசியல் நிகழ்வும்கூட ஆயப்படுகின்றன. இவற்றின் அடிப்படையில் புரட்சிக்கவிஞரின் அரசியல் ஆளுமை பற்றியும் சிந்திக்கப்படுகிறது.

புரட்சிக்கவிஞர் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 9இல் பிரஞ்சு இந்தியாவாக இருந்த புதுவையில் பிறந்தார். 1964 ஏப்ரல் 21இல் மறைந்தார். இவர் தோன்றிய காலத்தில் இன்றைய இந்தியா பல பிரிவுகளாக இருந்தது. பெரும்பகுதி இங்கிலாந்தின் ஆளுகைக்குட்பட்ட பிரித்தானிய இந்தியாவாக இருந்தது. ஆங்கில அரசின் மேலாதிக்கத்துக்குக் கட்டுப்பட்ட சுதேச சமஸ்தானங்களாக ஒருபகுதி இருந்தது. இன்னொரு பகுதி போர்த்துகீசியரிடம் இருந்தது. கவிஞர் பிறந்த புதுவைப் பகுதி பிரான்சு நாட்டினிடம் இருந்தது. பிரஞ்சிந்தியா, போர்த்துகீசிய இந்தியா தவிர இருந்த இந்தியா 15.8.1947இல் அரசியல் சுதந்திரம் பெற்றது. பிரஞ்சிந்தியா 26.1.1954இல் இன்றைய இந்தியாவின் ஒரு பகுதியாயிற்று.

கவிஞரின் வாழ்நாளில் இந்தியாவில் பல்வேறு அரசியல் இயக்கங்கள் நடந்தன. அவருடன் தொடர்புடைய இயக்கங்கள், இந்திய தேசீய காங்கிரஸ், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், பொதுவுடைமைக் கட்சி ஆகியவை. அவரைப் பாதித்த அரசியல் நிகழ்ச்சிகள் இந்திய விடுதலைக்கான போராட்டம், திராவிடநாடு பிரிவினை இயக்கம், தமிழக விடுதலை முயற்சி ஆகியவை.

புரட்சிக்கவிஞரின் கவிதைகள் என நமக்கு இன்று கிடைப்பவை அனைத்தும் அல்லது மிகப்பெரும்பான்மையானவை, 1922 முதல் அச்சேறியவைதாம். அரசியல் தொடர்புடைய கவிதைகள் அனைத்தும் 1922 முதல் தான் வெளியிடப்பட்டுள்ளன. அதாவது மகாகவி பாரதியின் மறைவுக்குப் பின்னரே வெளிவந்துள்ளன. கவிஞர் அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட மிகப்பெரிய திருப்பத்துக்குக் காரணம் அவரும் பாரதியும் சந்தித்ததுதான்.

பாடலிற் பழமுறை பழநடை என்பதோர் காடுமுழுதும் கண்ட பின் கடைசியாய்ச் சுப்பிர மணிய பாரதி தோன்றியென் பாட்டுக்குப் புதுமுறை புதுநடை காட்டினார்.

என்பது கவிஞர் வாக்கு. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கச் சந்திப்பு புதுவை வேணுநாய்க்கர் வீட்டில் நிகழ்ந்தது. இது 1910இன் இறுதி அல்லது 1911இன் தொடக்கத்தில் நிகழ்ந்திருக்கலாம் என முனைவர் இரா.இளவரசு அவர்கள் தன்னுடைய இந்திய விடுதலை இயக்கத்தில் பாரதிதாசன் என்ற தனது நூலில் சரியான காரணங்கள் காட்டிக் கூறியுள்ளார். இதை சரியானதாக இக்கட்டுரையாளர் ஏற்றுக் கொள்கிறார். இந்தக்காலம் முதலே கவிஞருக்கு அரசியல் ஈடுபாடு ஏற்படுகிறது. அவர் புதுவையில் தங்கியிருந்த வ.வெ.சு.ஐயர், அரவிந்தர் போன்ற இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுடன் தொடர்புகொண்டது பாரதி மூலமாகவும், பாரதிக்காகவும்தான் இருக்கவேண்டும். பாரதியின் அரசியல் கொள்கையே நம் கவிஞரின் அரசியல் கொள்கையாக இருந்திருக்கிறது. இது, கவிஞர் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தில் சேரும்வரை அவர் எழுதிய பாடல்களிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. பாரதியின் தொடர்போடு தொடங்கிய கவிஞரின் கவிதைப்பணிக்காலத்தை அரசியல் அடிப்படையில் நான்கு கூறுகளாக வசதிக்காகப் பிரிக்கலாம்.

1. தேசீயப் பாடல்கள்,
2. சுயமரியாதை இயக்கப்பாடல்கள்,
3. தமிழகம் பிரிவினைப் பாடல்கள்,
4. மீண்டும் இந்திய தேசீயப் பாடல்கள்.

முதலிய தேசீயப்பாடல்கள எடுத்துக்கொள்ளலாம். தேசீயப் பாடல்கள் எனக்குறிக்கப் படுவது கவிஞர் தேச சேவகன் இதழ் மூலமும் பிற இதழ்கள் மூலமும் வெளிப்படுத்திய இந்திய விடுதலை தொடர்பான பாடல்களயே. இவ்வகைத் தேசீயப் பாடல்கள் 1928இல் கவிஞர் பெரியாருடைய சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொள்ளும் வரை அதிகமாக வெளியிடப் பட்டன. 1938ஆம் ஆண்டுவரை இது நீண்டிருக்கிறது. இக்காலத்துப் பாடல்களில் பாரதியின் நேரடித் தாக்கத்தைக் காணமுடிகிறது. பாரதி எந்தத் தலைவர்களின் மீது பாடினாரோ அவர்கள் மீதே இவர் பாடுகிறார். உதாரணமாக திலகர், லாலா லஜபதிராய் ஆகியோர் மீது பாடுகிறார். பாரதநாட்டைத் தாயாக சக்தியின் வடிவமாகப் போற்றிப்பாடுகிறார். பாட்டின் நடை, அமைப்பு ஆகியவை பாரதியைப் பின்பற்றியே உள்ளன. உடமை நாடு என்னும் பாடலில்,

காலப் பெருங்கடலில் நாளும் கரைந்த தோற்றமெலாம் பாலப் பருவமுதல் எங்கள் பாரதத் தாய் அறிவாள் நாலுதிசை முழுதும் கொள்கை நாற்பதினாயிரத்தார் ஆலின் இளயவைகள் என்னில் ஆக்கும்மரம் இவள்தான் தேசசேவகன் 28.11.1922

ஆசையும் அச்சமும் என்ற பாட்டில் உள்ள

அன்னையெழில் நிறைந்த வார்த்தை அவள் ஆசை பெருக வைக்கும் கவிகள் தினம் என்னையுரைத் திடுசென்றிசைத்தாள் நெஞ்சில் ஏறும் கனல் நிகர்த்த தேவி தேசசேவகன் 29.5.1923

வரிகள் நமக்கு பாரதியை நினைவூட்டுகின்றன.

காளிக்கு விண்ணப்பம் என்ற பாட்டில்

பாரத தேசத்தை விடுவிப்பேன் பண்டைநாள் ஆரியரை உற்பத்தி ஆக்கிடுவேன் தேசேவகன் 12.6.23

எனப்பாடுகிறார். சொற்களும், சொற்றொடர்களும் கருத்துக்களும் பாரதியை அடியொற்றியிருக்கின்றன. ஒரு பாடலின் தலைப்பு சுதந்திரம் அமரத்தன்மை என்பது. பாரதி பாடாத விடுதலை இயக்கச் செய்திகளப் பற்றியும் பாடுகிறார். ஒத்துழையாமை இயக்கத்தைப் பற்றியும், கதரைப் பற்றியும் பாடுகிறார். அவர் கதர் இயக்கத்தில் ஈடுபட்டது எல்லோரும் அறிந்த செய்தி. காங்கிரஸ் கட்சியையே போற்றிப்பாடுகிறார். தேச மகா மன்றம் (காங்கிரஸ்) என்ற பாட்டில்,

மன்றத்தைப் போற்று வதாலுங்கள் செய்கைகள் மாதவ மாகுமடா அவை மாதவ மாகுமடா தேசசேவகன் 13.3.1923

என்று கூறுகிறார். காந்தியைப் போற்றுகிறார். அவருடைய கதர் இராட்டினப்பாட்டு இங்கு நினைவில் கொள்ளத்தக்கது. ஆனால் இந்நூலில் உள்ள பாடல்கள அவர் தானாகப் பாடியதாகத் தெரியவில்லை. காசி ஈ.லட்சுமணன் பிரசாத் என்பார் கதர் இராட்டினப் பாட்டு என்னும் நூலுக்கு எழுதியுள்ள முகவுரையில்,

நம் பாரத நாட்டில் ஒத்துழையாமை சுடர்விட்டு எரியும்போது, நான் ஸ்ரீ பாரதி தாஸனவர்களக் கேட்டுக்கொண்டபடி அவர்கள் எழுதித்தந்த நூற்கள் இருபது சிறு நூற்கள்.

எனக் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. இவ்வாறான இந்திய விடுதலைப் பற்றிய தேசீயப்பாடல்கள கவிஞர் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்த பின்னும் தொடர்கிறார். இது 1937 வரை தொடர்கிறது. ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம் என்ற இதழை 1935இல் தொடங்கி அதிலும் ஒன்றுபட்ட இந்திய விடுதலையைப் பாடுகிறார். சுயமரியாதை இயக்கமும் இந்திய விடுதலையை தன் குறிக்கோளாக வைத்திருந்ததுதான் இதற்குக் காரணம். கட்டாய இந்தித் திணிப்புத்தான் 1937இல் சுயமரியாதை இயக்கத்தைப் பிரிவினைக் கேட்கத் தூண்டியது. அப்போதுதான் கவிஞரும் மாறுகிறார்.

தேசீயப் பாடல்கள் என நான் குறிப்பது மற்ற ஆய்வாளர்கள் பலரும் அப்படிச் சொல்லியிருப்பது பற்றியே. இந்தத் தலைப்பு ஒரு நெருடலைத் தருகிறது. தேசீயம் என்றால் புதுவையை உள்ளடக்கிய இந்தியத் தேசியத்தையன்றோ சுட்டவேண்டும். கவிஞர் பாடிய பாரதத்தாய்க்குள் பாண்டிச்சேரியும் இருக்க வேண்டுமன்றோ? ஆனால் பிரித்தானிய இந்திய விடுதலைப் பற்றிப் பாடிய கவிஞர் பிரஞ்சு இந்திய விடுதலை பற்றிப் பாடவில்லை. கவிஞர் பிறந்து வளர்ந்த புதுவைப் பகுதி பிரான்சுக்கு அடிமையாகத்தானே இருந்தது. அரசியல் அமைப்பிலும், மக்கள் பெற்றிருந்த உரிமையின் தன்மையிலும் இருபகுதிகளுக்கும் வேறுபாடு இந்தது உண்மை. ஆனாலும் புதுவைப்பகுதி அடிமை நாடுதானே? பிரஞ்சிந்தியாவிலும் தமிழ் அடிமைப்படுத்தப்பட்டுத்தானே இருந்தது? வெள்ளயருக்கும் இந்தியருக்கும் வேறுபாடு இருக்கத்தானே செய்தது? ஆனாலும் கவிஞர் உரிமைக்குரல் எழுப்பவில்லை. காரணம் அவர் அரசுப்பணியில் இருந்ததுதானா? அப்படியும் இல்லை. அவர் ஓய்வுப்பெற்ற பின்னும்கூட பிரஞ்சிந்திய விடுதலை பற்றிப் பாடவில்லை. இந்திய சுதந்திரத்துக்குப்பின் புதுவைப் பகுதியில் பிரஞ்சிந்திய விடுதலைக்குப் பெரும் போராட்டம் நடந்தபோது இவர் அதை ஆதரிக்கவில்லை என்பது மட்டுமன்று எதிர்ப்பும் காட்டியுள்ளார் என்று தெரிகிறது. இந்தப் போக்குக்கு சரியான விளக்கம் எனக்குக் கிடைக்கவில்லை.

1937இல், சென்னை இராசதானியின் தலைமை அமைச்சராய்ப் பொறுப்பேற்றிருந்த இராஜகோபாலாச்சாரியார் இந்தியை மாணவர்களுக்குக் கட்டாயப் பாடமாக்கியது, தென்னிந்தியாவில் ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்திக்குக் காரணமாகியது. இந்தியெதிர்ப்பு இயக்கம் தோன்றி வலுப்பெற்றது. பெரியாரும் மற்ற அறிஞர்களும் எதிர்ப்பு இயக்கத்தை நடத்தினர். இதனால் உந்தப்பெற்ற நம் புரட்சிக்கவிஞர் உணர்ச்சித் துடிப்புமிக்க தன்னுடைய இந்தியெதிர்ப்புப் பாடல்கள வெளியிட்டார். இப்பாடல்கள் இந்தியெதிர்ப்பு அணியினர்க்கு போர்ப்பாட்டாய் அமைந்தன. இந்தக் காலகட்டத்தில் தான் சுயமரியாதை இயக்கம் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை எழுப்பிற்று. இதுவே பின்னர் 1939இல் திராவிட நாடு திராவிடர்க்கே என்னும் கொள்கையாக விரிவடைந்தது. 1940இல் நடந்த சேலம் மாநாட்டில் தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் திராவிடர் கழகமாக மாற்றப்பட்டது. திராவிட நாடு தீர்மானமும் நிறைவேறியது. மொழிவழி பிரிந்து இனவழி ஒன்றுபட்ட திராவிடநாடு அடைவது என்பதே திராவிடக்கழகத்தின் இறுதிக் குறிக்கோளாக அறிவிக்கப்பட்டது. இதுவே புரட்சிக்கவிஞரின் அரசியல் கொள்கையானது. இந்தக் கொள்கைக்கான உணர்ச்சிமிக்க, குருதி கொதிக்கச் செய்யும் பாடல்கள் கவிஞரிடம் பிறந்தன. திராவிடநாட்டுப் பண் என்பது அன்றைய திராவிட இயக்கத் தோழன் ஒவ்வொருவனுக்கும் மனப்பாடம்,

வாழ்க வாழ்கவே வளமார் எமதுதி ராவிடநாடு வாழ்க வாழ்கவே!

பண்ணிடைத் தமிழும் தமிழில் மலர்ந்த பண்ணிகர் தெலுங்கு துளுமலை யாளம் கண்டை நிகர்கன் னடமெனும் மொழிகள் கமழக் கலைகள் சிறந்த நாடு

என்ற பாடல் மேடைதோறும் பாடப்பட்டது. இந்தக் காலத்தில் எழுந்த பாடல்கள் பலவற்றிலும் அதாவது நேரே அரசியல் தொடரில்லாத பாடல்களிலுங்கூட திராவிடநாட்டுக் கொள்கையை வெளிப்படுத்துகிறார். உதாரணமாக குடும்ப விளக்கு விருந்தோம்பல் பகுதியில் வேடப்பன் பாட்டில் பின்வரும் பகுதியைக் கொள்ளலாம்.

திராவிடம் நமதுநாடு நல்ல திராவிடம் நமது பேச்சு!
திராவிடம் நாம் என்று களித்தோம் திராவிடர் வாழ்வினில் துளிர்த்தோம்!

திராவிடநாட்டுக் கொள்கையை வலியுறுத்தும் பாடல்களில் கவிதைத் தன்மை குன்றாமல் அறிவார்ந்த கொள்கை விளக்கம் தரப்படுகிறது. திராவிடர் மீட்சி என்ற பாடலில்,

தென்தமிழ், கேரளம், தெலுங்கு, கன்னடம், துளு என்னுமிவ் வைந்தில் ஒன்றுதான் தமிழகம் என்று நான்கையும் எதிர்ப்பதா? எதிர்ப்பின் நம்முடன், நம்மூர் நம்தெரு வதனில் தென்னண்டை வீட்டுத் தெலுங்கர்நிலை எது? வடவண்டை வீட்டு மலையாளிகளப் பகைப்பதா? எதிர்ப்பாங்கு வீட்டுக் கன்னடத்தாரைக் கடிந்து கொள்வதா? அல்லதிவர்கள அவரவர் நாட்டுக்குக் குடியேற்றுவதா? குடியேற்றிய பின் இங்கெத்தனைபேர் தமிழர் இருப்பார்? செந்தமிழ், கேரள, தெலுங்கு, கன்னடம், துளு ஐந்து வகையில் அழைக்கப் பெறினும் மாந்தர் வகையால் திராவிட மக்கள் நாம்! ...... ........ .......... பிரிவோமில்லை, பிரி ந்தால் வாழ்இல்லை குயில் 1.7.47 வேங்கையே எழுக பக்.40

என்றுவரும் வரிகள் இதற்கு எடுத்துக்காட்டு.

அன்பும் உடற்சதையும் எங்களுயிரும் எங்கள் இருப்பும் இறப்பும் இத்தி ராவிடமடா
நான்தான் திராவிடன் என்று நவில்கையில் தேன்தான் நாவெல்லாம்! வான்தான் என்புகழ்!
எரிகின்ற எங்களின் நெஞ்சமேல் ஆணை இனி எங்கள் ஆட்சிஇந் நாட்டில்

என்பன போன்ற உணர்ச்சி வரிகள் கவிஞரிடம் பெருக்கெடுக்கின்றன. இவ்வுணர்ச்சிப் பாடல்கள் கவிஞர் திராவிட நாடு கொள்கையில் கொண்டிருந்த அழுத்தமான உணர்வுபூர்வமான நம்பிக்கையையும் ஈடுபாட்டையும் வெளிப்படுத்துகின்றன. இதே அளவு உணர்ச்சி வெளிப்பாடு இவர் பாடிய தேசியப்பாடல்களில் இல்லை என்றே சொல்லலாம். நாடு சுதந்திரமடைந்தவுடன் திராவிடநாடு பிரிவினைக்கு எதிராக ஆனால் தமிழ் உணர்வுமிக்க ஒரு கொள்கை தமிழக மக்கள் முன்னால் வைக்கப்பட்டது. அது தமிழரசுக் கட்சியின் தமிழ்மாநில உரிமைக் கோரிக்கை. அப்போது தனித்தமிழ்நாட்டுக்கு எதிராக முழுத்திராவிடப் பிரிவினையின் பெருமை பேசப்பட்டது. திராவிட நாட்டின் ஒற்றுமையைக் குலைத்துப் பிரிவினையைத் தடுக்கவே மொழிவாரி மாநிலப் பிரிவினை நடப்பதாகக் கவிஞர் குற்றஞ் சாட்டுகிறார். தன்னுடைய தனியாக்கப் போராங்கோ என்ற பாட்டில் அதில் சில வரிகள்

தமிழ் நாட்டைத் தமிழர்களத் தனியாக்கப் போராங்கோ.
தெலுங்கு மலையாள மெல்லாம் திராவிட நாடில்லையாம் சேந்துளுவம் கன்னடமும் திராவிட நாடில்லையாம்

இந்த உணர்ச்சியையே, திராவிட ஒற்றுமையையே சென்னை பற்றிச் சண்டையா? என்ற பாடலில் பின்வருமாறு வெளியிடுகிறார் கவிஞர்.

சென்னை நகருக்காகத் தீராது சண்டையிட்டீர் இன்பத் திராவிடரே நீவிர் உலகில் எல்லோரும் என் மைந்தரே

என்னதென்ன தென்பீர் இனத்திற் பகைகொள்வீர் தென்தமிழ்க் கிள்ளயே, என் தெலுங்குப் பிள்ளயே
மொழிவழி பிரிந்து இனவழி ஒன்றுபடும் திராவிட நாட்டைப் பற்றிய பாடல்கள்தாம் கவிஞர் நேரிட்ட அரசியல் பாடல்களில் எண்ணிக்கையில் மிக்கதும் உணர்ச்சியில் ஓங்கியதும் ஆகும். பாரதி பாரதத்துக்கு எப்படியெல்லாம் பாடடெழுதினரோ அப்படியெல்லாம் பாரதிதாசன் திராவிடத்துக்குப் பாடியுள்ளார். இவ்விருவகைப் பாடல்களயே தனியாக எடுத்து ஒப்பாய்வு செய்தால் மிக்க நலன் விளயும்.

திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்து பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கம், அதைத் தொடர்ந்த திராவிடர் கழகம். இந்த இயக்கத்தில் புரட்சிக்கவிஞர் அவர்கள் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். திராவிடநாடு பிரிவினை பற்றிப் பாடும் பாடல்களில் பார்ப்பன எதிர்ப்பு, சாதியெதிர்ப்பு சமய எதிர்ப்பு, தமிழுணர்வு அதாவது அன்றைய திராவிடர் கழகத்தின் அனைத்துக் கொள்கைகளும் வெளிப்படுத்தப்படுகின்றன. பார்ப்பனர்கள திராவிட நாட்டுக்கு எதிரானவர்கள் என்றே கவிஞர் சாடுகிறார். திராவிட நாட்டுப் பிரிவினையில் திராவிட இன, தமிழ் மக்களின் எல்லாப் பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை இவரது பாடல்கள் மூலம் தரப்படுகிறது. திராவிடர் கழகத்தின் அரசியல், பொருளாதார, சமுதாய சீர்திருத்தக் கருத்துக்கள திராவிடநாடு விடுதலை என்ற ஒரு சொற்றொடர் மூலமே அப்போது அக்கழகத் தலைவர்கள் வெளிக்காட்டினர். இது அப்படியே கவிஞருடைய பாடல்களில் வெளிப்படுத்தப்படுகின்றது. திராவிடநாடு என்பது தனி இறையாண்மை உடைய நிலப்பரப்பை மட்டும் குறிக்கவில்லை. சாதி, சமயமற்ற, சமதர்ம அடிப்படையில் அமையக்கூடிய ஒரு மக்கள் சமுதாயத்தையே குறித்து நின்றது. இப்படிப்பட்ட திராவிட நாடு கொள்கை முழுமையான அரசியல் கட்சியாகத் தனித்துச் செயல்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை இலட்சியம் ஆயிற்று. இத்தன்மைத்தான் திராவிடநாடு கொள்கையை நம் கவிஞரின் அக்காலத்திய பாடல்களில் பரக்கக் காணலாம். ஆகவே தி.மு.க.வின் மேடைகள் தோறும் புரட்சிக்கவிஞரின் பாடல்கள் தலைவர்களாலும் தொண்டர்களாலும் முழங்கப்பட்டன. பல தொண்டர்களுக்கு கவிஞரின் பாடல்கள் படிக்காமலேயே பாடமாயின. அவர் தி.மு.கவுக்கே சொந்தமான கவிஞராகக் கருதப்பட்டார். திராவிட தேசீயக் கவியாக கவிஞர் இருந்தபோதும் அவருடைய கவிதைகளில் தமிழ்உணர்வே மிக்கு ஓங்கியிருந்தது. தமிழின் பெருமையை, உயர்வை அவர் பாடியதுபோல் அளவிலும், உணர்ச்சியிலும் பிற திராவிட மொழிகளப் பாடவில்லை. இந்த திராவிடநாட்டுக் கொள்கை வீறுகொண்ட பாடல்கள் 1958 வரையில் வெளிவந்தன. பின்னர் ஒரு பெருமாற்றம் தமிழக அரசியலிலும், கவிஞரின் கொள்கையிலும் ஏற்பட்டது.

1958இல் பெரியார் திராவிடநாடு பிரிவினை என்ற கொள்கையைக் கைவிட்டு தமிழ்நாடு விடுதலை என்ற கொள்கையை மேற்கொண்டு பிரச்சாரம் செய்தார். நம் கவிஞரும் இக்கொள்கையை மேற்கொண்டார்.

குயில் தமிழரின் நல்வாழ்வு தமிழ்நாடு விடுதலை பெறுவதில்தான் இருக்கின்றது என்ற உண்மையைத் தமிழர் உணரச் செய்யும்.

என 1.6.1958 குயில் கிழமை இதழில் கவிஞர் அறிவிக்கிறார். திராவிட நாட்டை விட்டு தமிழ்நாட்டைப் பாடத் தொடங்கியதற்கான காரணம் எதையும் கவிஞர் அறிவித்ததாகத் தெரியவில்லை. ஆனால் 19.5.1959 குயில் கிழமை இதழில் நாகப்பட்டினத்தில் பெரியார் நிகழ்த்திய சொற்பொழிவின் ஒரு பகுதியை வெளியிட்டிருக்கிறார். அதன் சுருக்கம் டாக்டர் மா.அண்ணாதுரையின் பாரதிதாசன் இதழ் பணிகள் என்ற நூலில் 179ஆம் பக்கத்தில் உள்ளவாறு தருகிறேன்.

சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியும் தமிழ்நாடு தமிழருக்கே என்றுதான் கேட்டன. அதாவது அப்படித்தான் நான் (பெரியார்) கேட்டேன்.

பின்னர் திராவிடக் கழகம் அமைத்தேன்; அப்போது மலையாளிகள், கன்னடர், தமிழர் சென்னை மாகாணத்தில் சேர்ந்திருந்தார்கள். எல்லோருக்கும் சேர்த்துத் திராவிட நாடு கேட்டேன். இப்போது பிரிந்துவிட்டார்கள். மூவரும் தனித்தனி அரசு அமைத்துக்கொண்டார்கள். தமிழர் தனியாக இருக்கிறார்கள். ஆகவே உரிமைத் தமிழகம் வேண்டும் என்கிறேன்.

இந்த விளக்கம் பெரியாருடையது. இதை ஏற்பது போன்று கவிஞர் வெளியிடுகிறார். இந்த விளக்கம் திராவிடநாடு கோரிக்கையைக் கைவிட்டுத் தமிழ்நாடு விடுதலை கேட்பதற்கான சரியான பகுத்தறிவுக்கொத்த தருக்க முறையிலான காரணங்களக் கொண்டிருக்கவில்லை. எப்படியெனில், திராவிடநாடு கேட்டபோது மைசூர் நாடும் மலையாளிகளக் கொண்ட திருவாங்கூர் கொச்சியும் தனித்தனியாகவே இருந்தன. அவற்றையும் உள்ளடக்கித்தான் திராவிடநாடு கேட்கப்பட்டது. மூவரும் தாமாக தனித்தனி அரசு அமைத்துப் பிரியவில்லை. இந்தியாவின் பிறபகுதிகள் போன்றே இவையும் மொழியை வைத்து பிரிக்கப்பட்டன. மொழிவழி பிரிந்து இனவழி ஒன்றுபட்ட திராவிடமே முன்னர் கோரப்பட்டது. இதை வலியுறுத்தியே கவிஞர் பல பாடல்கள இயற்றியுள்ளார். பெரியாரின் விளக்கத்துக்கு மறுப்பாகப் பல பாடல்கள் உள்ளன. மேலும் கன்னட நாட்டுக்குள்ளயே தனது மக்கள் இருக்கின்றனர். சென்னை மாகாணத்தை வைத்துத்தான் தமிழர்நாடு விடுதலை வேண்டுமெனின் புதுலைமாநிலத் தமிழர்கள் என்னாவது? ஆக அறிவார்ந்த பொருத்தமான காரணங்களப் பெரியாரோ கவிஞரோ நமக்குத் தரவில்லை. கவிஞர் தமிழையும், தமிழ்நாடு விடுதலையையும் பாடினார். பாடல்களில் திராவிட நாட்டை விட்டதற்கான விளக்கம் தரப்பட்டதாகத் தெரியவில்லை. கொள்கை மாற்றத்துக்கு வேறுகாரணம் இருக்கவேண்டும். அது பெரியார் அண்ணா மீதும் தி.மு.க.வின் மீதும் கொண்ட எதிர்ப்புணர்ச்சிதான் என்பது இக்கட்டுரையாளரின் கருத்து. தி.மு.க திராவிட நாட்டுப்பிரிவினையைத் தன் உயிர்மூச்சுக் கொள்கையென அறிவித்துப் பிரச்சாரம் செய்து திராவிடர் கழகத்தினும் விரிந்த, பரந்த ஆதரவை மக்களிடம் பெற்று வளர்ந்தது. அதிலிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டவே திராவிடர் கழகம் கொள்கை மாறுதலை மேற்கொண்டது என்பதுதான் சரியான விளக்கமாகத் தோன்றுகிறது தமிழக விடுதலை என்பது திராவிடர் கழகம் என்பதோடு ஒட்டாமலே நிற்பது இதற்கு ஒரு சான்று.

இந்தக் குறிப்பிடத்தகுந்த காலகட்டத்தில் புரட்சிக்கவிஞரின் பாடல்கள் தமிழரின் மேன்மையைப் பாடி தமிழக விடுதலை கோருவதோடு நில்லாமல் தி.மு.க.வையும் அதன் தலைவரையும் நேரடியாகச் சாடுகின்றன. திராவிடர் கழகத்தின் அன்றைய பிரச்சாரத் தன்மை அப்படியே கவிஞரின் பாடல்களில் பிரதிபலிக்கின்றது. இக்காலத்தில், அதாவது 1958க்குப் பின்னர் எழுந்த பாடல்களில் தமிழ் உணர்வு வீற்றுடன் வெளிப்படுகிறதே அன்றி, திராவிட நாட்டுப் பண்களப் போன்று அரசியல் விடுதலை வேட்கை அழுத்தமாக வெளிப்படவில்லை. இந்தக் காலத்தில் பார்ப்பன எதிர்ப்பு தீவிரமடைந்திருக்கிறது. 1959இல் தான் குறிஞ்சித்திட்டு வெளியிடப்பட்டது. பார்ப்பன எதிர்ப்பு என்பது கவிஞரின் அரசியல் கொள்கையின் ஒரு அங்கமாகவே தொடர்ந்து இருந்திருக்கிறது. தமிழ் உணர்வும் அரசியலுடன் இயைந்தே வெளியிடப்படுகிறது. இக்காலத்தில் எழுந்த பாடல்கள் அரசியல் மேடைகளில் பிரச்சாரத்துக்கு முன்போல் பயன்படுத்தப்பட வில்லை. பெரியார் அவர்களின் வழியைப் பின்பற்றி எழுப்பப்பட்ட உரிமைத் தமிழ்நாடு முழக்கம் கவிஞரின் கவிதையில் மெல்ல ஓய்ந்தது. ஓய்ந்து மீண்டும் ஒன்றுபட்ட இந்திய தேசீயக் குரல் அவர் கவிதையில் ஒலிக்கத் தொடங்கிற்று.

பெரியார் காங்கிரசையெதிர்த்துக் கொண்டே காமராசரை ஆதரிக்கும் நிலையை மேற்கொண்டார். அதுவே கவிஞரின் கொள்கையுமாயிற்று. காமராசருக்குக் கவிஞர் புகழ் பாடினார். காங்கிரசில் இருந்த பக்வத்சலம் போன்றோரைச் சாடினார். இந்தக் காமராசர் ஆதரவு உணர்ச்சி கவிஞரை மீண்டும் இந்திய தேசீயத்துக்கே கொண்டுபோய் சேர்த்தது. தொடங்கிய இடத்துக்கே போய்ச் சேர்ந்தார். சீன ஆக்கிரமிப்பின் போது சீனனை எதிர்த்து எழுதிய பாடல் வரிகளில் சில

வருக போரே (பாட்டின் தலைப்பு)
இமயத்துக்கே வெற்றி தென் குமரிக்கு நல்வெற்றி! கமழும் காவேரிக்கும் நற் கங்கைக்குமே வெற்றி (இனமுழக்கம் 30.11.62)

சூ யென் லாய் சீனரின் நோய் (தலைப்பு)
புறமுதுகு காட்டாத நாடு பாரதநாடு பூவுலகில் முதலில் வாளாடு பிறந்த நாடு

இவை கவிஞரின் இறுதிக்கால நிலையைத் தெற்றென விளக்குகின்றன. பிரிவினைக்கு சிங்க ஏற்றின் குரலோடு முழங்கிய கவிஞர் தன் இறுதிக்காலத்தில் பிரிவினையை எதிர்க்குமாறு மக்களத் தூண்டினார். 11.9.1962இல் கோவை மாவட்டத்துக்குள் ஊராட்சி ஒன்றியச் சார்பில் நடந்த பாரதியார் நினைவுநாள் பாட்டரங்கத் தலைமைக் கவிதையில் இவ்வாறு உரைக்கிறார்.

பாரதி நாட்டுப் பிரிவினை எதிர்ப்பு நாள் பாரதி இந்தி எதிர்ப்பு நாள், பாரதி ஆங்கில எதிர்ப்பு நாள், பாரதி அறிவு நாள், பாரதி தமிழிலக்கிய நாள், பாரதி பச்சைத் திருநாள் பலவும் பாரதி விழாவே ஆகும் விடாது நடத்தலாம்..... முனைவர் இரா.இளவரசின் நூல் பக்.96
பம்பாயில் நடந்த அனைத்திந்தியப் பாட்டரங்கொன்றில்

பாரடி நாவலந் தீவின் பரப்பை நீ பிரிந்த பகுதி பிணைந்தது பாரடி பிரிய நினைத்தவர் பிழை உணர் கின்றனர் பெருநி லத்தில் ஓரேகொடி பறந்தது! நாவலந் தீவினர் எல்லாரும் நல்லவர் எல்லாரும் வீரர் எல்லாரும் கவிஞர் இமையச் சாரலில் ஒருவன் இருமினான் குமரி வாழ்வான் மருந்துகொண் டோடினான் ஒருவர்க்கு வந்தது அனைவர்க்கும் என்ற மனப்பாங்கு வளர்ந்தது வேண்டிய மட்டும்! இமயம் மீட்கப்பட்ட திதோபால் சீனன் செந்நீர் கண்ணீ ராக எங்கோ ஓட்டம் பிடிக்கின் றானடி

என உணர்வால் ஒன்றுபடும் இந்தியாவைக் காட்டுகிறார். தீய வடவர் என்பது மாறிவிட்டது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஓர் இந்தியக் கவிஞராகத் தோன்றுகிறார். ஆனால் அவருடைய கடைசிக் காலக் கவிதைகள் எந்தவொரு அரசியல் கட்சியின் கொள்கையையும் சார்ந்தவையாக இல்லை. பிற்காலக் கவிதைகள் முற்காலக் கவிதைகளின் உணர்ச்சி வேகத்தையும் சொல்லாற்றலையும் பெற்றிருக்கவில்லை. அவற்றில் ஒரு அசதி, நம்பிக்கையின்மை தெரிகின்றன. அவர் எந்தவொரு அரசியல் தலைமையையும் ஏற்காதவராகிவிட்டார்.

இனி அவருடைய கவிதைகளில் வெளிப்படும் அரசியல் தத்துவம் என்ன என்று பார்க்கலாம். 1963இல் அவர் வெளியிட்ட பொதுவுடைமைக்கு நான் பகைவன்? என்ற கவிதையில்.

இதுஅறி வெனத் தெரிந்த நாள்முதல் புதுவையில் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் மூன்றும் என்னுயிர் உணர்வில் ஊறியவை

என அறிவிக்கிறார். இம்மூன்று கொள்கைகளும் இளமையிலேயே அவர் உணர்வில் அவர் பிறந்து வளர்ந்த சமுதாயத்தால் ஏற்றப்பட்டவை. இவை மூன்றும் அன்றைய புதுவையை ஆண்ட பிரான்சு தேசத்தின் கொள்கைகள். பிரஞ்சுப் புரட்சி உலகுக்கு அறிவித்த கொள்கைகள். இளமையில் அவர் உயிரில் உணர்வில் ஊறிய இக்கொள்கைகள் அவருடைய இறுதிக்காலம் வரை நிலைபெற்றன. இவை குடியாட்சிப் பண்புகள். அண்ணா சொல்வார் சனநாயகம் ஒரு ஆட்சிமுறை மட்டுமன்று. அது ஒரு வாழ்க்கை நெறி என்று. இந்நெறியில் நின்று கவிஞர் வாழ்வை, மக்களப் பார்த்தார். இதன் விளவு அவருடைய பாடுமாந்தர்கள் அனைவரும் சாதாரண குடிமக்களும் உழைப்பாளர்களும் தாம். இனிமையான காதல்பாட்டு.

மாடுமேய்ப் பவனிடம் எனக்கென்ன வேலை? வஞ்சிஎன் றழைத்தான் ஏனென்றேன் மாலை

என்று தொடங்குகிறது. சங்க இலக்கியத் தலைவனும் தலைவியும் உயர்மட்டத்தில் உள்ளவராகத்தாம் சித்தரிக்கப்பட்டனர். ஆனால் நம் கவிஞர் சாதாரண மக்களின் காதலை, இன்ப துன்பங்களயே பாடினார். இது மேற்சொன்ன கொள்கைப் பிடிப்பால் ஏற்பட்ட விளவு. இம்மூன்று கொள்கைகளயன்றி வேறுகொள்கை எதுவும் அரசியல் தத்துவக்கொள்கையாக கவிஞரிடம் நிலைத்து நிற்கவில்லை. இம்மூன்றும் அவர் பிரான்சிடம் பெற்றவை; அவராக வழங்கியவையல்ல. இக்குடியாட்சியே அவருடைய கவிதைக் கதைகளில்லாம் போற்றப்படுகிறது. உதாரணம் புரட்சிக்கவி அவருடைய கவிதைகளில் வெளிப்படும் இன்னொரு கொள்கை பொதுவுடைமை. இந்தச்சொல்லை பாரதி தந்தார். சொத்து மக்களுக்கெல்லாம் பொதுவாக்கப்பட வேண்டும் என்று பல கவிதைகளில் கவிஞர் கூறுகிறார். ஆக அவரே கூறுகிறார். பொதுவுடைமைக்கு நான் பகைவன்? என்னும் பாட்டில்,

பாரதி பாட்டில் பற்றிய பொதுவுடைமைத் தீ என்றன் பாட்டு நெய்யால் வளர்ந்து கொழுந்து விட்டெரிந்து தொழிலாள ரிடத்தும் உழைப்பாளரிடத்தும் உணர்வில் உணர்ச்சியில் மலர்ந்து படர்ந்ததை மறுப்பவர் யாரே?

என்ற உலகப்பன் பாட்டு எல்லோரும் அறிந்ததே. உலகம் உன்னுடையது என்னும் பாட்டில் உடைமை மக்களுக்குப் பொது என்றும், வியர்வைக் கடலில் இவ்வுல குழைப்பவர்க்குரிய தென்பதையே என்றும், புதிய உலகு செய்வோம் பாட்டில் பொது உடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம் என்றும் கவிஞர் கூறியிருப்பதை யாவரும் அறிவர். தொழிலாளர் பற்றி சித்திரச் சோலைகள போன்ற பாடல்களக் கவிஞர் பாடியுள்ளதையும் அறிவோம். ஆனால் அவர் பாடும் பொதுவுடைமை ஆழ்ந்த மனிதநேயக் கொள்கையாகத்தான் வெளியிடப்படுகிறது. அவர் கம்யூனிசம் என்ற வரையறுத்து விளக்கப்பட்டுள்ள மார்க்சிய இயங்கியல் பொருள் முதல் வாதத்தை கவிதையாகப் பாடவில்லை. கட்டுரையாகவும் தந்ததில்லை. இந்தியப் பொதுவுடைமைக் கட்சியுடன் அவர் தொடர்புகொள்ளவுமில்லை. சீனப் படையெடுப்பின்போது பொதுவுடைமைக் கட்சியை நேரடியாகச் சாடுகிறார். சீனாவை எதிர்ப்பது தமிழர் கடன் என்ற பாட்டில்,

குடிவைத்த வீட்டுக்கே தீயை வைக்கும் கொள்கையினோன் பொதுவுடைமைக் காரனன்றோ

என்கிறார். வரிசைகெட்ட உருகிய நாடு என்ற பாட்டிலும் பெண்கள் காமம் கழிக்கும் கலையமா என்ற பாடல்களில் ரஷ்ய சமுதாயத்தைப் பழிக்கிறார். தொடக்க காலத்தில் இவர் பாடல்களில் இருந்த பொதுவுடைமைச் சார்பு பிற்காலத்தில் இல்லை. அரசியல் தத்துவம் என்ற அளவில் கவிஞர் பொதுவுடைமைத் தத்துவத்தை ஏற்றுப்பாடியதாக சான்று இல்லை.

பிரஞ்சிந்திய அரசியல்பற்றி கவிஞர் எழுதிய பாடல்கள் என சிறப்பித்துக் கூறுமாறு எவையும் இல்லையென்றே கூறலாம். இவர் அரசுப்பணியில் இருந்தது ஒரு காரணமாகலாம். இன்னொரு காரணம் பிரஞ்சிந்திய நாட்டில் கொள்கையடிப்படையில் அமைக்கப்பெற்ற அரசியல் கட்சிகள் போட்டியிடுவதில்லை. தனிமனிதர்கள முன்வைத்தே தேர்தல்கள் நடந்தன. அங்கு அடிப்படை அரசியல் கொள்கை மாறுபாடுகள் இருக்கவில்லை. அங்கு அரசியல் போர் என்பது குழுக்களின் போரேயன்றி கொள்கைப் போரன்று. நம் கவிஞர் புதுவையில் போராடியது சுயமரியாதைக் கொள்கைகளுக்கும் திராவிடர் கழகத்தின் நாத்தீகக் கொள்கைகளுக்கும்தான். பிரஞ்சு ஆட்சியை இவர் எதிர்க்கவில்லை என முன்னரே தெரிவிக்கப்பட்டது. பிரஞ்சிந்திய அரசை விமரிசனம் செய்து இவர் பாடியதாக ஒரு பாடல் கறுப்புக் குயிலின் நெருப்புக்குரல் என்ற நூலில் 427 ஆம் பக்கத்தில் தரப்பட்டுள்ள

கூவாயோ கருங்குயிலே யாரும் ஒன்றென்றே கூவாயோ?

எனத் தொடங்கும் பாடல். இது பிரஞ்சு அரசாங்கத்துக் கொடுத்த வேண்டுகோள்தான்.

கவிஞரின் தொடக்ககாலம் பாரதியைப் பின்பற்றிய தேசீயப் பாடல்கள் காலம். அப்பாடல்களில் காந்தி அண்ணலைப் புகழ்கிறார். வ.வெ.சு. ஐயரின் மறைவுக்கு அழுகிறார், திலகர், லஜபதிராய், அரவிந்தர் ஆகியோரையும் வாழ்த்தி வணங்குகிறார். கதர்ப்பாட்டு பாடுகிறார், ஒத்துழையாமையைப் பாடுகிறார். கடைசிக் காலத்திலும் ஒருமித்த பாரததேசத்தை நாவலந்தீவாய்ப் பாடுகிறார். இவ்வெல்லாப் பாடல்களயும் சேர்த்துப் பார்த்தாலும் தெளிவான ஒரு அரசியல் கொள்கையை இவர் வரையறுத்து வலியுறுத்திப் பாடுகிறார் என்ற கூற இயலவில்லை. காந்தீயத்தை தத்துவமாக இவர் ஏற்றுப்பாடவில்லை. பிற்காலத்தில் காந்தியை உயர்த்திப் பாடுவதையும் விட்டுவிட்டார். திராவிட இயக்கத்தோடு சேர்ந்தபின்னரும்கூட காந்தி, திலகர், வ.உ.சி போன்ற தலைவர்கள் மீது இவருக்கு மதிப்பு இருந்தே வந்திருக்கிறது. திராவிட நாடு கொள்கையை வலியுறுத்திய பாடல்கள் மேடையில் பாடப்பட்டதுபோல் இவருடைய தேசீயப் பாடல்கள் தேசீய இயக்கத்தாரால் பாடப்பட்டதாகத் தெரியவில்லை. இவருடைய தேசீயப் பாடல்கள் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகளாக இருக்கின்றன. இவரைத் தேசீய இயக்கக் கருத்துக்களின் பிரதிநிதியாகக் கொள்ள இயலவில்லை. இவரே அந்தப் பாடல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பது நினைக்கத் தக்கது.

புரட்சிக்கவிஞர் என்ற பட்டம் திராவிட இயக்கக் கொள்கையோடு சேர்த்தே பேசப்படுவது. இவர் சிங்காரவேலர் சென்னையில் கூட்டிய மாநாட்டில் தன்னை நாத்திகன் என்று உறுதிசெய்த நாள்முதலாய் இறுதிவரை நாத்திகனாகவே இருந்தார். இவர் பாடல்கள் இக்கருத்தை உள்ளடக்கியே இருந்தன. நாத்திகம் என்பது திராவிட இயக்கத்தில் அரசியல் கொள்கையோடு பிணைத்தே பேசப்பட்டது. திராவிட இயக்கக் கருத்துக்களயே வீறுமிக்கக் கவிதைகளாகக் கவிஞர் வெளியிட்டார். அக்கவிதைகள் படிக்காத பாமர மக்களின் நெஞ்சிலே ஏறும் வண்ணம் திராவிட இயக்கத்தாரால் நாடெங்கும் முழங்கப்பட்டன. கவிஞரின் புரட்சிக்கவி முதல் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் உள்ளிட்ட முதல் தொகுதி பாடல்கள் அனைத்தும் பொதுமேடைகளில் பாடப்பட்டன. அதனால் இவர் பெயர் தமிழ் மக்களின் உள்ளங்களில் ஏறி நிலைத்தது. இவரும் சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். திராவிடர் கழகத்திலும் இணைந்திருந்தார். நீண்டகாலம் இவர் இணைந்திருந்தது பெரியாருடைய இயக்கத்தோடுதான். இவர் பெயர் அதனால்தான் இன்றும் பெரியாரோடு இணைத்தே நினைக்கப்படுகிறது. பெரியார் இயக்கத்தின் அரசியல் கொள்கைப் பிரதிநிதியாகவே இவர் நீண்டகாலம் இருந்திருக்கிறார். இருப்பினும் இறுதிவரை அந்தக் கொள்கையை உறுதியோடு பற்றி நிற்கவில்லை. இதை முன்பே பார்த்தோம். இவருடைய இறுதிக்கால நிலையைப் படம்பிடித்தது போல் திருவாளர் மன்னர் மன்னன் அவர்கள் தன்னுடைய கறுப்புக்குயிலின் நெருப்புக்குரல் என்ற நூலின் 427ஆம் பக்கத்தில்

இந்தக்குயில் ஒரு கூட்டுக்குள் அடங்காது ஒருதலைமைக்குப் பின்னே ஒடுங்காது

என்று கூறுகிறார்.

இதுவரை கூறப்பட்ட செய்திகளின் மூலம் பாரதிதாசன் கவிதைகளக் காலவரிசையில் நான்கு காலங்களாகப் பகுக்கலாம். ஆயினும் எந்தவொரு அரசியல் இயக்கத்தின் முழுப்பிரதி நிதியாகவும் இறுதிவரை அவர் இருந்ததாகக் கூற இயலவில்லை. திராவிடநாடு பிரிவினைக்காகவும், தமிழ்நாடு விடுதலைக்காகவும் அவர் பாடிய பாடல்கள மக்கள ஈர்த்து எழுப்பவல்ல உணர்ச்சிப் பாடல்களாக அமைந்தன. இவருடைய பாடல்கள் அரசியல் இயக்க வளர்ச்சிக்கும் நேரடியாகப் பயன்படுத்தப்பட்டது. திராவிட இயக்க குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழக மேடைகளிலும், இதழ்களிலும்தான். கவிஞரின் பிடித்தமான அரசியல் கொள்கையென வரையறுத்துச் சொன்னால் அது சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகிய மூன்றையும் அடக்கிய குடியாட்சித் தத்துவம்தான். ஆழ்ந்து சிந்தித்தால் புரட்சிக் கவிஞரின் உண்மையான ஆளுமை அரசியலைக் கடந்து அவருடைய கவித்துவத்திலேதான் ஊன்றி நிற்கிறது. ஆம் அவர் முதலும் முடிவுமாக ஒரு மகாகவிஞர். அவருடைய அடிக்காலந்தொட்டு இறுதிமூச்சு வரையில் இரண்டு சக்திகள அவரை இயக்கி வந்திருக்கின்றன. காலவளர்ச்சியில் எத்தனை மாறுதல்கள் அரசியல் போக்கில் ஏற்பட்டிருந்தாலும் இந்த இரண்டு சக்திகளின் இயக்கத்தில் மாற்றம் நிகழவில்லை. இறுதிவரை அவை துடிப்புடனேயே இருந்தன. ஒன்று தமிழ் இன்னொன்று பாரதி கவிஞரின் எதிர்ப்பு, தமிழர் நலம் பேணல் ஆகிய நிலையான கொள்கைகளின் சின்னங்களாகவே பாரதியும், தமிழும் அவருக்கு விளங்கின. இந்த இரண்டு இன்னல்களுடன் அவர் கொண்ட பிணைப்பு அவருடைய இறுதிமூச்சுவரை அறுபடாமல் நின்றது. இவ்விரண்டையும் கடந்து, அவர் எந்தத் தத்துவத்தையும் பார்க்கவில்லை.

என்னுடைய இந்தக் கட்டுரை மிக மேம்போக்கான ஒரு பார்வைதான். நம் கவிஞரின் வாழ்க்கை வரலாறு முழுமையாக எழுதப்படவேண்டும். அவருடைய கவிதைகள் காலவரிசைப்படி ஆய்வுக் குறிப்புகளுடன் முழுமையாகப் பதிப்பிக்கப்பட வேண்டும். அதன் பின்னரே இந்தத்தலைப்பில் முழுமையாக ஆய்வுசெய்ய முடியும் என்பது என் கருத்து. ஆனால் இந்தத் தலைப்பில் ஆய்வு செய்யவேண்டியது மிகவும் இன்றியமையாததாகும்.

இக்கட்டுரை எழுதுவதற்கு. இதில் உள்ள காலக் குறிப்புக்களுக்கு எனக்கு மிகவும் உதவிய நூல்கள். 1. கறுப்புக் குயிலின் நெருப்புக்குரல், 2. டாக்டர் மா.அண்ணாதுரையின் பாரதிதாசன் இதழ்ப்பணிகள், 3. முனைவர் இரா.இளவரசின் இந்திய விடுதலை இயக்கத்தில் பாரதிதாசன் ஆகியவை என்பதை நன்றியுடன் குறிப்பிடுகிறேன்.

(தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம் நடத்திய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் நூற்றாண்டு விழா கருத்தரங்கில் பேசியது 20.04.1991)