காந்தியம் ஒன்றே உலகிற்கு நல்வழி காட்டும்

வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக்கெட்டுப் பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந்தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா! நீ வாழ்க, வாழ்க! பாரதியார்
பேச்சுத் தலைப்பில் காந்தியம் ஒன்றே உலகிற்கு நல்வழி காட்டும் என்று கூறப்பட்டுள்ளது. காந்தியைப் பற்றிச் சிந்திப்பதும் நினைப்பதும் இன்றைக்கு மிகவும் அவசியத்தேவையாகும். ஆனால் பல கல்லூரிப் பேராசிரியர்கள், பல பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தங்கள அறிவு ஜீவிகள், சிந்தனையாளர்கள் என்று காட்டிக் கொள்கிற பலரும் மகாத்மா காந்தி இன்றைய காலகட்டத்திற்கு ஒத்துவராதவர் என்று கூறி, குறிப்பாக இளஞர்கள், மாணவர்கள் மத்தியில் மகாத்மா காந்தி பற்றிய சிந்தனையே இல்லாமல் துடைத்தெடுத்து விடுகின்றனர்.
மகாத்மா காந்தி என்ற பெயர் தெருவுக்கும் ஊருக்கும் இருக்கிற பெயரே தவிர, அது ஒரு சிந்தனை என்பதனையும் தத்துவம் என்பதனையும் பலர் அறியாமல் போய்விட்டனர். ஆனால் உண்மை என்னவென்றால், இன்றைக்கு இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகிற்றே அவர்தான் வழிகாட்டி என்பதை நம்மை விட அயல்நாட்டவர் காந்தி பிறந்த அக்டோபர் 2ஆம் நாள சர்வதேச அமைதி தினம் (International Day of Peace) என்று ஐக்கியநாடுகள் சபை அறிவித்துள்ளது. உலக நாடுகளல்லாம் இவ்வாறு கொண்டாடும் போது, நாமும் காந்தியை நினைந்து அவர் வழிதான் வழி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எல்லோரும் அமரநிலை எய்தும் நன்முறையை
இந்தியா உலகிற் களிக்கும் ஆம்,
இந்தியா உலகிற் களிக்கும் ஆம், ஆம்
இந்தியா உலகிற் களிக்கும்
என்றார் பாரதியார். பாரதியார் இறப்பதற்கு முன்பே இவ்வாறு கூறிச் சென்றார். இந்தியா உலகிற்களித்த விஷயமென்ன?

இன்றைக்கு நம்மிடையே உள்ள அறிவியல், ஆங்கிலம், அணுவிஞ்ஞானம் முதலிய நவீன விஷயங்கள் எல்லாம் அயல் நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டவை. ஆனால் இந்தியா உலகிற்கு எதைத் தந்தது, தரமுடியும் என்று கேட்டால், ஒருகாலத்திலே புத்தரைத் தந்தது, சங்கரரைத் தந்தது, மகாவீரரைத் தந்தது. ஆனால் இருபத்தோறாம் நூற்றாண்டில் இந்தியா உலகிற்குத் தந்தது காந்தியம் என்ற தத்துவத்தை. மகாத்மா காந்தியைத் தான் இந்தியா உலகிற்குத் தந்தது.

எனவே காந்தி எதனைச் சாதித்துக் காட்டினார் என்பதனையும் பாரதியாரே தனது பாடலில் கூறுகிறார். இழிபடு போர், கொலை, தண்டம் பின்னியே கிடக்கும் அரசியலில் அறத்தைப் பாய்ச்சத் துணிந்தனை பெரும் என்றார். ஆம்! அரசியலில் அறத்தைப் புகுத்தினார் மகாத்மா. அறம் என்றால், Ethics, Morality என்று பொருள். சமயத்துக்கென்றே உள்ள ஒரு குணத்தை, சமயவாதிகள் மற்றும் கடவுளுக்கு வழிகாட்டுகிற சமயத்தலைவர்கள் கூறுகின்ற நெறி முறையை அரசியலுக்குக் கொண்டுவந்தவர் மகாத்மா. ஏன் மற்றவர்களிடமிருந்து காந்தி வேறுபடுகிறாரென்றால், அவர் அரசியலைப் புனிதமாக்கினார். இந்த அடிப்படையில் காந்தியைப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

அரசியல் எவ்வாறு இருக்க வேண்டும்?

மகாத்மா காந்தி ஓர் அரசியல்வாதி. அவர் எப்படிப்பட்ட அரசியல்வாதி, ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதை அனைவரும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைக்குக் கற்றார், கல்லாதார் உட்பட அனைவருக்கும் மகாத்மா பொதுவானவர், அரசியலுக்குச் சம்பந்தமில்லாதவர் என்று சிலர் தவறான கருத்தைப் பரப்பி வருகின்றனர். ஆனால் அவர் முழுக்க, முழுக்க அரசியல்வாதி என்பதைப் புரிந்துகொண்டால்தான் இன்றைய அரசியல் எவ்வளவு மோசமானது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

அரசியல் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறியவர் மகாத்மா. மகாத்மா காந்தி அசைக்க முடியாத கடவுள் நம்பிக்கை கொண்டவர். அவர் தன்னை ஒரு சனாதன இந்து என்று கூறி, இறுதிவரை அவ்வாறே வாழ்ந்தவர். இந்தியாவில் இந்துக்களுக்கு உரிய நம்பிக்கைகள் எவை உள்ளனவோ அவைகளத் தன்னகத்தே கொண்டிருந்தார்.

எனவே அவரின் அனைத்துத் தத்துவங்களும் அசைக்க முடியாத கடவுள் நம்பிக்கை என்ற அடித்தளத்தில் கட்டப்பட்டவை. இந்தியாவில் பெளத்தம், சமணம் தவிர அனைத்துச் சமயங்களும் கடவுள் நம்பிக்கை கொண்டவை. பெளதத்தில் புத்தரைக் கடவுளாக்கி விட்டாலும் சமணத்தில் மகாவீரரைக் கடவுளாக்கி விட்டாலும் தத்துவார்த்தப்படி அவ்விரு மதங்களிலும் கடவுள் கிடையாது. மதங்கள், இந்திய மக்கள் அனைவருடைய வாழ்வின் நோக்கமே இறைவனை அடைய வேண்டுமென்பதே. சமணமும் பெளத்தமும் கூட முக்தி நிர்வாணமடைதலைக் கூறுகின்றன.
மகாத்மாவிற்கும் இதே நோக்கம்தான். இறைவனை நேருக்கு நேர் காணவேண்டுமென்று தனது சாத்தியசோதனை நூலில் கூறியுள்ளார். ஆனால் அவர் எங்கே வேறுபடுகிறார்? இறைவனை அடைவதற்கு என்ன வழி என்பதில் காந்தியும் சமயவாதிகளும் வேறுபடுகின்றனர். சமயங்கள் அனைத்தும் கோவிலுக்குச் செல்லுங்கள், இறைவனுக்குத் திருப்பணி செய்யுங்கள் என்கின்றன. இறைவனடியார்கள் இறைவனை வணங்குங்கள் என்றனர். அப்பரும் கூட கோவிலுக்குச் செல்லுதல், அலகிடுதல், மெழுகிடுதல் செய்யுங்கள் என்கிறார். ஆனால் காந்தி கூறும் வழி எது?

நம்முடைய தத்துவம் இறைவன் இல்லாத இடமே இல்லை என்கிறது. ஒவ்வோர் உயிரிலும் இறைவன் உள்ளான். ஒவ்வொரு மனிதனிலும் இறைவன் உள்ளான். அனைத்துயிர்களிலும் நானே இருக்கிறேன் என்றான் கண்ணன் என்று பாரதியார் பாடியது போல, அனைத்துயிர்களும் கடவுளின் வடிவங்கள், கடவுள அனைத்து மானிடர்கள் உட்பட அனைத்துமாக உள்ளார் என்பதனை நாம் மரபு வழியாகக் கூறிவருகின்ற ஒரு கருத்தாகும்.

இதனை மகாத்மா உறுதியாகப் பற்றிக்கொண்டார். நம் கண் முன்னால் இருப்பவர்கள் மனிதர்கள். அனைத்து மனிதர்களிலும் கடவுள் உள்ளார். எனவே மனிதருக்குச் செய்யும் தொண்டே கடவுளுக்குச் செய்யும் தொண்டு என்றார் காந்தி. இவ்வாறு மனிதருக்குச் செய்யும் தொண்டை கடவுளுக்குச் செய்யும் தொண்டாக மாற்றிக்கொண்டார்.

மனிதர்களுக்கு எவ்வாறு தொண்டு செய்வது? எனவே அவர் அரசியலுக்கு வந்ததாகக் கூறுகிறார். ஆகவே மகாத்மாவின் அரசியல் என்பது மக்களுக்குச் செய்யும் தொண்டு ஆகும். அதுவே இறைவனுக்குச் செய்யும் தொண்டு. இவ்வாறு இறைவனுக்குச் செய்யும் தொண்டுதான் அரசியல் என்று ஆகிவிட்டால், அந்த அரசியல் எவ்வளவு தூய்மையாக இருக்கவேண்டும்? கோவிலுக்குப் போக வேண்டுமென்றால் எவ்வளவு தவறு புரிந்தவர்களும் கூட கடவுளத் தரிசிக்க சுத்தமாகப் போகவேண்டும் என்று நினைக்கிறார்கள் அல்லவா? அதுபோல் அரசியலும் புனிதமானது. எனவே மகாத்மா காந்தி அரசியல் என்பது தெய்வீகமானது எனக் கூறினார். அவருக்கு அரசியல் என்பது இறைவனுக்குத் தொண்டு செய்தவதாகப் பொருள். இறைவனுக்குத் தொண்டு செய்வதற்கு எவ்வளவு தூய்மையும் நேர்மையும் வேண்டுமோ, எவ்வளவு ஒழுக்கம் வேண்டுமோ, எவ்வளவு பக்தி வேண்டுமோ அந்த உணர்வுகளாடு அரசியலில் ஈடுபட வேண்டும். மகாத்மா காந்தி அரசியலைப் புனிதமான சேவையாகக் கருதினார். இது அடிப்படையான விஷயம். எனவே அரசியல் தொண்டும் தூய்மையாகவும் மேன்மையாகவும் இருக்கவேண்டும். இந்தக் கருத்தை நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டிருந்தால், நமக்கு இந்தத் தெளிவு இருக்குமானால், அரசியல்வாதியைப் பார்க்கும்போது, அவர் ஒழுக்கமும், நேர்மையுமானவரா என்று சிந்திப்போமல்லவா? ஆனால் இன்றைக்கு என்ன நிலைமை? அரசியல் என்றால் எதை வேண்டுமானாலும் செய்யலாம். இதனை எல்லோரும் கூறுகின்றனர். மெத்தப்படித்தவர் கூட, அரசியல் அப்படித்தான் இருக்கும் என்று கூறுகிறார். இவ்வாறு பேராசிரியர்களும் கூறுகிறார்கள். இவ்வாறு கூறிக் கூறி அரசியல் என்றால் அக்கிரமம் தான் நடக்கும் என்று நம்பவைத்துவிட்டனர். அரசியல் என்றால் எதுவும் நடக்கும், எதுவும் நடக்கலாம் என்று நம்பவைத்து விட்டனர். அரசியலில் தேர்தல் ஊழல், கொலை, கொள்ள என்று நடந்த போதும் அரசியல் அப்படித்தான் இருக்கும் என்கின்றனர். நாமே நம் மனதில் இதனை ஏற்றுக்கொண்டுவிட்டோம். அரசியல் அக்கிரமமானது என்று கூறி தப்பித்துக்கொள்ள எண்ணக்கூடாது. ஊழல் முதலிய தவறு அனைத்தும் மக்களிடமும் உள்ளன. நமது மனப்பான்மையிலும் உள்ளன. மக்கள் அரசியலில் எதனை எதிர்பார்க்கின்றனரோ அதுதான் அவர்களுக்குக் கிடைக்கும்.

அந்தக் காலத்தில் பிளாட்டோ கூறினார்; அரசியலுக்கு வராத அறிவாளிகளுக்குக் கிடைக்கும் தண்டனை முட்டாள்களின் ஆட்சி. இதனை மாற்றிக் கூறிடலாம். யோக்கியமானவர்கள் அரசியலுக்கு வரவில்லை என்றால் அது அயோக்கியர்கள் ஆட்சி ஆகிவிடும்; மோசமானவர்களின் ஆதிக்கத்திற்குப் போய்விடும். எனவே அரசியலை எவ்வாறு ஒதுக்கமுடியும்? அரசியல் ஏன் நேர்மையில்லாமல் போய்விட்டது? அரசியல் என்றால் நேர்மையாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையேயும் இல்லாமல் போய்விட்டது. மற்றொன்று மகாத்மா காந்தி கூறுவது: அரசியல் என்பது புனிதமானது மட்டுமல்ல. காரல் மார்க்சு கூறினார். இந்த சமூக அமைப்பு மற்றும் பொருளாதார அமைப்பை மாற்றினால் மனிதர்கள் நன்றாக மாறிவிடுவார்கள். ஆனால் காந்தி இதற்கு நேர்மாறாகக் கூறினார். தனிமனிதனை மாற்றுவதில்தான் சமூகத்தின் வாழ்க்கை இருக்கிறது. தனிமனித ஒழுக்கக் கேட்டினால்தான் சமூகம் கெடுகிறது. ஒவ்வொரு தனிமனிதனும் திருந்த வேண்டும். தனிமனிதன் மேம்பட்டால்தான் சமூகம் நன்றாக இருக்கும்.

எனவே மகாத்மாகாந்தியின் பார்வை தனிமனிதன் மீது வந்தது. இதற்கு அடிப்படையான பிறிதொரு கொள்கை மனித வாழ்க்கை என்பது முழுமையானது, பிரிக்க ஒண்ணாதது. பிரித்துக்கூற வேண்டுமானால், நான் ஒரு வழக்கறிஞர், நான் ஒரு அரசியல்வாதி, நான் ஒரு தந்தை, நான் ஒரு கணவன், இவை அனைத்தும் ஒருவன்தான். எனவே ஒவ்வொரு தனிமனிதனின் பண்புதான் சமூகத்தை உருவாக்குகிறது. எனவே இந்த அடிப்படை அவசியமானது. இது இல்லை என்றால் என்னாகும்?

தற்போதுள்ள சூழலில் தேர்தலில் ஒருவர் நின்றால் அவருடைய தனிப்பட்ட ஒழுக்கக்கேடான விஷயங்களப் பற்றிப் பேசக்கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. இது விநோதமாக உள்ளது. தனிமனித ஒழுக்கம் இல்லை என்றால் சமூக ஒழுக்கம் எவ்வாறமையும்? ஆகவேதான் காந்தி வாழ்க்கை முழுமையானது என்றும் அதனைத் தனித்தனியாகப் (வாட்டர்டைட் கம்பார்ட்மென்ட்) பிரிக்க முடியாது என்றும் வலியுறுத்திக் கூறினார். எனவே வாழ்க்கை முழுமையானது எனப் புரிந்துகொண்டால்தான் தனிமனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியமானது என்பதை உணரமுடியும்.

அமெரிக்காவில் எப்படி வேண்டுமானாலும் வாழலாம். தனிமனித ஒழுக்கமெல்லாம் கிடையாது என்று கூறிக் கொள்கின்றனர். அங்கே சுதந்திர வாழ்க்கை இருக்கலாம். ஆனால் அமெரிக்காவில் ஒரு குடியரசுத் தலைவராக வரக்கூடியவர் தனிமனித ஒழுக்கத்தில் தவறாக இருந்தால் அந்தப் பதவிக்கு வரமுடியாது. இதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இங்கே வீடுகளில் பெண் பிள்ளகள் தவறு செய்தால், காதலில் ஈடுபட்டால் உடனே திட்டுதலில் ஈடுபடுகின்றனர். அந்தப் பெண்ணிற்குத் தற்கொலைதான் வழி. இல்லையெனில் இவன் வெட்டிவிடுவான். ஆண்களப் பற்றிக் கவலைப்படுவதில்லை. சாதாரண நேரத்தில்கூட குழந்தைகளத் திட்டுகின்றனர். ஆனால் அரசியல் தலைவர்கள் எவ்வளவு ஒழுக்கக் கேடாக இருந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாது காலில் விழுந்து வணங்குகின்றனர். அமெரிக்கக்காரர்களுக்கும் நமக்கும் அவ்வளவு வேறுபாடு. அங்கே தனிமனிதர்கள் தவறு செய்யலாம். ஆனால் தலைவனாக வரக்கூடியவன் தவறு செய்யக்கூடாது. விவாகரத்து செய்வது அங்கே மிகவும் செளகரியம். அங்கே ராக்பெல்லர் என்பவர் விவாகரத்துச் செய்தவராதலால் மிகப்பெரிய கோடீஸ்வரனாக இருந்தும் ஜனாதிபதியாக வரமுடியவில்லை. ஆனால் இந்தியாவில் நிலைமையே தலைகீழாக உள்ளது. இங்கே ஒழுக்கமில்லாதவர் பதவிக்கு வரலாம். ஒழுக்கமுள்ள குடும்பம் நடத்துபவர்கள்கூட ஒழுக்கமில்லாத தலைவர்களின் காலில் விழுந்து வணங்குகின்றனர்.

ஏன் அப்படி வந்தது? அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று படித்தவர்கள் பரப்பிவிட்டார்கள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக கிராமத்தில் ஒழுக்கமுள்ளவர்தான், ஏழையாயிருந்தால் கூட கிராம நிர்வாக அதிகாரி. ஆனால் இப்போது கிராமத்திலும் கேடு வந்துவிட்டது. தவறு செய்தவன், ஒழுக்கமில்லாதவன்தான் தற்போது நாட்டாண்மை. கறுப்புக் கண்ணாடி கொண்ட ஏ.சி.காரில் உள்ளுக்குள்ளயே இருந்து கொண்டு கண்ணாடியைத் திறந்து மக்களக் கூடப் பார்க்காமல் இறுக்கமாகச் செல்பவர்தான் இன்றைய அரசியல்வாதி.

காந்தியைப் பார்க்க வேண்டும்

காந்தியைப் பார்க்க வேண்டும். அவர் கத்தியவார் சமஸ்தானத்தில் வைஷ்ணவ பனியா குடும்பத்தில் பிறந்தவர். இங்கு அவரின் தந்தை, தாத்தா ஆகியோர் திவான் எனும் பிரதமர் பதவியில் இருந்தவர்கள். அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர். இலண்டன் சென்று பாரிஸ்டர் படித்தவர். இந்தியாவிற்கு வந்து அவரால் வழக்கறிஞர் தொழில்செய்யமுடியாததால் அரசியலுக்குச் சென்றுவிட்டதாக, இங்கு தாசில்தாரிடம் கைகட்டி நிற்கும் வழக்கறிஞர் பலர் கூற நான் கேட்டிருக்கிறேன். பம்பாயில் முதல் வழக்கிற்கு நீதிமன்றத்தில் வாதாடச் சென்று வழக்காட முடியாமல் திரும்பிவந்து விட்டார். வாதியிடம் பணத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டார். அப்போதே அவர் நேர்மையாக நடந்து கொண்டார். இந்த நிகழ்வை அவரே சத்திய சோதனை நூலில் கூறியுள்ளார்.

ஆனால் இதே காந்தியைத்தான் அப்துல்லா சேட் எனும் தென்னாப்பிரிக்க வணிகர் தனக்கும் உறவினருக்குமுள்ள வழக்கிற்காக வழக்கறிஞராக அங்கே அழைத்தார். அவர் ஆங்கில வழக்கறிஞர் ஒருவரை ஏற்பாடு செய்திருந்தாலும் குஜராத்தி வழக்கின் நடவடிக்கைகள ஆங்கிலத்தில் கூறக்கூடிய ஒரு வழக்கறிஞர் தேவை என உணர்ந்து குஜராத்தி தெரிந்த காந்தியை வழக்கறிஞராகத்தான் அழைத்தார். அங்கு இருபதாண்டுகள் வழக்கறிஞர் தொழில் மூலமாகத்தான் வாழ்ந்தார். ஆனாலும் இங்குள்ள வழக்கறிஞர்கள் அவருக்கு வழக்காடத் தெரியாது, அதனால் அரசியலுக்கு வந்தார் என்று இன்றும் கூறி வருகின்றனர்.

தென்னாப்பிரிக்காவில் கோட்டும் சூட்டும் போட்டுக் கொண்டு வழக்கறிஞர் தொழிலும் தொண்டும் செய்துவந்தார். தம்முடைய சட்ட அலுவலகத்தில் எம்.கே.காந்தி, அட்டர்னி என்று போர்டு போட்டுக் கொண்டார். ஆங்கிலேயர்கள உதவியாளர்களாக வைத்துக்கொண்டார். இவ்வாறு வாழ்ந்த அந்த காந்திதான் இந்தியாவில் தன்னை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு ஓர் ஏழை விவசாயியாக வாழ்ந்து காட்டினார். அதிக துணிகள் கொண்ட குஜராத்தி ஆடையில்தான் தொடக்கத்தில் இந்தியாவில் காணப்பட்டார். ஆனால் தமிழ்நாட்டில் மதுரை வந்தபோதுதான் ஓர் ஏழை விவசாயி போன்று ஆடையில் மாற்றம் செய்து கொண்டார். அது மட்டுமல்ல இறுதிவரை அவ்வாறே வாழ்ந்து வந்தார்.
ஏன் இவ்வாறு இருந்தார் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். தன்னை மகாத்மா என்று அழைப்பதைக்கூட அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரின் ஆசிரமத்தில் அவரை மகாத்மா என்று அழைப்பதற்குத் தடையிருந்தது. அவர் ஒரு சாமியார் அல்லர். இன்றைக்குக் கடவுள் இல்லை என்றெல்லாம் கடுமையாக விமர்சனம் செய்பவர்கள் கூட, கண்டவர்கள் காலில் விழுகின்றனர். ஆனால் மகாத்மாவோ, கடவுளுக்கு மட்டும் பயப்படுங்கள், கடவுளத் தவிர எவருக்கும் பயப்படவேண்டாம் என்றார். அவரும் அவ்வாறே அச்சமின்றி வாழ்ந்து காட்டினார். புதிய ஆத்திசூடியில் பாரதியாரின் முதல் வாக்கியமே அச்சம் தவிர் என்பதுதான்.

ஏனென்றால் அச்சம்தான் அனைத்துப் பாவங்களுக்கும் மூலம் என்று அவரே கூறுகிறார். உலகிலுள்ள அனைத்துச் சர்வாதிகாரிகளும் பயந்தவர்கள்தான். அனைத்துச் சர்வாதிகாரிகளும் அடிப்படையில் கோழைகள. ஹிட்லராயிருக்கட்டும், முசோலினியாக இருக்கட்டும், எந்தச் சர்வாதிகாரியாகக்கூட இருக்கட்டும்.

ஆனால் மகாத்மாவிற்கு அச்சமே இல்லாததால் எவரையும் அவர் அன்போடு பார்த்தார். எனவே அன்புதான் தைரியத்தின் வெளிப்பாடு. அச்சமில்லாதவர் உள்ளத்தில் அன்பு நிரம்பிவழியும். இதனால், மனிதன் மனிதனின் காலில் விழுந்து வணங்குவதை காந்தி வெறுத்தார். ஆனாலும் காந்தி வெளியில் செல்லும்போது ரோடுகளில் அவர் காலில் விழுந்து வணங்கினால் என்ன செய்வது? தன் காலில் விழுவதற்கு அரசு தடைவிதித்தால் அதனை நான் வரவேற்பேன் என்று கூறினார். தான் ஒரு சாதாரண மனிதன்தான். தன்னைப்போல் வாழ்ந்து, தன்னைப் போலவே அனைவரும் சாதிப்பது சாத்தியமே என்று அறிவித்தார் காந்தி.

ஆனால் இன்றைக்கு மகாத்மா என்பவர் உன்னதத் தலைவர், அவர் அருகிலேயே செல்லமுடியாது என்று அவரை உயர்த்திவிட்டனர். அவர் கூறியதோ தான் முயன்றுதான் அனைத்தையும் செய்தேன் என்பதுதான். Gandhiji’s Challenge to Christiniaty என்ற நூலை எஸ்.கே.ஜியார்ஜ் என்பார் உயிரோடு இருக்கும்போது, 1938இல் எழுதினார். இந்நூலில் சமர்ப்பணம் என்பதில் Dedicated to Gandhiji who made Jesus and teachings real to me என்று எழுதியுள்ளார். இயேசுவையும் அவரின் போதனைகளயும் உண்மை என்று எனக்கு வாழ்ந்து காட்டியவர் காந்தி என்று கூறுகிறார் ஜியார்ஜ்.

இயேசுநாதர் போன்று வாழ்ந்துகாட்ட முடியாது என்று பாதிரியார்கள் கூறி வந்தபோதிலும் காந்தி வாழ்ந்து காட்டினார் என்கிறார் அவர். இயேசுவின் மலைப்பிரசங்கம் வாழ்ந்து காட்டுவதற்காகத்தான் என்று வாதிடுகிறார் இவர்.

கிறிஸ்துவத்தின் பல பிரிவுகள் உண்டு. இதில் கத்தோலிக்கர், புரட்டஸ்டன்டு என இருபெரும் பிரிவுகள் உள்ளன. இதில் கம்யூனிட்டி சர்ச் என்று ஒரு பிரிவு உள்ளது. பொதுவாக சர்ச்சுகளில் ஞாயிறன்று பொய்பீடத்தில் நின்றுகொண்டு பாதிரியார்கள் பிரசங்கம் செய்வார்கள். இதேபோல் கம்யூனிட்டி சர்ச் பாதிரியார் ஜான் ஹேன்ஸ் ஹோம் என்பார் இவ்வாறு பிரசங்கம் செய்யும்போது Who is the greatest man living now? என்று வினவினார். அப்போது அவர் மூவர் பெயர்களக் குறிப்பிட்டார். லெனின், ரொமெய்ன் ரோலண்ட், மகாத்மா ஆகியோர். அவர் அப்போது காந்தியைப் பார்த்ததில்லை பின்னாளில் பார்த்து அவரின் சீடரானார்.

அவர் கூறுகிறார் When I think of Lenin, I think of Nepolean (நான் லெனினை நினைவுறும் போது நெப்போலியன் முன்வருகிறார்) When I think of Romain Rollend, I think of Tolstoy (நான் ரொமெய்ன் ரோலந்தை நினைவுறும்போது டால்ஸ்டாய் முன்வருகிறார்) When I think of Ganidhi, I think of Jesus Christ (நான் காந்தியை நினைவுறும்போது இயேசு முன்வருகிறார்).

அவர் இயேசுவின் சொற்களப் பேசினார். அவர்போல் வாழ்ந்தார். அவர்போல் முயல்கிறார். அவர்போல் துன்புறுகிறார். ஒருநாள் இப்புவியில் இறையரசிற்காக அவர் போல் பெருமையாகச் சாவார் என்றார். எல்லோரும் என்னை மகாத்மா என்று அழைக்கின்றனர். நான் மகாத்மாவா அல்பாத்மாவா என்பது இறக்கும்போது தெரியும். நான் ஒருவனால் சுடப்பட்டு இறந்தால் கடவுள் நாமத்தை உச்சரித்துக் கொண்டே இறக்க வேண்டும் என்றார். சாமியார்களுக்கெல்லாம் பூஜ்யஸ்ரீ (தவத்திரு) என்று கூறுகின்றனர். இந்த தான் என்ற உணர்வை எடுத்தால்தான் அறிவு தெளிவாக இருக்கும். இன்றைக்குப் பொதுவாழ்வில் உள்ளார்களுக்கு என்ன துன்பம்? தன்னைப் பற்றியே கவலைப்படுபவர்கள்தான் இன்றைக்குப் பொதுவாழ்வில் இருக்கிறார்கள். தனக்கு என்ன கிடைக்கும் என்பவன்தான் அரசியல்வாதியாக இருக்கின்றான். நானே ஒரு அரசியல்வாதிதான். ஆனால் நான் கூறினால் எவனும் பொருட்படுத்துவதில்லை (கட்டுரையாளர்). எனவே தன்னை ஜீரோவாக்கிக் கொள்கிறவன்தான் பொதுவாழ்க்கைக்கு உகந்தவன். இதைத்தான் காந்தி கூறினார். தனிமனித ஒழுக்கம் முக்கியமானது. மனித வாழ்க்கை முழுமையானது.

அகிம்சைதான் உலகைக் காப்பாற்றும்

அடுத்த விஷயம் மனிதர்கள் அனைவரும் அடிப்படையில் நல்லவர்கள். அவர்கள் தவறு செய்கின்றனர். அவர்கள் தவறுகள நீங்கள் வெறுக்க வேண்டும். தீமையை விலக்கவேண்டும். தீமை செய்கிறவர்கள அன்போது பார்க்க வேண்டும். பாரதியார், பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே என்றார். மகாத்மா தனக்குப் பகைவனே இல்லை என்று கூறினார். ஏனென்றால் அவர் அனைவரையும் அன்போடு பார்த்தார். அவர் மனதில் எவர்மீதும் பகைமையில்லை. ஆனால் ஆங்கிலேயர்கள் உட்பட இலட்சக் கணக்கானோர் அவருக்குப் பகைவராக இருந்தார்கள். ஏனென்றால் மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்கள். அவர்கள் தவறு செய்யும்போது அதனை உணர்த்தினால் அவர்கள் திருந்துவார்கள். அதனை உணர்த்துவதற்குரிய வழி தாங்கள துன்பத்தை ஏற்றுக் கொள்வதாகும். இவ்வாறு துன்புறுத்தி தவறு புரிவோர் மனம் தொடப்படும். அவர்கள் திருந்துவார்கள். தீமையை எதிர்க்க வேண்டும். ஆனால் தீமை புரிபவர்களத் திருத்தவேண்டும். இது காந்தி கற்றுத்தந்த பாடம்.