காந்தியமும் வள்ளுவமும்

காந்தியம் என்னும் தத்துவம் ஒரு குறிப்பிட்ட நூலில் மட்டும் காணக்கூடியதன்று. காந்தியம் என்பது மகாத்மா காந்தி அவர்களின் பேச்சு, எழுத்து, வாழ்க்கை ஆகியவற்றில் இருந்து பெறப்படும் கொள்கை. காந்தியம் மானுட வாழ்க்கையை முறைப்படி வாழ்வதற்குக் காட்டப்படும் வழி. மனிதன் தனி வாழ்க்கையையும் சமூக வாழ்க்கையையும் வாழ்வது எங்ஙனம் என்பதைச் சுட்டுவது காந்தியம். அதை ஒரு சூத்திரவடிவில் கூறுதல் இயலாது. அதன் பல்வேறு கூறுகள பற்றியே கூறுதல் இயலும். அதனால்தான் மகாத்மா என் வாழ்வே நான் தரும் செய்தி என்றார். காந்தியம் சத்தியம், அகிம்சை என்ற பேரிணைப்பைத் தன் மையக் கருத்தாகக்கொண்டு இலங்குகிறது. இவ்விரண்டின் ஒலியிலேயே இவ்வுலக வாழ்வு நடைபெற வேண்டும் என்பது மகாத்மாவின் கொள்கை. சத்தியம், அகிம்சை என்பவற்றினின்றும் விலகாமல் வாழ்ந்ததே அண்ணலின் வாழ்க்கை. மகாத்மா நமக்கு விட்டுச் சென்றுள்ள காந்தியம் திருவள்ளுவர் அருளியுள்ள திருக்குறளின் கோட்பாடுகள உள்ளடக்கி யிருப்பதை கூர்ந்து நோக்குவோர் அறிவர். மகாத்மா காந்தி அவர்கள் திருக்குறள மிகவும் போற்றியிருக்கிறார். திருக்குறள் இவ்வுலகத்தில் மனிதர் வாழ்வாங்கு வாழ்வதற்காக நெறிமுறைகள வகுத்துக் கொடுக்கிறது.

ஆகவேதான் பாரதியார் குறள வேதம் என்றார். தெய்வ வள்ளுவன் வான்மறை செய்தார் என்றும் சொன்னார். குறள் கூறும் அறவாழ்க்கைத் தத்துவத்தையே வள்ளுவம் என்கிறோம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் செய்யப்பட்ட திருக்குறள் தரும் வள்ளுவத்தை வாழ்ந்து காட்டியவர் மகாத்மா. அவர் வாழ்ந்து விளக்கிய காந்தியம் வள்ளுவத்துடன் இணைந்து இருப்பதை சில சான்றுகளால் பார்க்கலாம்.

காந்தியம் என்னும் பெரும் மாளிகை அசைக்கமுடியாத கடவுள் நம்பிக்கை என்ற அஸ்திவாரத்தின் மீதே கட்டப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்னும் நம்பிக்கையில் ஊன்றி நின்றவர். அண்ணல் பிறவியை அறுத்து இறைவன் அடி சேர்வதுதான் இவ்வுலக வாழ்வில் தன் குறிக்கோள் என்றார். இறைவன் அடியைச்சேர்ந்தான் மேற்கொண்ட முயற்சியே அரசியல் தொண்டு என்று தெளிவுப் படுத்தினார். தரித்திர நாராயணனுக்கு இயற்றும் பணியே நாராயணனுக்குச் செய்யும் தொண்டு என்பது அவர் மதம். தன்னை இறைவனின் கருவியெனவே காந்தி கருதினார்.

தன்னுடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் இறைவன் உடன் இருப்பதாகவே உணர்ந்தார். கடவுள மறந்து ஒரு நொடிப்பொழுதுகூட அவர் இருந்ததில்லை. அவர் எங்கிருந்தாலும் சிறையிலிருந்தாலும் கூட ஒவ்வொரு நாளும் பிரார்த்தனை செய்யத் தவறியதே இல்லை. இறைவனே தன்னை இயக்குவதாக உணர்ந்தார். இறைவன் தன் உள்ளத்தில் இருந்து மனசாட்சியாகக் குரல் கொடுப்பதாகவும் அதன்படிதான் நடப்பதாகவும் பறைசாற்றினார்.

கடவுள் நம்பிக்கையை ஒதுக்கினால் காந்தியம் கலைந்துவிடும். இந்த விசயத்தில் மகாத்மா வள்ளுவருடன் முழுமையாக ஒன்று படுகிறார். திருக்குறளின் முதல் 10 பாக்கள் கடவுளப் பற்றிக் கூறுகின்றன. கடவுள் வாழ்த்து குறளின் அடிப்படையைத் தெளிவாக்குகிறது. இப்பத்துப்பாக்களின் அடிப்படையிலேயே, இவற்றின் ஒளியிலேயே மீதமுள்ள 1320 குறள்களயும் விளங்கிக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு சட்டம் இயற்றப்படும்போதும் அதன் நோக்கம் முகவுரையாகத் தரப்படும். அதன் அடிப்படையிலேயே அச்சட்டத்தின் பிரிவுகள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். அதுபோன்று மனித வாழ்வின் குறிக்கோள, அடிப்படையை திருக்குறள் முதல் 10 பாக்களில் அறிவிக்கிறது. மனிதப் பிறவியின் குறிக்கோள் பிறவிச்சூழலில் இருந்து விடுபட்டு இறைவன் அடியைச் சேர்தல் என்பது கடவுள் வாழ்த்தின் உட்கிடக்கை. கடவுள் உண்மையையும், அவனை வணங்குதலே மனிதனின் கடமை என்பதையும், அப்படி வணங்குதலே பிறவிப் பெருங்கடலை நீந்த வழி என்பதையும் குறள் உணர்த்துகிறது.

கற்றதனா லாய பயன்என்கொள் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்
கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாள வணங்காத் தலை

என்னும் குறள்கள் கடவுள் வழிபாட்டை அழுத்தமாக வலியுறுத்துகின்றன. இவையே காந்தி அடிகளின் கோட்பாடுமாகும். தன்னால் உணவின்றி வாழமுடியும், ஆனால் பிரார்த்தனையின்றி ஒரு கணமும் வாழமுடியாது என்பதைப் பலமுறை மகாத்மா கூறியிருக்கிறார். கடவுள் வாழ்த்தின் கடைசிப் பாடல்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்

பிறப்பறுக்க வேண்டுவதையும் அதற்காக வழியையும் ஒருங்கே உணர்த்துகிறது. 1330 குறள்களும் பிறவியை அறுத்து இறைவன் அடியை அடைவதற்கு இவ்வுலகத்தில் எவ்வாறு வாழவேண்டும் என்பதைப் பற்றிப் பேசுகின்றன. கடவுள் நம்பிக்கையின் அடிப்படையிலேயே காந்தியமும் வள்ளுவமும் கட்டப்பட்டன என்பது தேற்றம்.

வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல

என்னும் குறளுக்கு எடுத்துக்காட்டு அண்ணலின் வாழ்க்கை. எத்தனையோ கடுமையான துன்பம் நிறைந்த போராட்டங்களிலும் அண்ணல் காந்தி மன அமைதியுடனும், உள மகிழ்வுடனும் இருந்தமைக்குக் காரணம் அவருடைய இடையறாத கடவுள் தியானமே. காந்தியத்தின் சத்தியம், அகிம்சை என்பது கடவுள் உண்மையின் மீதே நிறுத்தப்பட்டுள்ளன. எல்லா உயிர்களிலும் இறைவனே இருக்கிறான். ஆகவே ஒரு உயிர் இன்னொரு உயிரின்பால் அன்பு செலுத்துவதுதான் முறை. அகிம்சை என்பது இந்த அன்பின் வெளிப்பாடே. அகிம்சை உயிர் இயற்கை என்பது காந்தியம். இந்த அன்பின் மேன்மையையே வள்ளுவமும் வலியுறுத்துகிறது. தன்னுயிர் போன்றே பிறவுயிரையும் கருதல் வேண்டும் என்பதை வலியுறுத்தி வள்ளுவர் மொழிகிறார்,

தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க் கின்னா செயல்

காந்தியம் உலக மக்களுக்குப் புதுவழியைக் காட்டியது. அதுவரைச் சரியென ஏற்கப்பட்டு வந்த அறவியல் கொள்கையை மாற்றியது. அடைய வேண்டிய குறிக்கோள் மேன்மையாகவும், தூய்மையாகவும் இருந்தால் போதும் அதை அடைய மேற்கொள்ளப்படும் வழி எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம் என்பது உலகோரால் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது. இன்றும் பலர் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் அண்ணல் காந்தி அவர்கள் குறிக்கோளின் மேன்மைக்கும் தூய்மைக்கும் சற்றும் குறையாத மேன்மையும் தூய்மையும் உடையதாகவே அடைய மேற்கொள்ளும் வழி இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி தன் வாழ்வில் அந்தக் கொள்கையையே பின்பற்றினார். கடைபிடிக்கும் வழியில் உள்ள குறைபாடு அடையும் குறிக்கோளிலும் படியும் என்றார். இன்னும் மேலே சென்று வழியைச் செம்மை செய்துகொண்டால் நல்ல குறிக்கோள் தானே வந்து எய்தும் என்றார். இந்திய மக்களுக்குச் சுதந்திரம் வேண்டும் என்பது உயரிய குறிக்கோள். அதற்கு வன்முறை வழியை மேற்கொள்வதில் தவறு இல்லை என்றே மற்ற இந்தியத் தலைவர்கள் கருதினர். உலகில் பல்வேறு பகுதிகளிலும் நடந்த விடுதலைப் போர்கள் வன்முறையிலேயே நடந்தன. ஆனால் அண்ணல் காந்தி இந்திய சுதந்திரம் மேன்மையான, தூய்மையான லட்சியம். அதை அடையும் வழி புனிதம் குறையாமல் இருக்கவே அகிம்சையை மேற்கொண்டார். குறிக்கோளும் அடையும் வழியும் வேறுபாடின்றிப் புனிதமான இருக்கவேண்டும் என்பது காந்தியம் உலகுக்கு வழங்கிய கொடை, இக்கருத்தை முன்பே வலியுறுத்தி வந்தது வள்ளுவம்.

அறத்தான் வருவதே இன்பம்

என்றும்

அறனீனு மின்பமுமீனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள்

என்றும்

அருளாடு மன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல்

என்றும் கூறுகிறது குறள். பெற்ற தாயைப் பேணுவதைவிடப் புனிதமான செயல் என்னவாக இருக்கமுடியும்? தந்தையைக் காப்பாற்ற தவறு செய்யலாம் என்கின்றனர் சீனர். ஆனால் வள்ளுவரோ

ஈன்றாள் பசிகாண்பா ளாயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை

என்று கண்டிக்கிறார். வினைத்தூய்மை என்னும் அதிகாரம் முழுமையும் வழிமுறைகள் தூயனவாய் இருத்தல் வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது.

இடுக்கட் படினு மிளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர்

என்கிறார். வழிமுறையில் உள்ள குற்றம் எய்தும் குறிக்கோளிலும் படியும் என்பதை

கடிந்தவை கடிந்தொரார் செய்தார்க் கலைதாம் முடிந்தாலும் பீழை தரும்

என்ற குறளில் வெளிப்படுத்துகிறார். அறத்தின் பாற்பட்டே எல்லாச் செயல்களும் மனிதன் செய்யவேண்டும் என்பது வள்ளுவம் காட்டும் வழி. எக்காரணம் பற்றியும் அறம் திறம்பலாகாது. இதையே காந்தியம் வலியுறுத்துகிறது. நல்ல குறிக்கோள் நல்வழியிலேயே எய்தப்படவேண்டும்.
அண்ணல் காந்தி அவர்கள் தீமையை எதிர்த்து அழிக்க வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தார். தீமையை எதிர்த்துப் போராடினார். ஆனால் தீமை செய்யும் மனிதனை அவர் நேசித்தார். எல்லா மனிதர்களும் அடிப்படையில் நல்லவர்கள் என்பது காந்தியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று. தீமை செய்பவனும் அடிப்படையில் நல்லவனே. அவன் மீது அன்பு கொண்டு அவன் செய்வது தீமை என்பதை அவனுக்கு உணர்த்தினால் அவன் திருந்துவான், தீமை ஒழியும். தீமையை வெறுக்கவேண்டும், ஆனால் தீமை செய்யும் மனிதனை வெறுக்கக் கூடாது. அதனால் அவனைத் தண்டிக்க முயலக் கூடாது. மாறாக அவனைத் திருத்தவே முயலவேண்டும். அதற்கு காந்தி கைக்கொண்ட முறையே சத்தியாக்கிரகம். தீமை செய்யப்படும் போது அதை எதிர்த்துத் தன்னையே வருத்திக்கொண்டு தீமை புரிபவனின் உள்ளத்தைத் தொடவேண்டும். தன்னை வருத்திக் கொள்வதன் மூலம் தீமையை அதைச் செய்பவனுக்கு உணர்த்த வேண்டும். அப்படித் தன்னை வருத்திக்கொள்ளும்போதும் தீமை செய்பவன் மீது கோபம் கொள்ளலாகாது.

வெறுப்புக்காட்டுதலும் கூடாது. அவன் மீது அன்பு மட்டுமே கொள்ளவேண்டும். இதுவே உண்மையான சத்தியாக்கிரகியின் போக்கு. ஒரு சத்தியாக்கிரகிக்கு எதிரியே இல்லை என்றார் அண்ணல். இப்படித் தீமையை எதிர்க்கும்போது இறப்பும் நேரலாம். சாகும்போதும் கொலையாளியின் மீது கோபம் கொள்ளலாகாது. இதுவே அகிம்சை வழி. இக்கருத்துக்கள் தனியாக அமர்ந்து எழுதி வழங்கப்பட்டவையல்ல. மகாத்மாவால் வாழ்ந்து காட்டப்பட்டவை. தென் ஆப்பிரிக்காவில் காந்தி தன் கருத்தை ஒத்த மக்களுடன் ஊர்வலம் சென்றபொழுது ஒரு பட்டாணி பெரிய தடியால் அவரைத் தாக்கிக் காயப்படுத்தினான். காந்தியின் முடிவைத் தான் எதிர்ப்பதால் இப்படிச் செய்தான். காந்தி அந்தப் பட்டாணி மீது புகார் கொடுக்க மறுத்தார்.

அவன் தன் கருத்தை வெளிப்படுத்த இந்த முறையை மேற்கொண்டான். அவன் திருந்தி என் கருத்தை ஏற்பான், ஆகவே அவன் மீது வழக்கு வேண்டாம் என்றார். காவல் துறையினர் அடித்தவன் மீது வழக்குப் போட்டனர். ஆனால் காந்தி சான்றளிக்க மறுத்துவிட்டார். சிறையில் இருந்து வெளி வந்தவுடன் அந்தப் பட்டாணி காந்தியிடம் மன்னிப்புக் கேட்டான். நிறவெறிகொண்ட ஜெனரல் ஸ்மட்ஸ் என்பார் காந்தியைச் சிறையில் அடைத்தார். சிறையில் இருந்த காந்தியுடன் ஸ்மட்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தை நடத்த அண்ணல் காந்தி சென்றபோது ஸ்மட்சுக்காகவென்று தான் தைத்த காலணிகள எடுத்துச்சென்று அவரிடம் வழங்கினார். அந்த அன்பின் வெளிப்பாட்டை ஸ்மட்சால் மறக்க முடியவில்லை. இறுதியாக அண்ணலை கோட்சே சுட்டு வீழ்த்தியபோது அவர் வாய் இறைவன் நாமத்தையே உச்சரித்தது. இந்தக் காந்தியக் கொள்கை வள்ளுவத்தில் வெளிப்பட்டிருப்பதை நாம் தெளிவாகக் காணலாம்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்

என்கிறது குறள். இதற்கும் மேலே சென்று

இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு

என்றார் வள்ளுவர். ஈராயிரம் ஆண்டுகளாக இக்குறள்பாக்கள் நம்மிடம் உள்ளன. ஆனால் இவை கைக்கொண்டு ஒழுகத்தக்கன என உணர்ந்து வாழ்ந்து காட்டியவர் அண்ணல் காந்தியே.

காந்தியம் தனிமனித ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் தருகிறது. தனிமனிதர்கள சமூகத்தை உருவாக்குகிறார்கள். தனிமனித மேம்பாடே சமூக மேம்பாட்டுக்கு அடிப்படை. தனிமனிதத்தைத் திருத்தினால் சமூகம் மாறும் என்பது காந்தியக் கொள்கை. அண்ணல் காந்தியின் அறிவுரைகள் யாவும் தனிமனிதர்கள நோக்கியே மொழியப்பட்டுள்ளன. ஒவ்வொரு மனிதனின் உள்ளமும் பண்படுவதே உலகம் உய்ய வழி என்பது காந்தியின் நம்பிக்கை.

பொருளாதார உறவுகள, பொருள் உற்பத்திச் சக்திகள சரிசெய்வதன் மூலம் மனிதவாழ்வு மேம்படும் என்பது மார்க்சியக் கொள்கை. அதாவது ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்பு தனி மனிதப் பண்புகள நெறிப்படுத்தலே சமூக நல்வாழ்வைச் சமைக்கும் வழி என்கிறது. அரசியலிலும் பொது வாழ்விலும் இருப்பவர்களின் தனி வாழ்க்கையைப் பற்றிப் பேசுவது நாகரிகம் இல்லை என்று கூறுவது இன்று பெருவழக்காய் உள்ளது. அதன் விளவு பொது வாழ்வு மாசு நிறைந்து மக்களுக்குத் துன்பமே மிகுகிறது. எத்தனைச் சட்டங்கள் போட்டாலும் எதிர்பார்க்கும் பயன் விளவதில்லை. சட்டம் எதுவாயினும் அதை நிறைவேற்றுவது தனிமனிதர்கள என்பதை நாம் மறந்துவிடுகிறோம். இந்த முரண்பாட்டை உணர்ந்து மகாத்மா சொன்னார், தனிமனித வாழ்வு என்பது தனித்தனியாகப் பிரிவுபடுத்த முடியாத முழுமையுடையது. ஒரு மனிதன் தன்னைக் கணவன், தந்தை, அரசியல்வாதி, ஆசிரியன் என்று தனித்தனியாகப் பிரித்துக்கொள்ள முடியாது. ஒரு மனிதனே இத்தனைக் கடமைகளயும் செய்கிறான். எனவே அவன் தன் ஒழுக்கத்தைக் காப்பாற்றினால் இவ் எல்லாக் கடமைகளயும் செவ்வனே செய்வான். ஒழுக்கம் தவறினால் எந்தக் கடமையும் சரியாக நிறைவேறாது. இவ்வொரு தனிமனும் ஒழுக்கமுடன் இருத்தலே சமுக உயர்வுக்கு வழி என்றார் காந்தி. இப்படித் தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்துவது திருக்குறள். திருக்குறள் ஒரு அறநூல், அதில் உள்ள குறள்பா எதுவும் குறிப்பிட்ட மக்கள் தொகுதிக்கோ, ஒரு வகுப்புக்கோ கூறப்படவில்லை. நாடு, மொழி, இனம் என்னும் புரிவுகளக் கடந்து தனிமனிதனைச் சுட்டியே குறள்பாவும் உரைக்கப்பட்டுள்ளது. குறள் கூறும் அறநெறிகள் அனைத்தும் ஒவ்வொரு தனிமனிதனும் கடைப்பிடிக்கவே உள்ளன. இவ்வாறாக வள்ளுவம் தனிமனித ஒழுக்க மேம்பாட்டில்தான் சமூக மேம்பாடு அடங்கியிருக்கிறது என்னும் கொள்கையையே வலியுறுத்துகிறது. இதிலும் காந்தியமும் வள்ளுவமும் ஒத்தே போகிறது. காந்தியம் வாழ்க்கையின் ஒரு பகுதியை மட்டும் கவனத்தில் கொள்ளவில்லை.

அது அரசியலுக்கு மட்டும், பொருளாதாரத்துக்கு மட்டும், சமயத்துக்கு மட்டும், இல்வாழ்வானுக்கு மட்டும், துறவிக்கு மட்டும் என்று குறிப்பிட முடியாது. காந்தியம் என்பது மனிதவாழ்வின் எல்லாக் கூறுகளயும் அறிந்து எல்லாக் கூறுகளிலும் மனிதனை நெறிப்படுத்தும் தத்துவம். பிறப்பு முதல் இறப்பு வரை மனித வாழ்வில் ஏற்படும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முயல்வது காந்தியம். அதில் உணவு பற்றியும் மருந்து பற்றியும் சிந்தனை உண்டு. அவ்வாறு திருக்குறள் இவ்வுலகில் மனிதன் வாழவேண்டியதற்கான அனைத்துச் செய்திகளயும் கூறுகிறது. வாழ்வில் எழும் அனைத்துப் பிரச்சினைகளப் பற்றியும் ஆய்வு செய்து அறிவுறுத்துகிறது.

காந்தியம் பொருளாதாரம் பற்றியும் பேசுகிறது. காந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய அம்சம் காந்தி சொன்ன தர்மகர்த்தா தத்துவம்.

பிரஞ்சு ஞானி பிரெளதோன் என்பவர் எல்லாச் சொத்தும் திருட்டு என்றார். மகாத்மா இதிலிருந்து கொஞ்சம் மாறிச் சொன்னார், ஒருவன் தன்னுடைய சராசரி மனித வாழ்வுக்குத் தேவையான சொத்துக்கு மேல் வைத்துள்ள சொத்துக்கள் திருட்டு என்றார். இவ்வுலகில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. மனிதர்கள் தங்களுக்கு உள்ள ஆற்றல் அடிப்படையில் வேறுபடுவது போலவே தங்களின் உடைமைகளிலும் வேறுபடுகின்றனர். எல்லோரும் பொருள் தேடுகின்றனர். ஆனால் எல்லோருடைய பொருளும் சமமாக இல்லை. உலகில் எங்குமே சமத்துவம் இல்லை. ஒரு சிலர் மற்றவரைக் காட்டிலும் மிக அதிகமான பொருளுடையவர்களாக உள்ளனர். இவ் ஏற்றத்தாழ்வைப் போக்க சொத்துக்களப் பொதுவுடமையாக்கவேண்டும் என்பது மார்க்சியம். மகாத்மா காந்தி அவர்கள் மனிதர்கள் பொருள் தேடுவதில் ஆர்வமுடையவர்களாக இருப்பதைக் கண்டார். இந்தத் தனிமனித முயற்சியை மகாத்மா தடுக்க நினைக்கவில்லை. ஆனால் பொருள் தேடிச் சேமிப்பவரின் மனப்பாங்கை மாற்றுவதில் அக்கறை காட்டினார். ஒருவரிடம் பொருள் மிகுவது சமுதாயத்தில் வஞ்சகம், பொறாமை, அடிமைத்தனம், இதனைத் தொடரும் தீமைகள் உருவாக வழிவகுக்கிறது. அதனால் சமூக அமைதி அழிகிறது. இதை மாற்ற காந்தியார் கண்டுபிடித்த தத்துவம் தர்மகர்த்தா முறை. ஒருவனுக்குச் சொத்துக்கள் பலவகையில் கிடைக்கலாம். அவன் சேர்த்த அனைத்துச் சொத்துக்களும் அவனுடையது ஆகாது என்பது மகாத்மாவின் வாக்கு. அவனுக்குத் தேவையான சொத்தை அவன் பயன்படுத்தலாம். அந்தத் தேவை சமூகத்தில் உள்ள மற்றவர்களின் தேவையை ஒத்து இருக்கவேண்டும். மீதமுள்ள சொத்துக்கள் அவனிடமே இருந்தாலும் அவை பிறருக்குச் சொந்தமானது. அச்சொத்துக்களுக்கு அவன் தர்மகர்த்தாவாக இருந்து பிற மக்களின் நியாயமான தேவைகளப் பூர்த்தி செய்யப் பயன்படுத்த வேண்டும். தேவைக்கு மேலான சொத்துக்கள சமூகமோ, அரசாங்கமோ எடுக்கலாம். ஆனால் அதில் வன்முறை இருக்கிறது. அதனால் இவ்வழியை ஏற்றுக்கொள்ள காந்தியால் இயலாது. மேலும் சம்பாதிக்கும் பொருள அரசு பறிமுதல் செய்தால் திறமையுள்ளவர்கள் பொருள் செய்ய முன்வரமாட்டார்கள். அவர்கள் திறமை பயன்படாமல்போகும். ஆகவே பொருளச் சமுதாயத்துக்காகப் பொருளுடையோர் பயன்படுத்துமாறு செய்வது அகிம்சை வழி. இதனால் சமூகத்தில் அமைதி நிலவும். இதுவே தர்மகர்த்தா முறை. இக்கருத்தை முன்னமேயே உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் திருவள்ளுவர். மகாத்மாவின் கருத்துக்கு மேலாகவே வள்ளுவர் கூறுகிறார்.

தாளாற்றித் தந்த பொருளல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு

என்று. தேடிய பொருள மற்றவருக்குப் பயன்படுத்து எனக் காந்தியார் கூறினார். வள்ளுவரோ ஒருவன் உழைத்துப் பொருள் தேடுவது தக்கவர்களுக்கு உதவத்தான் என்கிறார். ஒவ்வொருவரும் சொத்து தேடுவதே பிறருக்கு உதவத்தான் என்ற உள்ளம் எழுமாயின் காந்தியம் விரும்பும் மேன்மைச் சமூகம் ஏற்படத்தான் செய்யும். மகாத்மா காந்தி பொருளாதாரச் சமத்துவத்துக்குப் புது விளக்கம் தந்தார். சமத்துவம் என்றால் எல்லாரும் ஒரே அளவான சொத்தை வைத்திருப்பதன்று. சமூகத்தில் உள்ள அனைவருக்கும் அவரவரின் தேவைக்கேற்ற வசதி கிடைப்பதுதான் சமத்துவம். நான்கு குழந்தைகள் உடைய ஒருவனுக்குத் தேவைப்படும் பணத்தைத் தனிமனிதன் பெறச் செய்வது சமத்துவமன்று. தர்மகர்த்தா முறையில் இதுபோன்ற சமத்துவம் அமைதியாக ஏற்படும். இதையே திருக்குறள் கூறுகிறது. இந்தக் குறள்பாவில்

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு

இதன் பொருள் உலக மக்கள நேசிக்கிற பேரறிஞனிடம் குவியும் பொருள் ஊருணியில் நிறைந்த நீர் போன்றது என்பது. ஊருணியில் நீர் நிறைந்திருக்குமாயின் ஊரில் உள்ள அனைவரும் தம்தம் தேவைக்கு ஏற்பவே நீரை எடுத்துக்கொள்வர். ஒரு குடும்பத்தில் இருவர் மட்டுமே இருந்தால் அவர்களுக்குப் போதுமான நீரை எடுத்துக்கொள்வர், ஒரு குடும்பத்தில் பத்துபேர் இருந்தால் அதிகமான நீரை எடுத்துச் செல்வர். ஒரே அளவு நீர் மட்டுமே எல்லோரும் எடுத்துச் செல்லவேண்டும் என்று சட்டமில்லை. அதைப்போன்று உலக மக்கள நேசிக்கும் பேரறிவாளனிடம் சொத்து நிறைந்தால் எல்லா மக்களும் அவரிடம் தேவைக்கேற்ற பொருள்பெறுவர். மருத்துவப்படிப்புக்குச் செல்கிறவன் அதிகப் பொருளயும், தொடக்கப்பள்ளியில் பயில்வோர் குறைந்த பொருளயும் எடுத்துக்கொள்வர். ஊருணி எப்படி ஊருக்குப் பொதுவோ அதுபோன்றே உலகவாம் பேரறிவாளன் உடைமைகளும் ஊருக்குப் பொதுவாகும். பொருளாதாரக் கொள்கையிலும் மனித மனப்பான்மையே அடிப்படையாகிறது. பொருள் மக்கள் அனைவருக்கும் பயன்படும்.

சமூகவாழ்வில், மனித உறவுகளில் அன்பும் பரிவும் நிலவும். பொறாமை, வெறுப்பு, வஞ்சனை ஆகியவை இடம்பெறுதல் இன்மையால் சமூகத்தில் அமைதியும், மகிழ்வும் இருக்கும். காந்தியம் கம்யூனிசத்துக்குக் கொடுக்கும் மாற்றம் இது. மனிதனுக்கு மனிதன் பொருளாதாரத்தில் மிகுந்த ஏற்றத்தாழ்வுடன் இருப்பதை அண்ணல் காந்தி மிகவும் வெறுத்தார். ஆயினும் பணக்கார வகுப்பு என்றும் ஏழை வகுப்பு என்றும், முதலாளி வர்க்கம் என்றும் தொழிலாளி வர்க்கம் என்றும் எதிரும் புதிருமாக நின்று சண்டையிடுவதை அண்ணல் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்கள் வகுப்புகளாகப் பிரிந்து நின்று போரிடுவதிலேயே சமூக மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படும் என்ற கொள்கையை அண்ணல் எதிர்த்தார். மனிதன் அன்பு செலுத்துவதன் மூலமே அமைதியான முன்னேற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்பது காந்தியம். அந்த அன்பின் அடிப்படையிலேயே காந்தியடிகளின் பொருளாதாரக் கொள்கை சமைக்கப்பட்டது. திருக்குறள் ஒப்புறவு என்னும் அதிகாரத்தில் இதை வலியுறுத்துகிறது.

காந்தியம் இந்திய மக்களின் வாழ்வை நுணுகி ஆய்ந்து உருவாக்கப்பட்ட கொள்கை. அண்ணல் காந்தி மக்கள் தொண்டிலே ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போதே தான் பெற்ற அனுபவத்தைக் கொண்டு உருவாக்கிக் கடைபிடித்தது காந்தியம். அப்படி அறிவிக்கப்பட்ட காந்தியக் கொள்கையே தீண்டாமை ஒழிப்பு. காந்தியம் கடவுள் உண்மையை மையமாகக் கொண்டது என்று முன்னர்க் கூறினோம். பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றே என்றும் அத்வைதக் கொள்கையை காந்தி ஏற்றார். அதன்படி எல்லா உயிர்களிலும் இறைவனே இருக்கிறான். எல்லா உயிர்களிலும் இறைவன் இருப்பது உண்மையே எனில் மனிதர்களிடையே தீண்டாமை எப்படி இருக்கலாம்? ஒரு உயிர் இன்னொரு உயிரைத் தாழ்வாகக் கருதி எவ்வாறு ஒதுக்க முடியும்? அப்படி ஒதுக்கினால் அது இறைவனுக்கு எதிரான செயல் அன்றோ? பாபம் அன்றோ? தீண்டாமை பாபம் என்னும் உணர்வை அதைப் பின்பற்றிய மக்களிடையே உண்டாக்கியதால் மேல் சாதி மக்கள் தாங்களாகவே தீண்டாமையைக் கைவிடுமாறு செய்தார் அண்ணல். கடவுளின் பெயராலும், சமயச் சாத்திரங்களின் பெயராலும் கோவிலுக்குள் நுழைய ஒரு பகுதி மக்கள் மறுத்துவந்த காலத்தில் அம்மக்கள் கோவிலின் உள் நுழைந்து வழிபாடு செய்யும் வரை கோவிலில் இறைவன் இருக்கமாட்டான் என்று அறிவித்தார் காந்தி.

தீண்டாமை என்பது மனித மனத்திலே எழும் ஒரு தீய எண்ணம். அது புறத்தே பலவகையிலும் வெளிப்படும். தான் மற்றவனைவிட உயர்ந்தவன் என்னும் எண்ணமே தீண்டாமைக்கு அடிப்படை. அந்த எண்ணம் ஒவ்வொரு மனிதன் உள்ளத்தினின்றும் நீங்கும் வேளயே தீண்டாமை முற்றாக ஒழியும்.

மனிதர்கள் அனைவரும் சமம் என்ற எண்ணம் உறுதிப்பட வேண்டும். மனிதர்கள் பிறப்பால் சமமானவர்கள என்ற அடிப்படைக் கொள்கையை வலியுறுத்துவது காந்தியம். இதை மனிதகுலம் முழுமைக்கும் பயன்படுத்தலாம். இந்தியாவில் உள்ள தீண்டாமைக்கு மட்டுமன்றி உலகில் உள்ள அனைத்துவகையான தீண்டாமைக்கும் காந்தியம் தேர்வாகும். இதனாலேயே மாட்டின் லூதர்கிங் அண்ணல் காந்தியத் தன் வழிகாட்டியாக ஏற்றார்.

இந்தக் காந்தியக் கொள்கை வள்ளுவத்தில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் குறள் மூலம் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதை இன்னும் விரிவுபடுத்தி,

மேலிருந்து மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்.

என்கிறது குறள். இக்குறட்பாக்கள் நம் நெஞ்சில் படிந்திருக்குமாயின் தீண்டாமை என்னும் கொடிய நோய் நம்மைப் பற்றியிருக்காதே. காந்தியம் சத்தியம், அகிம்சை என்பதை அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்டது என்கிறோம். சத்தியத்தை பற்றி நிற்றலே சத்தியாக்கிரகம். சத்தியத்தை அகிம்சையாலேயே அடையமுடியும் என்பது காந்தியின் மதம். தன்னுடைய வரலாற்றைப் பதிவுசெய்த அண்ணல் அதை தான் சத்தியத்தை வைத்து செய்த சோதனைகள் என்று அழைத்தார். அதாவது சத்தியத்தை முன்நிறுத்தி தன் வாழ்க்கையைச் சோதித்தல் தான் சத்தியத்தில் நின்றேனா எனச் சோதித்தல். சத்தியத்தில் நிற்றலே பேரறம். அப்படி நின்றால் எல்லா நற்பயன்களும் தாமே வந்து எய்தும் என்பது காந்தியின் திடமான நம்பிக்கை. அரிச்சந்திரனின் கதை அண்ணலில் சத்திய வேட்கையை நிலைபெறச் செய்தது. அண்ணல் கூறுகிறார், கடவுள்தான் உண்மை என்று கூறிவந்தேன். இப்போது உண்மையே கடவுள் என்று கூறும் நிலைக்கு வந்துள்ளன். சத்திய உபாசனையே காந்தியின் வாழ்க்கையாயிற்று. எந்த நிலையிலும் சத்தியத்தினின்றும் விழாதிருப்பதே அண்ணலின் முயற்சியாயிற்று. அதனால் தீமையின் நிழல்கூடப் படியாத முழு நன்மைகள விளந்தன. சத்தியம் அவர் உள்ளத்தில் மாசு படியாமல் பார்த்துக்கொண்டது. அதனால் உள்ளம் அமைதியில் திளத்தது. மக்கள் மீதும் ஏன் உயிர்கள் அனைத்தின் மீதும் அன்பெனும் வெள்ளத்தைப் பாய்ச்சியது. சத்தியமே பேரறம் என்னும் கொள்கையை திருக்குறள் பல இடங்களிலும் வலியுறுத்துகிறது. குறிப்பாக வாய்மை என்னும் அதிகாரம் இதற்கென்றே தரப்படுகிறது.

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை.
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்.

என்று நேரே சத்தியத்தின் பெருமையை உணர்த்திய வள்ளுவர் எதிர்மறையாகவும் இவ்வாறு கூறுகிறார்.

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமும் தரும்.
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று.

பொய்யாமை என்னும் கொள்கையைக் கைக் கொண்டால் போதும் வேறு தனியாக அறங்கள் செய்யவேண்டுவதில்லை என்கிறார். பொய்யாமை என்பது எல்லா அறங்களயும் தன்னுள் பொதிந்துவைத்துள்ளது, அவற்றின் பயன்கள விளவிக்கும் என்பது இதன் பொருள். மீளவும் வள்ளுவர் நேரே கூறுகிறார்,

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற.

தன்னுடைய பரந்த கல்வியாலும், பட்டறிவாலும், ஆழ்ந்த சிந்தனையினாலும் கண்ட பேருண்மைகளில் வாய்மையைவிட நல்லது வேறொன்றும் இல்லை என்று வள்ளுவர் உறுதி செய்கிறார். அண்ணல் காந்தியின் சத்தியம் பற்றிய அனைத்துச் சிந்தனைகளும் வள்ளுவத்தில் வெளிப்பட்டிருப்பதை நாம் கண்டு மகிழலாம். இவ்வாறே அகிம்சையை வள்ளுவர் வலியுறுத்துகிறார். இக்குறளில்,

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மானாசெய் யாமை தலை.

எக்காலத்தும், எந்தச் சூழலிலும், எந்தக் காரணத்துக்காகவும் இன்னா செய்தல் கூடாது என்பது இதில் வலியுறுத்தப்படுகிறது. காந்தியத்தில் அகிம்சை என்பது பிறருக்குத் துன்பம் செய்யாமை என்ற எதிர்மறைப் பொருள மட்டும் கொள்ளவில்லை. எல்லா உயிர்களிடத்தும் அன்பு பூணுதல் என்னும் ஆக்கப் பொருள உடையது. மற்ற உயிர்களின் மீது அன்பு கொண்டு அவற்றுக்குத் தொண்டு செய்யவேண்டும் என்னும் செயற்கொள்கை அகிம்சை என்பது. அந்த அன்பு உணர்ச்சியே மக்கள் தொண்டுக்குக் கொணர்ந்தது. உலகில் நிலையான உண்மை அன்புதான் எனத் தான் தன் வாழ்வில் உணர்ந்ததாக வரலாற்றுப் பேராசிரியர் ஆர்னால்டு டாயின்பீ கூறுகிறார். இந்த அன்பின் மேன்மையை வள்ளுவர் பலபடக் கூறுகிறார். அன்பு என்பது ஆக்க சக்தி. அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்றும்,

அன்பின் வழியதுயிர் நிலை அஃதிலார்க் கென்புதோல் போர்த்த உடம்பு

என்றும் கூறுவதன் மூலம் அன்புதான் உயிரின் லட்சணம் என்கிறார் வள்ளுவர். அண்ணல் காந்தி அவர்கள் பிறருக்குக் கொடுப்பதற்குத் தன்னிடம் அன்பும் உயிரும் மட்டுமே உள்ளன என்று பலமுறை கூறியுள்ளமை சிந்திக்கத்தக்கது. அன்பு அருளாக மலர்ந்து இறுதியில் தியாகமாய்க் கனிகிறது. அருள் என்னும் அன்பீன் குழவி என்றார் வள்ளுவர். இத்தியாக வாழ்வுதானே மகாத்மாவினுடையது. இவ்வாறாகச் சத்தியம் அகிம்சை என்பது காந்தியத்திலும் வள்ளுவத்திலும் ஒருங்கே விளங்குவதைக் காணலாம். வாய்மை பற்றிக் கூறவந்த வள்ளுவர்.

பொய்யாமையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின்

என்றார். இந்தப் பொய்மையைக் கூட காந்தியடிகள் ஏற்கவில்லை.

காந்தியமும் வள்ளுவமும் சமய வேறுபாடுகளக் கடந்த வாழ்க்கை நெறிகள். அண்ணல் காந்தி அவர்கள் தன்னை ஒரு சனாதனவாதி என்று தெளிவுபட அறிவித்துக் கொண்டார். வைணவ மரபில் வந்த இந்து என்பதில் அவர் குழப்பத்துக்கு இடம் வைக்கவில்லை. அவர் இறைவனை ராம் என்றே விளித்தார். ஆனால் அவர் வகுத்துப் பின்பற்றியக் காந்தியம் என்னும் தத்துவம் இந்து சமயத்தாருக்கு மட்டும் உரியதன்று. எல்லாச் சமயத்தாரும், எல்லா தேசத்தாரும், பின்பற்றக் கூடியதாகவே காந்தியம் சமைக்கப் பட்டுள்ளது. அதனால்தான் இந்துக்கள் மட்டுமன்றி கிருஸ்த்துவர்களும், முகமதியர்களும் காந்தியத் தொண்டர்களாயினர். வேற்று நாட்டினரும் இக்கொள்கையை மேற்கொண்டனர். காந்தியப் பொருளாதாரத்தை விளக்கிய பேராசான் ஜே.சி.குமரப்பா ஒரு கிருஸ்த்தவர். சனாதன இந்துவாக வாழ்ந்த காந்தியைப் பற்றி மேல் நாட்டார் ஒருவர் இப்படிக் குறிப்பிடுகிறார். இவ்வுலகில் கிருஸ்த்துவைப் போன்று வாழ்கிற ஒருவர் கிருஸ்துவர் அல்லர் என்பது ஒரு விசித்திரமே. எல்லாச் சமயத்தாரும் காந்தியின் மீது உரிமைகொண்டாடலாம். இது அப்படி அப்படியே வள்ளுவத்துக்கும் பொருந்தும்.

திருக்குறளத் தங்கள் நூலாக சைவர், வைணவர், சமணர், பெளத்தர் மட்டுமல்லாது கிருஸ்த்தவரும் உரிமை கொண்டாடுவது வியப்பன்று. ஆல்பர்ட் சுவைட்சர் இந்தப் பொதுமை கருதியே திருக்குறளக் கொண்டாடினார்.

வள்ளுவன் தன்னை உலகினுக்குத்தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

என்று நம் மகாகவியும், கல்லாடர்

ஒன்றே பொருளனின் வேறென்ப வேறெனின் அன்றென்ப வாறு சமயத்தார் நன்றென எப்பாலவரும் மியைபவே வள்ளுவனார் முப்பன் மொழிந்த மொழி

என்று திருக்குறளின் பொதுமையை விளம்புகிறார். காந்தியம் என்பது பேசுவதற்கும், எழுதுவதற்கும், ஓய்வில் ஆய்வதற்கும் மட்டும் உரிய வறண்ட சித்தாந்தமன்று. பல்கலைக் கழகங்களில் பேசுவதற்கு மட்டுமன்று. அது மனிதவாழ்வில் பின்பற்றி ஒழுக வேண்டிய நடைமுறைச் சித்தாந்தம். இந்திய மக்களுக்கு மட்டுமன்றி உலக மக்களுக்கே தேவைப்படும் சரியான கொள்கை. இன்று வன்முறையாலும் அந்த செயற்கை வாழ்க்கையாலும் துன்புறும் உலகத்துக்கு உய்யும் வழி காந்தியமே. இதை மேலை நாட்டுக்காரர்கள் இப்போது உணர்ந்து பேசுகின்றனர். இந்து சுயராஜ்யம் என்ற நூலில் அண்ணல் கூறிய கருத்துக்கள் இன்று உலகோர் கவனத்தை ஈர்க்கின்றன. காந்தீயம் பின்பற்றப்பட வேண்டிய கொள்கை என்பது வலியுறுத்தப்பட வேண்டும். இவ்வாறே வள்ளுவம் என்பது நெட்டுருப்போட்டு ஒப்பிக்க எழுந்த கொள்கையன்று. 1330 குறட்பாக்களும் மேற்கோள்களாகவே பயன்படுத்தப் படுகின்ற திருக்குறள் சுவைபயக்கும் இலக்கியமன்று. அது அறநூல். மனித வாழ்வை நெறிப்படுத்த உரைக்கப்பட்ட நூல். குறள் கூறும் அறநெறியில் நின்று வாழப் பழகவேண்டும். இல்லையேல் குறளப் பயில்வதில் பயனில்லை. வள்ளுவர்,

கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.

என்று கட்டளயிடுகிறார். இக்கட்டளயைக் குறளப் பொருத்தாவது நாம் பின்பற்றல் ஆகாதா? இக்கட்டளயைத் தலைமேற்கொண்டவர் அண்ணல் காந்தி. அண்ணல் ஒரு நூலைப் படித்து அதன் கருத்தை அவர் ஒத்துக்கொண்டால் அந்தக் கணமே அதைச் செயலுக்குக் கொண்டுவருவார். ஜான் ரஸ்கின் எழுதிய கடையனுக்கும் கடைத் தேற்றம் என்ற நூலைப் படித்து முடித்தவுடனேயே அக்கொள்கைகள ஏற்றுச் செயல்படுத்தினார். இன்று பேச்சளவில் நின்று செயல்பாட்டுக்கு வராமல் இருப்பதிலும் காந்தியமும் வள்ளுவமும் ஒன்றாகவே உள்ளது.

நல்லதம்பி திரைப்படத்தில் கலைவாணர் தமிழ்நாட்டின் பெருமையைக் கூறும்போது உத்தமர் காந்தியின் சொல்லை நன்றாய் உணர்ந்து நடப்பதில் எமக்கீடில்லை என்றார். இதுவெறும் பாடலன்று, உண்மை. அண்ணல் காந்தியின் பொதுப்பணியின் தொடக்கம் முதல் இறுதி வரை தமிழ் மக்கள் அவருடன் இணைந்தே செயல்பட்டனர். சுவாமி விவேகானந்தனை அடையாளம் கண்டது போன்றே தமிழ் மக்கள் அண்ணல் காந்தியை உணர்ந்து கொண்டனர். திருக்குறளின் மரபிலே வளர்ந்ததாலேயே தமிழ் மக்கள் அண்ணலின் சத்தியத்தையும் அகிம்சையையும் மற்றவர்கள் உணருமுன்பாகவே உணர்ந்திருக்க வேண்டும். அதனாலேயே காந்திய இயக்கம் தமிழ்நாட்டில் வலுவாக இருந்தது. காந்தியின் நூல்கள் உடனுக்குடன் தமிழில் வெளிவந்தன.

திருக்குறள் ஈராயிரம் ஆண்டுகள் தமிழிலேயே இருந்தாலும் அது நுதலும் அறவாழ்க்கையை வாழ்ந்து காட்ட குஜராத்திலே அண்ணல் பிறக்கவேண்டியதாயிற்று. அ.இராமசாமி குறிப்பது போல் வள்ளுவரே காந்தியாய்ப் பிறந்தார் எனக் கூறலாம். வள்ளுவத்தையும் காந்தியத்தையும் கடைபிடிப்போம். கடைத்தேறுவோம்.

(திருச்சி, அகில இந்திய வானொலி நிலையத்தில் நிகழ்த்திய
இலக்கியப் பேருரை 09.10.1999)