காகிழோராயினும் தாழ உரை
(27.2.99)

நம் நாட்டில் உள்ள நீதி நூல்களான ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலியன கற்கப்புகும் இளஞ்சிறார்களுக்குப் போதிக்கவே இயற்றப்பட்டன. மேலை நாடுகளப் போலன்று தமிழ் நெடுங்கணக்கைச் சொல்லிக் கொடுக்கும் போதே வாழ்வு நெறிகளக் குழந்தைகளுக்கு முன்னாளில் ஓதுவித்தனர். அவ்வாறு ஓதப்பெற்ற உயர்நீதி நூல்களில் ஒன்றான, கொன்றை வேந்தனின் 17ஆம் பாடம் கீழோராயினும் தாழவுரை என்பதாகும். இதற்கு ஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள் தந்துள்ள உரையாவது கேட்பவர் உனக்குக் கீழ்ப்பட்டவராய் இருந்தாலும் உன்சொல் வணக்கமுடையதாய் இருக்கும்படி நீ அவருடன் பேசு என்பதாம். இந்தக் கொன்றை வேந்தன் தோன்றிய காலத்தில் மேல்சாதிக் கீழ்ச்சாதி என்ற பாகுபாடு இருந்தது. அதனால் சாதியை வைத்துப் பொருள் சொல்லும் வழக்கமும் இருந்தது. கொன்றை வேந்தன் இக்கட்டள மூலம் நமக்கு அறிவிப்பது யாதெனின், நாம் யாரிடமும் வணக்கத்துடன் பணிவாகப் பேசவேண்டும் என்பதுதான். ஒருவரை விட இன்னொருவர் தாழ்ந்து இருக்கலாம். உலகில் இந்த ஏற்றத்தாழ்வு பல காரணங்களால் ஏற்படுகிறது. கீழ்மை, மேன்மை என்பது கல்வியால், பொருளால், பதவியால், சமூகமதிப்பால், திறமையால் ஏற்படலாம். இப்படி மேல் கீழ் என்று இருக்கும் மனித சமூகத்தில் மேல் நிலையில் உள்ளவர்கள் கீழ் உள்ளவர்களுடன் பழகும்போது செருக்குடனும், வெறுப்புடனும், ஏளனமாகவும் நடந்துகொள்வதை நாம் நாளும் காண்கிறோம். தான் மேலே இருக்கிறேன் என்னும் செருக்கு அவன் பேச்சில், நடத்தையில் வெளிப்படுவதை நாம் அறியலாம். இப்படிப்பட்ட செருக்கு மிகுந்த நடத்தை கீழே உள்ளவர்களிடம் வருத்தத்தையும் தொடர்ந்து வெறுப்பையும் வெளிப்படையான கோபத்யும் உண்டாக்குகிறது. அதனால் சமூகத்தில் பிளவும், பகைமையும் ஏற்படுகின்றன. இவை துன்பத்தை உண்டாக்குகின்றன. விளவு போட்டி, பொறாமை, வன்முறைச் செயல்பாடுகள். உண்மையில் மேலோராயினும் கீழோராயினும் எல்லோரும் மனிதர்கள. இவர்கள் அனைவரும் இணைந்து இருப்பதே சமூகம். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி வாழ்வதே சமூக அமைதிக்கும், மகிழ்வுக்கும், முன்னேற்றத்துக்கும் வழியாகும். அந்த அன்பு மேல்நிலையில் உள்ளவரிடம் இருக்குமாயின் அவர் உரையிலே வணக்கமும் பணிவும் இருக்கும். கீழ்நிலையில் உள்ளவனும் தன்னைப்போல் மனிதனே என்ற ஞானம் மேல்நிலையில் உள்ளவனுக்கு ஏற்படவேண்டும். அப்படிச் சிந்தனையுடன் கீழ்நிலையில் உள்ளவருடன் பணிவாக இன்சொல்லால் பேசவேண்டும். கீழ்மை என்பது அறிவால் இருக்கலாம். அறிவு குறைந்தோருடன் பேசும்போது அறிவு மிகுந்தவர் பணிவாகப் பேசினால் கேட்பவருக்குப் பேசுபவரிடம் அன்பும் நல்லெண்ணமும் தோன்றும். இதனால், தான் கேட்கும் உரை அவருக்கு எளிதில் விளங்கி உள்ளத்தில் தோயும். அறியாமை குறைந்து அறிவு வளரும். தாழ உரைப்பதால் உரைப்போர் உள்ளமும் இலகுவாகி அன்பால் மகிழும். கீழ்நிலையில் உள்ளவரிடம் மேல்நிலையில் உள்ளவர் பணிவாகப் பேசுவதால் கேட்போர்தம் தாழ்வு மனப்பான்மை நீங்கி உரைப்போருடன் நட்பு பாராட்டி அன்பு செலுத்துவர். மேல் கீழ் என்னும் வேற்றுமை எண்ணம் மறைந்து நீணிலமாந்தரெல்லாம் நிகர் என்னும் சமத்துவ எண்ணம் வளரும். தான் உயர்ந்தவன் என்ற எண்ணத்தைப் பிறர் மனதில் ஏற்படுத்தாமல் நடந்து கொள்வதே சான்றாண்மை, நாகரீகம். இறந்தவனின் பெருமை கூறவந்த புறநானூற்றுப் புலவர் அவனை மெலியரென மீக்கூரலன் என்றார். மேலோர் தம்மினும் தாழ்ந்தவரிடம் பணிவுடன் நடந்து கொள்வதாலேயே இவ்வுலகில் இன்னும் நாகரிகம் நிலவுகிறது. கீழோரிடம் தாழ உரைப்பதில் தான் மேலோரின் மேன்மையடங்கி இருக்கிறது. பணியுமாம் என்றும் பெருமை என்பது வேதம். அறிவிலும் ஆன்ம வாழ்விலும் மேம்பட்ட ஞானிகளும், மகான்களும் தம்மினும் மிகவும் கீழ்ப்பட்ட மக்களத் தாங்கள நாடிச்சென்று அவர்களுக்கு இன்மொழியால் அறிவுபுகட்டி அவர்களக் கைதூக்கிவிட்டது தானே மனித நாகரீக வரலாறு. கீழ் நிலையில் உள்ள மக்கள அணுகித் தன் அன்புமொழியால் அண்ணல் காந்தி அவர்கள உயர்த்தித் தன்மானமிக்க வீரர்களாக மாற்றவில்லையா? நல்ல செய்திகள் கீழ்நிலையில் உள்ளவர்களுக்கே சிறப்பாகச் சென்றடைய வேண்டும். குழந்தைகளிடம் நாம் எவ்வளவு அன்பாகவும் பரிவாகவும் நடக்கிறோம்? அந்த உணர்வுடனேயே கீழ்நிலையில் உள்ளவர்களிடமும் நடக்கவேண்டும். கீழோரிடம் தாழ உரைக்கும் பக்குவம் மேல்நிலையில் உள்ளவருக்கு வரவேண்டும். தாழ உரைப்பது என்பது அன்பின் அடையாளம், அன்பின் வெளிப்பாடு. கீழோரிடம் வெறுப்புக்கொள்ளாதது மட்டுமன்று அவர்களிடம் நேரே அன்பு செலுத்தவேண்டும். அன்பு செய்யப்பழகினால் தாழ உரைப்பது வருத்தமின்றித் தானே வரும். கீழோர் என்பது குணத்தில் கீழோராகவும் ஆகலாம். பணிவான உரை அவர்களின் கீழ்மைக் குணத்தைப் போக்கும். பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே என்று பாரதி கூறவில்லையா? தனக்கு எதிரியே இல்லை என்று அண்ணல் காந்தி பறைசாற்ற வில்லையா? தாழ உரைப்பது உரைப்போர், கேட்போரை மதிப்பதைக் காட்டுகிறது. இந்த மதிப்பும் ஆழ்ந்த அன்பால் ஏற்படும். அன்புதனில் செழித்திடும் வையம்.

(திருச்சி, அகில இந்திய வானொலி நிலையம் 26, 27, 28.02.1999)