கூடங்குளம் அணுஉலை தேவையா?

இன்று நம் நாட்டில் தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் பிரச்சனை கூடங்குளம் அணுஉலை பற்றிய பிரச்சனை. இந்திய அரசு பல்லாயிரம் கோடி செலவில் இந்த அணுஉலையை ரஷ்யாவுடன் சேர்ந்து உருவாக்கியுள்ளது. அது செயல்படத் தொடங்கும் தருவாயில் அப்பகுதி மக்கள் ஒரு அமைப்பை உருவாக்கி அணுஉலை செயல்படக்கூடாது எனப் போராடி வருகின்றனர். அப்போராட்டம் இயல்பான மக்கள் எழுச்சியின் விளவா அல்லது உள்நோக்குடன் தூண்டி விடப்பட்ட ஒன்றா என்பதும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. அணுஉலையின் நன்மை தீமைகள் பற்றிய விவாதத்தை நாம் இங்கு மேற்கொள்ளவில்லை. அவ்வுலை மூலம் எவ்வளவு மின்சாரம் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் என்பது பற்றியோ அவ்வுலையின் பாதுகாப்பு அம்சம் பற்றியோகூட நாம் பேசப்போவது இல்லை. இவ்வுலை பற்றிப் பேசிவரும் யாருமே பேசாத ஒரு அடிப்படையான விஷயம் பற்றிப் பேச முயல்கிறோம். நாம் கேட்கவேண்டிய ஒரு அடிப்படையான கேள்வி இதுதான். இந்த அணுஉலை ஏன் தேவைப்படுகிறது? என்பதே அக்கேள்வி. அதற்கான விடை இவ்வுலை நமக்கு ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை சரிக்கட்ட இந்த மின் உற்பத்தி தேவை. இதில் விளயும் அடுத்த, கேள்வி, நமக்கு மின் பற்றாக்குறை ஏன் ஏற்படுகிறது? அதற்குக் காரணம் நம்முடைய மின் பயன்பாடு மிகவும் அதிகரித்திருப்பதுதான். அணுஉலை பற்றிப் பேசுகிறவர்கள் மின் தேவையைப் பற்றி யாருமே பேசுவதில்லை. அந்தக் கோணத்தில் யாரும் சிந்திக்கவே இல்லை. அந்தக் கோணத்தில் சிந்திப்பது இன்றைய தவிர்க்கமுடியாத கடமை.

நம்முடைய மின் தேவை எப்படி அதிகரிக்கிறது? நம்முடைய வாழ்க்கை முறை தான் இதற்குக் காரணம், நம்முடைய நுகர்வுக் கலாச்சாரம். எதையெடுத்தாலும் மின்சாரம் தேவைப்படுகிற ஒரு வாழ்க்கை முறையை மேலும் பரப்புகிறோம். இதற்கு ஒரு அண்மைக்கால உதாரணம் மின் அடுப்பு. மின்சாரம் இல்லாத இடத்தில் மனிதன் வாழவே முடியாது என்னும் மூட நம்பிக்கையை குழந்தைப் பருவத்திலேயே உருவாக்குகிறோம். உற்பத்தியாளர்களும் வணிகர்களும் தங்களுடைய பணப் பெருக்கத்துக்காகப் புதிய புதிய பொருள்கள எல்லா ஊடகங்கள் வழியாக வலிமையாக விளம்பரப்படுத்துகின்றன. நவீன கலாச்சார மோகம் கொண்ட நம் பெண்களும் ஆண்களும் இப்பொருள்கள் இல்லையென்றால் வாழ்க்கையே பாழாவது போல் எண்ணி பறந்து பறந்து வாங்குகின்றனர். இதுவரையில் புழக்கத்துக்கு வந்துவிட்ட வீட்டுப் பொருள்களில் சில மிக்சி, கிரைண்டர் முதலியன. கிராமங்களில் கூட ஆட்டுக்கல்லும் அம்மியும் அரிதாகிவிட்டன. துணிகள துவைப்பதுகூட இல்லை. அதற்கும் வாஷிங் மிஷின். இப்படி அன்றாட (வாழ்க்கை) வேலைகளுக்கெல்லாம் மின்சாரம் தேவைப்படுகிறது.

அனைத்து வணிக வளாகங்களிலும் குளிரூட்டும் சாதனங்கள், மின்தூக்கிகள், இன்னும் எவ்வளவோ மின்சாதனங்கள் அலங்கார விளக்குகள். சூப்பர் மார்க்கெட்டுகளில் மளிகைப் பொருள்கள் வாங்குவதையே சராசரி வாழ்க்கை முறையாக்கிக்கொண்ட மக்கள். இதில் பணக்காரர், நடுத்தர வர்க்கம் என்ற வேறுபாடு இல்லை. இவ்வணிக நிலையங்கள் அனைத்தும் மின்சாரத்தை விழுங்குகின்றன. திரைப்பட அரங்குகள் எல்லாம் குளிரூட்டப் பட்டவை. நகரங்கள் அனைத்திலும் இரவுக்கால உல்லாச நிலையங்கள் மின்சாரத்தை கபளீகரம் செய்கின்றன. இரவு உறங்குவதற்காக, பகல் உழைப்பதற்காக. ஆனால் நாகரிகம் என்ற பெயரில் இரவு ஒளிவிளக்குகளால் பகலாக்கப்படுகிறது. இதனால் பாழாவது மின்சாரம்.

இவை தவிர, விழாக்கள் என்று மின்சாரம் வீணாக்கப்படுகிறது. அரசாங்கமே இந்த வேலையைச் செய்கிறது. அறிவியல் முன்னேற்றம் கணிப்பொறி ஆதிக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவர்கள் மனக்கணக்கு போடுவதையே மறந்து விட்டனர். புத்தகங்கள் தேவையில்லை. இன்டர்நெட் தேவையாகிவிட்டது. மளிகைக் கடைக்காரர்கூட கணினியில் கணக்குப்போட்டு பணம் வாங்குகிறார். விவசாயத்துக்கு மின்சாரம் தட்டுப்பாடாக உள்ளது. விவசாயமும் மனித உழைப்பைச் சார்ந்த வகையிலே செய்யப்படுகிறது. செல்போன் கலாச்சாரம் தீயைப்போல் பரவி விட்டது. இவைகளுக்கு மின்சாரம் தேவைப்படுகிறது.

பெரியது முதல் சிறிய தொழிற்சாலைகள் வரை அனைத்திற்கும் மின்சாரம் தேவை. மரம் அறுக்கக்கூட மனிதன் தயாராக இல்லை. அதையும் மின் இயந்திரமே செய்கிறது. இத் தொழிற்சாலைகள் மனித வாழ்க்கைக்குத் தேவையானவற்றை விடவும் தீமையானவற்றையே உற்பத்தி செய்கின்றன. வெறும் ஆடம்பரப் பொருள்கள உற்பத்தி செய்து வாழ்க்கையைப் பாழாக்க மின்சாரம் செலவாகிறது, பெருமளவிற்கு. வாழ்க்கையே இயந்திரமயமாகிவிட்டது. இதற்கு அறிவாளிகள் சொல்லும் காரணம் மனிதனின் உழைப்புச் சுமையைக் குறைத்து அவனுடைய ஓய்வு நேரத்தைக் கூட்டுவது; உழைப்பு சாபக்கேடு என்று எல்லோரையும் நம்பவைக்கிறார்கள். அதனால்தான் அரசு அலுவலர்கள் கூட வாங்கும் சம்பளத்துக்கு உழைப்பதில்லை. உடலுழைப்பு மனிதனுக்கு இறைவனால் விதிக்கப்பட்டது என்று மகாத்மா சொன்னார். மேலும் உழைக்காமல் உண்பது திருட்டு என்று கூறினார் எல்லாம் இயந்திரம் செய்யுமானால் மனிதன் செய்யக்கூடியது என்ன? பெரும் பொருள் சேர்ப்பதும் கோரிக்கைகளில் மூழ்குவதும் தானா?

இப்படி ஒவ்வொரு நாளும் மின் தேவையைக் கூட்டிக்கொண்டே போனால் மின் தட்டுப்பாடு வராமல் என்னவாகும். நாம் செய்யவேண்டியது என்ன? மின் உற்பத்தியின் அளவுக்கு மின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதுதான். அதைச் செய்ய அரசாங்கம் ஏன் முன்வரவில்லை? மின் தேவையைப் பற்றிய சரியான மதிப்பீடு தேவை. நம்முடைய வாழ்க்கை நலமானதாக இருக்க எவையெவை தேவையானவையோ அவற்றுக்கு மின்சாரத்தைப் பயன்படுத்துங்கள். கிணற்றில் தண்ணீர் இறைக்கக்கூடாதா? இவையெல்லாம் பிற்போக்குத்தனம் என்று சொல்லிய வாழ்க்கை முறை என்பது சுற்றுச்சூழலை மாசுப்படுத்தி விட்டது. அதைக் கட்டுப்படுத்துவதற்கு ஆலோசனை நடக்கிறது. கடப்பாறையை விழுங்கிவிட்டு சுக்குக்கஷாயம் சாப்பிடுகிறோம்.

மின்சாரத்தைச் சார்ந்த இயந்திர வாழ்க்கை நம்முடைய மனிதத் தன்மையை வளர்த்திருக்கிறதா? இந்த வாழ்க்கை முறை மனிதத் தன்மையைக் குலைக்கிறது. அன்பு என்பதற்கே இடமில்லை. பொருள்குவிக்கும் மோகமே வளர்ந்துள்ளது. மனித நாகரிகம் சீர்கெட்டு நிற்கிறோம். மனிதன் தனக்குத் தேவையான கருவிகளக் கண்டுபிடித்துப் பயன்படுத்தினால் நலன் பெறலாம். இன்று கருவிகள் மனிதனைக் கட்டுப்படுத்துகின்றன. மனிதனே இயந்திரத்தின் ஒரு பகுதியாகிவிட்டான். இதைத்தான் 100 ஆண்டுக்கு முன்னரே இந்திய சுயராஜ்யம் என்ற நூலில் மகாத்மா சுட்டிக்காட்டினார்.
இன்றைய மின்பற்றாக்குறை பற்றி காந்திய வழியில் சிந்திப்பது நலம். வாழ்க்கை முறையை மாற்றுவதுதான் எல்லோருக்கும் நலம் பயக்கும். எல்லோருக்கும் தெரிந்த மகாத்மாவின் செய்தி நாகரிகம் என்பது தேவைகளப் பூர்த்திச் செய்வதில் இல்லை. அது தேவைகளச் சுருக்குவதிலே தான் இருக்கிறது. அடுத்த செய்தி மனிதனின் தேவைகள நிறைவேற்ற இயற்கையிடம் எல்லாம் உள்ளன. ஆனால் அவனுடைய பேராசையை நிறைவேற்ற அதனிடம் எதுவும் இல்லை. சமூகத்தலைவர்கள் மக்களுடைய தேவைகளச் சுருக்கக் கற்றுக்கொடுங்கள். நுகர்வுக் கலாச்சாரத்தை நிறுத்துங்கள். மனித வாழ்க்கை எதிலே அடங்கியிருக்கிறது என்று கண்டுபிடித்து விளக்குங்கள்.

மகாத்மா போதித்தது எளிய வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை. அவர் மகாத்மாவாக வாழ்ந்த ஆசிரமத்தில் மின்சாரம், ரேடியோ, குழாய்த் தண்ணீர் இல்லை. இவையில்லாமல்தான் உலகின் வலிமைமிக்கப் பேரரசை எதிர்த்தார். உலகின் (உலகம் என்பது உயர்ந்தோர்) கவனத்தை ஈர்த்தார். நாம் தேடியலையும் நவீன வசதிகளாடு அவரை விட என்ன நாம் சாதித்தோம்? சாதிக்கப்போகிறோம்?

(சர்வோதயம் மலர்கிறது மாத இதழ், ஏப்ரல் 2012)