மானுடம் வென்றதம்மா!

அமெரிக்கத் தலைவராக பராக் ஒபாமா வெற்றிபெற்றது அமெரிக்காவுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மகா நிகழ்வு. இதை எல்லா ஊடகங்களும் வெளிப்படுத்தின. ஒபாமாவின் வெற்றியில் உலக மக்களில் பெரும்பான்மையினர் மகிழ்கின்றனர். இது நியாயமான மகிழ்ச்சியே. உலகத்தின் நாட்டாண்மையாகச் செயல்படும் அமெரிக்காவின் தலைவராக அந்நாட்டில் வாக்குரிமை யற்றவர்களாக, 50 ஆண்டுகளுக்கு முன்வரை இருந்த கருப்பர் இனத்தவரைச் சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது உலக மக்களுக்கு மானுடத்தின் வெற்றியை உணர்த்துகிறது. இவ்வெற்றியின் மூலம் இந்தியர்கள், குறிப்பாக இந்திய அரசியல், சமூகத் தலைவர்கள் அறிய வேண்டிய சிறப்பான செய்தி உள்ளது. ஒபாமாவின் வளர்ச்சியும் வெற்றியும் மகாத்மாவின் அணுகுமுறையின் பெருமையை மெய்ப்பிக்கிறது.

பராக் ஒபாமா கருப்பர் இனத்தவராக இருந்தும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்; கருப்பர் இனத்தவர் என்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. நம்மவர் மொழியில் இட ஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஒபாமா ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகவே போட்டியிட்டார். அவரை எதிர்த்து நின்ற குடியரசுக் கட்சி வேட்பாளர், வெள்ளயர். மிகப்பெரும்பான்மை வாக்கு வேறுபாட்டில் ஒபாமா வென்றுள்ளார். வாக்களித்தவர்களில் வெள்ளயர்கள் பெரு எண்ணிக்கையினர். அவர்களுடைய ஆதரவில்தான் இந்த வெற்றி கிட்டியது. ஒபாமா ஒன்றுபட்ட, வேறுபாடுகளக் கடந்த அமெரிக்கர் என்ற சமூகத்தின் பிரதிநிதியாகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டார் தன்னை கருப்பினத்தின் பிரதிநிதியாகவோ, வெள்ள மக்களின் எதிரியாகவோ காட்டிக்கொள்ளவில்லை. அமெரிக்காவில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பெருமைக்கும் பாடுபடுவேன் என்றுதான் விளம்பரப்படுத்திக் கொண்டார். அவருடைய முழக்கங்கள் நம்பிக்கை, மாற்றம் ஆகிய இரண்டும்தாம். அவர் ஏற்படுத்திய நம்பிக்கை உணர்வே பெரும் அளவில் இளஞர்கள வாக்களிக்கச் செய்ததாகச் செய்திக் கட்டுரைகள் கூறுகின்றன. ஒபாமா தான் கருப்பினத்தவன் என்னும் தாழ்வு மனப்பான்மையோ, அதன் விளவாகும் அச்சமோ, வெறுப்புணர்வோ இன்றி, தான் எல்லா வெள்ளயரையும்போல ஒரு அமெரிக்கன் என்ற தன்னம்பிக்கையுடனேயே வளர்ந்து போட்டியில் இறங்கினார். வெற்றியும் பெற்றார். வெள்ள மக்கள் இன, நிற வேறுபாட்டு எண்ணங்கள வென்று உயர்ந்திருப்பதின் அடையாளமாக ஒபாமாவைத் தங்களுடைய தலைவராக ஏற்றுக் கொண்டனர். அமெரிக்கர்கள் மனமுதிர்ச்சி பெற்று ஜனநாயகத்தின் அடிப்படையான சமத்துவத்தை முழுமையாகக் கைக்கொண்டு விட்டனர். அவர்களுக்குள் இருந்த மனத்தடைகள் நீங்கி மனிதத் தன்மையின் ஆட்சியே அவர்கள் உள்ளங்களில் நிலவுகிறது. அதனால்தான் பெரும் மகிழ்வுடன் ஒபாமாவின் வெற்றியை அமெரிக்க வெள்ளயர் கொண்டாடுகின்றனர்.

அடிமைத்தளயை அறுக்கப் போர்தொடுத்துத் தன் உயிரையும் கொடுக்க நேர்ந்த ஆபிரகாம் லிங்கன் இருந்த அமெரிக்க சமூகத்திலிருந்து எவ்வளவு பெரியமாற்றம்; எத்தனை பெரிய உயர்வு! இந்த மாற்றம் மெள்ள மெள்ள ஆனால் உறுதியாக ஏற்பட்டது. மிக அமைதியாகவே இந்த மாற்றம் ஏற்பட்டது. மார்ட்டின் லூதர்கிங் மேற்கொண்ட காந்திய அறப்போராட்டம் இந்த அமைதிப்புரட்சிக்கு ஒருபெரும் காரணம். கருப்பர்களின் உரிமைகளுக்குப் போராடிய கிங் வெள்ளயர் மீது வெறுப்பை வளர்க்கவில்லை. அதனால்தான் இன்று வெள்ளயரே முன்வந்து கருப்பரைத் தலைவராக்கியுள்ளனர். இந்த மாற்றம் வெள்ளயரின் உள்ளத்திலே ஏற்பட்டது. வெறும் சட்டத்தால் இந்த மாற்றம் ஏற்படவில்லை. மக்களிடம் நடந்த இயக்கங்களாலும், அவர்களின் அறிவு வளர்ச்சியாலுமே இந்தப் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது இதுவே நிலையானது.

ஒபாமா அமெரிக்காவின் ஒரு பிரிவு மக்கள் இன்னொரு பிரிவு மக்கள வென்றதற்கான அடையாளம் இல்லை; அமெரிக்க மக்கள் அனைவரும் சமமான அமெரிக்கர்கள என்ற ஒருமைப் பாட்டுணர்வின் வெற்றியின் அடையாளம். அவர் அமெரிக்காவில் கருப்பு அமெரிக்கா, வெள்ள அமெரிக்கா, ஆசிய அமெரிக்கா, செவ்விந்திய அமெரிக்கா என்ற பிரிவுகள் இல்லை. அமெரிக்கா என்பது ஒரே அமெரிக்காதான் என்று அறிவித்துள்ளார். வெள்ளயர் கருப்பினத்தவன் என்று மனதில் எண்ணுவதை விட்டுள்ளனர் என்பதையும்விட ஐயோ நான் கருப்பினத்தவன் என்று மனமழியாது தன்னம்பிக்கையுடன் கருப்பின ஒபாமா உயர்ந்து நிற்பதுதான் இம்மாற்றத்தின் முக்கிய அடையாளம். அந்தத் தன்னம்பிக்கைதான் ஒபாமாவை எல்லோரையும் வெள்ளயரையும் அன்புடன் பார்க்கச் செய்யும். ஒபாமா அச்சத்தை வென்றுவிட்டார்.

இப்படிப்பட்ட மாற்றத்தைத்தான் அண்ணல் காந்தி இந்திய மக்களிடம் ஏற்படுத்த முனைந்தார். தீண்டாமை என்னும் தீமையை முற்றுமாக ஒழிக்க அவர் பாடுபட்டார் என்பது உலகறிந்த செய்தி. தீண்டாமை ஒழிக என்பது வெறும் எதிர்மறை நடவடிக்கையன்று. அது ஒரு புதிய இந்திய சமுகத்தை உருவாக்குவதற்கான முதல் நடவடிக்கையே. மனிதனுக்கு மனிதன் எந்தத் தீண்டாமையையும் கடைப்பிடித்தல் கூடாது என்பதே அண்ணலின் ஆசை, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் வள்ளுவமே மகாத்மாவின் கொள்கை. நடைமுறையில் எந்த ஏற்றத் தாழ்வும் இல்லாத இந்திய சமூகத்தை உருவாக்குவது அவருடைய லட்சியம். இந்த உருவாக்கம் என்பது மக்களுடைய சிந்தனையில், உள்ளங்களில் மாற்றம் ஏற்படுத்துவதன் மூலமே நடைபெறும் என்று நம்பினார். அவ்விதமான சமூகப் புரட்சியை அவர் அகிம்சையின் வழியாக நிகழ்த்த உழைத்தார். தீண்டாமை ஒழிப்பில் அவர் மாபெரும் வெற்றியடைந்தார்; இந்து முஸ்லீம் ஒற்றுமையை உருவாக்கினார். ஹரிஜன மக்களின் முன்னேற்றத்துக்கு மேல்சாதி இந்துக்கள் உழைக்கவேண்டும் எனக் கற்பித்தார். மேல்சாதியினர் பணிவுடன் தொண்டுசெய்யவும், ஹரிஜன மக்கள் அச்சம் தவிர்த்துத் தன்னம்பிக்கையுடன் முன்னேறவும் அறிவுரை கூறினார். இம்மாற்றம் முழுவீச்சில் நடக்கவேண்டும் என்றார். இம்மாற்றத்தின் முடிவில் சாதிகளற்ற மதக்காழ்ப்பற்ற சமத்துவ சமூகம் உருவாகும் என்பது அவருடைய நம்பிக்கை. அந்தச் சமூகத்தில் அச்சமும், வெறுப்பும், பகைமையும் இருக்காது. இம்மாற்றம் அமைதியான அகிம்சை வழியேதான் நிகழவேண்டும் என்றார்.

அவர் தொடங்கிய புரட்சியை நாம் தொடரவில்லை. அவருடைய வழியைத் தவிர்த்தோம். தீண்டாமையை ஒழிப்பதாகக் கூறி சட்டங்களப் போட்டு சமூகத்தில் பிளவையும் வெறுப்பையுமே வளர்த்துள்ளாம். தீண்டாமை புதுப்புது வடிவங்களில் வளர்ந்துள்ளது. இடஒதுக்கீடு என்ற பெயரில் சாதிப்பரிவுகள வலிமைப்படுத்திவிட்டோம். சாதிகள் ஒழியவில்லை. சாதிக் கணக்கெடுப்புதான் வளர்கிறது. மக்களுக்கிடையே இணக்கம் ஏற்படவில்லை. மாறாக வெறுப்பே வளர்கிறது. அரசியல், பதவி ஆதாயங்களுக்காக மக்களிடம் உள்ள அச்சஉணர்வை, தன்னம்பிக்கையற்ற தன்மையை, வேற்றுமை உணர்ச்சிகள மூலதனமாகப் பயன்படுத்தி மக்கள நிரந்தரமாக இணையவொட்டாமல் தடுக்கிறோம். காந்தியத்தைக் கைவிட்டதோடன்றி தடுக்கிறோம். காந்தியத்தைக் கைவிட்டதோடன்றி காந்தியையே பழிக்கிறோம். ஆகவே பாரதி சொன்ன பாரத சமுதாயம் மலரவில்லை. மலரவே மலராதோ என அஞ்சுகிறேன்.

நாம் காந்தியைக் கைவிட்டோம். மார்ட்டின் லூதர்கிங் காந்தியத்தைக் கையிலெடுத்தார். இன்று மகாத்மாவை வழிகாட்டியாகக் கருதும் கருப்பின ஒபாமா ஒன்றுபட்ட அமெரிக்காவில் தலைவராகிவிட்டார். இனியாவது காந்தியின் வழியைப் பின்பற்றுவோமா?

அமெரிக்காவின் மானுடம் வென்றது! மானுடத்தின் மறுபெயரே காந்தியம்!

(சர்வோதயம் மலர்கிறது மாத இதழ், நவம்பர் 2008)