நேர்படப் பேசுக
(28.2.99)

பேசுவது என்பது மிக எளிது என்பது போல் எல்லோருக்கும் தோன்றுகிறது. அது வெறும் மயக்கமே. பேசுவது ஒரு கலை. அது பயிற்சியாலும், கல்வியாலும், சிந்தனையினாலும் ஒழுங்கு செய்யப்படுவது. பேசும் போது நேர்படப் பேசவேண்டும். அப்படியென்றால் என்ன? பேசுகிற முறையைப் பற்றிய பேச்சு அது, பேசும்போது நேராக, வெளிப்படையாக, மறைவின்றி, கர்வமின்றி பேசவேண்டும். கூறவந்த செய்தி கேட்பவருக்குப் போய்ச் சேருமாறு தெளிவுடன் பேசவேண்டும். பேச்சிலே திருகல் இன்றிப் பேசவேண்டும். பேசிய பின்னால் தான் சொன்னது என்ன என்று விளக்கம் கூறிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் நேராவண்ணம் பேசவேணடும். கேட்பவன் இன்னொருவரை அணுகித் தான் கேட்டது என்ன என்று கேட்டு விளங்கிக்கொள்ளுமாறு பேசுதல் கூடாது. இப்படி நேர்படப் பேச வேண்டுமாயின் சிந்தையில் தெளிவு இருந்தால் தான் நேரே பேசமுடியும், தெளிவாகப் பேச முடியும். பேசுகிறவன் சிந்தையில் திருகல் இருந்தால் அத்திருகல் பேச்சிலே வெளிப்படும். கேட்போருக்கு மயக்கமுண்டாகும். உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாம் என்றார் மகாகவி. தன்னுள் தெளிவடைந்தவனே நேர்படப் பேசமுடியும். நேர்படப் பேசுவது காலத்தை வீணாக்காது. பேசப் புகுவதை உடனே வெளிப்படுத்துவதால் பேச்சும் மிகாது. சுருங்கச் சொல்லி விளங்கச் செய்யவேண்டும். திட்பமாகக் கூறப்பழகவேண்டும். சொற்களின் பொருளத் தேர்ந்து அவற்றைப் பயன்படுத்தவேண்டும். சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் லின்மை யறிந்து என்றார் வள்ளுவ மகரிஷி. மேலும் பல சொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்லல் தேற்றாதவர் என்றும் கூறினார். அப்படிச் சொல்லின் பொருளுணர்ந்து பேசினால் பேச்சு நேரே வரும். பேச்சில் பயன் விளயும். நேர்படப் பேசுவது என்பது சிந்தனைத் தெளிவும், உள்ளத்தில் உண்மையும் நேர்மையும் உடையவருக்கே வாய்க்கும். மகத்தான உண்மைகள் நேராகவும் எளிமையாகவும், படிக்காதவரும் விளங்கிக் கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளமை இதற்குச் சான்று. ஒளவையின் ஆத்திசூடி முதல் உள்ள நம் நீதி நூல்கள் பாரதியின் ஆத்திசூடி ஆகியவை நேர்படப் பேசுதலுக்கு எடுத்துக்காட்டுகள். நேர்படப் பேசுதலுக்கு பேசுபவனின் உள்ளம் உண்மையாலும் அன்பாலும் நிறைந்திருக்க வேண்டும். தன்னிடம் நேர்மையில்லாதவன் நேர்படப் பேசுவது எங்ஙனம்? நெஞ்சு மிக்கதே வாய் வழி சோரும். சிந்தையில் தூய்மையில்லாவிடில் வெறும் கல்வித்திறத்தால் மட்டும் ஒருவன் நேர்படப் பேசமுடியாது. நேர்படப் பேசுவது என்பதற்குத் துணிவாகப் பேசுவது என்றும் பொருள். உண்மையை நேரே சொல்லப்புகுந்தால் தான் நெஞ்சிலே துணிவு பிறக்கும். நேர்படப் பேசுவது என்பது அஞ்சாமல் பேசுவது என்றும் கூசாமல் பேசுவது என்பதும் ஆகும். நெஞ்சத்தில் தூய்மையும், உண்மையும், இல்லையாயின் பேச்சில் அச்சமும், கூச்சமும் வெளிப்படும். உள்ளத்தில் உள்ள தீய எண்ணங்களப் பிறர் அறியா வண்ணம் பேசமுயலும்போது நேரே பேச முடியாது. சுற்றி வளத்து, தெளிவின்றி, மிகுசொற்கள பயனற்ற சொற்களப் பயன்படுத்தியே பேச நேரும். உண்மையை மட்டுமே ஊருக்கு நன்மை விளக்கப்பேசும் போது பேச்சு நேரே வரும். மறைக்க வேண்டியது எதுவும் இல்லையென்பதால் நேர்படப் பேசுதல் என்பது தனியாக ஒருவருடன் பேசும்போது மட்டுமின்றிப் பொதுவில் பேசும் போதும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கமாகும். பொதுமக்களிடம் பேசும்போது ஒளிவு மறைவின்றி தான் நம்புவதை மட்டுமே பேசினால் பேச்சில் நேர்மை இருக்கும், ஒளி இருக்கும்.

மக்களின் மீது அன்புகொண்டு பேசினால் நேர்படப் பேசவரும். பேசுவது நேரே அமையவேண்டுமெனில் கேட்போர் நேர்படவும் பேசவேண்டும். திருகலாகிய சிந்தை திருத்துமாறு பேசுவது நேர்படப் பேசுவதாகும். கேட்போரின் குறைகள் நீங்குமாறு பேசவேண்டும். அதாவது கேட்போர் இன்புற்று ஓங்குமாறு பேசவேண்டும். தான் கூறப்புகுவது கேட்போருக்கு நன்மை செய்யுமா எனத்தெளிந்து, நன்மை செய்ய வேண்டும் என்னும் நல்லெண்ணத்துடன் பேசவேண்டும். அப்படி நல்லெண்ணத்துடன் பேசினால் பேச்சும் நேரே இருக்கும். மனித குலத்தின் மீது அளவற்ற அன்பு பூண்டு உண்மைகளயே பேச முற்பட்டதால் அண்ணல் காந்தியால், பாரதியால் நேர்படப் பேசமுடிந்தது. நேர்படப் பேசுதலுக்கு மிகச்சிறந்த எடுத்துக் காட்டுகள் மகாத்மா காந்தியும் மகாகவி பாரதியாரும். அவர்கள் உள்ளங்களில் அன்பினோர் வெள்ளம், சிந்தையில் தெளிவு, மனதிலே உறுதி இருந்தமையால் அவர்களால் நேர்படப் பேசமுடிந்தது. உள்ளத்தில் ஊறும் எண்ணங்கள மறைக்க வேண்டிய தேவையில்லாமல் அவற்றை பேசமுடிந்தது. அப்படி நேர்படப் பேசுவதிலேயே ஒரு பேரழகு தோன்றுகிறது. இயற்கையைப்போல், உண்மையைவிடவும் பேரழகு உண்டோ? நேர்படப்பேசுவதால் கேட்போரின் உள்ளம் நேர்படுவதன்றி பேசுபவன் உள்ளமும் நேர்படும். நேர்படப் பேசப்பேச பேசுபவனின் உள்ளம் உயரும். சிந்தைத் தெளிவாகும். புதிய புதிய உண்மைகள் புலனாகும். பேச்சு இன்னும் நேர்மையாகும்.

(திருச்சி, அகில இந்திய வானொலி நிலையம் 26, 27, 28.02.1999)