நயம்பட உரை
(26.2.1999)

தமிழ் மூதாட்டி ஒளவை அருளிய ஆத்திசூடி மந்திரத்தின் 17ஆம் பாடம் ஞயம் பட உரை. ஞயம் என்றது நயத்தையே. நயம் என்னும் சொல் அருள், விருப்பம், மகிழ்ச்சி, நன்மை, உபச்சாரம், அன்பு, பக்தி நற்பயன், மிகுதி, பயன், நுண்மை, நீதி, நயன், வேதசாத்திரம் என்னும் பொருள்கள யுடையது. இவற்றில் பெரும்பாலான பொருள்கள் தோன்றுமாறு நயம்பட உரை என விதிக்கப்பட்டது. நயம்பட உரை என்றது பிறருக்குப் பயன் விளக்கக் கூடியபடி இனிய சொற்களயே பேசு என்றவாறு. ஒருவன் பேசும்போது தன்னுடைய பேச்சு அடுத்தவருக்கு நன்மை செய்யக்கூடியதா என்று சிந்தித்துத் தேர்ந்து பேசவேண்டும். பேச்சில் இரண்டு விஷயங்கள் அடங்கியுள்ளன. ஒன்று பேசும் பொருள் மற்றொன்று பேசும் தன்மை. பேச்சு நல்ல பொருள உடையதாக, மேன்மையான பொருள உடையதாக இருக்க வேண்டும். அப்பேச்சைக் கேட்பவனுடைய உள்ளத்தை உயர்த்துவதாக, தூய்மை செய்வதாக சிந்தையைத் தெளிவு செய்வதாக இருக்கவேண்டும். பேச்சைக் கேட்பவன் பேச்சைக் கேட்பதன் மூலம் தன் நிலையில் மேம்படுமாறு இருக்க வேண்டும். இனி நல்ல பொருளச் சொல்லும்போதும் கடுமை நீக்கி, கசப்பான சொற்கள் தவிர்த்து இனிமையான மொழியையே பயன்படுத்த வேண்டும். அதாவது சொல்லும் முறையும் பொருளின் மேன்மைக்கு ஒத்து இதமாக அமையவேண்டும். நாம் நல்ல விஷயத்தைத்தானே சொல்கிறோம் என்ற நினைவில் சுடுசொற்களால் சொல்லக்கூடாது. நல்லவை நாடிச் சொல்லுங்காலும் கடியவாகச் சொல்லின் அறனாகாது என்றார் பரிமேலழகர். நல்ல பொருளப் பேச வேண்டுமாயின் அது உண்மையாய் இருக்கவேண்டும். உண்மையை இனிமையாகப் பேச வேண்டும். இனிமையாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பொய் கூறல் ஆகாது. ஊருக்கு நல்லது சொல்வேன், எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன் என்றார் பாரதியார். உண்மை, ஒண்மை, நன்மை, இனிமை ஆகியவற்றின் சம்மேளனம். நயம் பேசும்போது இத்தன்மைகளுடன் பேசுவதே நயம்பட உரைப்பது. இப்படிப் பேசுவதால் கேட்போன் மட்டுமன்றி உரைப்போனும் நலமடைகிறான். அல்லவை தேய என்னும் குறளில் பொருளால் பிறர்க்கு நன்மை பயக்கும் சொற்கள ஆராய்ந்து இனியவாக ஒருவன் சொல்லுமாயின் அவனுக்குப் பாவங்கள் தேய அறம் வளரும் என்கிறார் வள்ளுவர். மேலும் சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையுமின் பந்தரும் என்றார். இப்படி நயம்பட உரைத்தலால் பகைமை, வெறுப்பு, கசப்புணர்ச்சி அழிந்து நட்பும் மகிழ்வும் சமூகத்தில் எழும். ஆத்திசூடிக்கு விளக்கம் கூறவற்ற சர் பொன்னம்பலம் ராமனாதன் அவர்கள் இவ்வாறு கூறுகிறார். வீண் வார்த்தைகள நீக்கி நல்ல விஷயங்களப் பற்றிப் பேசுவதே சிறுவருக்கும் முதியோருக்கும் பொதுவான அறம். ஒருவரோடு ஒருவர் சம்பாஷிக்கும் பொழுது தம்மைப் புகழ்ந்து பேசாமலும் தங்களுக்குள்ள பொருளப் பாராட்டமலும், மிகைபடப் பேசாமலும், எடுத்தவிஷயம் முடியும் முன் வேறொன்றைப் பற்றாமலும், கூறியதை மீளக் கூறாமலும், இரையாமலும், பெருநகை செய்யாமலும் பேசவேண்டும். மனசிலே தோன்றியதெல்லாம் வாய்திறந்து பேசக்கூடாது. புத்தியால் ஆராய்ந்து, இது பேசத்தக்கதோ தகாததோ என்று நிச்சயித்து, கேட்போருடைய கால வசதிகளயும், குணபேதங்களயும் அறிந்து, சொல்வதை இன்பமுறக் கூறவேண்டும். சாதுக்கள் சகவாசத்தாலாவது நற்கல்வியாலாவது அறியப்பட்ட சங்கதிகளத் தக்க சமயம் பார்த்து அறியாதவர்களுக்கு உபகதைபோல் அன்புடன் உரைத்தல் வேண்டும். பயன்படப் பேசுதல், வாக்கினால் செய்யப்படும் அறமாம். இதே ஆத்திசூடிப் பாடத்துக்கு உரை சொல்ல வந்த மகாவித்துவான் ரா.ராகவையங்கார் சுவாமி நின்பால் விருப்பமில்லார்க்கும் விருப்பமுண்டாக ஒன்றுரைக்க என்றவாறு என்றார். நல்ல விஷயத்தை இன்மையாகக் கூறினால் பகைவரும் விரும்பிக் கேட்பர், பமைமை மறையும். நயமின்றி உரைத்தால் நட்பும் கெடும். கேளாரும் வேட்ப மொழிவதாஞ் சொல் என்றார் வள்ளுவர். நல்ல விஷயங்கள உரைத்த வண்ணம் இருக்க வேண்டும். நல்ல விஷயம் உரைக்க முடியாதாயின் மெளனமே சிறந்தது. ஒருவருக்கொருவர் நல்ல சிந்தனைகள அன்புடன் பரிமாரிக் கொள்வதில் தான் சமூக இணக்கமும் உயர்வும் அடங்கியுள்ளன. மனிதன் சமூகத்தில் வாழ்கிறவன். ஒவ்வொருவரும் நயம்பட உரைக்கப் பழகிவிட்டால் சமூகத்தில் இன்று நிலவும் குரோதம், வன்முறை, அச்சம், எல்லாம் நீங்கி அமைதியும் இன்பமும் நிலவும். நயம்பட ஒன்று உரைத்தால் உரைத்தவன் உள்ளம் மகிழும் நிறைவடையும். அப்படி நயம்பட உரைக்கும் பழக்கம் உள்ளத்தில் அன்பு நிறைந்தால்தானே வரும். நிறைந்த கல்வியும் பரந்த உள்ளமும் வாய்த்தால் நயம்பட உரைப்பது எளிது. நயம்பட உரைத்தால் உரைப்பவருக்கும் கேட்போருக்கும் ஒருசேர நற்பயன் விளக்கும். நயம்படவே உரைப்போமாக. நலமுடன் வாழ்வோமாக.

(திருச்சி, அகில இந்திய வானொலி நிலையம் 26, 27, 28.02.1999)