தாகூரும் பாரதியும்

இந்தியாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றி இருபதாம் நூற்றாண்டில் பெருவாழ்வு வாழ்ந்து மறைந்த மகாகவிகள் இரவீந்திரநாத் தாகூரும் பாரதியாரும். இருவரும் இந்திய தேசீய எழுச்சியின் குரல்களாக ஒலித்தனர். துயின்று கொண்டிருந்த இந்திய மக்கள இருவருமே எழுப்பினர். இந்தியாவின் பழம் பெருமையை இந்தியருக்கு உணர்த்தி, அவர்களின் மேலான புதிய வாழ்வுக்கு வழிகாட்டினர். இந்தியாவின் வடக்கில் தாகூரும் தெற்கில் பாரதியும் சமகாலத்தில் வாழ்ந்தனர். இருவருக்கும் இடையே பல ஒற்றுமைகளும் சில வேற்றுமைகளும் உள்ளன.

தாகூர், பாரதியார் பிறப்பதற்கு 21 ஆண்டுகளுக்கு முன் பிறந்தார். பாரதியார் மறைந்து 20 ஆண்டுகளுக்குப்பின் இறந்தார். பாரதியாரைப் போல் இரண்டு மடங்கு வயது வரை வாழ்ந்தார். தாகூர் 1861ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி பிறந்தார். 1941ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7ஆம் தேதி மறைந்தார். இவருடைய தாத்தா இராஜா ராம்மோகன்ராயின் உடன் உழைத்த துவராகநாத் தாகூர். இவரின் தந்தை தேவேந்திரநாத் தாகூர். இவர் மகரிஷி எனப்போற்றப்பட்டார். இப்படியான ஒரு ஞான மரபில் இரவீந்திரர் பிறந்தார்.

இவரின் குடும்பம் மிகப்பெரும் செல்வம் நிறைந்தது. பல கிராமங்கள் இவர்களுக்குச் சொந்தமாக இருந்தன. கல்வியும் செல்வமும் நிறைந்த குடும்பத்தில் தாகூர் பிறந்து வளர்ந்தார். இவரின் தந்தை மகரிஷி தேவேந்திரநாத தாகூரே இவருக்கு வேதங்களயும் உபநிடதங்களயும் விளக்கினார். இளமை முதலே உயர்ந்த கல்விப் பயிற்சி இவருக்கு வாய்த்தது. தாகூருக்குப் பள்ளிப்படிப்பில் ஆர்வமில்லை. அவர் தனியாகவே கல்வி கற்றார். ஆங்கில இலக்கியங்களயும் தனியாகவே கற்றுத் தேர்ந்தார்.

இதற்கு நேர்மாறான சூழலில் பாரதி பிறந்தார். எட்டயபுரத்தில் சராசரிக் குடும்பத்தில் பாரதியார் பிறந்தார். தந்தையின் அரவணைப்பிலும் போதனையிலும் தாகூர் வளர, பாரதியார் இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். பாழ்மிடி சூழ்ந்தது. ஏழ்மையும் வறுமையும் அவரை இறுதிவரைத் தொடர்ந்தன. இந்தச் சூழ்நிலையிலும் பாரதியார் ஞானியாக, ஓங்கி வளர்ந்தார். அறிவு மேதையாகத் திகழ்ந்தார்.

இருவருமே பிறவிக் கவிஞர்கள். இருவருமே மிக இளம் வயதிலேயே கவிதை புனைந்தனர். இருவரும் பல இலக்கிய வகைகள உருவாக்கினாலும் அடிப்படையில் அவர்கள் கவிஞர்கள். கவிதை புனையும் ஆற்றல் அவர்களுக்கு இயல்பாக அமைந்திருந்தது. எட்டயபுர அரசவை வியக்கப் பாடல்கள் இயற்றி, பாரதி என்ற பட்டத்தை இளமையிலேயே பாரதியார் பெற்றார். தாகூர் தன் பன்னிரண்டாம் வயதிலேயே இனிய பாடல்களப் புனைந்தார். தாகூரின் குடும்பமே ஒரு கலைச்சூழல் நிறைந்தது. அவருடைய சகோதரர்களும் இலக்கியம் படைத்தனர். அச் சூழலில் அவர் பாடல்கள் இயற்றியதைவிட வியப்பானது எந்தக் கவிதைச் சூழலும் இன்றி பாரதியார் கவிதை புனைந்ததுதான். தாகூர் முற்போக்கான கல்வியும் சிந்தனையும் உடைய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அதன் தொடர்ச்சியாகத் தன்னுடைய சிந்தனைகள வளர்த்தெடுத்தார். பாரதியாரோ தன் குடும்பச் சூழலுக்கும் உறவினர் எண்ணங்களுக்கும் எதிரான புரட்சிச் சிந்தனைகள வளர்த்தார்.

தாகூரும் பாரதியாரும் இந்து மதத்தின் வேர்கள அறிந்தவர்கள், வேத உபநிதடங்களக் கற்றுப் போற்றினர். அவற்றில் பொதிந்திருக்கும் நிலையான உண்மைகள அறிந்து விளக்கியவர்கள். கடவுள் ஒருவரே என்னும் கருத்தை வலியுறுத்தி வெறும் சடங்குகளயும் மூடநம்பிக்கைகளயும் எதிர்த்தனர். இருவருமே பிரம்ம சூத்திரத்தையும், பகவத் கீதையையும் ஏற்றுப் போற்றினர். பாரதியாரின் பகவத் கீதையின் தமிழ்மொழிபெயர்ப்பு புகழ் பெற்ற ஒன்று. தமிழ்நாட்டை வேதம் நிறைந்த தமிழ்நாடு என்றார். இருவரும் பக்தியை வலியுறுத்தினர். ஆயினும் தாகூருன் பக்திக்கும் பாரதியாரின் பக்திக்கும் சற்று வேறுபாடு உண்டு. தாகூரின் தெய்வம் உருவமற்ற கருத்துருவான பிரம்மம். ஆனால் பாரதியின் வழிபடு கடவுள் காளி. அவர் காளி உபாசகர். சாக்தர், காளிதாசர். தாகூர் தன் பக்தியை வெளிப்படுத்தும்போது அது மென்மையாகவும் நளினமாகவும் வெளிப்படுகிறது. பாரதியோ பக்தியை ஆவேசமாக வெளிப்படுத்துகிறார். உணர்ச்சிப் பெருக்குடன் வெளிப்படுகிறது. ச.து.சுப்பிரமணிய யோகி சொல்கிறார், அவர் வணங்கிய தெய்வ அன்னை அன்புத் தேவியல்ல, அருள் தேவி அல்ல, அமைதித் தேவியல்ல, இன்பத் தேவியல்ல, எழில் தேவியல்ல; ஆண்மைத் தேவி, ஆற்றல் தேவி, அட்டகாசம் செய்யும் ஆரவாரத் தேவி; அகில உலகங்களயும் ஆக்கி அழிக்கும் அகண்ட தேவி; கம்பனும், காளிதாசனும், மூகனும், காளமேகனும் வணங்கிய காளித் தெய்வம். கறுப்புத் தெய்வம், கனலும் நெருப்புத் தெய்வம் என்று. பாரதியே கூறுகிறார் நினைவிலே சக்தியாக வளர்வது நெருப்புத் தெய்வம் என்று. பாரதியார் எல்லா இந்துக் கடவுளர்கள் பெயரிலும் பக்தி நிறைந்த பாடல்களப் புனைந்துள்ளார். இப் பாடல்களிலெல்லாம் பாரதியார் கடவுளுடன் நெருங்கி உறவாடுவதும் உரிமை கொண்டாடுவதும் வெளிப்படுகிறது. தாகூரோ கடவுளிடமிருந்து சற்று விலகியிருப்பதாகத் தோன்றுகிறது. பாரதியார் பல கடவுளர்கள் பெயர்களிலும் பாடினார். இறைவன் ஒருவனே நாம் அவன் மக்கள் என்னும் கருத்தே இருவருக்கும் அடிப்படையாக உள்ளது. இருவருமே அத்வைதக் கொள்கையை அடிநாதமாகக் கொண்டுள்ளனர். இயற்கை அனைத்திலும் கடவுள நிறைந்துள்ளார் என்பது இருவருக்கும் பொதுவான கொள்கை. மனிதர்கள் அனைவரும் சமம் என்பது இதன் தொடர்ச்சியான கொள்கை. இருவருமே இயற்கையின் அழகிலே இறைவனைக் கண்டனர். காக்கைச் சிறகினிலே நந்தலாலா நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா எனப் பாரதியார் பாடுவது இதைத்தானே. இயற்கையோடும் எல்லா உயிர்களாடும் தன்னை இணைத்துக்கொள்ளும் ஆன்ம நேய ஒருமைப்பாடு இருவருக்கும் பொதுவான கொள்கை.

தாகூர் இந்தியா உலகுக்கு வழங்கும் செய்தியாக உலக நாடுகளில் எதைப் பிரச்சாரம் செய்தார் எனக்கேட்டு பதிலாக பாரதியார் எழுதுகிறார், அஃது பழைய வேத உண்மை; எல்லாப் பொருள்களும் ஒரே வஸ்துவாகக் காண்பவன் ஒருவனுக்கு மருட்சியேது? துயரமேது? எல்லாம் ஒரே பொருளன்று கண்டவன் எதனிடத்தும் கூச்சமேனும், வெறுப்பேனும், அச்சமேனும் எய்தமாட்டான். அவன் எல்லாப் பொருள்களிடத்தும் அன்பும், ஆதரவும், ஸந்துஷ்டியும், பக்தியும் செலுத்துவான். எல்லாப் பொருளிலும் திருப்தி பெறுவோன் எப்போதும் திருப்தியிலிருப்பான். இங்ஙனம் மாறாத சந்தோஷ நிலையே முக்திநிலையென்றும் அமர பதமென்றும் கூறப்படுவது. இதனை மனிதன் அப்பியாசத்தாலும் நம்பிக்கையாலும் இந்த உலகத்தில் எய்திவிட முடியும். இஃதே வேத ரகஸ்யம். இந்த ஆத்ம ஐக்கியமான பரம தத்துவத்தை மிக இனிய தெளிந்த வசனங்களாலே ஐரோப்பாவுக்கு எடுத்துக் கூறியது பற்றியே ரவீந்திர கவிச் சக்ரவர்த்திக்கு ஐரோப்பா இங்ஙனம் அற்புத வழிபாடு செலுத்திற்று. இந்த பாரதியின் கூற்று இருவரின் ஆன்மநேய ஒருமைப்பாட்டுக் கொள்கையைத் தெளிவுபடுத்துவதைக் காணலாம்.

தாகூரும் பாரதியும் இந்து சமய நம்பிக்கையில் ஊன்றி நின்றவராயினும் எல்லாச் சமயங்களயும் மதித்தனர். எல்லாச் சமயங்களும் நல்ல சிந்தனைகளப் போதிப்பதாகவே கருதினர். ஆகவே அவர்களிடம் சமயக் காழ்ப்பு இருந்ததில்லை. யேசுவைப் பற்றியும் அல்லா பற்றியும் பாரதி பாடியிருப்பது எல்லோரும் அறிந்ததே.

இருவரும் மேலை நாட்டு இலக்கியங்களப் பயின்றிருந்தனர். மேலை நாட்டு நாகரீகத் தாக்கம் இருவர் மீதும் இருந்தாலும், மேலை நாட்டுச் சிந்தனையின் ஆதிக்கம் தாகூர் மீது கவிந்த அளவு பாரதியின் மீது கவியவில்லை. பாரதியார் தமிழ் மண்ணில் ஆழக்காலூன்றி நின்ற இந்தியனாகவே இருந்தார். மேலை நாடுகளுக்கும் கீழை நாடுகளுக்கும் இடையே தாகூர் பாலமாக இருந்தார். இருக்கவும் விரும்பினார். இந்திய நாகரீகத்தின் தூதராக அவர் இருந்தாலும் மேல் நாட்டுக் கொள்கைகள இந்தியாவுக்கும் ஆசிய நாடுகளுக்கும் விளக்கினார். அவர் ஓர் உலகக் குடிமகனாகக் கருதப்பட்டார். பாரதியாரோ ஐரோப்பியக் கருத்துக்கள் சிலவற்றைப் போற்றி ஏற்றுக் கொண்டாலும் இந்த மண்ணின் மைந்தராகவே இருந்தார். உதாரணமாக சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பவையே அவருடைய பத்திரிகையின் கொள்கையாக இருந்தன.

பாரதியார் இந்த நாட்டுக்காரராகவே இருந்தாலும் உலக ஒற்றுமையை விரும்பினார். மனித குலம் அனைத்தையுமே நேசித்தார். பாரதிதாசன் கூறுகிறார்

பாரதியார் உலக கவி! அகத்தில் அன்பும் பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர்! ஓரூருக் கொருநாட்டுக் குரிய தான ஒட்டைச் சாண் நினைப்புடையர் அல்லர்
அகத்திலுறும் எண்ணங்கள் உலகின் இன்னல் அறுப்பவைகள்; புதியவைகள்; அவற்றையெல்லாம் திகழ்பார்க்குப் பாரதியார் எடுத்துச் சொல்வார் தெளிவாக, அழகாக, உண்மையாக! என்று.

தாகூரும் பாரதியாரும் உலகுக்கு வழங்கும் செய்தி அன்பு. அன்பே உலகை இணைத்துத் துன்பங்களப் போக்கி மக்கள வாழ்விக்கவல்லது என்பதே அவர்களின் எழுத்துக்கள் அனைத்தும் தெரிவிக்கும் செய்தி. தாகூர் மனித அன்பின் வெற்றியை இலக்கியம் வாயிலாகத் தருவதே கவிஞனின் உயர்வான பணியாகும். அதுவே அன்பினுக்கு ஆற்றும் பரிசாகும். ஏனென்றால், எதையும் முழுமையாக நோக்கவல்லது இவ்வன்பு ஒன்றே எனத் தன்னுடைய ஒரு கட்டுரைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிடுகிறார். பாரதியார்,

அன்பென்று கொட்டுமுரசே அதில் ஆக்கமுண் டாமென்று கொட்டு துன்பங்கள் யாவுமே போகும்

எனப் பாடுகிறார்.
இருவருக்கும் இருந்த அன்புணர்ச்சியே அவர்கள மக்களப் பற்றி எண்ணி அவர்களுக்கு வழிகாட்டும் இலக்கியங்களப் படைக்கச் செய்தது என்றால் மிகையாகாது.
இந்திய தேசீய எழுச்சி, தாகூரையும் பாரதியாரையும் கவர்ந்திழுத்து தேசீய இயக்கங்களில் நேரடியாகப் பங்குகொள்ளச் செய்தது. தாகூர் காங்கிரசு மாநாடுகளில் பங்குகொண்டு பாடினார். கட்டுரைகள் படித்தார், சொற்பொழிவாற்றினார். அரசியல், பொருளாதாரம் பற்றிய கட்டுரைகளப் பத்திரிகைகளில் எழுதி வெளியிட்டார். ஆங்கில அரசின் அநீதிகள எதிர்த்துக் கண்டித்துப் பேசினார், எழுதினார். ஆனால் அரசியல் பெரும் போராட்டங்களில் நேரடியாகப் பங்குகொள்ளவில்லை. ஒரு காலத்துக்குப் பின் அரசியலிலிருந்து முற்றாக விலகிக் கலையுலகத்துக்குச் சென்றுவிட்டார். பாரதியாரோ காங்கிரசின் தீவிரத் தொண்டராகி மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டத் தன் கவிதையாற்றலை, எழுத்தாற்றலைப் பயன்படுத்தினார். அரசியல் கூட்டங்கள இவரே நடத்தினார். அதனால் அரசின் அடக்குமுறைக்கு ஆளானார். பாண்டிச்சேரி சென்று பத்து ஆண்டுக்காலம் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டார்.

பாண்டிச்சேரி சென்றும் தன் விடுதலைப் போரைத் தொடர்ந்தார். அதனால் வறுமையில் வாடினார். பல இன்னல்களுக்கு ஆட்பட்டார். சில காலம் சிறைவாசமும் ஏற்றார். தன் இறுதிக்காலம் வரை பொதுவாழ்வில் இருந்தார். இப்படிப்பட்ட துன்பங்கள் தாகூருக்கு நேர்ந்ததே இல்லை. ஆங்கில அரசின் கோபத்துக்கும் அடக்குமுறைக்கும் பாரதியார் ஆளாக, தாகூரும் அதே அரசின் மதிப்பிற்குரிய கனவானாகவே கடைசிவரை வாழ்ந்தார். இங்கிலாந்திலே வாழ்ந்த ஆங்கிலேய அறிஞர் ஒருவர் இந்தியப் பிரச்சினை பற்றிப் பேசினால், எழுதினால் ஆங்கில அரசு எப்படிக் கருதுமோ அப்படியே தாகூரின் பேச்சும் எழுத்தும் அதனால் கருதப்பட்டது. தாகூரின் கருத்துக்கள் ஆங்கிலேயரால் மறுக்கப்பட்டாலும் அவர் மதிக்கப்பட்டே வந்தார். அவருடைய கருத்துக்களுக்காக அவர் எந்தச் சிரமத்தையும் ஏற்கவேண்டி நேரவில்லை.

சமூக சீர்திருத்தத்திலும் தாகூரும் பாரதியாரும் முற்போக்கான எண்ணம் கொண்டிருந்தனர். சாதி ஏற்றத்தாழ்வுகள், மூட நம்பிக்கைகள், பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றை இருவருமே எதிர்த்தனர். தாகூர் பெண்களின் முன்னேற்றத்துக்காக நிறைய பேசினார், எழுதினார். சாதிப்பிரிவுகள, தீண்டாமையைக் கடுமையாகச் சாடினார். ஆனால் அவர் எந்தச் சமூக சீர்திருத்த இயக்கங்களிலும் நேரே பங்கு கொள்ளவில்லை. அவருடைய முற்போக்குக் கருத்துக்களால் அவர் பாதிக்கப்படவில்லை. மேல் நிலையிலே இருக்கும் மதிக்கத்தக்க ஞானியின் கூற்றாகவே அவருடைய கருத்துக்கள் வெளிப்பட்டன.

ஆனால் பாரதியார் சமூகப் புரட்சியில் நேரே ஈடுபட்டார், தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த கனகலிங்கத்துக்குப் பூணூல் அணிவித்தார். தாழ்த்தப்பட்டோர் வீடுகளுக்குப் போய் உண்டார், அவர்களத் தன் வீட்டில் ஏற்றார். பெண்ணுரிமைக் கொள்கைகளத் தன் வீட்டிலேயே கடைப்பிடித்தார். மக்களின் நடுவே நின்று புரட்சியை நிகழ்த்தினார். பாரதிதாசன் கூறுகிறார்.

தேசத்தார் நல்லுணர்வு பெறும் பொருட்டுச் சேரியிலே நாள்முழுதும் தங்கியுண்டார் காசு தந்து கடைத்தெருவில் துலுக்கர் விற்கும் சிற்றுணவு வாங்கி அதைக் கனிவாய் உண்டார் பேசிவந்த வசை பொறுத்தார்; நாட்டிற் பல்லோர் பிறப்பினிலே தாழ்வுயர்வு பேசுகின்ற மோசத்தை நடக்கையினால், எழுத்தால், பேச்சால் முரசறைந்தார் இங்கிவற்றால் வறுமை ஏற்றார்
பாரதியாரின் புரட்சி வாழ்க்கை அவருக்குச் சமூகத்தின் வெறுப்பையும் பகையையும் தேடிக் கொடுத்தது.

தாகூருக்கும் பாரதியாருக்கும் கல்வி கற்பிக்கும் முறையில் ஒரே கருத்து இருந்தது. உயர்கல்விகூடத் தாய் மொழியில்தான் கற்பிக்கப்பட வேண்டும் என்பது இருவரின் அழுத்தமான கொள்கை. தாகூர், பாரதியார் எழுத முற்படும் முன்பிருந்தே இக்கொள்கையை வலியுறுத்தி வந்தார். இதைப்பற்றி நிறையப் பேசியும் எழுதியும் உள்ளார். தம் மக்களுக்கு வங்காளி மொழியில் கல்வி வழங்கப்பட வேண்டும் என தாகூர் வற்புறுத்தினார். தாய்மொழி வழிக் கல்வியின் தேவை பற்றித் தாகூர் எழுதிய கட்டுரை ஒன்றை கல்வி கற்பிக்கும் பாஷை என்னும் தலைப்பிட்டு பாரதியார் தமிழில் மொழி பெயர்த்துத் தந்துள்ளார். பாரதியார் தமிழ் வழியில் கல்வி கற்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எழுதியிருக்கிறார். தன் கொள்கையுடன் ஒத்துப் போனதாலேயே தாகூரின் கட்டுரையை மொழி பெயர்த்துள்ளார். ஆங்கில வழிக்கல்வி நம் மக்களின் அறிவு வளர்ச்சியைத் தடுக்கிறது என்பது இருவருடைய திடமான நம்பிக்கை. இந்தக் கொள்கையை காந்தி முதல் பல தலைவர்களும் வற்புறுத்தியுள்ளனர்.

தாகூரும் பாரதியாரும் எழுதிய மொழிகள் வேறுபட்டவை. தாகூரின் மொழியாம் வங்க மொழி பாரதியாரின் மொழியாம் தமிழைவிட மிகவும் காலத்தால் பிந்தியது. இன்று நிலவும் இந்திய மொழிகளில் பல்லாயிரம் ஆண்டு பழைமையுடைய மொழி தமிழ். இரண்டாயிரம் ஆண்டு முற்பட்ட இலக்கியங்களத் தமிழ் பெற்றிருக்கிறது. இந்தத் தமிழின் வாரிசாகப் பாரதியார் தோன்றினார். இந்தத் தமிழின் மரபை முற்றுமாக உள்வாங்கி புதிய தமிழ் படைத்தார். அவருடைய தமிழ் முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளாய் பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியான மொழி. தமிழின் பழைமையும் இலக்கிய வளமும் பாரதியாரின் கவிதையை அழகுறச் செய்தன. பழந்தமிழ் மரபைப் போற்றி புதுத்தமிழ் படைத்தார். அவரே தன் கவிதை பற்றிக் கூறுகிறார்.
சுவைபுதிது பொருள் புதிது வளம்புதிது சொற்புதிது சோதி மிக்க நவகவிதை யெந்நாளு மழியாத மகா கவிதை என்று.

தமிழ் பக்திப் பாடல்களில் மூழ்கித் திளத்து பாரதி படைத்தார். அவர் பாடல்களில் மிக அதிகமாகச் சங்க இலக்கியச் சொல்லாட்சி இருப்பதாக ஓர் ஆய்வு கூறுகிறது.

தாகூரின் வங்க மொழியின் இலக்கியப் பரப்பு அவ்வளவு விரிந்ததன்று. அது வடமொழியில் செழுமை பெற்றது. வடமொழி இலக்கியங்களத் தாகூர் கற்றுத் தேர்ந்தார். வங்க மொழியில் பக்திப் பாடல்கள் இருந்தன. ஆங்கிலேயரின் தாக்கம் இந்தியாவிலேயே வங்கத்தில் முதலில் ஏற்பட்டது. அம்மக்கள அது மிகவும் பாதித்தது. 1911 வரை கல்கத்தாதான் தலைநகரம். ஆங்கிலப் பயிற்சி அங்குதான் மிகுந்தது. இத்தொடர்பால் வங்கமொழி புதுமையடைந்து புத்திலக்கிய வகைகளப் பெற்றது. பக்கிம் சந்திர சட்டர்ஜி, மைக்கேல் மதுசூதன தத்தர் போன்றோர் கதைகள், நாவல்கள் போன்ற புதிய இலக்கிய வகைகளப் படைத்துவிட்டனர். இந்தப் பின்னணியில் தாகூர் தன் படைப்புகள உருவாக்கினார். ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட தடத்தில் தாகூர் தன் இலக்கியப் பயணத்தைத் தொடர்ந்தார். தன் படைப்புகளின் மூலம் வங்கமொழியைச் செழுமைப்படுத்தினார் என்பது உண்மை. அவருடைய படைப்புகளுக்கு வசதியாக வங்கமொழி ஆக்கப்பட்டிருந்தது என்பதே என் கருத்து. தாகூர் எல்லா வகையான நவீன இலக்கியங்களப் படைத்தார்.

அவர் புதுவகையான கவிதைகள இயற்றினார். இசை நாடகங்கள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள், விமரிசனங்கள் என எல்லாத் துறைகளிலும் தாகூர் சாதனை படைத்தார். தன்னுடைய நாடகங்கள அவரே இயக்கி மேடையேற்றினார். அவரே இறுதிக்காலம் வரை நடித்தார். அவருடைய சிறுகதைகள் மிக உயர்ந்தவை என விமரிசகர்கள் உறுதிப்படுத்துகின்றனர். நம் பாரதியார், அவருடைய கதைகளால் ஈர்க்கப்பட்டு ஒன்பது கதைகளத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். அவை தாகூரின் கதைகள் என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளது. தாகூர் மனோதத்துவப் பார்வையுடன் தன் கதை மாந்தர்களப் படைத்துள்ளார். படிப்போரின் உள்ளத்தை உருக்குகிற கதைகளப் படைத்தார். சராசரி மக்களின் பிரச்சினைகள உன்னிப்பாய்க் கவனித்து அவற்றை வெளிப்படுத்துவதை அவர் கதைகளில் காணலாம். தன்னுடைய சமூக சீர்திருத்தக் கொள்கைகள் இலக்கிய நயத்துடன் வெளிப்படும்படியாக கதைகள் சமைத்தார்.

ஆயினும் அவருடைய கதைகளும் நாவல்களும் கலைநேர்த்தி உடையனவாகவே இருந்தன. வெறும் பிரச்சாரமன்று. தனிமனித உணர்வுகளப் படம் பிடித்துக்காட்டுவதில் அவர் சமர்த்தர். வங்கமொழி மரபில் பல பாடல்களப் பாடினாலும் மரபு இலக்கணத்தை மீறியும் அவர் படைத்திருக்கிறார். அவருக்கு நோபல் பரிசைப் பெற்றுத்தந்த கீதாஞ்சலி ஒருவகை வசன கவிதையாக யாக்கப்பட்டது. இவ்வகைக் கவிதை அவராலேயே புதிதாக முதலில் படைக்கப்பட்டது. இது அவருடைய கொடை. ஆங்கில, பிரஞ்சு மொழிகளில் உள்ளன போன்ற இலக்கியக் கட்டுரைகள தாகூர் வங்கமொழியில் படைத்தார். கட்டுரைகள் அனைத்தும் உரைநடையில் இருப்பினும் அவை கவிதைத் தன்மை கொண்ட உரைநடையாகவே இருந்தன. புத்த தேவ வசு என்பவர் அவருக்கென ஒரு நடை (றீமிதீயி) இயல்பாகவே அமைந்திருந்தது. யாப்பின் ஓசை நயங்கள் அவர் என்பு வரை ஊறியதாகும். அவரது உரைநடைப்பகுதி சிலவற்றுள் கவிதையின் ஒலி கேட்கிறது என்று கூறுகிறார்.

மேலும் அவர் கூறுகிறார், வருங்காலத்து வாசகன் ரவீந்திரரின் எல்லா உரைநடை நூல்களயும் கவனமாகப் படிக்க நேர்ந்தால் அவரை வங்காளத்தின் சிறந்த வசன சிற்பியென்றும், உலக இலக்கியத்திலேயே அவருடைய படைப்பு அழியா இடம்பெறத் தகுதியைப் பெறுமெனவும் ஐயந்திரிபறக் கூறுவான் என்று. அவருடைய கட்டுரைகள் எல்லாவகையான பொருள்கள் பற்றியும் எழுதப்பட்டன. ஸ்டீல் அடிகள் போன்று அவர் கட்டுரை இலக்கியம் படைத்தார். பல்வேறு இதழ்களில் இவற்றை அவர் வெளியிட்டார். பல கட்டுரைகள் மாநாடுகளிலும், பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் படிக்கப்பட்டன. பல இலக்கிய இதழ்கள தாகூர் ஆசிரியராக நடத்தியிருக்கிறார். நாடக இலக்கியத்திலும் அவர் சாதனை நிகழ்த்தினார். அவருடைய எழுத்துக்களில் நகைச்சுவை உணர்வு மிளிர்வதைக் காணலாம். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் கவிஞர். கவிதைகள அவரை மகாகவியெனக் காட்டுவது. அவருடைய கவிதைகள் இசைப் பாடல்கள். அவைகள் ரவீந்திர கீதங்கள் என்றே அழைக்கப் படுகின்றன. அவைகள் இசையுடன் பாடத் தகுந்தன. தாகூரே அவற்றைப் பாடினார்.

அவருடைய புகழ்பெற்ற நூலின் பெயர் கீதாஞ்சலி. இக்கீதங்கள் நித்தியமானவை எனத் தாகூரே நம்பினார். அவர் கடைசியாகக் கூறியதென புத்ததேவ வசு இவ்விதம் கூறுகிறார். என்னுடைய மற்ற ரசனைகள் எக்கதிக்கு உட்பட்டாலும் நான் விட்டுச் செல்லும் பாட்டுக்கள் என்றென்றும், மறையா. வங்க நாட்டில் பிறந்தவன் அதைப் பாடியே தீருவான். அவருடைய தீர்க்க தரிசனம் உண்மையாயிற்று. அவருடைய பாடல்கள் இன்று சிறப்பாகப் பாடப்படுகின்றன. இரவீந்திர சங்கீதம் என்று தனியான இசைக்கலை பயிலப்பட்டு வருகிறது. இசைத்தட்டுக்களாக அவர் கீதங்கள் ஒலிக்கின்றன. சினிமாவில் பயன்படுத்தப்படுகின்றன. அவருடைய சங்கீதம் ஆயப்படுகிறது. அவரே அவருடைய கீதங்கள இசையுடன் பாடினார்.

நம் பாரதியாருக்கு செய்யுள் இலக்கியம்தாம் வழிகாட்டிகளாக இருந்தன. அந்தச் செய்யுளயும் புதுக்கினார். மரபுப்படி செய்யுள் இயற்றும் ஆற்றல் மிக்கவராக அவர் இருந்தும் அவர் விரும்பித் திட்டமிட்டு எளிய பதங்கள் கொண்ட மக்களுக்குப் பிடிக்கும் புதிய மெட்டில் பாடல்கள் புனைந்தார்.
பாரதியார் பாஞ்சாலி சபதத்துக்கு எழுதிய முகவுரையில் எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்துகொள்ளக் கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகிறார் என்று கூறுகிறார். இந்தப் பிரக்ஞையுடனேதான் அவருடைய அனைத்துப் பாடல்களும் இயற்றப்பட்டுள்ளன. பாரதியாரின் அனைத்துப் பாடல்களுமே பாடத்தகுந்த இசைப்பாடல்கள். அவற்றைத் தமிழ்நாட்டில் உழவர்களும் தொழிலாளிகளும் பாடி மகிழ வேண்டும் எனப் பாரதியார் ஆசைப்பட்டார். பாரதியாரே அவற்றைதன் கம்பீரமான குரலில் பாடினார். பல கூட்டங்களிலும் பாடியுள்ளார். தனியாகவும் பாடுவார். கண்ணன் பாட்டுக்குத் தான் எழுதிய முன்னுரையில் வ.வே.சு. ஐயர் இவ்வாறு கூறுகிறார். கவிதை யழகை மாத்திரம் அனுபவித்து விட்டு இந்நூலின் பாட்டுகளிற் பெரும்பாலானவை தாளத்தோடு பாடுவதற்காகவே எழுதப்பட்டவையாயிருக்கின்றன. கடற்கரையில் சாந்திமயமான சாயங்கால வேளயில், உலகனைத்தையும் மோஹ வயப்படுத்தி நீலக் கடலையும் பாற்கடலாக்கும் நிலவொளியில் புதிதாகப் புனைந்த கீர்த்தனங்களக் கற்பனாகர்வத்தோடும் சிருஷ்டி உற்சாகத்தோடும் ஆசிரியன் தன்னுடைய கம்பீரமான குரலில் பாடினதைக் கேட்ட ஒவ்வொருவரும் இந்நூலிலுள்ள பாட்டுக்கள மாணிக்கங்களாக மதிப்பர் என்று. ச.து. சுப்பிரமணிய யோகி தன் அனுபவத்தை இவ்விதம் கூறுகிறார். பாடலானார், அடடா! அவர் பாடும் போது கேட்கவேண்டும். அது என்ன மனிதன் குரலா? இல்லை, இடியின் குரல், வெடியின் குரல். ஓஹோ ஹோ வென்றலையும் ஊழிக்காற்றின் உக்ர கர்ஜனை; ஆனால், அவைகளப்போல் வெறும் அர்த்தமில்லாத வெற்றோசையல்ல; அர்த்தபுஷ்டி நிறைந்த அசாதாரண வீர்யத்தோடு கூடிய வேதக் கவிதையின் வியப்புக் குரல், என்று. இப்படிப் பாடும் முறையில் தாகூருக்கும் பாரதிக்கும் உள்ள வேறுபாடு அவர்களின் ஆளுமை வேறுபாட்டைத் தெற்றென விளக்கும். பேச்சிலும் அப்படித்தான். ச.து.சு.யோகி பாரதியாரை நடக்கும் எரிமலை என்கிறார். தாகூர் அமைதி கூடிய ஞானக்குரலை இசைத்தார். பாரதியார் உணர்ச்சிப் பெருக்கே நெருப்பாய் அவரை எரித்து 39 வயதிலேயே அழித்துவிட்டது போலும். பாரதியாரின் பல பாடல்கள் பிறக்கும்போதே அவர் வாயால் பாடப்பட்டு பிறகு எழுதப்பட்டவை.

அவருடைய பாடல்களுக்கெல்லாம் ராகங்களயும் மெட்டுக்களயும் பாரதியாரே குறித்துள்ளார். இரு மகா கவிகளுக்கும் இதிலே எவ்வளவு பெரிய ஒற்றுமை. இப்பொழுது பாரதியின் பாடல்கள் பல ஒலிநாடாக்களாக வெளியிடப் படுகின்றன. பரலி சு.நெல்லையப்பரின் கனவு மெதுவாக நிறைவேறுகிறது. ஆனாலும் இரவீந்திர சங்கீதம்போல் வளரவில்லை. உரைநடையைப் பொறுத்தவரை பாரதியாரே வழிகாட்டியாய் தற்காலத் தமிழ் எழுத்தாளர்களுக்கு விளங்குகிறார். தாகூரின் வங்கமொழிக்கு இருந்த முன்னோடிகள்போல் இங்கு யாரும் இல்லை. இவரே நவீனத் தமிழ் உரைநடையை உருவாக்கியவர். கவிதைக்கும் உரைநடைக்கும் பெரும் வேறுபாட்டைக் காட்டியவர் இவரே. உரைநடையில் கதைகள், நாவல்கள், கட்டுரைகள் வரைந்தார். இவருடைய கதைகளும், நாவல்களும் கலைநேர்த்திக்காக மட்டும் தாகூருடையன போன்று படைக்கபடவில்லை. மக்களுக்கு அறிவூட்டும் நோக்குடனேயே எழுதப்பட்டன. இவருடைய கதைகளில் கதை மாந்தர்களின் மனோபாவங்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. சமூகமே குறியாகக் கொள்ளப் படுகிறது. இவருடைய கட்டுரைகளும் கலைப்படைப்புகளாகச் செய்யப்பட்டவையன்று. கருத்துக்களப் புகட்டவே எழுதப்பட்டன. ஆயினும் அவை இலக்கியங்களாய் இலங்குகின்றன. இவருடைய உரைநடை எழுத்துக்களல்லாம் பத்திரிகைகளில் வெளிவந்தவை.

இவர் தொடாத துறையில்லை. சமூகத்தின் அனைத்துப் பிரச்சினைகளயும் அலசினார். சங்கீதம் எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றிக்கூட விவாதித்தார். ஆங்கில ஆட்சியை எதிர்த்து, மக்களின் மூட நம்பிக்கைகளக் கண்டித்து, பெண்ணுக்கு வாதாடி, தீண்டாமையைச் சாடி அவர் உரைநடை பெருக்கெடுத்தது. தாகூர்போல் அவர் சாதிக்காதது நாடகத்துறையில். மொழிபெயர்ப்புகள் செய்தார். பகவத்கீதையை முழுவதாக மொழிபெயர்த்து விளக்கமும் சொன்னார். உலகப் பேரறிஞர்கள, கவிஞர்கள தமிழருக்கு அறிமுகப்படுத்தினார். தாகூர் உலகெல்லாம் சுற்றி உலகப் பெரியாருடன் தொடர்பு கொண்டார். பாரதியோ இந்தியாவைத் தாண்டாமலேயே உலக ஞானத்தைத் தமிழருக்குப் புகட்டினார். வால்ட் விட்மனையும் நோகுச்சியையும் தமிழருக்குக் காட்டி அவர்களின் கவிதைச் சிறப்பையும் தனித் தன்மைகளயும் விளக்கினார். தாகூரைப் போல நூல்களாக இவர் அதிகம் எழுதவில்லை. பத்திரிகையில் மட்டுமே எழுதினார். ஒன்றிரண்டைத் தவிர.

இலக்கிய படைப்புகளில் தாகூரின் அளவை பாரதியாரால் நெருங்கமுடியாது. ஒரே காரணம் வாழ்நாளின் கால வேறுபாடுதான். தாகூர் 81 ஆண்டுகள் வாழ்ந்தார். பாரதியோ 39 வயதுகூட நிறையாது மாண்டார். மேதையிலும் திறமையிலும் பாரதியார் குறையவில்லை.

தாகூருக்கும் பாரதியாருக்கும் இருக்கும் மிகப்பெரிய வேறுபாடு அவர்கள் அடைந்த புகழில் வெளிப்படுகிறது. தாகூர் தன்னுடைய வாழ்நாளின் தொடக்கத்திலிருந்து போற்றப்பட்டார். அவருடைய 13ஆம் வயதிலேயே அவருடைய கவிதை பத்திரிகையில் வெளிவந்தது. அவருடைய குடும்பப் பின்னணியும் செல்வமும் அவருடைய கவித்துவத்துக்கு ஆதரவு தந்து வளர்த்தது. அவர் இளம் வயதிலேயே வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப் பட்டார். கீதாஞ்சலியை இவரே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அது இவருக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது. உடனே உலகப் புகழை எட்டினார். உலகெங்கும் அவருக்கு வரவேற்பு கிடைத்தது. 11 முறை அவர் உலக நாடுகளச் சுற்றி வந்தார். அவருடைய இந்த வெற்றியைப் பாரதியாரே ஸ்ரீ ரவீந்திர திக்விஜயம் என்று தமிழருக்குப் பெருமையுடன் எழுதிக்காட்டினார்.

மன்னருக்குத் தன் தேசமல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

என்று சுட்டினார்.

இரவீந்திரரை உலக நாடுகளல்லாம் பாராட்டிக் கெளரவித்தன. பெரும்புகழ் வாய்ந்த பல்லைக்கழகங்கள் அவருக்குப் பட்டங்கள் வழங்கி மகிழ்ந்தன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அவருடைய இறுதிக்காலத்தில் கெளரவ பட்டத்தை டாக்டர் இராதாகிருஷ்ணன் மூலமாக சாந்தி நிகேதனில் அவருக்கு வழங்கியது. அவரைப் பாராட்டுவது தங்களுக்குக் கெளரவம் என்று பல்கலைக் கழகங்கள் எண்ணின. எல்லா ஐரோப்பிய நாடுகளும் ஆசிய நாடுகளும் அவருடைய ஓவியக் கண்காட்ச்சிகளயும் நூல் கண்காட்சிகளயும் நடத்தின. அவருக்குப் பொருளுதவியும் செய்தன. ஆங்கிலேய அரசு அவரைச் சீராட்டி செல்லப்பிள்ளயாக வைத்திருந்தது. சர் பட்டமும் வழங்கியது. வெளிநாடுகளுக்குச் சென்றபோது அவர் அரச விருந்தினராக இருந்தார். அவருடைய வாழ்நாளிலேயே அவருடைய நூல்களல்லாம் போற்றி வரவேற்கப்பட்டன. அவருடைய எழுத்துக்கள் பல தொகுதிகளாக அச்சிடப்பட்டன. மாக்மில்லன் கம்பெனி அவருடைய நூல்களின் மொழி பெயர்ப்பை வெளியிட்டுப் பணம் வழங்கியது. பல்வேறு மொழிகளில் அவர் எழுத்துக்கள் மொழிபெயர்க்கப்பட்டன.

அவர் தனக்கென அமைதியான ஓர் உலகத்தை அமைத்து அதில் அமைதி அடைந்தார். அது சாந்தி நிகேதன். அதில் அவர் நிறுவியது விசுவபாரதி என்னும் உலகப் பல்கலைக் கழகம். காந்தியை இவர் மகாத்மா என்றார். மகாத்மா இவரைக் குருதேவர் என்றார். இப்படிப் புகழின் உச்சியிலேயே இவருடைய பின்பாதி வாழ்வு ஒளிர்ந்தது. வங்காளம் இவரைத் தன் தலைவராக ஏற்றுப் போற்றியது. எல்லாப் பிரிவு வங்காளிகளும் இவரைப் போற்றினர். எதிர்ப்பின்றித் துலங்கினார். வைசிராய்களும் கவர்னர்களும் இவருடைய விருந்தினராயினர். இவர் சென்னை வந்தபோது கவர்னர் மாளிகையிலேயே தங்கினார். குடும்ப வாழ்வும் நிறைவுடன் இருந்தது. இவர் மறைந்தபோது இவருடைய சவ ஊர்வலத்தில் வங்க மக்கள் அனைவரும் வெள்ளமெனக் கலந்து கொண்டனர். 81 வயதில் மறைந்த இவருக்காகக் கலங்கி அழுதனர். இவர் வாழ்வு வெற்றியாக அமைந்தது. இன்றும் அவர் புகழ் ஓங்கி நிற்கிறது.

நம் பாரதியாரின் நிலை இதற்கு நேர் எதிரானது. இளமை முதல் இறுதி வரை பாரதியார் வறுமையிலும் துன்பத்திலும் உழன்றார். எந்த மக்களுக்காக அவர் வறுமையும் துன்பமும் ஏற்றாரோ அந்த மக்கள் அவரை அங்கீகாரம் செய்யவில்லை. போற்றுவது எங்கே?

பாரதியார் மகாகவி என்று நிறுவ வ.ரா.வும் பாரதிதாசனும் போராடினார்கள். அவர் தன்னுடைய எழுத்துக்கள அச்சிட்டு வெளியிட எவ்வளவோ ஆசைப்பட்டும் அது ஈடேறவில்லை. தன்னுடைய நூல்கள் தீப்பெட்டிபோல் மலிவான விலையில் எல்லாத் தமிழகர்களுக்கும் கிடைக்கவேண்டும். அவர்கள் அவற்றைப் பாடவேண்டும் எனக் கருதினார். எதுவும் நடைபெறவில்லை.

தமிழகம் தமிழுக்குத் தகும் உயர்வளிக்கும் தலைவனை எண்ணித் தவங்கிடக்கையில் இலகு பாரதிப் புலவன் தோன்றினான்

என பாரதிதாசன் பாடினார். தமிழுக்கு உயர்வளித்த தலைவனைத் தமிழர் கண்டுகொள்ளவில்லை. பொய்க்கும் கலியைக் கொன்று பூலோகத்தார் கண் முன்னே மெய்க்கும் கிருதயுகம் கொணரப் பிறந்தார் பாரதியார். தம் பாட்டுத் திறத்தாலே இவ்வையகத்தைப் பாலித்திட வேண்டும் என்றார். தமிழரை நோக்கியே அவர் பாடினாலும் உலகப்பார்வை கொண்டவர் அவர். தாகூரைப்போல் உலக நாடுகளுக்குச் செல்லவில்லை. ஆனால் பெல்ஜியத்தையும், புதிய ருஷ்யாவையும் வாழ்த்தும் ஞானம் இந்தியாவில் இவருக்கே இருந்தது. சென்னைக்கு வந்த தாகூர் தமிழ்த் தாத்தாவை மதித்துப் பார்த்தார். பாரதியார் என்று ஒருவர் இருப்பதையே அவர் அறியவில்லை. பாரதியோ அவரை கவீந்தரனாம் இரவீந்திரன் எனப் புகழ்ந்தார். அவர் கவிதையையும் மொழி பெயர்த்தார். தாகூர் மறைவுக்கு வங்கம் திரண்டது. பாரதி மறைவுக்குப் பத்துபேர் வந்தனர். என்ன வேற்றுமை!

பாரதியார் மறைந்தபின் நம்முள் வளர்கிறார். நாம் இப்போதுதான் விழிக்கிறோம். குவளக் கண்ணன் கிருஷ்ணமாச்சாரியார் கூறினார் தான் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பாரதியார் நாம் இன்னும் நானூறு வருடங்களுக்குப் பின்னாலே தோன்ற வேண்டியவர்கள். முன்னாலேயே தோன்றிவிட்டோம் என்ன செய்வது என்றாராம். அதுதான் உண்மையோ! எல்லாத் துன்பங்களுக்குமிடையே அவர் சோரவில்லை.

எத்தனை கோடி இன்பங்கள் வைத்தாய் இறைவா என மகிழ்ந்தார். ஏனெனில் அவர் ஜீவன் முக்தர். இந்தப் பாரதியைப் பாரறியச் செய்வோம்.

(திருச்சி, அகில இந்திய வானொலி நிலையம்)