வீ.சு.இராமலிங்கம் அவர்களைப் பற்றி

'தஞ்சைத் தங்கம்' வீ.சு.இராமலிங்கத்தின் பன்முக ஆளுமைகள்
'சேக்கிழாரடிப்பொடி' தி.ந.இராமச்சந்திரன்
எழுத்தாளர் இரா.சுப்பராயலு

"உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்''.

வழக்கறிஞர் வீ.சு. இராமலிங்கம் ஒரு மாமனிதர். "தமக்குச் சரி' என்று தோன்றுவதை அஞ்சாது எடுத்துக் கூறுபவர்; நியாயத்துக்குத் தோள் கொடுப்பவர்; சிறியன சிந்தியாதவர்; இவர் உள்ளியதெல்லாம் உயர்வு உள்ளலே.

இவரை உருவாக்கிய இருவர், மகாத்மா காந்தியும், அறிஞர் அண்ணாவும் இவர். அவர்களைப் பற்றி இவர் பேசாத நாட்கள் இவர் பிறவாத நாட்களே.

இராமலிங்கம் மிகப் பெரிய போராளி. எதிரிகளும் மதிக்கும் போராளி. அரசியலில் இவர் பெற்றதைவிட இழந்தவையே அதிகம். இவர் நினைத்திருந்தால் எப்படியெப்படியோ வாழ்ந்திருக்கலாம். பொன்னும், பொருளும் குவித்திருக்கலாம். ஆனால் தம் கொள்கையில் விடாப்பிடியாக இருந்தமையால் பதவியையும், பொருளையும் துச்சமாக எண்ணி வாழ்ந்தார்.

தஞ்சை மாவட்டத்தில் அ.தி.மு.க. கால் ஊன்ற வகை செய்தவர் இவரே. இவ்வகையில் இவருக்கு உறுதுணையாக இருந்தவர் வழக்கறிஞரான இராஜாராம் அவர்களாவார்.

அ.தி.மு.க. ஆட்சியின் போது அரசு வழக்கறிஞராக இராஜாராம் பதவியேற்றார். ஆனால் எந்தப் பதவியும் வீ.சு.இராமலிங்கம் பெறவும் இல்லை; பெற விரும்பியதும் இல்லை.

"அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் பச்சை குத்திக்கொள்ள வேண்டும்' என்று எம்.ஜி.ஆர். ஆணையிட, "அது அடிமைச் சாசனம் வரைந்து கொடுப்பதற்கு ஒப்பாகும்' என்று கூறி அ.தி.மு.கவை விட்டு வெளியேறினார். இத்தனைக்கும் எம்.ஜி.ஆர். இவரை அதிகமாக நேசித்தவர்.

இதன்பிறகு இவர் தாய்க் கழகமான தி.மு.க.வில் மீளவும் இணைந்தார். அங்கும் இவர் தம் சுயமான போக்கை மாற்றிக் கொள்ளவே இல்லை. மதிப்புக்கு உரியவராகவே இவர் இருந்தார்.

போராட்டங்களில் கலந்து கொண்டு இவர் சிறை சென்ற காலங்களில் இவர் குடும்பம் சோதனைக்கு உள்ளாயிற்று, இதைக் குடும்பத்தாரும் ஏற்றுக் கொண்டனரே தவிர இவரைக் குறை கூறவில்லை.
வாதிட ஒப்புக்கொண்ட வழக்குகளில் அறத்தின் வழியில், நியாயத்தின் வழியில் வாதங்களை எடுத்து வைத்தவர் இவர்.

கும்பகோணம் பள்ளித் தீ விபத்து பற்றிக் காவல்துறை தொடர்ந்த வழக்கில், "திட்டமிட்டு இந்த விபத்து நேர்ந்திருக்கிறது'' என்று ஒரு சட்டப்பிரிவை முன்வைத்தபோது, "இதில் திட்டமிடல் எங்கே வந்தது? விபத்து என்பது திட்டமிட்டு ஏற்படுத்தப் படுமா?'' என்று வாதம் செய்தவர்.

ஒரு வழக்கில் வாதத்தின் போது, இவருடைய தமிழ் இலக்கியப் பயிற்சி இவருக்குக் கைகொடுத்தது. இவர் கலிங்கத்துப் பரணியிலிருந்து ஒரு பாடலை மேற்கோள் காட்டி அவ் வழக்கில் வெற்றி பெற்றார்.

மதுரையில் உயர்நீதி மன்ற அமர்வு ஏற்படுத்த நீதித்துறை முயன்றபோது, சென்னை வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். சென்னை உயர்நீதிமன்றம் எல்லோரிடமும் கருத்துக்கேட்டது. தஞ்சை மாவட்டத்தின் சார்பில், இராமலிங்கம் சென்னை சென்று அற்புதமாக வாதாடினார்.

சென்னை வழக்கறிஞர்கள், "தங்களது தொழில் பாதிக்கப்படும்' என்று வாதாடியபோது "மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு வேலை இல்லை என்பதற்காக நோய்களை உற்பத்தி செய்ய முடியுமா?'' என்று கேட்டு அவர்களுடைய வாதத்தை இராமலிங்கம் முறியடித்தார்.

இராமலிங்கம் இளமைக் காலத்தில் தி.மு. கழகத்தினராக இருந்தமையால், கடவுள் மறுப்புக் கொள்கை உடையவராக இருந்தார். என்றாலும், கடவுளைப் பழித்தவர் அல்லர். காலம் இவர் மனத்தை மாற்றியது.

வல்லம் நரசிம்மப் பெருமாள் ஆலய வளாகத்தின் அருகில் இருந்த கல்வி நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்தபோது தம் உயிரையும் திரணமாக மதித்து, ஆக்கிரமிப்பைத் தடை செய்தவர். இதனால் இவர் மருத்துவ சிகிச்சையும், ஓய்வும் பெற வேண்டியிருந்தது.

அந்தக் கோயிலுக்குக் குடமுழுக்குச் செய்ய முன்நின்று அதனைப் புதுப்பித்தவர். இன்று அக்கோயில் புதுப் பொலிவோடும், மதில் சுவரோடும் அழகுற விளங்குகிறது.

அக்கோயிலில் கால பூசைகள் முறையாக நடைபெறவும், விழாக்கள் தவறாமல் நடைபெறவும் ஊர் மக்களிடையே ஓர் எழுச்சியையே ஏற்படுத்தியவர் இராமலிங்கம்.

இவர் ஒரு நல்ல ஆசிரியர். தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரியில் பி.காம். வகுப்பிற்கான ஒரு பாடநூல் சட்ட ரீதியில் அமைந்திருக்கும். அதன் பெயர் "வணிகச் சட்டம்' (Mercantile Law) என்பதாகும். அதனைப் போதிக்கும் பகுதிநேர ஆசிரியராக இவர் தெரிவு செய்யப்பட்டது சிறப்புக்கு உரியதாகும்.

சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் பி.எல். சட்ட வகுப்புக்கு இவர் பலமுறை சிறப்புரைகள் ஆற்றியுள்ளார்.

ரோஸ்கோ பௌண்ட் (Rosco Pound) என்பவர் சட்டத்திலும், தாவர இயலிலும் தனித்தனியே முனைவர் பட்டம் பெற்றவர். அவர் வரைந்த "சட்ட இயல்'' (Jurisprudence) என்னும் ஆங்கில நூல் ஐந்து பெரும் பாகங்களாக வெளிவந்தது. இந்நூல் சாஸ்த்ரா பல்கலைக்கழக நூலகத்தில் உள்ளது. அந்நூலைப் படிப்பதற் காகவே இவர் சாஸ்த்ரா பல்கலைக் கழகச் சிறப்புச் சொற்பொழிவாளராகச் சேர்ந்தார். நூலைப் படிப்பதற்கு இவருக்கு இருந்த தாகம் தீராததாகவே இருந்தது.

இவருக்கு இசையில் அதிக ஈடுபாடு உண்டு. முப்பது மைல் எல்லைக்குள் மதுரை சோமுவின் இசை நிகழ்ச்சி நடந்தால், அந்நிகழ்ச்சியில் இவரைத் தவறாது காணலாம். இவருக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாத காலத்திலும், தேவார இசை நிகழ்ச்சியில் முன் வரிசையில் அமர்ந்து பாடல்களை மாந்தி இன்புற்றிருப்பார். அனைத்து ஓதுவார்களும் இவருடைய நண்பர்கள் ஆவர்.

வடநாட்டு இசையை இவரைப் போல் சுவைத்தாரைக் காண இயலாது. படேகுலாம் அலி கான், பிஸ்மில்லா கான், ரவிசங்கர் போன்றோரின் இசை நாடாக்களை ஒலிக்கச் செய்து இவர் கேட்டு மகிழ்வார்.

ஆண்டுதோறும் திருவையாற்றில் நடக்கும் தியாக பிரும்ம உற்சவத்திற்குத் தவறாமல் சென்று வருவார். உற்சவத்தின் போது பாரதி சங்கம், பாரதி இயக்கம் இவற்றின் மூலமாக புத்தக விற்பனை செய்ய ஒரு கடையைப் பிடித்து, பாரதி பற்றிய நூல்களையும், பிற நூல்களையும் விற்பனை செய்யும் வழக்கத்தை ஏற்படுத்தினார். தஞ்சை தியாக பிரும்ம சபைக்கு இவர் துணைத்தலைவராகவும் தொடர்ந்து இருந்து வந்தார்.

தஞ்சையில் பாரதி சங்கத்தைத் தோற்றுவித்தவர்களுள் இவரும் ஒருவர். மாதம் தோறும் "தமிழ் மூதறிஞர் வாழ்வும் வாக்கும்' என்ற சொற்பொழிவுத் தொடர் நிகழ்த்திக் கொண்டு வந்தவர். ஏறத்தாழ முப்பதாண்டுக் காலம் இந்தத் தொடர் சொற்பொழிவு சுணங்காமல் நடந்து வந்தது இவருடைய சாதனையேயாகும்.

பாரதி சங்கத்தில் அறிஞர்கள் பலரை வரவழைத்துச் சொற்பொழிவுகள் ஆற்றச் செய்துள்ளார். பாரதி இயக்கத்தின் "வெள்ளிவிழா' ஆண்டில், மாதந்தோறும் பாரதியாரைப் பற்றிய ஒரு சிறப்புச் சொற்பொழிவு நிகழுமாறு அறிஞர்களை அழைத்து ஏற்பாடு செய்தார். ஓராண்டில் நிகழ்ந்த 12 சொற்பொழிவுகளையும் தொகுத்து, "பன்னிருவர் பார்வையில் பாரதி'' என்ற தலைப்பில் நூலாகப் பதிப்பித்தார்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் நடத்தும் கருத்தரங்குகளில் இவர் தொடர்ந்து பங்கு பெறுவார். ஒவ்வொரு கருத்தரங்கிலும் இவர் எழுப்புகின்ற வினாக்கள் பொருத்தமானவையாகவும், நியாயமானவையாகவும் இருக்கும். இவரது கேள்விகளைப் பெரிதும் போற்றி வந்த அன்பர்கள் இவரைக் "கேள்வியின் நாயகனே' என்று அழைத்து மகிழ்ந்தனர்.

தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பேரவை உறுப்பினராக இராமலிங்கம் இருந்த போது, பேரவைக் கூட்டங்களில், பல்கலைக்கழக நலனையே பெரிதும் நாடினார். பல்கலைக் கழகத்தில் பட்ட வகுப்புகள் தொடங்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டபோது, "உயராய்வு மையமாகத் திகழவேண்டிய தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பட்ட வகுப்புகள் நடத்தத் தேவை இல்லை; அது பல்கலைக் கழக நோக்கத்தைச் சிதைத்து விடும்'' என்று எதிர்ப்புத் தெரிவித்ததோடு, தம் எதிர்ப்பைப் "பதிவு செய்ய வேண்டும்' என்றும் வற்புறுத்தினார்.

இராமலிங்கம், வல்லத்தில் தம்முடைய நிலத்தில் ஒரு பகுதியை அடைக்கல மாதா கல்லூரிக்கு குறைந்த விலைக்கு வழங்கினார். அந்நிறுவனம் இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அக் கல்லூரி வளாகத்தில் "வக்கீல் இராமலிங்கம் அறிவாலயம்'' என்று பெயர் சூட்டி உள்ளது.

பாரதி மீது இவருக்கிருந்த ஈடுபாட்டைப் போலவே, காந்தியடிகள் மீதும் ஈடுபாடு இருந்தது. காந்தி இயக்கம் ஒன்றைத் தொடங்கி, அறிஞர்களைக் கொண்டு சொற்பொழிவுகள் நடத்த வைத்தார். அவரே காந்தியடிகள் பற்றிய நூல்களையும் வெளியிட்டார். "காந்தியமும் வள்ளுவமும்' என்னும் தலைப்பில் தான் ஆற்றிய வானொலி உரையை நூலாக வெளியிட்டுத், தன் மகன் "செம்பியன்' திருமணத்தின் போது அனைவருக்கும் வழங்கினார்.

பின்னாட்களில் இந்தியக் குடியரசுத் தலைவராகப் பொறுப்பு வகித்த சர்வ பள்ளி எஸ்.இராதாகிருஷ்ணன், அறிஞர் பெருமக்களிடமிருந்து கட்டுரைகள் பெற்று, அந்நூல் தொகுப்பை மகாத்மா காந்தியடிகளின் எழுபதாவது பிறந்த நாளின்போது பரிசளித்தார். அந்த நூலை வெ.சாமிநாத சர்மா தமிழில் மொழி பெயர்த்தார். பர்மாவில் இரங்கூன் தமிழர்கள் அதனை வெளியிட்டிருந்தனர். எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர், அந்நூலைத் தஞ்சை "அகரம் பதிப்பகம்' மூலம் மறுபதிப்புச் செய்ய இராமலிங்கம் தம்மிடம் இருந்த நூலைக் கொடுத்து மீண்டும் வெளிவரச் செய்தார்.

காந்தியடிகளைப் பற்றி இராமலிங்கம் கூறும் தகவல்கள் காந்தியவாதிகளே அறியாதவையாக இருக்கும். மதுரை சர்வோதய இலக்கியப் பண்ணை நிர்வாகிகள் திரு.க.மு.நடராசன், திரு.மு.மாரியப்பன் ஆகியோர் இராமலிங்கத்தை அடிக்கடி அழைத்து, மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் சொற்பொழிவுகள் ஆற்றச் செய்துள்ளனர்.

மதுரை காந்தி இயக்கம் நடத்தும் "சர்வோதயம்' என்னும் மாத இதழிலும் இவர் கட்டுரைகள் எழுதியுள்ளார். மதுரையிலிருந்தும், திண்டுக்கல் காந்தி கிராமத்திலிருந்தும் காந்தியவாதிகளை வரவழைத்துத் தஞ்சையில் சொற்பொழிவுகள் ஆற்றச் செய்துள்ளார்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் மீது இவர் எப்போதும் பெருமதிப்புக் கொண்டிருந்தார். அண்ணாவின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைத் துல்லியமாக விவரிக்கக் கூடிய ஆற்றல் மிக்கவர்.

தஞ்சையில் "அண்ணா பேரவை'யைத் தொடங்கி, அண்ணாவைப் பற்றிச் சொற் பொழிவுகள் ஆற்றச் செய்தார். அப்பொழிவுகளின்போது, அண்ணாவின் நூல்களை வாங்கி வந்து காட்சிப்படுத்தி, விற்பனையும் செய்ய வைத்தார். தன் மகன் செம்பியன் மூலம் இணைய தளம் ஒன்றைத் தொடங்கி அண்ணாவைப் பற்றிய தகவல்கள் உலகம் முழுதும் பரவ ஏற்பாடு செய்தார். அண்ணாவைப் பற்றிப் பேசத் தொடங்கினால் இவருக்குப் பொழுது போவதே தெரியாது. அண்ணாவிடம் இவருக்கு அவ்வளவு ஈடுபாடு.

தமிழ், இங்கில இலக்கியங்களை மிகவும் ரசித்துப் படிப்பவர். அவர் சேர்த்து வைத்திருக்கும் நூல்களே இதற்குச் சாட்சியம். எப்போதும் படிப்பதில் ஆர்வம் காட்டும் நல்ல வாசகர். தாம் படித்தவற்றைத் தம் நண்பர்களிடம் தவறாமல் பகிர்ந்து கொள்பவர்.

வழக்குக்காக, எத்தனைக் கட்சிக்காரர்கள் காத்திருந்தாலும் தம் நண்பர்களோடு அளவளாவுவதை நிறுத்த மாட்டார். தொழிலோடு, நட்புக்கும் முன்னுரிமை கொடுத்து வந்தவர். இவர், தம் நண்பர்களுடைய குடும்ப உறுப்பினர்களிடமும் பேரன்பு கொண்டிருந்தார். அனைவரையும் நலம் விசாரிப்பதோடு நின்றுவிடாமல், அவர்களுடைய சிக்கல்கள் தீரவும் ஆலோசனை கூறுவார்.

"தமிழ்க்கடல்' தி.வே.கோபாலய்யர், இராமலிங்கத்திடம் பேரன்பு கொண்டிருந்தார். தம்முடைய நூல்கள் எது வெளிவந்தாலும், அதில் ஒரு படியை இராமலிங்கத்திற்காகக் கொண்டு வந்து கொடுப்பார். அந்த அளவுக்கு இராமலிங்கத்தின் தமிழார்வத்தைக் கோபாலய்யர் போற்றி வந்தார்.

கோட்டையூர் ரோஜா முத்தையா செட்டியார் நூலக இல்லத்திற்கு, சேக்கிழார் அடிப்பொடியும், இராமலிங்கமும் மாதம் ஒருமுறை சென்று பார்த்து வரும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர்.

ரோஜா முத்தையா உடல்நலமின்றித் தஞ்சை மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்த போது, இருவரும் அவரை நன்கு பார்த்துக் கொண்டனர். ரோஜா முத்தையாவின் மறைவுக்குப் பிறகு, அவரது நூலகத்தை, அமெரிக்கப் பல்கலைக் கழகமான சிக்காகோ பல்கலைக் கழகத்தினரை அழைத்துப் பார்வையிடச் செய்து, பேராசிரியர் "நை' அவர்களிடம் நூலகத்தின் சிறப்பை எடுத்துரைத்து, அது சென்னையில் நிலை பெறவும், செட்டியாரின் குடும்பத்தினருக்கு உரிய தொகை வழங்கப் படவும் சேக்கிழாரடிப்பொடியும், இராமலிங்கமும் ஏற்பாடு செய்தனர்.

திருச்சியில் "வைஷ்ணவ சுதர்ஸனம்'' என்ற மாத இதழை நடத்திவந்த புத்தூர் கிருஷ்ண ஸ்வாமி ஐயங்கார், இராமலிங்கத்தை மிகவும் நேசித்தார்.

மன்னார்குடியைச் சேர்ந்த நரசிம்மராகவன் என்ற வைணவப் பெரியவர் ஒரு நல்ல வடமொழிப் புலவர். அவர் எழுத்தாளர் "கரிச்சான் குஞ்சு'வின் நெருங்கிய நண்பர். நரசிம்ம ராகவனும், கரிச்சான் குஞ்சுவும் சேக்கிழார் அடிப்பொடியின் வீட்டிற்கு அடிக்கடி வருவார்கள். அவ்வமயம், இராமலிங்கம் இருவரிடமும் நன்கு உசாவி, பல நல்ல தகவல்களைச் சேகரித்துக் கொள்வார்.

ஒருமுறை நரசிம்மராகவன் அவர்கள், வேதாந்த தேசிகன் கொண்டுள்ள தமிழ்ப்பற்று குறித்துப் பேசும்போது, "தேசிகர், தமிழ் மொழியை ஒரு "ஸ்வைர பாஷா' என்றும், அதற்குப் பொருள் "தமிழ் என்பது ஒரு தனிச் செம்மொழி' என்றும் கூறினார்'' என்பதைத் தெரிவித்தார்.
இதைத் தம் கருத்தில் இருத்தி வைத்துக் கொண்ட இராமலிங்கம், புதுச்சேரி வைணவ அன்பரான பாண்டுரங்கனிடம் இச்செய்தியை அறிவித்து விளக்கமும் தந்தார். இதைக் கேட்டுக் கிறுகிறுத்துப்போன பாண்டுரங்கன் இவரைப் பெரிதும் மதித்து வந்தார்.

குளித்தலை அருகிலுள்ள "தண்ணீர்ப் பள்ளி' என்னும் ஊரில் ஒரு கத்தோலிக்க இயக்கம் செயல்பட்டு வருகிறது. அதன் தலைவர் "கிரிஅபித்' என்ற பெயருடையவர். அவர் "பகவத் கீதை'யை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததோடு, விளக்கமும் தந்திருப்பவர். அறிஞர்களிடம் கொண்டிருந்த ஈடுபாடு காரணமாக இராமலிங்கம் அவரைத் தேடிச் சென்று கண்டார்; பகவத் கீதையின் ஆங்கில மொழியாக்கம் குறித்துப் பேசி வந்தார்.

இராமன், தியாகராஜ சர்மா, கே.ஜி.சேஷாத்திரி முதலிய சிறப்புமிக்க தஞ்சையின் ஆங்கிலப் பேராசிரியர்களிடம் நெருக்கமான தோழமை கொண்டிருந்தார்.

இங்கிலப் பேராசிரியர் கே.ஆர்.சீனிவாச ஐயங்கார், முனைவர் பிரேமா நந்தகுமார் அவர்களின் தந்தை ஆவார். அவருடைய பெருமையைக் கேள்விப்பட்டு, அவர் திருவரங்கம் வந்தபோது அவரைச் சென்று சந்தித்து, வணங்கி, வாழ்த்துப் பெற்று வந்தார். பிரேமா நந்தகுமார் அவர்களைத் தஞ்சையிலும், திருவையாற்றிலும் நடைபெற்ற பாரதி விழாவில் பங்கேற்கச் செய்தார்.

தொல்லியல் அறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்களுடைய நெருங்கிய நண்பரான இவர், அவருடைய ஆராய்ச்சிகளை வியந்தும், நயந்தும் பாராட்டுவார்.

நட்பின் பழமையை இவர் மிகவும் போற்றி வந்தார். இவருடைய கல்லூரித் தோழர்களான பேராசிரியர் முனைவர் தமிழ்க்குடிமகன், பேராசிரியர் முனைவர் இளவரசு இருவருடனும் நல்ல நட்பு பூண்டிருந்தார். அவர்கள் இருவரும் தங்கள் பெயர்களைத் தமிழ்ப் பெயர்களாக மாற்றம் செய்துகொண்டது போலவே, இவரும் தம் பெயரைத் "தொல்காப்பியன்' என்று மாற்றிக் கொண்டார். பின்னர் "இராமலிங்கம்' என்பதும் நல்ல பெயர்தானே! என்று கருதி இராமலிங்கமாகவே வாழ்ந்தார்.

உடற்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவற்றிலும் இவருக்கு ஈடுபாடு உண்டு. விளையாட்டுப் போட்டிகள் இளைஞர்களுக்குத் தேவை என்று கருதிய இவர், தம்முடைய தந்தையார் நினைவாக தஞ்சையில் ஆண்டுதோறும் ஹாக்கி விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, தமிழ்நாடு முழுவதிலிருந்தும் ஹாக்கி விளையாட்டு வீரர்களை வரவழைத்து, ஹாக்கி ஆட்டத்துக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்தார்.

ஈழத் தமிழறிஞர்களை இவர் மிகவும் நேசித்து வந்தார். பொன்னம்பலம் இராமநாதன் என்பவர் மிகப் பெரிய ஈழத் தமிழறிஞர். அவரைப் பற்றிய வாழ்க்கை வரலாறு இரு பாகங்களில் வெளியிடப் பட்டதை அறிந்து வெளியீட்டாளரிடம் தொடர்பு கொண்டு, அவ்விரு பகுதிகளையும் வாங்கிப் படித்து, தம்முடைய நூலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளார்.

பொன்னம்பலம் இராமநாதன் அவர்களுடைய மூத்த சகோதரர், உ.வே.சா. அவர்களின் நூல் பதிப்புக்குத் தம் கையிலிருந்து சுவடிகளைக் கொடுத்து உதவியவர்.

ஜி.ஏ.நடேசன் என்பவர், நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான நல்ல நூல்களை மலிவு விலையில் வெளிக் கொணர்ந்தவர். அவர், பெரிய வழக்கறிஞராகத் திகழ்ந்த கிருஷ்ணசாமி ஐயருக்கு பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தார். கிருஷ்ணசாமி ஐயர் பாரதியாருக்கு நூறு ரூபாய் பரிசளித்தார். அதனைக் கொண்டு, பாரதியார் மூன்று பாடல்களை, நான்கு பக்க அளவில் பத்தாயிரம் படிகள் அச்சிட்டு, இலவசமாக அனைவருக்கும் வழங்கினார்.

ஜி.ஏ.நடேசன் வெளியிட்ட நூல்களில் பல இராமலிங்கத்தின் நூலகத்தில் இருப்பது சிறப்பாகும்.

பொன்னம்பலம் இராமநாதன் மீது இவர் மாளாக் காதல் கொண்டவர் என்று பார்த்தோம். ஆகவே அவருடைய "பகவத் கீதை' மொழிப் பெயர்ப்பை வெளியிட சேக்கிழார் அடிப்பொடியை வற்புறுத்தி அதில் வெற்றியும் பெற்றார். இவருடைய நூலகத்தில் அரிய நூல்கள் பல உள. அவை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

மகாகவி மில்டனைத் தம் சுயமுயற்சியால் அறிந்து கொள்ளவேண்டும் என்று இவர் பாடுபட்டார். ஆனால், "மில்டனைப் புரிந்து கொள்ளுதல் எளிதன்று' என்று இராமலிங்கம் உணர்ந்தார். ஆகவே சேக்கிழார் அடிப்பொடியை அணுகி, தமக்கு "மில்டனைப் புரிந்துகொள்ள உதவவேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.

அப்போது உடனிருந்த வழக்கறிஞர் அருள் நமச்சிவயாயமும் இவரோடு இணைந்து கொண்டார். ஒவ்வொரு வியாழன் இரவு 8 மணியிலிருந்து 9 மணி வரை பாடம் சொல்ல சேக்கிழார் அடிப்பொடி இசைந்தார். இருவரும் தொடர்ந்து பாடம் கேட்டனர்.

பத்தாண்டுக் காலம் "பேரடைஸ் லாஸ்ட்' வகுப்பு நடந்தது. தஞ்சையைப் பொறுத்தவரை ஏன்? தென்னகத்தைப் பொறுத்த வரையும்கூட இந்நூலை முழுமையாகப் படித்தவர்கள் இம்மூவர்தாம் என்பதை இராமலிங்கம் பெருமையாகச் சொல்லிக்கொள்வார்.

பாரதி சங்கம், பாரதி இயக்கம் இரண்டும் இணைந்து பல விழாக்களை நடத்தியுள்ளன. நல்லி குப்புசாமி செட்டியார், ஜெயகாந்தன், சேக்கிழார் அடிப்பொடி, தமிழ்க்கடல் கோபாலய்யர் ஆகியோர்க்குப் பாராட்டுவிழா, எழுத்தாளர் இரா.சுப்பராயலு மணிவிழா - நூல்கள் வெளியீட்டு விழா போன்ற விழாக்களை இராமலிங்கம் முன்நின்று நடத்தியுள்ளார்.

இராமலிங்கத்தின் பணியைப் பாராட்டி அவருடைய நண்பர்கள் பாராட்டு விழா ஒன்றை நடத்தினர். "இராமலிங்கத்தின் பார்வைகள்' என்ற நூலும் அவ்விழாவில் வெளியிடப்பட்டது.

தன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது தன் மனைவி கற்பகம் என்பதை நன்றியுடன் அவ்விழாவில் நினைவு கூர்ந்தார். அவருடைய மக்களின் ஆதரவையும் நன்றியுடன் போற்றினார்.

இராமலிங்கம், தமிழில் நல்ல தோய்வு உள்ளவர். இவரது சொற்பொழிவுகள் பொருள் பொதிந்தவையாக இருக்கும். கேட்பவர்களை ஈர்க்கும் வகையில் கணீரென்ற குரலில் பேசுவார்.

இராமலிங்கத்திடம், நீதிபதிகள் மிகுந்த மதிப்பு வைத்திருந்தனர். இவருடைய வாதத் திறமையை அவர்கள் விரும்பிப் போற்றினர். இராமலிங்கம் உடல்நலம் குன்றி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது, அவரைக் காண வந்த நீதிபதி ஒருவர், நலம் விசாரித்து விட்டு, மருத்துவர்களிடம் "இவரை எப்படியாவது காப்பாற்றிக் கொடுக்கவேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்தார். அந்த அளவுக்கு நீதிமன்றங்களில் மதிப்புக்குரியவராக இராமலிங்கம் திகழ்ந்தார்.

இராமலிங்கம் இன்று நம்மிடையே இல்லை. நம் நினைவில் வாழ்கிறார். அவரது இழப்பு அவர் குடும்பத்தாருக்கு மட்டுமன்று; அனைவருக்கும்தான்.

தஞ்சை ஒரு தங்கத்தை இழந்துவிட்டது. இதுதான் இவ்வுலகத்தின் நியதி. என்றாலும், அவருடைய புகழ் தஞ்சையில் என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் அணுவளவும் ஐயமில்லை.

வாழ்க இராமலிங்கம் புகழ்!

வளர்க அவர் ஆற்றிய தமிழ்த் தொண்டு!