வீ.சு.இராமலிங்கம் அவர்களைப் பற்றி

வீ.சு.இராமலிங்கத்தின்
வாசிப்பு - சொற்பிரவாகம் - அறிவுத்தேடல் - விமர்சனம் - கலாரசனை

மாண்பமை S.S.பழநிமாணிக்கம்
மத்திய நிதித்துறை மேனாள் இணை அமைச்சர்

அனைவராலும் VSR என்று அன்புடன் அழைக்கப்பட்ட அண்ணன் இராமலிங்கம் இளம் வயதில் பேரறிஞர் அண்ணாவால் கவரப்பட்ட காங்கிரஸ்காரர் வீட்டுப் பிள்ளை.

சட்டக் கல்லூரியில் பயின்று தஞ்சைக்கு வழக்கறிஞராக வந்ததிலிருந்து, நகரத்தில் அனைவரின் கவனத்தையும் தன்பால் கவர்ந்தவர்.

மூத்த வழக்கறிஞர்களான திரு.மாணிக்கவாசகம், திரு.தஞ்சை ராமமூர்த்தி, திரு.சுந்தரராஜன், திரு.T.S.பார்த்தசாரதி, திரு.V.மகாதேவன், திரு.R.ராசப்பா, சக வழக்கறிஞர்களான V.சேதுராமன், ஜெயராமன், ராஜாராமன் போன்றோரது நட்பு அவரை மேலும் செழுமைப்படுத்தியது. அது ஒரு கற்றறிந்த அறிஞர் சபை.

அரசியலில், தஞ்சை மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க சிலருள் ஒருவராக இருந்த போதும், தனது வளைந்து கொடுக்காத குணம் காரணமாக உயர்ந்த நிலை அடையும் வாய்ப்புகளை பலமுறை தவற விட்டவர். ஆயினும் அதற்காக ஒருபோதும் வருந்தாதவர்.

மூத்த வழக்கறிஞர்களிடமும், இளம் வழக்கறிஞர்களிடமும் ஒரே மனநிலையில் உற்சாகமாகப் பழகக் கூடியவர்.

முக்கியமான நேரங்களில், எல்லோரும் எடுக்கும் முடிவுகளில் மாறுபட்டுத் தனக்குச் சரியெனப்பட்ட முடிவை எடுத்து, எல்லோர் விரோதத்தையும் சம்பாதிக்கச் சிறிதும் தயங்காதவர்.

அறிஞர் அண்ணாமீதும், பாரதிமீதும் தீராத காதல் கொண்டவர்.

தலைவர் கலைஞரின் ஊழைப்பை, தியாகத்தைப் பெரிதும் சிலாகிப்பவர்.

உள்கட்சி ஜனநாயகத்தை ஒளிவு மறைவின்றி விமர்சிப்பவர்.

கடந்த சில ஆண்டுகளாக மதுரை காந்திய அமைப்பைச் சேர்ந்த திரு.மு.மாரியப்பன், திரு.க.மு.நடராசன், நம்மூர் "சைவ சித்தாந்த கலாநிதி' திரு.TNR போன்றோரிடம் பெரும் ஈடுபாடு கொண்டு காந்திய, சைவ சித்தாந்த சிந்தனையாளர்களிடமும் நெருக்கம் கொண்டார்.

தஞ்சாவூர்க்காரர்களுக்கே ஊரிய எல்லாச் சிறப்பம்சம்களும் நிறைந்தவர்.

ஆழ்ந்த வாசிப்பு, ஆற்றுபெருக்கன்ன சொற்பிரவாகம், தீராத அறிவுத்தேடல், நாணயமான விமர்சனம், சிறந்த கலாரசனை கொண்ட போஜனப் பிரியர்.

எல்லாவற்றிற்கும் மேலாக கழகக் காவலர். எதன்மீதும் ஆசை கொள்ளாத மனைவி, மக்கள்.
ஊர்க்காரர் என்ற முறையில் எனது வளர்ச்சியில் மகிழ்ச்சி.

இதே குணங்களோடு இனியொரு VSR தஞ்சையில் இனி வலம் வருவது அவ்வளவு எளிதல்ல.