வீ.எஸ்.இராமலிங்கம் அவர்களைப் பற்றி

வீ.சு.இராமலிங்கம்
சிறந்த வழக்குரைஞர் - சீரிய இலக்கியவாதி

தஞ்சை இராமமூர்த்தி

வி.எஸ்.அர். என்று நண்பர்கள் பலராலும் அன்புடன் அழைக்கப்பட்ட வழக்குரைஞர் இராமலிங்கம், தஞ்சையின் தலைசிறந்த வழக்குரைஞர்களுள் ஒருவராவார். அது அவருக்குத் தொழில். ஆனால் அதைவிட அவருக்குப் பொதுவாழ்வில் நாட்டம் அதிகம். அதில் ஒரு பகுதியாக இலக்கிய ஈடுபாடு மிக்கவராகவும் விளங்கினார். ஏராளமான அரசியல் மற்றும் இலக்கிய மேடைகளில் முழங்கி வந்துள்ளார்.

அவரது தொடக்கக்காலத் தொடர்பு தி.மு.க.விலிருந்து தொடங்கியது; அதற்குக் காரணம் அறிஞர் அண்ணாவின்பால் ஏற்பட்ட ஈர்ப்பு. அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் தொடர்ந்து கலைஞர் தலைமையில், தி.மு.கழகத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார்.

1972 இல் அ.தி.மு.க. தோன்றிய போது, அக் கட்சியில் இணைந்து தஞ்சை மாவட்ட அமைப்பாளர்களுள் ஒருவராக எம்.ஜி.ஆரால் நியமிக்கப் பட்டார். பிறகு கருத்து மாறுபாட்டால் அக் கட்சியிலிருந்து விலகி, இலக்கியப் பணிகளில் ஈடுபட்டார். மகாகவி பாரதியின் பாடல்களில் திளைத்து மூழ்கி மக்களிடையே பரவச் செய்ததோடு காந்திய இயக்கத்திலும் தன்னை இணைத்துக் கொண்டார். 1978 இல் தி.மு.கழகத்தில் மீண்டும் தன்னை இணைத்துக் கொண்டார்.

தஞ்சை நகரின் மேல்புறத்தில் அமைந்துள்ள "வல்லம்' எனும் மூதூர் பேரூரில் இராமலிங்கம் பிறந்தார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பேரூரில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் "கலெக்டர்' மாவட்ட ஆட்சியர் இல்லம் இருந்தது. பழைய நாட்களில் சோழர்களின் தலைநகரமாகவும் இருந்தது என்று கூறுவதுண்டு. அம்மூதூருக்குள் நுழையும் வாயிலில், கோட்டைச் சுவரும், அகழியும் இருக்கின்றன என்பதை அதற்கு ஆதாரமாகச் சொல்வோரும் உண்டு. வல்லத்தில் உடையார்கள் என்ற பட்டப் பெயர் உள்ளவர்கள் பெரும்பான்மையினர். தஞ்சை மாமன்னர் "சோழப் பெருவுடையார்' என்று அழைக்கப் படுகிறாரல்லவா?

வல்லம் நகரில் செல்வாக்கோடு வாழ்ந்தவர் ம.வீ.சுந்தர உடையார். அந்தச் சுற்று வட்டாரத்திலும் செல்வாக்குடையவராக வாழ்ந்தார். அவரையும் எனக்குத் தெரியும், பழக்கமுண்டு.

இராமலிங்கம் "எனது மாணவர்' என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்; ஆனால் உண்மை என்பதை அவரே கூறிப் பெருமை கொள்வார். தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி 1955இல் தொடங்கப் பட்டது; ரோட்டரி குழுமம் முயற்சியில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆரம்பிக்கப் பட்டது. தஞ்சை அரண்மனை "சங்கீத மஹால்'' என்று அழைக்கப்படும் அழகிய கூடத்தில்தான் முதல் ஆண்டு தொடக்கம். நான் 1956இல் அந்தக் கல்லூரியில் பணியில் சேர்ந்தேன். "தமிழ் டியூட்டர்' என்ற உதவி விரிவுரையாளர் வேலை. இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு நான் கல்லூரியை விட்டு வெளியேறி விட்டேன். அந்த இடத்தை நிரப்ப அவ்வை நடராசன், (பின்னாட்களில் தமிழ்ப்பல்கலைக் கழக துணைவேந்தர்) எனது இடத்திற்கு வந்தார். நான் அங்கே பணிபுரிந்தபோது 1956-57 ஆம் கல்வி ஆண்டில் இராமலிங்கம் புகுமுக வகுப்பு மாணவராகச் சேர்ந்து படித்தார்.

எனவே, நீதிமன்ற வளாகத்திலும், பிற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் போதெல்லாம், "எங்கள் வாத்தியார், வாத்தியார்' என்று பாசத்தோடு கூறுவார். அவர் தலைவராக ஏற்றுக் கொண்ட எம்.ஜி.ஆருக்கும் "வாத்தியார்' என்று ஒரு செல்லப்பெயர் உண்டு!

இராமலிங்கம், பட்டப்படிப்பிற்கு திருச்சி தூயவளனார் கல்லூரியில் சேர்ந்தார். அதுவும் நான் படித்த கல்லூரி! அங்குப் பணியாற்றிய ஆசிரியர்களில் சிலரும் எனக்கு ஆசிரியர்களாக இருந்தவர்கள். அவர்களைப் பற்றியெல்லாம் என்னிடம் வந்து பேசுவார். எதற்கு இதனைக் கூறுகிறேன் என்றால், தஞ்சைக் கல்லூரியோடு எங்கள் நட்பு முடிந்துவிடவில்லை. அதற்குப் பிறகும், வழக்குரைஞர் என்ற முறையிலும் எங்கள் நட்பு, அவரது இறுதிக் காலம் வரை என்னோடு இணைந்திருந்தது. 1956இலிருந்து அவர் அமரரான 2014 வரை 58 ஆண்டுகளாக எங்கள் நட்பு மேலும் மேலும் சுவை கூடிற்று. கரும்பினை நுனியிலிருந்து சுவைத்தது போல!

இராமலிங்கத்தின் வழக்குரைஞர் பணி மிகவும் மெச்சத் தகுந்தது. குற்றவியல், உண்மையியல் ஆகிய இரண்டு துறைகளிலும் அவருக்கு நல்ல பயிற்சி. ஏனெனில் நிறைய சட்டம் படிப்பார். படிப்பது அவருக்குப் பிறவியிலேயே கைவரப் பெற்ற வரம். சட்டமும் படிப்பார். பிறதுறை நூல்களையும் பயிலுவார்.

நீதிமன்றத்தின் உள்ளே நுழைந்துவிட்டால், நாம் "நமது முறை எப்போது வரும்' என்று காத்துக் கொண்டிருக்கும் நேரம்தான் அதிகமாக இருக்கும். அது போன்று காத்துக் கொண்டிருக்கும் வேளைகளில், சாக்ரடீஸ், பிளேட்டோ போன்ற பேரறிஞர்களின் நூல்களை இராமலிங்கம் படித்துக் கொண்டேயிருப்பார். அவர் முறை வரும்போது, அருகிலுள்ளோர் சொன்ன பிறகுதான், எழுந்தே நிற்பார். நேரத்தை வீணடிக்கவே மாட்டார். யாரிடமும் பேசவே மாட்டார். திருச்சியிலிருந்து, தஞ்சை அமர்வு நீதிமன்றத்திற்கு வரும் "விருத்தாசலம் ரெட்டியார்' என்ற புகழ்பெற்ற வழக்குரைஞரும் அவ்வாறே செய்வார். நமது இராமலிங்கமும் அப்படியேதான்.

வழக்குகளை நன்கு படித்துவிட்டு வருவதால், நீதிமன்றத்தில் வந்து திறமையாக வாதிடுவார். வழக்குரைஞர் சங்கத்திலும் யாருடனும் அதிகம் பேசிக் கொண்டிருக்க மாட்டார். எப்போதாவது, அவர் கண்ணில் நான் பட்டால், அப்போது அவர் படித்த நூல்களைப் பற்றி விவாதிப்பார்.

அவர் என்னைவிட அதிகம் படிப்பவர் என்பதை நான் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். வேடிக்கை என்னவென்றால், நான் இல்லாத நேரத்திலும், அவர் படிக்க விரும்பும் நூல் ஏதாவது வேண்டுமென்றால், எனது மனைவியிடம் சொல்லிவிட்டு உரிமையோடு எடுத்துச் சென்று விடுவார். அவர் எடுத்துக் கொண்டுபோன நூல்களில் சிலவற்றை அவரே வைத்துக் கொள்வார், உரிமையோடு அதற்கு பெர்னாட்ஷாவை உதாரணம் சொல்வார். பெர்னாட்ஷாவின் நூலகம் பெரியது; அதில் பெரும்பாலான நூல்கள் "ஓசி' வாங்கியவை; திருப்பிக் கொடுக்கப் படாதவை!

அவர் சிவில் வழக்குகள் பல நடத்தியுள்ளார். குற்ற வழக்குகளும் சிறப்பாகவே நடத்தி வந்தார். என்ன சிக்கல் என்றால், இவர் எங்கும் வேறு நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவிடாமல், உறுதியாக நீதிமன்றம் வருவாரா என்ற சந்தேகம் கட்சிக்காரர்களிடம் இருந்தது. சில நேரங்களில் அது உண்மை! எனக்கும் அதே சிக்கல் இருந்தது. உடன் பணியாற்றும் வழக்குரைஞர்களில் சிலர், "அவர் டெல்லி போயிருப்பார்; சென்னை போயிருப்பார்' என்று பெருமையாகக் கூறி விடுவதுண்டு. அவர்கள், "கெடுதி செய்வதாக நினைத்து நமக்கு நன்மை செய்யும் நண்பர்கள்''.

இராமலிங்கத்துக்கு இரண்டு வகை வழக்குகளும் நிறைய வந்தன. ஆனால் நான் கொலை வழக்குகள் மட்டுமே அதிகம் நடத்தி வந்தேன். அவற்றில் வெற்றியும் உண்டு; தோல்வியும் உண்டு. ஆனால் இராமலிங்கம் வழக்குகளில் வெற்றிச் சதவீதம் அதிகம் என்றே நான் பாராட்டுவேன்!

இறுதியாக, அவர் நடத்திய கும்பகோணம் பள்ளித் தீ விபத்து வழக்கை அவர் மிகவும் இலாவகமாக நடத்தினார். பள்ளி உரிமையாளர் புலவர் பழனிசாமி முதல் குற்றவாளி. அவர் அ.தி.மு.க. காரர். இராமலிங்கத்தின் நீண்டகால நண்பர். கும்பகோணம் நகரத்திலேயே குறைந்த கட்டணம் வாங்கி, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பின்தங்கிய வகுப்புப் பிள்ளைகளுக்குத் தரமான கல்வி தந்தவர். சேவை மனப்பான்மை உள்ளவர். படித்தவர். எனக்கும் நண்பர்தான்! ஏதோ விபத்து நடந்துவிட்டது. நீதிபதியும் நல்லவர்; ஆனால் விடுவிக்க முடியாத அளவுக்குப் பொதுமக்கள் அனுதாபம்! அந்த வழக்கினால், இராமலிங்கத்தின் உடல்நிலை மேலும் நலிவடைந்தது; பின்னர் நலம் பெற்றார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் நமது மாவட்டத் தலைமை நீதிபதியாக இருந்தவர் இசுலாமியர். ஒரு சந்திப்பின்போது அவர் என்னிடம், "நீங்களும், வி.எஸ்.இராமலிங்கமும் சாட்சிகளை விசாரிக்கும் போதும் - இறுதி வாதங்களை எடுத்து வைக்கும்போதும் மிகக் கச்சிதமாக எடுத்துரைப்பீர்கள்; அது எனக்கு மிகவும் பிடிக்கும்'' என்றார். ஒரு வழக்குரைஞருக்கு இதைவிடப் பெருமை வேறென்ன வேண்டும்?

இராமலிங்கம் ஒரு நல்ல வழக்குரைஞராகப் பணிபுரிந்தார். அதையும்விட அவர் ஒரு நல்ல இலக்கியவாதியும் கூட. குறிப்பாக அவரது பாரதி ஈடுபாடு அளவிட முடியாதது.

கு.சிவஞானம் தஞ்சை சரபோஜி கல்லூரியில் என்னுடன் பணி புரிந்தவர். இராமலிங்கம் அவருக்கும் மாணவர்தான். பின்னாட்களில், சிவஞானம் மாநில அளவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராகப் பணியாற்றியவர். சிவஞானம், தமிழ்ப் பேராசிரியராக இருந்த காரணத்தால் பாரதி பற்றி எனக்கு நிறையச் சொல்வார். பிறகுதான் நான் பாரதியைப் பயிலத் தொடங்கினேன். பாரதியின் பக்தனாவே ஆகிவிட்டேன். என் வழியாகத்தான் இராமலிங்கம் பாரதிதாசனிலிருந்து பாரதிக்கு மாறினார். எனது ஒத்துழைப்போடு பாரதி சங்கத்தை ஆரம்பித்து பாரதிக்கு என்று ஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளவர் இராமலிங்கம் ஒருவர்தான்! திருக்குறள், இராமலிங்கத்துக்கு அத்துப்படி! திருவள்ளுவரைக் காந்தியடிகளோடு ஒப்பிட்டு, அவர் வானொலியில் ஆற்றிய உரை மிகவும் பொருள் பொதிந்தது.

வழக்குரைஞர் தொழில், இலக்கியப் பணிகள் தவிர காந்திய இயக்கத்தோடும், இராமலிங்கம் தொடர்பு கொண்டிருந்தார். இரண்டாண்டுகட்கு முன்பு, தஞ்சை தி.மு.க. அலுவலகமான கலைஞர் அறிவாலயக் கூட்ட அரங்கில் வி.எஸ்.இராமலிங்கத்தைப் பாராட்டி ஒரு விழாவினை நடத்தினோம். அவ் விழாவிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் திரு.எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், சகோதரர் முன்னாள் அமைச்சர் சி.நா.மீ.உபயதுல்லா ஆகியோர் பெருமளவில் துணையாக இருந்தார்கள்.

ஒரு நாள் தஞ்சை வழக்குரைஞர்கள் சங்கத்தில் இராமலிங்கம் அமர்ந்திருந்தார். சோர்வே அறியாத அவர் மிகுந்த சோர்வோடு காணப்பட்டார். அவருக்கு அடுத்த நாற்காலியில் நான் அமர்ந்து விசாரித்தேன். "எனக்கு ஒரு பணக்கார நோய் வந்திருக்கிறது. நான் பெரிய பணக்காரனாக ஆகிவிட்டேன்'' என்று சிரித்துக் கொண்டே கூறினார். "டயாலிசிஸ் சிகிச்சை முறைக்கு திருச்சிக்குச் சென்று வரப் போகிறேன்'' என்றார்.

ஜெயப்பிரகாஷ் நாராயணன், வி.பி.சிங் போன்றோர் அந்த சிகிச்சைக்கு ஆளாயினர் என்பது எனக்குத் தெரியும். அதாவது அந்த நோய் வாழ்க்கையின் முடிவுக்குத் தொடக்கம் என்று கூறப்படுகிறது. அதைக் கேட்டதும் எனக்குக் கவலை மேலிட்டது. "இராமலிங்கம் உங்களுக்கு ஒரு விழா நடத்தப்போகிறோம்'' என்றேன். "ஏன்? எதற்கு?' என்று இராமலிங்கம் கேட்டார். அப்போது எனது இளைய வழக்குரைஞர்கள் பவானந்தம், வேல்ராஜ் ஆகிய இருவரும் உடன் இருந்தனர். "எனது ஆசை; எனது பெருமைக்குரிய கடமை'' என்று கூறி நான் நகர்ந்து விட்டேன்.

இராமலிங்கத்துக்கு உறுதுணையாக எல்லாமுமாக உள்ள மூத்த மகன் செம்பியனிடம் பேசி விழா குறித்த எல்லா முடிவுகளும் எடுக்கப்பட்டன. அதில் முக்கியமானது, வி.எஸ்.ஆரின் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிடுவது; அது நிலையாக இருக்கும் என்பது எனது கருத்து. அதைத் தம்பி செம்பியனும் ஒத்துக் கொண்டார். இதுபோன்ற நேரங்களில், எனக்குத் தவறாது துணைபுரியக் காத்து இருக்கும் தம்பி எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் அன்று அமைச்சர். அவரிடம் கூறினேன். "நீங்கள் கூறுகிறீர்கள் என்பது ஒன்று; அவர் எனது பக்கத்து ஊர்க்காரர். நான் வேண்டியதைச் செய்கிறேன்'' என்றார்; செய்தார்.

முனைவர் வி.பாரி எங்களிடையே இணைப்புப் பாலம். அவரிடம் பணி ஒப்படைப்பு. செம்பியன் முழுப் பொறுப்பு. செம்பியனுக்கு எனது விசேஷமான பாராட்டுகள். நானும் சில நூல்களை எழுதி வெளியிட்டுள்ளேன். ஆனால், அவற்றையெல்லாம்விட, "இராமலிங்கத்தின் பார்வைகள்' என்ற நூல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! உருவத்தாலும் உள்ளடக்கத்தாலும்! எனக்குப் பணச் செலவு பெரிதாக ஒன்றுமில்லை. மணமக்களுக்கு (இராமலிங்கம் & கற்பகவல்லி) எனது மனைவி சரசுவதி பட்டுப்புடவை, பட்டுவேட்டி பரிசளித்தார்!

அந்த விழா, நானே பொறுப்பேற்று நடத்தியதால் அதைப்பற்றி எழுத நினைக்க வில்லை. இரண்டு காரணங்களால் எழுதுகின்றேன். ஒன்று அந்த விழாவில் மதுரையிலிருந்தும், திண்டுக்கல் காந்தி கிராமத்திலிருந்தும் விழாவிற்கு வந்திருந்த திரு.க.மு.நடராசன், திரு.மு.மாரியப்பன் ஆகிய இரண்டு தலைவர்கள். சர்வோதயம் குறித்தும் காந்தியம் குறித்தும் அவர்கள் கூறுவதுதான் முடிவான வார்த்தைகள். அவர்கள் எனக்கு முதலில் நன்றி பாராட்டிவிட்டு, "இராமலிங்கம்தான் எங்களுக்கே (காந்திய வாதிகள்) இப்போது குருநாதர். எங்கள் துறையில் எந்த ஐயம் வந்தாலும் அவர் கூறுகிற தீர்ப்பைத்தான் ஏற்றுக்கொள்வோம்'' என்றார்கள். இது எவ்வளவு பெரிய பாராட்டு என்பதை அறிந்தோர் அறிவர்! என்னைப் பொறுத்தவரை காந்தியத்தில் புலமை மிக்கவர் இராமலிங்கம் என்பது உண்மை.

இரண்டாவது, அமரர் இராமலிங்கத்தின் மறைவிற்கு, அஞ்சலி செலுத்த அவரது மூதாதையரின் வல்லம் இல்லத்திற்கு, முன்னாள் அரசு வழக்குரைஞர் நமச்சிவாயத்துடன் சென்றோம். இராமலிங்கத்தின் மனைவி, என்னைப் பார்த்தவுடன், "ஐயா! நீங்களும் அம்மாவும் அந்தப் பச்சைப் பட்டுப் புடவையினைப் பிரித்து, அங்கேயே உடுத்தி வரச் சொன்னீர்களே! இப்பத்தான் பொண்ணுமாதிரி இருக்கு என்று சொன்னீர்களே ஐயா! நான் அதனை எப்படி மறக்க முடியும்? அதை அப்படியே வைத்திருக்கிறேனே! இனி எப்படிக் கட்டுவது?'' என்று கதறியழுத காட்சி என் உள்ளத்தை நெகிழச் செய்தவாறே உள்ளது.

நான் பிரியாவிடை பெறும்போது, இராமலிங்கத்தின் மீசை அது அவருக்கே உரிய தனி மீசை. சர். ஏ.டி.பன்னீர்செல்வத்தின் பெருமைக்குரிய மீசையை ஒத்தது. நான் கண்ணாடிப் பெட்டியைத் தொட்டு, "தம்பீ'' என்றேன். என் கண்கள் கண்ணீரை உகுத்தன.

வீடணனிடம் கும்பகர்ணன் செய்யும் உருக்கமான வாதங்களில் ஒன்று, "தம்பியை இன்றி மாண்டு கிடப்பனோ தமயன் மண்மேல்'' என்பது. ஏழாண்டுகள் மூத்த அண்ணனான எனக்கு முன்னால் தம்பி இராமலிங்கம் அமரராகிவிட்டான். அந்தக் கம்பராமாயண வரிகள்தான் எனக்கு நினைவுக்கு வருகின்றன. கண்களைக் கண்ணீர் மறைக்கிறது.