வீ.சு.இராமலிங்கம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு

10.03.1941 ஆன்று வல்லம் ம.வீ.சுந்தர உடையார், செல்லம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணன், ஐந்து தம்பிகள் மற்றும் ஒரு தங்கை. பிறப்பிடம், வல்லம் வெள்ளாளத்தெரு. அதே தெருவில் உள்ள சாமிநாதர் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். அதன்பின் ஆறாம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை வல்லம் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் படித்தார். 1956-57-ல் மன்னர் சரபோஜி கல்லூரியில் புகுமுக வகுப்பு. 1958-61ல் திருச்சி தூய வளனார் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ. வரலாறு) படித்தார். 1961 முதல் 1963 வரை சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். படித்தார். பின் ஓராண்டுக் காலம் வழக்கறிஞர் கே.வி.சீனிவாசன் அவர்களிடம் வழக்குரைஞர் பயிற்சி(apprentiship) பெற்றார்.

1964 ஆகஸ்ட்டில் வழக்குரைஞராகப் பதிவு செய்தார். அது முதல் வழக்குரைஞராகப் பணி செய்து வந்தார்.

திருச்சியில் படிக்கும்போது, நியூ ஹாஸ்டலில் தங்கிப் படித்தார். அங்கு இருக்கும்போது, தமிழ்க்குடிமகன், இளவரசு ஆகியோருடன் சேர்ந்து பல மாணவர்களை இணைத்துக்கொண்டு 'தமிழ்ப் பேராயம்' என்னும் ஒரு அமைப்பை நடத்தினார். தனித் தமிழ் வளர்ப்பதற்காக அந்த அமைப்பு நடத்தப்பட்டது. அதன் விளைவாக, மூன்றாம் ஆண்டில் மாணவர் விடுதியில் இடம் மறுக்கப்பட்டது.

வல்லத்தில் நண்பர்களோடு சேர்ந்து சேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்ட 'திருக்குறள் பேரவை' என்ற ஒரு அமைப்பை சில ஆண்டுகள் நடத்தினார்.

மாணவப் பருவம் தொட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஈடுபாடு. அறிஞர் அண்ணாவைத் தலைவராக ஏற்றுக் கொண்டார்.

தஞ்சாவூரில் முதன் முதலாக தி.மு.க. வழக்கறிஞர்கள் மாநாடு அண்ணாவின் அறிவுரையின்படி நடத்தப்பட்டது. அதை வழக்கறிஞர் திரு.மாணிக்கவாசகம் அவர்களுடன் இணைந்து நடத்தினார். தீவிர தி.மு.க. பிரச்சாரகராக செயல்பட்டார்.

1972-ல் அண்ணா தி.மு.க. உருவாக்கப்பட்டபோது, தஞ்சாவூர் மாவட்ட அமைப்பாளராக எம்.ஜி.ஆர். அவர்களால் நியமிக்கப்பட்டார். அண்ணா தி.மு.க. வின் தலைமை செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அவசரகால நிலை பிரகடணக் காலத்தில் (1976), எம்.ஜி.ஆர். அனைத்திந்திய அண்ணா தி.மு.க. என்று பெயரை மாற்றினார். அதை எதிர்த்து, கோவை செழியன், பெ.சீனிவாசன் போன்றோருடன் சேர்ந்து அண்ணா தி.மு.க. என்ற அமைப்பை சில காலம் தொடர்ந்து நடத்தினார். அந்த அமைப்பு தொடராமல் நின்றுவிட்டது.

1978-ல் தஞ்சாவூரில் நடந்த கழகப் பொதுக்கூட்டத்தில் கலைஞர் அவர்கள் முன்னிலையில் மீண்டும் தி.மு.க.வில் சேர்ந்தார்.

சில தடவைகள் அரசியல் போராட்டங்களுக்காக சிறை சென்றிருக்கிறார்.

பாரதியார் மீது கொண்ட ஈடுபாட்டால், தஞ்சை இராமமூர்த்தி அவர்களோடு சேர்ந்து 'பாரதி சங்கம்' என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார். இன்றளவும் அது நடைபெற்று வருகிறது. இந்த பாரதி சங்கம் என்ற அமைப்பின் மூலமாக 'சேக்கிழாரடிப்பொடி' தி.ந.இராமச்சந்திரன் மற்றும் சித்திரு ப.அருள்நமச்சிவாயம் ஆகியோரோடு சேர்ந்து 1986 முதல் 'தமிழ் மூதறிஞர் வாழ்வும் - வாக்கும்' என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவுகள் ஒவ்வொரு மாதமும் நடத்திவந்தார். 2010-ல் பாரதிக்கென்று ஒரு இணையதளம் www.mahakavibharathiyar.info அவரால் உருவாக்கப்பட்டு இயங்கி வருகிறது.

டாக்டர் அண்ணா பரிமளம் அவர்களோடு சேர்ந்து அண்ணா பேரவை என்ற அமைப்பைத் தொடங்கி அதன் தலைவராக இருந்து செயல்பட்டு வந்தார். அண்ணாவுக்கென்று www.arignaranna.net என்று டாக்டர் அண்ணா பரிமளம் அவரால் தொடங்கப்பட்ட இணையதளத்தை அவரது மறைவுக்குப் பிறகு தொடர்ந்து நடைபெற வகைசெய்தார். அது இப்போதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

1973 முதல் காந்தியம் பயிலத் தொடங்கி, காந்தியக் கொள்கைகளை மக்களுக்குப் பரப்புதற்காக 'காந்தி இயக்கம்' என்ற ஒரு அமைப்பை நடத்தி வந்தார். காந்தியைப் பற்றி தமிழில் மக்கள் அறியும் வண்ணம் www.mahatmagandhiintamil.info என்ற ஒரு இணையதளத்தைத் தொடங்கினார்.

தற்போது 'காந்தி இயக்கம்', 'பாரதி சங்கம்', 'அண்ணா பேரவை' ஆகிய மூன்று அமைப்புகளும் தொடர்ந்து வெற்றிகரமாக நடந்து வருகிறது.

இந்த மூவருடைய கருத்துக்களை பரப்புவதற்காக பல்வேறு கூட்டங்களில் பங்குபெற்று சொற்பொழிவாற்றி வந்தார். கூட்டங்கள் நடத்தினார். கருத்தரங்குகள், பாராட்டு விழாக்கள் நடத்தி வந்தார்.

தமிழ் மொழி, பண்பாடு வளர்ச்சிக்காக, 'அறிஞர் அண்ணா அறக்கட்டளை'யை உருவாக்கியுள்ளார்.
வழக்குரைஞர் தொழிலில் இருந்து வந்தார். உயர் நீதிமன்றங்களுக்கும் போய் வழக்குகள் நடத்தி வந்தார்.

1966ஆம் ஆண்டு கற்பகவல்லியை திருமணம் செய்துகொண்டார். இரண்டு மகன்கள் செம்பியன், சேரலாதன்; இரண்டு மகள்கள் மைதிலி, ரேணுகா தேவி. அனைவருக்கும் திருமணமாகி குழந்தைகளுடன் இருக்கின்றனர்.

மனைவி, மக்கள் , பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியோடு வெற்றிகரமான இல்லற வாழ்வை நடத்தி வந்தார்.

காலத்தின் கட்டாயத்தால் 12.10.2014 ஞாயிறு அன்று காலை 8.30 மணிக்கு வீ.எஸ்.ஆர். என்று அன்போடு அழைக்கப்பட்ட வீ.சு.இராமலிங்கம் அவர்கள் இயற்கை எய்தினார்.