சிறப்புக் கட்டுரைகள்

அன்று போட்ட தடை
கே. ஜி. இராதாமணாளன்

அனுமதிக்க முடியாது என்றால் முடியாதுதான்! கல்லூரியின் முதல்வர் கண்டிப்போடு கூறிவிட்டார்.

அதற்கு மேல் அவரிடம் எப்படிப் பேசுவதென்று புரியாமல் திகைத்து நின்றோம். எத்தகைய எதிர்ப்பு இருந்தாலும், என்ன இடுக்கண் நேரிட்டாலும், முன் வைத்த காலைப் பின் வைக்கக் கூடாதென்ற உறுதி மட்டும், எங்களிடம் குன்றவில்லை.

ஆங்கிலப் பேராசிரியர் ஒருவர் எங்களைத் தட்டித் தந்து, விடாதீர்கள்! பார்த்துவிடலாம் ஒரு கை! என்று அடிக்கடி உற்சாகமூட்டிக் கொண்டிருந்தார்.

தமிழாசிரியர்களில் பலர் எங்களைக் கண்டாலே முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். சிலர் மட்டும் பேசினார்கள் - சுற்று முற்றும் பார்த்துக்கொண்டு - சிறிது அனுதாபத்தோடு! மீண்டும் தமிழ்த் துறைத் தலைவரைச் சந்திப்பதென்று முடிவு செய்து நாங்கள் சென்றோம்.

ஐயா! உங்கள் மாணவர் அல்லவா அவர்? அவர் படித்த கல்லூரியிலேயே அவர் வந்து பேசுவதற்குத் தடை விதிப்பதா? கல்லூரி முதல்வரிடம் நீங்கள் கொஞ்சம் சொல்லக் கூடாதா?
நெஞ்சு நெக்குருகக் கேட்டோம், அந்தத் தமிழ்ப் பேராசிரியரிடம்.

ஆகட்டும் சொல்லிப் பார்க்கிறேன்! என்று அவர் பிடியிலிருந்து நழுவப் பார்த்தாரே அன்றி, பிடி கொடுத்துப் பேசவில்லை.

எக்காளச் சிரிப்புச் சிரிக்க வேண்டிய காங்கிரஸ் மாணவர்கள் - சிரிக்கவில்லை - ஓரளவு அனுதாபத்தோடே எங்களிடம் நடந்துகொண்டார்கள்.

வரக்கூடாது என்றார்கள். வரவிடமாட்டோம் என்று கொக்கரித்தார்கள். பேசக்கூடாது என்றார்கள். பேச அனுமதிக்கமாட்டோம் என்று விழிகளைப் பெரிதாக்கிக் காட்டினார்கள்.

ஆமாம், அறிஞர் அண்ணாவுக்குத்தான் அந்த எதிர்ப்பு - அந்தத் தடை!

ஏ தாழ்ந்த தமிழகமே! என்று இருபது ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா அம்மேடைகளில் விளித்துப் பேசுவது வழக்கம். என்னை ஈன்ற தமிழகமே! நீ வீழ்ந்தது ஏன்? என்று அப்பொழுதெல்லாம் சோக ரசத்தைக் கலந்தளிப்பார்.

அத்தகைய புகையிருள் மண்டிக்கிடந்த தமிழ் நிலத்தை, எப்படித் தம் அறிவாற்றலாலும். அயராத உழைப்பாலும் நம் அண்ணா மாற்றி - புத்தொளியும் புதுமணமும் பரவச் செய்துவிட்டார் என்று எண்ணிப் பார்த்துப் பூரித்துப்போனேன்.

அந்தப் பூரிப்பில் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அந்த நிகழ்ச்சி. என் மனக்கண்முன் திரைப்படம் பார்த்துப் பூரித்துப்போனேன்.

அந்தப் பூரிப்பில் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அந்த நிகழ்ச்சி. என் மனக்கண்முன் திரைப்படம் போல ஓடத் தொடங்கிற்று.

அப்பொழுது நான் பச்சையப்பன் கல்லூரியில் இண்டர் மீடியட் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். என் மதிப்புக்குரிய நண்பர் ஏ.பி.ஜனார்த்தனம் எம்.எல்.சி அவர்கள் எம்.ஏ. வகுப்பில் படித்துக்கொண்டிருந்தார். தி.மு.க. உதயமாவதற்கு முற்பட்ட காலம் அது. திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அப்பொழுது அந்தக் கல்லூரியில் நாங்கள் பத்துப் பதின்மர் மட்டுமே இருந்தோம்!

பெரியார் வருகிறார் என்றால், அண்ணா பேசுகிறார் என்றால் அந்தக் கூட்டம் சென்னையில் எந்த மூலையிலிருந்தாலும் செல்லத் தவறுவதில்லை.

கிருத்துவக் கல்லூரியில் அண்ணா பேசுகிறார் என்று கேள்விப்பட்டு ஒரு நாள் மாலை நாங்கள் சென்றோம். அன்று அண்ணா பேசவில்லை. கூட்டம் நடக்காமல் தடுத்து நிறத்திவிட்டிருந்தார்கள்.

அண்ணாத்துரை மிகவும் பயங்கரவாதி. மதவிரோதி அவர் பேச்சைக் கேட்டால் மாணவர்கள் கெட்டு நாசமாகிவிடுவார்கள்! என்று தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் முதல்வரிடம் சொல்ல அண்ணாவை அழைத்துக் கூட்டம் நடத்தக்கூடாதென்று அவர் தலை விதித்து விட்டதாகக் கூறினார்கள்.

நம் அண்ணாவுக்குத் தடையா? நாம் எல்லாம் இந்தக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தால் இந்த முதல்வரை வானத்தில் தூக்கியெறிந்து காற்றாடி விட்டிருக்கலாமே! என்று திரும்பும் வழியில் நாங்கள் கொதித்துப்பேசிகொண்டு வந்தோம்.

மறுநாள் எங்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருக்கிறது என்பது அப்பொழுது எங்களுக்குத் தெரியாது. பி.ஏ. வகுப்பில் படித்துக் கொண்டிருந்த வேலூர் நண்பர் இராதாகாந்தன் என் அறைக்கு ஓடோடி வந்தார். அவர் சொன்ன செய்தியைக் கேட்டு நான் கொதிக்கவில்லை, திகைத்து நின்றேன்!

பச்சையப்பன் கல்லூரியின் தமிழ் மன்றத்தில் பேச அண்ணாவை அழைத்தோம். அவரும் இசைந்து தேதி தந்திருந்தார். கிருத்துவக் கல்லூரி கூட்டம் ரத்தாகவே, பச்சையப்பன் கல்லூரியிலும் அவரை நுழையவிடக்கூடாது என்று சில தமிழாசிரியர்களும் கல்லூரி தர்மகர்த்தாக் குழுவின் முக்கிய உறுப்பினர்களும் கலந்துபேசி, கல்லூரி முதல்வர் டாக்டர் பி.வி.நாராயணசாமி நாயுடு அவர்களிடம் சொல்லிவிட்டிருக்கிறார்கள் என்றார்.

டாக்டர் நாயுடு அவர்கள் பொருளாதாரம் பற்றிய நூல்கள் எழுதியவர். இன்றும் பல்கலைக் கழகங்களில் அவரது நூல்கள் பாடப்புத்தகங்களாக இருக்கின்றன, அவர் மிகவும் நல்லவர். மாணவர்களிடம் மிகுந்த அன்போடு பழகுவார், பெருந்தன்மையானவர். தர்மகர்த்தாக் குழு உறுப்பினர்கள் சொல்லும் போது, அதைத் தட்டி நடக்க அவரால் முடியுமா? தமிழ் மன்றச் செயலாளரை அழைத்து அண்ணாவின் கூட்டத்தை ரத்து செய்யும்படிக் கூறிவிட்டார்.

முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது, பெரியார் படையின் நிழலில் வந்து ஒதுங்கிய தமிழாசிரியர்கள் - சிறிது காலத்தில் உறவை முறித்துக்கொண்டார்கள்.

பெரிய புராண எதிர்ப்பு - கம்பராமாயண எதிர்ப்பு - என்று பெரியார் பேசத் தொடங்கியதும், அவர்கள் நம்மை விட்டு விட்டு ஓடிவிட்டார்கள். பக்தி ஏடுகளில் இலக்கியச் சுவடிகளில் கைவைக்கும் கயவர்கள் - மாபாவிகள் - என்று தூற்றத் தொடங்கினார்.

பெரியாரின் முரட்டுத்தனமான தாக்குதலைக் கூடப் புலவர் பெருமக்கள் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. அறிஞர் அண்ணா அவர்களைத்தான் அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அந்த ஏடுகளிலிருந்து பக்தி ரசம், இலக்கிய நயம், நீதி நெறிகளின் சிறப்பு பற்றி புலவர்கள் எவ்வாறு எடுத்துக் கூறினார்களோ - அதே பாணியில் இதுவா பக்தி ரசம் இதிலென்ன இலக்கிய நயம் கொஞ்சுகிறது என்று, பதவுரை பொழிப்புரையோடு அலசி அலசிக்காட்டி அண்ணா எழுதவும் பேசவும் தொடங்கினார். கம்ப ரசத்தை அவர் பிழிந்தளித்த காலம் அது, ஆகவே அண்ணா என்றால், மதவெறி, ஜாதி வெறி பிடித்தவர்களுக்கும் - இலக்கியத்தின் தவறான ரசனையில் தம்மை மூழ்கடித்துக்கொண்ட தமிழாசிரியர்களுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தது. இந்தக் காரணத்தினால்தான் அன்று கல்லூரிகளில் அண்ணாவை நுழையக் கூடாதென்று தடுத்து நிறுத்தினார்கள்.

கூட்டத்தை ரத்து செய்யும்படி முதல்வர் கூறியதை நண்பர் வந்து சொன்னதும், நாங்கள் நான்கைந்து பே.ர் கூடி என்ன செய்வதென்று வழிகாண, ஹாஸ்டலுக்குள்ளிருந்த நாங்கள், நிறைந்த பலாமரம் ஒன்றின் நிழலில் உட்கார்ந்து யோசித்தோம்.

அப்போது ஹாஸ்டல் வார்டனாக ஆங்கிலப் பேராசிரியர் எம்.வரதராசன் அவர்கள் இருந்தார். அவர் அண்ணாவுக்கும் ஆங்கில ஆரியராக இருந்தவர். அண்ணா மீது பெரும் பற்றும் நிறை அன்பும், அவர் வளர்ச்சியில் தனி அக்கறையும் ஆசையும் கொண்டவர். அந்தப் பெருந்தகை இன்று இல்லை. இருந்திருந்தால் ஆட்சி பீடத்தில் அண்ணா கொலு வீற்றிருப்பதைக் கண்டு கள்ளமில்லாத் தம் உள்ளமெல்லாம் பூரித்துப்போயிருப்பார். கருத்த தடித்த உருவமும், கனத்த குரலும், சூடான பார்வையும், விழிப்பான போக்கும் கொண்ட அந்தப் பேராசிரியரிடம் கல்லூரி முதல்வரிலிருந்து எல்லோருக்குமே நடுக்கம்தான். பிறர் அஞ்சும்படி வாழ்ந்தார் - அவர் யாருக்கும் அஞ்சியதில்லை. அவரிடம் மிகவும் நெருங்கிப் பழகியவன் நான். கல்லூரியில் படிக்கும் கொஞ்சம் முரட்டுச் சுபாவம் கொண்ட மாணவர்கள் எல்லாம், அனேகமாக அவரது சிஷ்யப்பிள்ளைகளாகி விடுவார்கள்.

பேராசிரியர் வரதராசன் அவர்களிடம் நடந்ததைக் கூறலாம் என்று அவர் விடுதிக்குச் சென்றோம். எங்கள் சோகக் குரலைக்கேட்டு, அவர் புருவத்தை நெறித்தார். ஏன் வரக் கூடாதாம்? பார்க்கலாம்! என்று அழுத்தமான குரலில் கூறினார்.

அண்ணா எப்படியும் வந்தாக வேண்டும் - நீங்கள்தான் வழிசெய்ய வேண்டும்! என்று பரிதாபமாக நாங்கள் கேட்டோம்.

கல்லூரி முதல்வர் மட்டுமே அந்தத் தடையில் சம்பந்தப்பட்டிருந்தால், அவரால் எளிதில் அதைச் சரி செய்து விட்டிருக்க முடியும். முதல்வரை முன்னே நிறுத்தி பின்னணியில் முக்கியமானவர்கள் இருந்ததால், பேராசிரியரால் நேருக்குநேர் நின்று நிலைமையை மாற்ற முடியவில்லை. நாங்கள் எங்கே தளர்ந்து விடுகிறோமோ என்று அடிக்கடி எங்களை உற்சாகப் படுத்திக் கொண்டே இருந்தார்.

அன்றே நானும், மற்றொரு மாணவரும் அண்ணாவைச் சந்திக்கப் புறப்பட்டோம். அப்பொழுதெல்லாம் அண்ணா சென்னைக்கு வந்தால் ஜார்ஜ் டவுன் கருப்பண்ண முதலியார் தெருவிலிருந்த தம் மைத்துனரின் இல்லத்தில் தங்குவது வழக்கம்.

அண்ணாவிடம் நடந்ததைச் சொன்னோம். அந்த அடாத செயலுக்கு காரணமாக யார் யார் இருந்ததாகக் கேள்விப்பட்டோமோ, அவர்களின் பெயர்களை எல்லாம், அவர் எதிரில் கொட்டித் தீர்த்தோம். அவ்வளவையும் சின்னஞ்சிறு புன்னகையோடு அவர் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, போகட்டும்! என்று ஒரே வார்த்தையில் கடைசியாய் பதிலளித்தார்.

அதெல்லாம் முடியாது அண்ணா! நீங்கள் நம் கல்லூரியில் வந்து பேசியே ஆகவேண்டும்! அதுவும் குறிப்பிட்ட அதே தேதியில் வந்து பேசி ஆகவேண்டும்! எப்படி முடியாமல் போகிறது என்பதை நாங்கள் பார்த்து விடுகிறோம்! என்று துடிதுடிப்போடு நாங்கள் பேசினோம். வழி புலனாகாவிட்டாலும், முடிவு இப்படித்தான் இருக்கவேண்டுமென்று தீர்மானித்து, அந்தத் தீர்மானத்தைக் காட்டு வெள்ளமாக ஓட்டும் பருவம். மாணவ இரத்தத்துக்கே சொந்தமான துடிப்பும் துணிவும் அது.

அதன் பிறகு நாங்கள் தினசரி அண்ணாவைச் சந்தித்து, அன்று என்ன செய்தோம், யார் யாரைச் சந்தித்துப் பேசினோம், மாணவர்களில் ஆதரவை எப்படித் திரட்டி வருகிறோம் முதலிய விவரங்களைக் கூறி வந்தோம்.

தோழர் ஏ.பி.ஜனார்த்தனத்தை எங்கள் தலைவராகக் கருதி, நாங்கள் பெருமதிப்புக்கொடுத்து வந்தோம். கல்லூரிக் கூட்டங்களில் நம் இயக்கத்தின் சார்பில் அவர் வாதாடுவார். அந்த அளவோடு அவரை நிறுத்தினால்தான் மதிப்பு என்று அவரை நிறுத்திவிட்டு - மற்ற - ஓடி ஆடிச் செய்யும் வேலைகளை நாங்கள் கவனித்துக்கொள்வோம்.

பேராசிரியர் வரதராசன் அவர்களை அழைத்துக்கொண்டு நாங்கள் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் கந்தசாமி முதலியார் அவர்களிடம் சென்றோம். அந்த முதுபெரும் பேராசிரியர் நம் அண்ணாவுக்கும் பாடம் சொல்லித் தந்தவர், அவர் கேட்டால், முதல்வர் தட்டமாட்டார் என்பது எங்களுக்குத் தெரியும். அவரோடு பேராசிரியர் வரதராசன் வாதிட்டார். கடைசியில் கடுமையாகவே சில வார்த்தைகளைச் சொல்லிவிட்டு வந்துவிட்டார். பேராசிரியர் கச்தசாமி முதலியார் பரிதாபமான நிலையில் இருந்தார். அஞ்சவேண்டியவர்களுக்கு அஞ்சி, பாசம் காட்டவேண்டியவர் மீது பாசம் காட்ட முடியாமல் தவித்தார்.

மாணவர்களை எங்கள் பக்கம் இழுக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டோம். காங்கிரஸ் மாணவர்கள் எங்களோடு சேர்ந்து விடவில்லை என்றாலும், எங்கள் முயற்சிக்குக் குறுக்கே விழுந்து வழியை மறைக்கவில்லை. கல்லூரி மேலிடத்தோடு மாணவர்களில் ஒரு சாரார் ஒர் இலட்சியத்துக்காகப் போராடும் போது, அந்த இலட்சியத்தை ஏற்றுக்கொள்ளாத மற்றொரு சாரார் - மாணவர்கள் துரோகிகளாக மாறுவது கிடையாது. அது பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கே உரிய தனிச் சிறப்பாகும்!

மாணவர்களில் கட்சி சார்பற்றவர்களே பெரும் பகுதியினர். அவர்களின் ஒத்துழைப்பைப் பெற பெரும் முயற்சி எடுத்துக் கொண்டோம். பேராசிரியர் வரதசாசன் எங்கள் பக்கமிருந்ததால், அந்த முயற்சி எங்களுக்கு எளிதாக இருந்தது.

எதிரி நடுங்கினால்தான், நம்மால் காரியத்தைச் சாதிக்க முடியும் என்று நினைத்தோம். இன்னும் இரண்டு நாட்களில் அண்ணா வர அனுமதியளிக்காவிட்டால் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக வதந்தியைப் பரவ விட்டோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு நண்பர் (அவர் பெயர் நினைவில்லை - உருவம் மட்டும் என் மனதில் நன்றாகப் பதிந்திருககிறது) ஒரு யோசனை கூறினார். நாங்கள் மறுத்தும், அவர் அதைச் செயல்படுத்தியே விட்டார்.

அது தரக்குறைவான தகாத செயல்தான். மற்றவர்கள் பின்பற்றக் கூடாத செயல்தான். ஆனால் அந்த நண்பர் எதிர்பார்த்த - எங்களிடம் வாதாடிச் சொன்ன - பயனை மிக எளிதில் அது அளித்துவிட்டதாக அப்போது கருதினோம்.

அண்ணாவின் வரவை எதிர்த்தவர்கள் பகிரங்கமாக எதிரில் வந்து எதிர்க்கத் துணிவில்லாமல் இருந்தனர். கல்லூரி முதல்வரின் தலையில் பழியைப் போட்டுவிட்டு தாங்கள் திரைமறைவிலிருந்தபடியே எண்ணத்தை ஈடேற்றிக்கொள்ள நினைத்தனர். அப்படிப் பட்டவர்களை அம்பலப்படுத்த வேண்டுமென்ற ஆவேசம் அந்த நண்பருக்கு.

தர்ம கர்த்தாக் குழுவின் பெரும் புள்ளி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு அண்ணாவுக்குத் தடை விதிக்கச் செய்யாதே - அவரை வரவிடு - என்ற முடிறயில் அமைந்த வாசகங்களைக் கல்லூரிச் சுவர்களில் ஓர் இரவில் அவர் எழுதிவிட்டார்.

வேலை நிறுத்தம் செய்யப் போவதாகப் பயமுறுத்தியதாலா - பெரும் புள்ளியின் பெயர் சுவர்களில் அவமானமாக ஏறி நின்றதன் பயனாலா - எதனால் என்பது எங்களுக்குச் சரியாகத் தெரியாது. கல்லூரி முதல்வர் மன்றச் செயலாளரை அழைத்து, அண்ணா பேச அனுமதி தந்துவிட்டார்!

கூட்டம் நடைபெறவிருந்தது. அன்று பிற்பகல் நானும் மற்றொரு மாணவரும் அண்ணாவை அழைத்துவர, கருப்பண்ண முதலித் தெருவுக்குச் சென்றுவிட்டோம்.

அப்பொழுதெல்லாம் நமக்கெனத் தனி வண்டி வாகனம் கிடையாது. அந்தச் சுகத்தை எண்ணிக் கூடப் பார்க்க முடியாத நிலை. ஆகவே அண்ணாவைக் கால் நடையாகவே பிராட்வே சாலை முனைக்கு அழைத்து வந்தோம். அங்குள்ள ஒரு ஓட்டலில் காப்பி சாப்பிட்டுவிட்டு கோட்டை நிலையத்தை மின்சார ரயிலில் ஏறி சேத்துப்பட்டில் வந்து இறங்கினோம்.

அண்ணா பின்னால் வர நாங்கள் வெற்றி வீரர்களாக முன்னால் வீரநடை போட்டுச் சென்றோம். அப்பொழுது எங்களுக்கு ஏற்பட்ட பெருமை, பெருமிதம், எக்களிப்பு . . . அப்பப்பா, அளவிட்டு சொல்ல முடியாது!

காங்கிரஸ் கட்சியின் முக்கிய பேச்சாளராகவும், தமிழ் மன்ற மாணவத் தலைவராகவும் இருந்த திரு.ஆர்.குழந்தைவேலு (இப்பொழுது கதர் போர்டு டைரக்டராக இருக்கிறார்) தலைமையில் அன்றைய கூட்டம் நடந்தது. நாடும் ஏடும் என்ற தலைப்பில் அண்ணாவின் வாயிலிருந்து தேனாறு பாய்ந்தது. பின்னர் அந்தப் பேச்சு அதே தலைப்பில் நூல் வடிவில் வந்து பட்டி தொட்டிகளில் எல்லாம் பரவியது பலருக்கு நினைவிருக்கலாம்.

எங்கள் கல்லூரிக்கு அண்ணா வந்ததைச் சுட்டிக்காட்டி, கிருத்துவக் கல்லூரி மாணவர்கள் முதல்வரிடம் அனுமதி பெற்றனர். நல்ல தீர்ப்பு என்ற தலைப்பில் அங்கே அண்ணா பேசினார். அந்தப் பேச்சும் ஏடுவடிவில் வந்தது எல்லோர் கரங்களிலும் தவழ்ந்தது. அதன் பிறகே பல கல்லூரிகளிலும் அண்ணாவின் சொற்பொழிவுகள் நிகழ்ந்தன.

இந்த முறையில் அண்ணா அவர்கள் கல்லூரிகளில் வெற்றிப் பவனிவர வழிகோலி விட்டவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களே ஆவார்கள். அந்த தனித் தன்மை - பெருமை பாரம்பரியம் - அவர்களுக்கு என்றென்னும் நிலைத்து நிற்கும். அதன் முத்திரையே அண்மையில் அங்கே நடந்த அண்ணாவின் திருவுருவப்படத் திறப்பு விழா ஆகும்!

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Chennai, Tamil Nadu.