அண்ணாவும் கம்பரசமும்
சு. சக்திவேலு
முதுகலைத் தமிழாசிரியர்,
சச்சிதானந்த ஜோதி நிகேதன்,
கல்லாறு, மேட்டுப்பாளையம்

இலக்கிய வடிவங்கள்
இலக்கிய வடிவங்கள் பல வகைப்படும். கடித இலக்கியம், கட்டுரை இலக்கியம், கவிதை இலக்கியம், கதை இலக்கியம், குறும்புதின இலக்கியம், புதின இலக்கியம், நாடக இலக்கியம், திரைப்பட உரையாடல் இலக்கியம், திறனாய்வு இலக்கியம், சொற்சித்திர இலக்கியம், சொற்பொழிவு இலக்கியம் என இதனை வகைப்படுத்துவர். பேரறிஞர் அண்ணா மேற்கூறிய அனைத்து இலக்கியங்களையும் படைத்துத் தன் பேராற்றலை வெளிப்படுத்தி இருக்கிறார்.

1930இல் தொடங்கி 1970 வரை உள்ள 40 ஆண்டுகளை அண்ணாவின் சகாப்தம் என்பர். “எழுத்தால், பேச்சால், அரசியல் மாற்றங்களால் பெரும் பங்களிப்பைச் செய்தவர் அண்ணா. தமிழ் மேடையை, தமிழ் உரைநடையை வளர்த்த அண்ணா தமிழ் நெஞ்சங்களில் என்றும் நிலைத்து நிற்பார். அண்ணாவின் படைப்புகளே அவருக்கு என்றும் நின்று நிலவும் நினைவுச் சின்னங்கள்.

கம்பனின் பெருமை
தமிழ் இலக்கிய உலகில் கம்பனுக்குத் தனித்த இடம் உண்டு. தமிழுக்குக் ‘கதி’ போன்றவர்கள் என்று கம்பனையும் திருவள்ளுவரையும் தமிழ்ச் சான்றோர் புகழ்ந்துரைக்கின்றனர். “யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை” எனப் பாரதியாராலும், “கம்ப நாடன் கவிதையிற்போல் கற்றோர்க்கு இதயம் களியாதே” எனத் தமிழ்ச் சான்றோர் பெருமக்களாலும் பாராட்டப்படுபவர் கம்பர்.

தமிழின் காப்பிய வளர்ச்சி கம்பரின் படைப்பில் உச்ச நிலை அடைவதாக அவருடைய இராமாவதாரம் பாராட்டப்படுகிறது. உலகப் பெரும் இலக்கியங்களோடு ஒப்ப வைத்து எண்ணும் தகுதி உடையது கம்ப ராமாயணம் எனக் கற்றோர் அதனைப் பாராட்டுகின்றனர்.

கம்பரசம்
இவ்வாறு பலர் புகழும் கம்பரின் படைப்பிலே காமரசம் அளவுக்கு விஞ்சிக் காணப்படுவதாகக் குற்றம் கூறும் துணிவு பேரறிஞர் அண்ணாவிற்கு மட்டுமே உண்டு. அவர் கம்பன் இராம காதையைக் கூறும்போதும் இந்தக் காமரசத்தில் கவனம் செலுத்துவதாகக் கூறுகிறார்.

தமிழர்கள் இராமாயணத்தைப் புனிதமான நூலாக எண்ணி அதனைப் படித்தாலும் படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும் புண்ணியம் என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது அந்த நூலில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டிச் சாடும் துணிவு வேறு யாருக்கும் வராது. அண்ணாவின் நூலைப் படிக்கும்போது நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று இறைவனிடம் வாதிட்ட நற்றமிழ்ப் புலவர் நக்கீரரே நம் நினைவிற்கு வருகிறார்.

அயோத்தி மக்களின் அநாகரிகம்
அயோத்தியில் பிறந்த மக்கள் அனைவரும் ஒழுக்க சீலர்களாக இருப்பர் என்பதுதான் நம் எண்ணம். ஆனால் பெண்களைக் காமக் கண் கொண்டு கண்டு களிக்கும் கசடர்களாக அவர்கள் இருந்தார்கள் என்பது அண்ணாவின் குற்றச்சாட்டு. தசரதன் இறந்து விட்டான் என்ற செய்தியைக் கேட்டுத் துன்புற்ற பரதன், அண்ணன் ஆரண்யம் சென்றான் என்ற செய்தியினால் மேலும் வெகுண்டு அவனை மீண்டும் அழைத்து வரச் செல்கிறான். அப்போது அவனுடன் அரச பிரதானியினரும், படையினரும் உடன் செல்கின்றனர். அந்தத் துக்கமான நேரத்திலும் கூட பரதனுடன் செல்லும் வீரர்கள் தங்கள் உடம் வரும் பெண்கள் மீது நீர்த்திவலைகள் படுவதால் வெளியே தெரியும் அவர்களுடைய உடலழகைக் கண்டு தங்கள் மனச் சோர்வு நீங்கப் பெற்றனர் என்கிறார் கம்பர்.

கம்ப ராமாயணம் குகப் படலம் 56ஆவது செய்யுளை எடுத்துக் கூறி அண்ணா கடவுளின் கதையிலே இத்தகைய காமரசம் தேவையா எனக் கேட்கிறார். “எப்படி இருக்கிறது தோழர்களே, அயோத்தி மக்களின் அறிவு! ஓடத்தில் உடனிருக்கும் மாதரின் ஆடை நனைந்து மறைவிடம் வெளியே தெரிய வந்து சோகம் நீங்கினராம்! என்ன மாண்பு! எவ்வளவு அறிவு! எத்தகைய யோக்கியர்களப்பா இவர்கள்?” என்று கூறும் அண்ணாவின் கோபத்தில் உள்ள நியாயத்தை மறுக்க இயலாது.

சொர்க்க பூமியா? போக பூமியா?
பரதனும் அவன் படையினரும் பரத்துவாச முனிவரின் ஆசிரமத்திற்கு வருகின்றனர். அவர்களை உபசரிக்க எண்ணிய முனிவர் தம் தவ வலிமையால் சொர்க்க லோகத்தை மண்ணுலகத்திற்கு வரவழைக்கிறார். திருவடி சூட்டுப் படலம் 6 மற்றும் 7ஆவது செய்யுட்களைக் கொண்டு இதனை உறுதி செய்யும் அண்ணா, அப்படலத்தில் வரும் 11ஆவது பாடலின் கருத்தை வைத்து முனிவரையும் சாடுகிறார். பரதனுடன் வந்த வீரர்களுக்குப் பரத்துவாசர் சிருஷ்டித்த சொர்க்கலோகத்தில் பெண்கள் காம விருந்தளிப்பது எவ்விதத்தில் நியாயம் என வினா எழுப்புகிறார்.

அஞ்சு அடுத்த அமளி, அலத்தகப்
பஞ்சு அடுத்த பரிபுரப் பல்லவ
நஞ்சு அடுத்த நயனியர், நவ்வியின்
துஞ்ச, அத்தனை மைந்தரும் துஞ்சினார்


என்ற பாடலின் பொருளை விளங்கக் கூறும் அண்ணா “சுவர்க்கத்திற்குத்தான் இது யோக்யதையா ரிஷிக்குத்தான் இது நியாயமா? வீரருக்கு இது அழகா? இந்தக் காட்சியைக் கடவுளின் திரு அவதாரக் கதையிலே புகுத்தியதற்குக் கம்பருக்குக் காமரசத்திலே இருந்த மட்டற்ற பாசமின்றி வேறு என்ன காரணங் கூற முடியும் கலா ரசிகர்களே! சற்றே தயை செய்து பதில் கூறுங்கள்!” என நம்மையே கேட்கிறார்.

பண்பாட்டை மீறும் இராமன்
அனுமனுக்குச் சீதையின் அடையாளம் கூறும் இராமன் பண்பாட்டை மீறி அவள் அங்கங்களை வரிவரியாக வருணிப்பதை அண்ணா கடுமையாகச் சாடுகிறார். “உலகிலே உள்ள எந்தப் பித்தனும் வெறியனுங் கூடத் தன் மனைவியின் கொங்கையையும், மறைவிடத்தையும் வேறொருவனிடம் வர்ணிக்க மாட்டான்” என்ற அண்ணாவின் குற்றச்சாட்டுக்கு அறிஞர் உலகம் பதில் கூறக் கடமைப்பட்டுள்ளது.

முதன்முதலில் மிதிலையில் சீதையை அரண்மனை மாடத்திலே கண்ட உடன் இராமன் அவள் மீது மையல் கொள்கிறான். சீதையும் தன் மனத்தில் இராமனையே இருத்திக் கொள்கிறாள். இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர் என்கிறார் கம்பர். ஆனால் அந்த முதல் பார்வையில் சீதையின் கண்கள் இராமனின் தோள்களை நோக்கிய போது இராமனின் கண்கள் அவள் தனங்களில் தைத்ததாகக் கம்பர் கூறுவது இராமனின் பெருமைக்கு உகந்ததல்ல என்கிறார் அண்ணா. மேலும் சித்திரக்கூடப் பருவத்திலே சீதையை வருணிக்கும் இராமன் அவளுடைய கொங்கை, அல்குல் ஆகியவற்றை வருணிப்பது பண்பாட்டுக்குரியதல்ல என்பது அண்ணாவின் வாதம்.

இராமனைக் கடவுளின் அவதாரமாகக் கருதும் பெரும்பாலோர் அவனை ஒப்புயர்வற்ற தலைவனாகக் காணவே விரும்புவர். அவன் கடவுளின் அவதாரமல்லன், ஓர் அரசிளங்குமரன் என்று கூறுவதையே அவர்களால் தாங்க முடியாது. ஆனால் கம்பர் படைத்துக் காட்டும் இராமன் பண்பாடு தெரியாதவன் என்று அண்ணா அடுக்கடுக்காகக் குற்றம் சாட்டும்போது அதற்கு உரிய மறுப்புக் கூறாது அண்ணா மேற்கோள் காட்டும் பல பாடல்கள் இடைச்செருகல் என்றும், அவை கம்பன் பாடியன அன்று என்றும் சமாதானம் கூறுகின்றனர். இது சரியான பதில் அல்ல என்று அண்ணா மறுத்துரைக்கிறார். மேலும் தமிழறிஞர் சிலர் ‘அல்குல்’ என்ற சொல்லுக்கு வேறு பொருளும் உள்ளது எனக் கூறுவதையும் அவர் மறுத்துக் கம்பர் அப்பொருள் வரும்படி பாடல்களைப் பாடவில்லை என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

கம்பர் தரும் காமரசம்
கம்ப ராமாயணத்திலே பல இடங்களில் கம்பர் வருணனை என்ற பெயரிலே அளவு கடந்து காமரசத்தையே தருகிறார் என அண்ணா இடித்துரைக்கிறார். இராமரின் பட்டாபிஷேகத்திற்காக அலங்கரிக்கப்பட்ட அயோத்தி நகரை வருணிக்கும் போதும் பெண்களின் அங்கங்களை அவற்றோடு ஒப்பிடுவது, (மந்தரை சூழ்ச்சிப் படலம்), தந்தையின் கட்டளைப்படி முடிதுறந்து செல்லும் இராமனைப் பின் தொடர்ந்து செல்லும் மகளிரைப் பற்றிக் கூறும் போது அவர்கள் கொங்கைகளையே வருணிப்பது (தைலமாட்டுப் படலம்), இராமன் வில்லை ஒடித்தான் என்ற செய்தியைக் கேட்டவுடன் ஆனந்தத்தால் சீதையின் அல்குல் வளர மேகலை அற்றுக் கீழே விழுந்ததாகக் கூறுவது (கார்முகப் படலம்), இராமன் ஆரண்யம் செல்வதைக் கண்டு அழும் பெண்களின் கண்ணீரைப் பற்றிக் கூறும் போது ‘அக்கண்ணீர் என்னும் ஆறு நெருங்கிய தனங்களாகிய மலைச் சிகரங்களினின்று நீங்க அல்குல் என்னும் கடலிடைப் புகுந்ததாகப் பாடியிருப்பது (நகர் நீங்கு படலம்), அயோத்தியின் அகழியை பெண்களின் அல்குலோடு ஒப்பிடுவது (நகரப் படலம்) எனப் பல இடங்களைச் சான்றாகக் காட்டி அண்ணா கம்பரின் காவியத்தில் காமரசம் மிகுந்து காணப்படுவதைத் தெளிவு படுத்துகிறார்.

மேலும் ஆங்கிலக் கவி டெனிசன், நைடதம் பாடிய அதிவீரராம பாண்டியன் மற்றும் வேதநாயகம் பிள்ளை இவர்களுடன் கம்பனை ஒப்பிட்டுக் கம்பன் தன் கவித் திறமையைக் காமரசத்தைப் பொழி
வதிலேயே காண்பித்திருப்பதாக அண்ணா கூறுவது அவருடைய பரந்துபட்ட இலக்கிய அறிவுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

இதனால்தான் “தமிழ்ப் பெருமக்களைத் தம் கூரிய எழுத்து முனையாலும், சீரிய பேச்சாலும் தட்டி எழுப்பிப் புதுநெறி காட்டிய புத்துலகச் சிற்பி” என அண்ணாவைப் புகழ்கின்றனர் அறிஞர் பெருமக்கள்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு


என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப கடவுள் கதையில் காமரசத்தைக் கலக்கக் கூடாது என அண்ணா கூறியிருப்பதை நாம் மறுத்துரைக்க முடியாது.


சு. சக்திவேலு

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Chennai, Tamil Nadu.