சிறப்புக் கட்டுரைகள்

அண்ணாவின் பண்புநலன்கள்
ப. வளர்மதி
தமிழ் விரிவுரையாளர், ஜமால் முகமது கல்லூரி, திருச்சி - 20.

‘முகத்தில் புன்னகையும், அகத்தில் நம்பிக்கையும், செய்கையில் சுத்தமும், சிந்தனையில் தன்னலம் கருதாத் தன்மையுமிருந்தால் போதுமானது என்று பிறருக்கு அறிவுறுத்தியதோடு தானும் அவ்வாறே வாழ்ந்தவர் அறிஞர் அண்ணா! அவரது சரித்திரம் மனிதர்களுக்கு நல்லதோர் வழிகாட்டி. அவரது பண்புநலன்களைப் பட்டியலிடப் பக்கங்கள் போதா! ஒரு சில பண்பு நலன்கள் இவண் முன் வைக்கப்படுகின்றது.

சொல்வன்மை மிக்கவர்

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல் (643)

என்றார் வள்ளுவப் பெருந்தகை! கேட்பவர்கள் மனத்தைப் பிணிக்கும் வகையிலும், கேட்காதவர்களும், ஐயோ... கேட்கவில்லையே! எவ்வாறாவது கேட்க வேண்டுமே என்ற ஆவலைத் தூண்டும் வகையில் பேசுவதில் அண்ணா தலைசிறந்தவர்.

தொடக்க காலத்தில் ராமாயணம் பற்றி அண்ணா, நாவலர் சோமசுந்தர பாரதியாருடன் வாக்குவாதம் நடத்தியபோது அன்று தலைமை வகித்தவர் வாக்குவாதம் செய்யும் இருவரையும் அறிமுகப்படுத்தினார். “இரண்டு பேராசிரியர்கள் இன்று மோத இருக்கிறார்கள்” என்று கூறியதும், அண்ணா எழுந்து “தலைவர் அவர்கள் இரு பேராசிரியர்கள் பேசுவார்கள் என்று கூறியது சரியல்ல ஒரு பேராசிரியர் வந்திருக்கிறார். அவருடன் வாதம் செய்ய மாணவன் வந்திருக்கிறேன். நான் நாவலரின் கருத்தை மறுப்பவனே தவிர, அவரது வயதை - அறிவை - மதிக்கத் தகுந்த வாழ்வை, மறுப்பவன் அல்ல” என்று கூறிய போது நெகிழ்ந்தது நாவலர் மட்டுமல்ல! கேட்பவர் அனைவரது உள்ளங்களும் தான்! (ப.91, அண்ணா-100)

டெல்லி ராஜ்ய சபை உறுப்பினர் ஆனதும் அண்ணா ஆங்கிலத்தில் அழகாகச் சொற்பொழிவாற்றினார். ராஜ்ய சபை உறுப்பினர்கள் கேட்டார்கள். பகல் உணவு சாப்பிடும் நேரத்தையும் மறந்து அண்ணாவின் சொல்விருந்தை ரசித்தார்கள். அண்ணாவின் சொல்லாட்சியும் பேச்சில் இருந்த கருத்துச் செறிவும், எடுப்பான குரலில் மிடுக்காக முழங்கிய விதமும் அனைவரையும் கவர்ந்தது.

இடைவேளைக்குரிய நேரம் வந்தபோதும் அவரது பேச்சு நிறுத்தப்படவில்லை. அவையில் இருப்போர் எழுந்து செல்லவும் இல்லை. தொடர்ந்து பேசத் தற்காலிக அவைத்தலைவர் திருமதி. வயலட் ஆல்வா அனுமதித்திருக்கிறார். இதற்கு முன் இப்படி யாரும் அங்குப் பேசியதில்லை என்று ஆச்சரியப்படும்படி அண்ணாவின் பேச்சு அமைந்திருந்தது.

பெருந்தன்மைமிக்கவர்
கலைஞரின் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்த ஏ.வி. பீர்கண்ணு என்பவர், தனக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு நீங்கள் தான் பெயர் சூட்ட வேண்டும் என்று அண்ணாவிடம் கேட்ட போது ‘தமிழ்க்கனி’ என்று பெயர் சூட்டியதோடு பீர்கண்ணுவின் பொருளாதார நிலையைக் கேள்வியுற்று, ஒருநாள் அவரை நேரே அழைத்து, தான் உபயோகித்து வந்த எம்.டி.டி. 1061 என்ற தன்னுடைய காரை நீயே வைத்துக்கொள் என்று தாராள மனத்துடன் தந்ததோடு நின்றுவிடாது. அண்ணாவின் காரை பீர்க்கண்ணு இனாமாக வாங்கிக் கொண்டான் என்று பிறர் பேசுவதைத் தவிர்க்க, ஒரு குறிப்பிட்ட தொகைக்குக் காரைப் பீர்கண்ணுவிடம் விற்றதாக அண்ணா தனது கைப்பட ரசீது போட்டுத் தந்திருக்கிறார். (ப.30-31). “தனக்கென வாழாது பிறர்க்கென வாழுநர் இருப்பதால் தான் உலகம் இன்னும் அழியாது நிலைத்திருக்கிறது” என்ற இளம் பெருவழுதியின் பாட்டு இவண் எண்ணற்பாலது!

திராவிடர் கழகத்தில் இருந்த முக்கியச் சொற்பொழிவாளர் பட்டுக்கோட்டை அழகிரி. அண்ணா அழகிரியைப் பாசமோடு அண்ணன் என்று அழைத்தாலும் அழகிரிக்கு ஏனோ அண்ணாமீது கசப்பு. காசநோயால் பாதிக்கப்பட்டு, தாம்பரம் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அழகிரி ஆதரவற்ற நிலையில் அரவணைப்பார் யாருமின்றிப் போராடிக் கொண்டிருக்கிறார் என்பதை அண்ணா செவியுற்றதும் உதவத் துடிக்கிறார். பெரியார் உதவ வேண்டாம் என்று மறுக்கிறார். துணிந்து முடிவெடுத்த அண்ணா ‘சந்திரோதயம்’ நாடக வசூல் பணத்தை மதியழகன் மூலம் கொடுத்தனுப்பினார். அதைப் பெற்றுக் கொண்ட அழகிரி “நான் நம்பியவர்கள் எல்லாரும் என்னைக் கைவிட்டனர். யாரை ஆவேசமாகத் திட்டித் தீர்த்தேனோ அவர் எனக்கு உதவுகிறார் மதியழகா! அண்ணாவுக்கு என் நன்றியைச் சொல்லப்பா” என்றார்.

அத்தோடு தனது உதவியை நிறுத்தாத அண்ணா, தம்மைக் கூட்டங்களுக்கு அழைக்கும் கழகத் தோழர்களிடம் அழகிரி பெயருக்கு ரூ. 100 பண விடை அனுப்பிவிட்டு அதற்குரிய சான்றைக் காட்டினால் கூட்டத்திற்குத் தேதி கொடுப்பேன் என்றார். “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்” (314) என்ற வள்ளுவர் வாய்மொழியை அண்ணா வாழ்வில் தலையாய கொள்கையாக ஏற்று வாழ்ந்தார் என்பது தெரிகிறது.

சகிப்புத் தன்மை உடையவர்
1957இல் அண்ணா காஞ்சியில் போட்டியிட்டபோது காங்கிரசார் மூர்க்கத்தனமாக எதிர்த்தனர். அண்ணாவின் வீட்டிற்கு வெளியே உள்ள மின் விளக்குக் கம்பத்தில், அண்ணாவின் பிறப்பு பற்றி மிகத் தரக்குறைவாக எழுதப்பட்டிருந்தது. அதைப் பார்த்து சி.எஸ். பூஞ்சோலை என்ற தொண்டர் ஆத்திரமுற்று அதை அகற்றச் சென்ற போது, “ஆத்திரப்படவேண்டாம் அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். நீ எனக்கு ஒரு காரியம் செய்! பகலில் தான் அந்தத் தட்டியைப் படிக்க முடியும். இரவில் எல்லோரும் படிப்பதற்கு வசதியாக ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கை ஏற்பாடு செய் என்று அண்ணா பணித்ததும் பூஞ்சோலையும் அவ்வாறே செய்ய, மறுநாள் அந்தத் தட்டி அங்கே இல்லை! யார் அதை வைத்தார்களோ அவர்களே அதை எடுத்துக் கொண்டு சென்று விட்டார்கள் அண்ணாவின் சகிப்புத்தன்மையும் விவேகமும் புலனாகின்றன. (ப-97, அண்ணா-100).

எளிமை விரும்பி
அண்ணா முதலமைச்சர் ஆனதும், அவருடைய காஞ்சிபுரம் வீட்டில் ஃபிரிஜ் இருப்பதைப் பார்த்து இதை எப்போது வாங்கினீர்கள் என்று வீட்டாரிடம் கேட்ட போது, அவரது வீட்டார், “இதை மாதத் தவணையில் வாங்கினோம். நீங்கள் இங்கு வரும்போது உங்களுடன் வரும் அதிகாரிகள் குளிர்ந்த நீர் கேட்கிறார்கள். கடைக்குப் போய் வாங்கிவர வேண்டியிருக்கிறது.” என்றனர். “நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு நம்மிடம் இருப்பதைக் கொடுத்தால் போதும். நமது வசதிக்கேற்ப வாழ்வதுதான் சரியான முறை” என்று அண்ணா வாழ்ந்ததை டாக்டர் ஜனார்த்தனன் நினைவு கூர்கிறார்.

தோல்வி கண்டு துவண்டு விடாதவர்
1962இல் நடந்த தேர்தலில் காஞ்சிபுரத் தொகுதியில் போட்டியிட்டு அண்ணா தோற்றார். தோல்வி குறித்து “புனித ஜெருசலத்திற்காக ஐரோப்பிய நாடுகள் போரிட்டன. ஒப்பந்தம் ஏற்பட்டது. ஒரு நிபந்தனையும் விதிக்கப்பட்டது. ஐரோப்பிய படைக்குத் தலைமை வகித்த ரிச்சர்டு மன்னன் உள்ளே வரக்கூடாது மற்றவர்கள் வரலாம் என்பதே அந்த நிபந்தனை. இதைக் கேட்ட அந்த மன்னன், நான் உள்ளே போகாவிட்டால் என்ன? என் படைகள் உள்ளே போகிறது” என்றான். அதுபோல் சட்டசபையில் என்னை நுழைய விடவில்லை. அதனால் என்ன? என் தம்பியர்கள் 50 பேர் சட்டசபை செல்கின்றனர். அவர்கள் உருவில் நான் செல்கிறேன் என்றார்.

அண்ணா மாநகராட்சித் தேர்தலில் தோற்ற போது “எலெக்ஷன் சுரம் எல்லாம் எலெக்ஷனோடு சரி, அதைப்பற்றி அப்புறம் கவலைப்படக் கூடாது. மக்களுக்கு நாம் அறிந்ததைச் சொன்னோம். அவர்கள் தமக்குப் பிடித்தவரைத் தேர்ந்தெடுத்தார்கள். அதோடு எலெக்ஷனை மறந்துவிட வேண்டும்” என்று சொன்ன விளக்கத்தைக் கேட்டுச் சிலையாய்ப் போனார்கள் நண்பர்கள்.

வெற்றியைக் கண்டால் மனம் மகிழ்வது, தோல்வியைக் கண்டால் மனம் வாடுவது என்பது அண்ணாவிடம் இல்லை. இத்தகைய மனிதர்களையே பகவத் கீதையில் கிருஷ்ணர் சுதர்மா என்கிறார். கண்ணதாசனும் “வருவதைக் கண்டு மயங்காதே போவதைக் கண்டு கலங்காதே” என்றார்.

கடமை உணர்வுமிக்கவர்
ஆட்சி பீடம் ஏறுவதற்கு முதல் நாள் இரவு முழுவதும் அண்ணாவுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை அதற்கான காரணத்தை அவரே சொல்கிறார். “கண் மூடித்தான் படுத்திருக்கிறேன்” ஆனால் உள் மனத்தில் கண்ணீரும் கம்பலையுமாகக் குடிசையில் வாழ்வோர், கூனிக்குறுகி வாழ்க்கை நடத்துவோர் வந்து “என்ன வாழ்வு எங்களுக்கெனத் தரப் போகிறாய் அண்ணா?” என்று கேட்கிறார்கள். இப்படி மக்களுக்காகச் சிந்தித்த தலைவர் அண்ணா (ப.93, அண்ணா-100).

இன்று சட்டசபைக்கு வராமலே அறிக்கைப் போர் நடத்தும் அரசியல்வாதிகள் பலர் உளர். ஆனால் அண்ணா நோய் வாய்ப்பட்டிருந்த போதும் சட்ட சபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைக் கடமையாகக் கொண்டிருந்தார். சட்டசபை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே திடீரென எழுந்து தனது அறைக்குச் சென்று டாக்டர் அங்குத் தயாராக வைத்திருக்கும் ஊசி மருந்தைப் போட்டுக் கொண்டு, கையைத் தேய்த்தவாறு வந்து மறுபடியும் சட்டசபை விவாதங்களில் கலந்து கொள்ளும் கடமையுணர்வு மிக்கவர்.

மறைந்தும் சாதனை
“உலகில் தோன்றுவன யாவும் மறையும்” என்பது நியதி. ஒரு மனிதன் எவ்வாறு வாழ்ந்திருக்கிறான் என்பதை அவனது இறுதி நாள் உலகுக்கு உணர்த்திவிடும். மனித நேயராக, மாண்புமிகு முதல்வராக, மகத்தான சாதனையாளராக, மாற்றங்கள் பலவற்றை ஏற்படுத்திய சீர்திருத்தவாதியாக வாழ்ந்த அண்ணா 1969 பிப்ரவரி 3ஆம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அண்ணாவின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி மண்டபம் கூட்ட நெரிசலில் சிக்கித் திணறியது. கட்டுக்கடங்காத கும்பலில் மிதிபட்டு, சில பொதுமக்கள் மரணமடைந்த சோகமும் நிகழ்ந்தது.

1984இல் வெளிவந்துள்ள கின்னஸ் புத்தகத்தில் அண்ணா அவர்களின் இறுதி ஊர்வலம் குறித்து, “சென்னை மாநில முதலமைச்சர் திரு. சி.என். அண்ணாதுரை அவர்களின் இறுதிச் சடங்கு ஊர்வலத்தில் ஒன்றரைக்கோடி மக்கள் கலந்து கொண்டதாக”க் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறு இறந்தும் சாதித்திருக்கிறார், அண்ணா. இவ்வாறு அண்ணா நற்பண்புகளின் சிகரமாகத் திகழ்ந்தார். நாமும் அவர் வழி நடப்போம்.

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai