சிறப்புக் கட்டுரைகள்

அண்ணாவின் உயர்பண்புகள்
ப. பிரபாகர்,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக் கழகம், சேலம்.

‘பகுத்தறிவுப் பகலவன் என்று போற்றப்பட்ட பெரியார் வழி வந்த பேரறிஞர் அண்ணா ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்ற கொள்கைகள் வகுத்தும் வாழ்ந்தவர். நாட்டு மக்களிடையே கல்லாமை, இல்லாமை, அறியாமை என்ற நிலை நீக்க அரும்பாடு பட்டவர். பகுத்தறிவுப் பல்கலைக்கழகமாய் விளங்கிய அவர் “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு” என்ற உயர்பண்பினைக் கொண்டவர். சிந்தனைகளால் சிறந்த அவர் மக்களின் வேதனைகள் நீங்க எழுதியதால் “இந்நாட்டு பெர்னாட்ஷா” என்று புகழப்பட்டார். இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டதோடு மட்டுமன்றிப் பொருளியல் தெளிவு, அரசியல் அறிவு, சீர்திருத்த சிந்தனை, பேச்சாற்றல், எழுத்தாற்றல், நடிப்பாற்றல் எனப் பல்வகை ஆற்றல்களைப் பெற்றவர். காஞ்சியில் பிறந்த அவர் கன்னித்தமிழ் வளர்ச்சிக்கும், மறத்தமிழர் மலர்ச்சிக்கும் வாழ்ந்து சிறந்தவர். இத்தகைய அண்ணா பண்புகளால் உயர்ந்து வாழ்ந்ததால் தான் “தென்னாட்டுக் காந்தி” எனப் போற்றப்பட்டார். குணக்குன்றாக வாழ்ந்த அவரின் இனிய பண்புநலன்களை இனிக் காண்போம்.

வெற்றி தோல்வியைத் தாங்கும் பக்குவம்
சென்னை மாநகராட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு அண்ணா போட்டியிட்டுத் தோல்வி அடைந்த சமயம் அவரின் தோழர்கள் தேர்தல் தோல்வி குறித்து ஆறுதல் கூறினார்கள். அண்ணா அவர்களும் விளையாட்டுப் போட்டியில் வெற்றி தோல்வி உண்டு. வென்றவரை மற்றவர்கள் வாழ்த்துவார்கள். அதுபோலத் தேர்தலை நாமும் மதிக்க வேண்டும். வெற்றியால் வெறியோ தோல்வியால் துவளவோ கூடாது. வெற்றி பெறுபவரை ஓட்டப் பந்தயத்தில் நம்முடன் ஓடிவரும் நண்பனாகக் கருத வேண்டும் என்று கூறினார். தோல்வியைச் சந்தித்த எவரும் சிந்திக்காத சிந்தனை இது. வெற்றி பெற்றவரை வெட்டியாவது முன்னேற வேண்டும் என்ற சமுதாயத்தில் இதுவும் ஓர் உயர்பண்பல்லவோ? தேர்தலில் எதிர்த்தவரை எதிரியாகக் கருதிச் செயல்படும் அரசியலில் இது ஒரு புதுமையன்றோ?

மதிநுட்பம்

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப அண்ணா சொல்லில் வல்லவர் என்பது யாவரும் அறிந்ததே! அவர் சொல்லில் மட்டும் வல்லவர் அல்ல. சட்ட நுணுக்கங்களை அறிந்த அறிவாளி. மேற்கூறியபடி காங்கிரஸ் மந்திரி சபையை விட்டு வெளியேறிய சமயம் ஜஸ்டிஸ் கட்சியில் உள்ள பெரியவர்கள் அனைவரும் அமைச்சரவை அமைக்கத் தீர்மானம் கொண்டுவர முனைந்த பொழுது பெரியார் பதில் கூற இயலா நிலையில் நின்ற பொழுது அண்ணா யோசனை கூறி கூட்டத் தலைவன் கொண்டு வரும் தீர்மானத்தை மரபுப்படி எதிர்க்கக் கூடாது என்ற சட்ட விதியைக் கோடிட்டுக் காட்டி பெரியாரை வெற்றி பெறச் செய்தவர். இதன் வழியே கண்டால் உரிய நேரத்தில் அண்ணாவின் அறிவு சிறப்பாகச் செயல்பட வைத்தது எனலாம்.

ஒருமுறை கைத்தறி நெசவாளர்கள், தங்களின் துணிகள் மேல்நாட்டுச் சரக்குகளின் வரவால் விற்காமல் வறுமையில் வாடி நின்றார்கள். அதே நேரத்தில் நெஞ்சைக் கவரும் தஞ்சையில் புயல் வஞ்சித்து வாட்டி எடுத்தது. பாதிக்கப்பட்ட இரு தரப்பினருக்கும் உதவ வேண்டும் என்று நினைத்தார் அண்ணா. மூக்கில் பொடி போட்டு யோசித்த ஒரு நொடியில் கிடைத்த யோசனையின்படி, தன் தோழர்களுடன் நெசவாளரிடம் இருந்த துணிகளை வாங்கித் தெருத் தெருவாகக் கூவி விற்றார். துணி விற்றதால் நெசவாளர்களுக்கு மகிழ்ச்சி; கிடைத்த இலாபத்தைக் கொண்டு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியதால் அவர்களுக்கு மலர்ச்சி. “ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” என்பது போன்ற அண்ணாவின் அறிவுத் திறன் சிறப்பானதன்றோ?

கட்டுப்பாட்டை மதித்தல்
அரசு கருப்புச் சட்டைக்குத் தடை போட்டிருந்த நேரத்தில் அண்ணா கருப்புச் சட்டை போடுவதில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார். கட்சிக்குள் கருத்து வேறுபாடு இருந்த நிலையிலும் அரசு தலையிட்டு உரிமையைப் பறிக்க நினைத்ததை விரும்பாத அண்ணா தோழர் ஒருவரின் சட்டையை இரவல் வாங்கி அணிந்து மாநாட்டிற்குச் சென்று கட்டுப்பாட்டைக் காத்தார். இதிலிருந்து கட்டுப்பாட்டைக் காப்பதில் முன்மாதிரியாய் இருந்தவர் என்பது தெரிகிறதன்றோ?

துணிவும் பணிவும்
இந்தியா சுதந்திரம் அடைந்த நாளை பெரியார் துக்க நாள் என்ற பொழுது அவரிடம் பக்தி கொண்டிருந்த அண்ணாவோ அது இன்ப நாள்; எண்ணற்ற வீரர்கள், சிறையில் வாடியவர்கள், குடும்பத்தை இழந்தவர்கள், உயிர் தந்த தியாகிகள் ஆகியோரின் கனவுகள் நனவான நாள் என்று துணிவுடன் பேசினார். இதிலிருந்து பணிவாய் இருந்த சமயத்திலும் நாட்டின் நலனுக்காகவும் தன் கருத்தை விட்டுத் தராத நோக்கத்தாலும் துணிவாய்ச் செயல்பட்டவர் என்பது புலனாகிறதன்றோ?

மாற்றான் தோட்டத்தின் மல்லிகைக்கும் மணமுண்டு
சிலப்பதிகாரத்தில் பொற்கொல்லனைக் கூட வில்லனாகக் காட்டாமல் ஊழ்வினையே கண்ணகியின் தீவினைக்கும் காரணம் என எழுதப்பட்டுள்ளதைக் காணலாம். அண்ணா எழுதியுள்ள நீதிதேவன் மயக்கத்தில் இராவணன் பால் உள்ள நியாயங்களை வாதிட்டுக் காட்டியுள்ளார். இதிலிருந்து எதிரியாய் இருப்பவனிடமும் நியாயங்கள் உள்ளன என்று உணர்த்தியதால் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்று தன் கருத்திற்கு வலிமை சேர்த்துள்ளதைக் காணலாம்.

சவாலை எதிர்கொள்ளல்
குலக்கல்வி எதிர்ப்பு போன்ற பல்வேறு போராட்டங்களை அண்ணா நடத்திக் கொண்டிருந்த கால கட்டத்தில் வெட்ட வெளியில் பேசி என்ன பயன்? சட்டசபைக்கு வாருங்கள் என்ற காங்கிரசாரின் சவாலை ஏற்று 1956இல் தேர்தலில் போட்டியிட்டு 15 பேர் வெற்றி பெற வைத்தவர் அண்ணா. நாடு கண்ட நல்ல எதிர்க்கட்சியாகச் செயல்பட வைத்தவர். எனவே சவால்களைக் கண்டு சளைக்காதவர் அண்ணா என்பது புரிகிறதன்றோ?

சபை நாகரிகம்
சட்ட சபைகளில் கட்டுப்பாடற்றுப் பேசியவர்கள் மத்தியில் நாவடக்கம் கொண்டவர் அண்ணா. ஒருமுறை சட்டசபையில் மந்திரி ஒருவர் அண்ணாவிற்கு ஏன் அறிஞர் பட்டம், நீ அறிஞரா என்று கேட்டதற்குச் சண்டைக்குச் செல்லாமல் அம்மந்திரியைத் திறமைசாலி, புத்திசாலி என்று பாராட்டினார். கசப்புக்கு இனிப்பு என்று விதித்தல் அண்ணா பேசியதில் ஓர் உள் அர்த்தமும் உண்டு. அதாவது என்னைப் போய் திறமைசாலி, புத்திசாலி என்கிறாயே, நீர் ஓர் அறிஞனா? என்று அம்மந்திரி கேட்பதாக எடுத்துக் கொள்ள வைத்த சாமர்த்தியம், படைத்தவர் அண்ணா.

அவரின் தம்பிகள் அவருக்குச் சிலை வைக்க முற்பட்ட பொழுது எனக்குச் சிலை வேண்டாம். முதலில் காங்கிரஸ் தலைவர் காமராசருக்குச் சிலை வையுங்கள் என்று கூறிய பெருந்தன்மை கொண்டவர் அறிஞர் அண்ணா.

நாட்டுக்கும், நட்புக்கும் முதலிடம்
விலைவாசி உயர்வைக் கண்டித்து அண்ணா மறியல் போர் நடத்தியதால் வேலூர்ச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொழுது தோழர்களுடன் அவரின் துணைவியார் ராணி அம்மையார் பார்க்கச் சென்றிருந்தார். அண்ணா தோழர்கள் அனைவரையும் விசாரித்ததுடன் பொது வாழ்க்கையை மட்டும் பேசிக் கொண்டிருக்கிறார். அவரின் துணைவியாரிடம் ஒரு வார்த்தை கூடப் பேசி நேரம் ஒதுக்கவில்லை.

இமயப் பகுதியில் செஞ்சீனம் படையெடுத்த சமயத்தில் காலமெல்லாம் சிறையில், அடைத்துக் கடுங்காவல் கொடுத்துக் கொடுமை புரிந்த அரசுக்குப் பலமாக நின்று உதவியவர் அண்ணா. தன்னைவிடத் தன் நாடே பெரிது என்று அழைத்தவர் அவர் என்பதை இதனால் அறியலாம் அன்றோ? தனி மனிதனை விடக் கட்சி பெரியது, கட்சியை விட நாடு பெரியது என்ற பண்பாளர் அண்ணா!

1967இல் தேர்தலில் வெற்றி பெற்று முதல் அமைச்சர் பொறுப்பு ஏற்கும் முன் முதல் நாள் இரவு தூங்காமல் சிந்தித்தவாறு இருந்தார். அண்ணியார் காரணம் கேட்கிறார். நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வை எண்ணிப் பார்க்கிறேன். அவர்களை உயர்த்த வழியைத் தேடுகிறேன். தூக்கம் வரவில்லை, கொஞ்சம் அயர்ந்து தூங்கிவிட்டால், அத்தூக்கத்தில் கூட ஏழைகளே வருவார்கள் என்று கூறுகிறார். விழிப்பிலும் தூக்கத்திலும் நாட்டையே எண்ணுபவர் அண்ணா. வெற்றிக் களிப்பால் மகிழ்ந்திருக்க வேண்டிய நேரத்திலும் நாட்டு மக்களையே நினைத்திருப்பவர் அண்ணா. இதிலிருந்து நாட்டையே முதலிடத்தில் வைத்திருப்பவர் அண்ணா என்பது தெரிகின்றதன்றோ!!!

அமைதி விரும்பி
1965இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்திய கால கட்டத்தில் அண்ணாவை சிறையில் அடைத்தனர். தமிழகத்தில் வன்முறை தலையெடுத்தது, அண்ணா பத்திரிகை ஒன்றில் பலாத்காரம் ஓர் எரிமலை. அது வெடித்தால் நல்லவர் கெட்டவர் என்று பாராமல் அழிக்கும். பலாத்காரம் என்பது இருபுறமும் கூருள்ள ஆயுதம். அது தாக்கப்படுபவனை மட்டுமின்றி தாக்குபவனையும் அழிக்கும். எனவே வேண்டாம் வன்முறை என்றெழுதி அமைதிப்படுத்தினர். காந்தியின் வழியைப் பின்பற்ற அஹிம்சை வழியைத் தேர்ந்தெடுத்ததாலேயே அவரை நாம் ‘இந்நாட்டு காந்தி’ என்கிறோம்.

எளிமை விரும்பி
அண்ணா அமெரிக்கா சென்று அறுவைச் சிகிச்சை முடித்து அன்னை நாட்டை அடைந்தார். அப்பொழுது தோழர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் குளிர்ப்பதன வசதி பொருந்திய வீட்டை ஏற்பாடு செய்து அதில் தங்குமாறு கேட்டார்கள். அதை மறுத்த அண்ணா ஆடம்பரம் எனக்கு வேண்டாம் என்று அடக்கமாக பதில் கூறி மறுத்துவிட்டார். எளிமையான வாழ்க்கையை விரும்பினார்.

எதையும் தாங்கும் இதயம் கொண்ட அண்ணா கதையும், கட்டுரையும், நாடகமும் எழுதுவதில் வல்லுனர். தம் எழுத்தில் உள்ளத்தின்படி சான்றாக தான் வாழ்ந்து காட்டியவர். மேற்கண்ட பண்புகளால், அவர் உயர்ந்து நிற்பதாலே அறிஞர் எனப்பட்டார்.

நன்றி
அண்ணா வாழ்வும் பணிகளும் - தொகுப்பு - 1
பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க மாநாடு
நாள் : 21, 22-02-2009, சனி, ஞாயிறு

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.