சிறப்புக் கட்டுரைகள்

சமுதாய நோக்கில்
அண்ணாவின் “வேலைக்காரி”

முனைவர் க. தனலட்சுமி
தமிழ் விரிவுரையாளர், என்.ஜி.எம். கல்லூரி, பொள்ளாச்சி

அறிஞர் அண்ணா தமிழ் நாடக உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர். ஆண்டவனையும் அரசனையும் மையமாகக் கொண்டு நடிக்கப்பட்டு வந்த நாடக உலகில் சமுதாயத்திலுள்ள அநீதி, நேர்மையின்மை, கொடுமை ஆகியவற்றை எடுத்துக்காட்டி நாடகங்களை உருவாக்கியவர் இவர். அண்ணாவின் கருத்துள்ள வசனங்கள் மக்களின் மனத்தை ஈர்த்தன. அதனால்தான் “தமிழ் நாடகத்துக்கு அண்ணாவின் நாடகங்கள் புதிய வேகத்தையும் துரித எழுச்சியையும் ஊட்டின. தூங்கிக்கிடந்த தமிழுணர்ச்சி துள்ளி எழுந்தது. பதுங்கி இருந்த பகுத்தறிவு பாய்ந்து பெருகியது. அடங்கி இருந்த அகத்துணர்வு ஆறாகப் பாய்ந்தது” என்று கூறுகிறார் முனைவர் ஏ.என்.பெருமாள், அப்படிப் பகுத்தறிவூட்டிய நாடகங்களுள் ‘வேலைக்காரி’ குறிப்பிடத்தக்கது. அது பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

அண்ணாவின் “வேலைக்காரி”
கருத்துக்களைப் பரப்பும் கலைக்கருவிகளுள் நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை. அவற்றுள் அண்ணா எழுதிய “வேலைக்காரி” சிறப்பிடம் பெறுகின்றது. வீட்டுக்கு வரும் வேலைக்காரியை உணர்வுள்ள ஒரு ஜீவனாகப் பலரும் நினைப்பதே இல்லை. வீட்டைப் பெருக்கும் துடைப்பத்தைப் போல் வேலைக்காரியை நினைத்து வந்த காலத்தில் வேலைக்காரிக்கு மதிப்பைத் தேடித் தந்ததோடு அந்த இனத்திற்கே உயர்வையும் அண்ணா தேடித் தந்தார். வேலைக்காரிக்கு நடக்கும் சமுதாயக் கொடுமைகளைக் கூறவந்த அண்ணா அவற்றோடு ஏழையின் கண்ணீர், ஜாதி வேறுபாடு, போலி வழிபாடு, பணக்காரரின் ஆதிக்கம் ஆகியவற்றையும் குறிப்பிடுகின்றார். பணம் மட்டுமே வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற சமுதாயத்திற்குச் சரியான அடியாக இந்நாடகம் விளங்குகின்றது.

நாடகக் கதாபாத்திரங்கள்
பணமே பிரதானம் என நினைக்கும் வேதாசல முதலியார், பணத்திமிரு படைத்த அவரின் மகள் சரசா, வேலைக்காரி மீது இரக்க குணமுள்ள அவரின் மகன் மூர்த்தி, வீட்டு வேலைக்காரி அமிர்தம், அவ்வூரில் வாழும் சுந்தரம் பிள்ளை, அவரின் மகன் ஆனந்தன், ஆனந்தனின் நண்பன் மணி ஆகியோர் இந்நாடகத்தின் முக்கியக் கதாபாத்திரங்களாகும்.

வேலைக்காரிக்கு சரசா செய்யும் கொடுமைகள் வேலைக்காரியைச் சக மனிஷியாக நினைக்காமல் அடிமையாக நினைக்கும் சமுதாயத்தை அறிஞர் அண்ணா சுட்டிக்காட்டுகிறார். வேலைக்காரி என்பவள் பிறருக்கு அடங்கியே நடக்க வேண்டும் என்ற பணக்காரர்களின் எண்ணத்தை “ஒரு வேலைக்காரிக்கு வேண்டிய அடக்கம், ஒடுக்கம் மட்டுமரியாதை ஒன்றுமே உன்கிட்டே கிடையாது” என்று சரசாவின் கூற்று வழி விளக்குகிறார். ஒடுக்குதல் என்பதற்குக் கதிரைவேற்பிள்ளை அகராதி “அடக்குதல், சுருங்கப் பண்ணுதல், வருத்தப்படுத்துதல், கீழ்ப்படியச் செய்தல்” போன்ற பொருள்களைத் தருகின்றது, வேலைக்காரியின் மனம் வருந்தும்படி கீழ்ப்படியச் செய்யும் கொடுமையினை இதனால் அறியலாம். சரசாவின் சேலையினை மடிக்கும் பொழுது ஆசையின் உந்துதலால் அமிர்தா தன் மீது போட்டுப் பார்க்கின்றாள். இதனைக் கண்ட சரசா, “அம்மாளுக்குப் பேஷனில்லே கேட்குது. ஏண்டி! உன் உடம்பில் இருக்கிற அழுக்குப்பட்டால் என்னத்துக்கடி ஆகும் சேலை” என்று வெடிக்கிறாள். சேலைக்குக் கொடுக்கும் மதிப்பைக் கூட சக மனுஷியாய்த் தனக்காக உழைக்கும் அமிர்தத்திற்குக் கொடுக்கவில்லை என்பதனை அறிஞர் அண்ணா கருத்துள்ள வசனங்களால் வெளிப்படுத்துகின்றார். தன் கணவன் பரந்தாமனிடம் வேலைக்காரியின் பெயரை அமிர்தம் என்று கூறாமல் ‘குப்பி’ என்று கூறுவது வேலைக்காரர்கள் என்றுமே தனக்குக் கீழேயே இருக்க வேண்டும் என்ற பணக்காரர்களின் எண்ணத்தையும் வெளிப்படுத்துகின்றது.

வேலைக்காரிக்கு உரிமை மறுக்கப்படுதல்
பணக்காரர்களுக்கு ஒரு நீதியும் ஏழைகளுக்கு ஒரு நீதியும் சமுதாயத்தில் உள்ளது. தன்னுடைய பெண்ணைப் பணக்காரனான பரந்தாமனுக்குக் கட்டிக் கொடுக்க நினைக்கும் வேதாசல முதலியார் தன்னுடைய வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரி அமிர்தம் வயதான மாப்பிள்ளையைக் கட்ட மறுக்கும் பொழுது, “இந்தா அமிர்தம்! கல்யாணங் காட்சியை முடித்து வைப்பது பெரியவங்க காரியம். வயசாயிடுத்து அது இது என்று என்னென்னவோ சொல்றியாமே” என்று அதட்டுகின்றார். ஏழைகளுக்குத் தன் திருமணத்தைத் தானே முடிவு செய்யும் உரிமை இருக்கின்றது என்று நினைத்துப் பார்க்காத பணக்கார வர்க்கத்தை அறிஞர் அண்ணா படம் பிடித்துக் காட்டுவதை உணர முடிகின்றது.

பணக்காரரின் ஆதிக்கம்
கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத பொழுது சுந்தரம் பிள்ளையைச் சிறைச்சாலையில் அடைப்பதாக வேதாசல முதலியார் கூறுகிறார். சுந்தரம் பிள்ளையை “இந்த நாயைத் தெருவழியாக இழுத்துக் கொண்டு போகச் சொல்லு ஜெயிலுக்கு” என்று ஆணையிடு
கிறார். பணமில்லாத மனிதனை ‘நாய்’ என்று கூறுவது வேதனைக்குரியது.

ஆறறிவு உடையவர்களெல்லாம் மனிதர்கள் ஆகிவிட முடியாது. ÔÔஆறறிவுடன் மன இரக்கத்தையும் பெற்றிருக்க வேண்டும். இதனை, ஆறறிவதுவே அவற்றோடு மனனே” என்று தொல்காப்பியம் மனித உயிர்களைக் குறிப்பிடுவதன் மூலமும் அறியலாம். கடனைத் திருப்பிக் கொடுக்கப் பணமில்லாத பொழுது ஆனந்தனுக்குக் கடன் கொடுத்தவர் “உங்க அப்பன மாதிரி தூக்குப் போட்டு சாகிறதுதானேடா...” என்று கூறுகிறார். பிற மனிதர்கள் இறந்தாலும் பரவாயில்லை. தனக்குப் பணம் மட்டும் வந்தால் போதும் என்று நினைக்கின்ற பணக்காரர்களின் தன்மையை அறிஞர் அண்ணா இயம்புகின்றார்.

பணக்காரர்களின் நிலையினை, “அது பணக்கார உலகம்; முட்டாள் புத்திசாலியாகப் போற்றப்படுவான்; வீரன் கோழைப் பட்டம் பெறுவான்” என்ற பரமானந்தனின் கூற்றுவழியும் குறிப்பிடுகின்றார்.

ஏழைப் பெண்ணின் கற்பு
வேதாசலம், தன் மகன் மூர்த்தி வேலைக்காரியான அமிர்தத்தோடு நெருக்கமாகப் பூந்தோட்டத்தில் உரையாடிக் கொண்டிருந்ததைக் கண்டதும், “அந்தப் பொண்ணை டச்சி கிச்சி பண்ணியிருந்தா சொல்லுடா இப்பவே காசுபணம் கொடுத்துக் கழுதைங்களை ஊரைவிட்டு ஓட்டிவிடலாம்” என்று கூறுகிறார். ஏழைப் பெண்ணின் கற்பிற்குப் பணத்தை ஈடாகக் கொடுத்துச் சரியாக்கிவிட முடியும் என்ற பணக்காரர்களின் ஆதிக்கத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றார் அறிஞர் அண்ணா.

உழைப்பின் உயர்வு
பணக்காரர்கள் பணம்தான் உயர்வைத் தரும் என்று நினைக்கின்றனர். ஆனால் உழைப்பே செல்வம் என்பதனை,

“ஏன் உழைப்பே செல்வம் உன் முகமே
இன்ப ஒளி”

என்ற மூர்த்தியின் கூற்று வழி அறிஞர் அண்ணா விளக்குகின்றார். வேலைக்காரி எந்த வகையிலும் இழிந்தவள் அல்ல என்பதனை,

“பூ விற்றால் பூக்காரி. பிச்சை எடுத்தால் பிச்சைக்காரி. சிங்காரித்துக் கொண்டால் சிங்காரி நீ வேலை செய்கிறாய் அதனால் வேலைக்காரி” என்ற பரமானந்தன் கூற்றுவழி எடுத்துரைக்கின்றார்.

ஏழையின் சொத்து உண்மையான சொத்து பணமல்ல உறவுகளே ஆகும். பணக்காரர்கள் தன் உறவுகளைக் காட்டிலும் பணத்தையே சிறந்த சொத்தாகக் கருதுவர். ஆனால் ஏழைகள் உறவைச் சொத்தாக நினைப்பதை,

“எனக்கிருந்த ஒரே ஆஸ்தி அப்பா”
என்ற ஆனந்தனின் கூற்று வழி அறியலாம்.

வழிபாட்டு எதிர்ப்பு
அறிஞர் அண்ணா காளி வழிபாட்டு எதிர்ப்பைப் பல இடங்களில் சுட்டிக் காட்டுகின்றார். காளியை வழிபடுபவனைப் பைத்தியக்காரன் என்றே கூறுகின்றார்.

“பைத்தியக்காரன். உழைக்கின்றான் மாடு போல; சம்பாதிக்கிற காசையெல்லாம் கர்ப்பூரமாக வாங்கிக் கொளுத்துகிறான்” என்று சிகரெட் பிடித்துக் கொண்டே தூப தீப நைவேத்திய சமர்ப்பியாமி என்று மணி, ஆனந்தனை ஏளனம் செய்கின்றான்.

வேதாசலத்தின் கொடுமைகண்டு கொதிக்கும் ஆனந்தன் காளி தேவியிடம். “நீ என்ன செய்வாய்! நான் தான் பித்தன். உன்னையே நம்பிக்கிடந்தேன். அது என் பைத்தியக்காரத்தனம். நயவஞ்சகத்தால் வேதாசல முதலி கொழுத்தால் அது உன் அருளால் வந்தது என்று எண்ணினேன். அதுவும் என் பைத்தியக்காரத்தனம். எனக்கு இருந்த போதை தெளிந்தது” என்று கூறுகிறான். கடவுளை நம்புவது பைத்தியக்காரத்தனம் என்று கூறுவதை இங்கு உணரலாம்.

போலி வழிபாடும் சாமியாரும்
பகலில் சாமியாராகவும் இரவில் காம இச்சை கொண்ட யோகியாகவும் இருக்கும் போலிச் சாமியார்கள் பற்றி 1947க்கு முன்பே அறிஞர் அண்ணா இந்நாடகம் வழி விளக்குகின்றார். காம இச்சைக் கொண்ட ஹரிஹரதாஸைக் கண்ட மூர்த்தி,

‘ஹா கபட வேஷதாரியே! காமுகா... பகலிலே யோகியாகவும் பாதி ராத்திரியிலே போகியாகவும் காட்சியளிக்கும் பேடிப்பயலே ஆசிரமமா ‘இது” என்று கொதிக்கிறான். மேலும்.

“பஞ்சமா பாதகத்தைப் பயமின்றிச் செய்யத்தான் இந்தப் பண்டார வேஷமா? பாவி! பகல் வேஷக்காரா! பாமரரை ஏய்த்துப் பிழைக்கும் பரம சண்டாளா நீ இருந்தால் என்ன? இறந்தால் என்ன? என்று கூறிய மூர்த்தி ஹரிஹரதாஸைக் கொன்றே விடுகின்றான். ஏழையை ஏய்க்கும் போலி ஆன்மீகவாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற அண்ணாவின் சிந்தனையை இங்கு அறியலாம்.
ஜாதி ஒழிப்பு வேற்று ஜாதிப் பெண்ணான அமிர்தத்தை மூர்த்திக்குத் திருமணம் செய்து வைப்பதன் மூலம் ஜாதி ஒழிப்பையும் அண்ணா கூறியுள்ளதை அறியமுடிகின்றது. அமிர்தத்தை,

“காதலால் ஜாதியை வென்ற உத்தமி” என்று வேதாசலமே கூறுவது நாடகத்தின் கருப்பொருளை விளக்குகின்றது.

பணத்திமிரும், ஜாதித் திமிரும் இந்தச் சமுதாயத்தை ஆட்டிவைக்கும் கோரப்பிசாசுகள். அவற்றை ஒழிக்கவே இந்த நாடகம் என்ற அறிஞர் அண்ணாவின் எண்ணம் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று முடிவதால் அறிய முடிகின்றது. அறிவைக் காட்டிலும் பகுத்து அறியும் அறிவே சிறந்தது. அப்படிப்பட்ட பகுத்தறிவுவாதியான அண்ணாவைப் போற்றுவோம்!

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.