சிறப்புக் கட்டுரைகள்

அறிஞர் அண்ணாவின்
அரசியல் நேர்மை

சு. சுஜாதா
தமிழ்விரிவுரையாளர்
பிராவிடென்ஸ் மகளிர் கல்லூரி, குன்னூர்-4, நீலகிரி.

'கோன் நிலை தவறின் கோள் நிலை தவறும்
கோள் நிலை தவறின் மாரிவறங் கூரும்
மாரி வறங் கூரின் மன்னுயிர் இல்லை
மன்னுயி ரெல்லாம் மண்ணாள் வேந்தன்
தன்னுயி ரென்னும் தகைமைத் தாகும்
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்”

எனும் வாக்கிற்கு ஏற்ப உயிரென மக்களை ஓம்பிக் காக்கும் அரசியல் நெறிகளை அள்ளித் தந்த தமிழ்மண்ணில் வாக்குகளைக் காற்றில் பறக்க விட்டுத் தம் வசதிகளைப் பெருக்கிக் கொண்டவர்களே ஏராளம்! நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பாடுபட்டு, கொள்கைக்காகவும் குறிக்கோளுக்காகவுமே வாழ்ந்து மடிந்த மேதைகளோ மிகச்சிலர், அவருள்ளும் எழுத்தாலும், பேச்சாலும், இயக்கத்தாலும், வாழ்வாலும் அனைவரையும் ஈர்த்துத் தமிழர்தம் நெஞ்சில் என்றென்றும் நின்று நிலவும் தகுதியும் தலைமையும் படைத்தவர் அறிஞர் அண்ணா.

பித்தலாட்டமாகவும் பெருவணிகமாகவும், தரகு மையமாகவும்- தரமற்ற கொள்ளையாகவும் மாறிக் கொண்டிருக்கும் இக்கால அரசியல் மாயையில் தன்னலச் சாயலே படராத-சுரண்டல் நிழலே தொடாத-ஊழல் இருளோ ஒருதுளியும் பரவாத நேர்மையின் மிடுக்கு நிறைந்த தூயதோர் அரசியல் நெறி நம்பற்கரியதாகக் கூட இருக்கலாம். ஆட்சிப்பீடத்தை அலங்காரக் கட்டிலாக்கி சொகுசுகளுடனும், சுந்தரிகளுடனும் கொஞ்சிக் குலவும் உன்மத்தர்களிடையே கடமையும் கண்ணியமும் கட்டுப்பாட்டோடு கூட வர நிமிர்ந்த நெஞ்சுடன் நேரிய நோக்குடன் எளிமையின் சிகரமாய் ஒரு தலைவன் வாழ்ந்தது அற்புதம் போல் கூடத் தோன்றலாம். ஆனால் அப்பட்டமான உண்மை! நல்லவனும் வல்லவனுமாய தலைவன் ஒருவன் தனக்குப் பின்னும் தலைமைகளைத் தோற்றுவிக்கும் ஆற்றல் படைத்தவன் என்பதற்கேற்பத் தம்பியர் பலரை உருவாக்கிய திறமையும் வாய்ந்தவராய்த் திகழ்ந்தவர் சி.என் அண்ணாதுரை.

பன்னாட்டு அரசியலில்
மனித நேயத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு பணவெறியாலும் நிறவெறியாலும் நாட்டையே வேட்டைக்காடாக்கி அடிமைகளை வேட்டையாடும் வெள்ளையரைக் கடுமையாகச் சாடும் அண்ணா வெள்ளை மாளிகையின் கருப்பு வணிகத்தை உலகுக்கே அம்பலப்படுத்திக் கண்டனக் குரல் எழுப்புகிறார். ஆப்பிரிக்க நீக்ரோக்கள் நானூற்றுவரைக் கப்பலில் அடிமைகளாய் ஏற்றிச் செல்லும் ஒருவன் பயணவழியில் நோய் வாய்ப்பட்டவரைச் சற்றும் இரக்கமின்றிக் கடலில் வீசுவதையும், மனித உயிர்களின் மதிப்பைக் கருதாமல் சரக்குகளாய் எண்ணி இழப்புக் காப்பீடு கேட்பதையும் எடுத்துக் காட்டிக் குமுறுகிறார். இனத்தாலும், மதத்தாலும் பிரிந்து கிடக்கும் இந்திய மக்களுக்கு மனிதநேய உணர்வூட்ட பன்னாட்டு அரசியலிலிருந்து மேற்கோள்கள் காட்டுகிறார்.

திராவிட இயக்கப் போராட்டத்திற்கு அரண் சேர்க்க வெள்ளை மாளிகையின் மூலம் “டாம் மாமாவின் விடுதி “கருப்பு இடி“ டக்ளஸ் டிஸ்மன் குடியரசுத் தலைவரான கதைகளை எடுத்துரைக்
கும் அண்ணாவின் எழுத்தும் பேச்சும் அவர்தம் அரசியல் இயக்கத்திற்குப் போர்வாளாய்ப் பயன்படுகின்றன. வெள்ளை நாட்டில் குடியரசுத் தலைவர் ஆகும் கருப்பினத் தலைவன் கொள்கைத் தெளிவோடு விளங்குவதைச் சுட்டிக்காட்டி பொருளிலும் போகத்திலும் நிம்மதி நிலைக்காது என்பதைத் தெளிவாக்குகிறார்.

““இரும்புப் பெட்டியிலே எண்பது இலட்சம்! கரும்புத் தோட்டத்திலே வருட வருமானம்! ஆலைசாலை! ஆள் அம்பு கோட்டம்! மாடம்-கூடம்!

செல்வத்தைக் குவித்துவைத்துக் கொள்வதாலே மட்டுமே இன்பவாழ்வு கிடைத்துவிடுமா?

பொறாமை! வஞ்சகம்! பொல்லாங்கு! பகை! சூது! சூழ்ச்சி! மாச்சர்யம்! இவை நெளியும் நிலையில் நாடு இருந்திடின் அந்த நாட்டிலே மாளிகை உண்டு! மந்தகாச வாழ்வு உண்டு என்று கூறி இருந்திடமுடியுமா?

நீதி! நேர்மை! பண்பு! அறம்! அறிவு! இவைகளற்ற நிலையில் ஒருநாடு இருந்திடின் அங்கு கோடி கோடியாகப் பணம் குவிந்திருந்திடினும் வாழ்விலே ஒரு நிம்மதி கிடைத்திடுமா?

நல்லநாடு என்பதைக் காட்டிலும் மேலான செல்வம் நிலையான செல்வம் வேறு எதுவும் இல்லை என்று நாடுகாக்கும் பொறுப்பைக்குறித்து விளக்கும்போது அரசியல் நேர்மையே அண்ணாவின் அடிநோக்கம் என்பதை விளங்கிக் கொள்ளமுடியும்.

நாடும் மக்களும்
மனிதன் மிருகமல்ல: என்பது மட்டும் தம்பி! உலகிலே அதிலும் குறிப்பாக உயரிடங்களிலே ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டால் மனிதன் மிருகமல்ல! என்பது மட்டும் நமது எல்லாச் செயல்களுக்கும் அடிப்படையாக அமைந்துவிட்டால்.

மனிதன் மிருகமல்ல இதனை மட்டும் ஆட்சியாளர்கள் உணர்ந்து விட்டால்!

நாடு, காடு ஆகிடாது! நல்ல நாடு கண்டிடலாம் என்று தம்பிக்கு மலெழுதும் அண்ணா தான் காணவிரும்பும் இலட்சிய பூமியையும் தெளிவுறக் குறிப்பிடுகிறார்.

எல்லோரும் இன்புற்று வாழும் இடம் தான் என் லட்சிய பூமி. ஒருவரை ஒருவர் அழுத்தாமல் ஒருவரை ஒருவர் சுரண்டாமல் எல்லோருக்காகவும் நான். எனக்காக எல்லோரும் என்ற முறையில் சமூகம் அமையுமானால் அதைத்தான் என் இலட்சிய பூமி.

அரசியல் முறையில் அதை (Federalism) கூட்டாட்சி என்று சொல்லலாம் பொருளாதாரத் துறையில் (Socialism) சமதர்மம் என்று சொல்லலாம், அரசியல் அமைப்பின் முறைப்படி (Democracy) சனநாயகம் என்று சொல்லலாம் இலக்கியத் துறையில் அதை (Idealism) என்று கூறலாம்.

மக்களுக்காகவே அரசு என்ற அழுத்தந்திருத்தமான கருத்துடைய அண்ணா நில உச்சவரம்புச் சட்டம் (1960) வந்த போது உழுது, பாடுபடும் உழவர்களைப் பாதுகாப்பதாக உழவோர்க்குப் பயனளிப்பதாக அச்சட்டம் இருக்க வேண்டுமென வற்புறுத்துகிறார்.

உண்மையிலேயே உழுபவர்களுக்கு நிலம் சொந்தமாக வேண்டும். அவர்களுக்கு நிலம் தரப்படவேண்டும் என்று எண்ணமிருந்தால்-உண்மையிலேயே நிலத்தில் யார் தன்னுடைய உழைப்பைப்போட்டு, அதன் மூலன் கிடைக்கிற பலனைத் தன்னுடைய வாழ்க்கைக்காக வைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள்தான் விவசாயிகள், உழவர்கள் என்ற கருத்தில் அவர்களுக்கு நிலங்கள் கொடுக்கவேண்டும் என்ற விளக்கம் தரப்பட்டிருக்குமானால், உண்மையில் இந்த மசோதாவில் முற்போக்குச் சக்தி இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் பெருஞ்செல்வர்களான மிராசுதார்களையும் ஆலை அதிபர்களையும் பாதுகாக்கும் வகையில் மேய்ச்சல் காடு மற்றும் தோட்டங்களுக்கும் கரும்பு விவசாய நிலங்களுக்கும் விதிவிலக்கு அளித்திருப்பதைத் தட்டிக் கேட்டு மசோதாவிலுள்ள ஓட்டைகளை எடுத்துக்காட்டி மத்திய அரசின் முதலாளித்துவச் சார்பைக் கண்டிக்கிறார்.

திறந்த உள்ளமும் தெளிந்த உரைவீச்சும்
“உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கிலே ஒளியுண்டாகும்” என்று பாரதி சொல்வதற்கிணங்க அண்ணாவின் உள்ளம் நேர்மையால் நிரம்பியிருந்ததால் பொய்யர்களையும், புரட்டர்களையும் சாடுவதில் சற்றும் சளைக்கவில்லை. மத்திய அரசினர் கூட அண்ணாவின் சொல்லும் செயலும் நியாயமானவை என்று உணரும் வகையில்தான் தம் கருத்துக்களைச் சட்டமன்றங்களிலும், நீதிமன்றங்களிலும் தக்கச் சான்றுகளுடன் நயம்பட உரைத்து நிலைநாட்டியுள்ளார்.

அரசியலை மதுவாக்கி, மாளிகையை ஆடல் அரங்காக்கி, பதவி எனும் பதத்திற்கு, படாடோபம் எனும் தாளமிட்டுப் பக்குவமான பரதநாட்டியம் பரங்கிமுன் ஆடிக்காட்டிப் பரிசு பெற்றவர் போக உழைப்பினால் உடல் மெலிந்து வறுமையால் உருமாறி, உரிமை பெற வேண்டுமென்ற உணர்ச்சியால் போரிட்டு, வடு பெற்று, வளையாது களத்தில் நின்று வாள்போயினும் மாற்றானின் தாள் பணியாது சூள் உரைத்தபடி உயிர் ஊசலாடும் வரை நடக்கும் சூரர்களுக்கு உற்சாக உரையாற்றி அழைப்பு விடுக்கிறார்.

இங்கே நாங்கள் உழைப்பாளிகளைக் கேட்கிறோம். அரசியல் கழைக் கூத்தாடிகளையல்ல; சமர்செய்யும் சக்தியுள்ளவரை அழைக்கிறோம். சர் களையல்ல, “திவான்பகதூர் களையல்ல, தீரர்களைத் தேடுகிறோம்.

இரணகளத்தை ரம்மியமானது என்று எண்ணுபவர்களைத் தான் எண்ணிப்பார்க்கிறோம். ராவ் சாகிப் களையல்ல விடுதலை வீரர்களின் அணிவகுப்பிலே சேருமாறு அழைக்கிறோம். பிரிட்டிஷ் சாம்ராஜ்ய அதிகாரிகள் ஓய்வு நேரத்தில் தயாரிக்கும் பொம்மைகளையல்ல. உறுத்தும் உண்மைகளை உரைகளில் உலவவிட்டதோடு தாம் படைத்த கதைகளிலும் நாடகங்களிலும், ஒருசில கவிதைகளிலும் இயக்கச் சிந்தனைகளை இழைத்து நேரிய அரசியல் ஞானத்தை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் சிந்தையில் செலுத்தியவர் அண்ணா.

தஞ்சை வீழ்ச்சி, தீர்ப்பளியுங்கள் போன்ற சிறுகதைகளிலும் ‘சந்திரமோகன்’, சொர்க்கவாசல், இன்ப ஒளி, கண்ணாயிரத்தின் உலகம், கண்ணீர்த்துளி போன்ற நாடங்களிலும் அண்ணாவின் தெறிப்பான அரசியல் கருத்துக்கள் ஆங்காங்கே மிளிர்கின்றன. மக்களுக்கும் அரசுக்கும் உள்ள பிணைப்பை அரசியலைச் செம்மையாக நடத்த வரிசெலுத்தக் கடமைப்பட்டவர்கள் மக்களென்றும் மக்களுக்கு வாழ்வளிக்கக் கடமைப்பட்டவர்கள் அரசியலாரென்றும் நறுக்குத் தெறித்தாற்போல் கூறுகிறார்.

இவையனைத்தையும் நோக்க எழுத்தும் பேச்சும் செயலும் இணைந்து அரசியல் உலகில் மாசுமறுவற்ற சத்தியச் சுடராக மிளிர்ந்தவர் அண்ணா என்பது புலப்படும்.

நன்றி
அண்ணா வாழ்வும் பணிகளும் - தொகுப்பு
பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க மாநாடு
நாள் : 21, 22-02-2009, சனி, ஞாயிறு

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai