அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்
::: அண்ணா பேரவை, தஞ்சாவூர் :::
15.06.2009 அன்று புதுப்பிக்கப்பட்டது

செப்டம்பர் 15 - அண்ணா பேரவை, தஞ்சாவூர் - சிறப்புக் கூட்டம் 1
அண்ணா பிறந்த நாளன்று தஞ்சாவூர் அண்ணா பேரவை அண்ணா நூற்றாண்டு விழாவைத் தொடங்கியது. நூற்றாண்டு விழாவின் முதலாவது சிறப்புக் கூட்டம் அண்ணா பேரவையின் துணைப்பொதுச் செயலாளரும், தஞ்சை அண்ணா பேரவையின் தலைவருமான திரு.வீ.சு.இராமலிங்கம் அவர்கள் தலைமையில் முனைவர் பேராசிரியர் இரா.கலியபெருமாள் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

தலைவர் அவர்கள் அனைவரையும் வரவேற்று அண்ணாவப்பற்றிய சில கருத்துக்களை பேசினார். இருதியாக அவர் பேசும்பொழுது, அண்ணா நூற்றாண்டு சிறப்புக் கூட்டம் இந்த ஆண்டு முழுதும் சிறப்பாகக் கொண்டாடப்படும் என்றும் ஒவ்வொரு மாதமும் அண்ணாவைப்பற்றி பேச சிறப்பு அழைப்பாளர்களை கொண்டு சிறப்புக் கூட்டம் நடத்தப்படும் என்றும் ஒவ்வொரு மாதமும் ஒருவருக்கு சிறப்பு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். அந்த வகையில் முதல் கூட்டத்தில் திருவையாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. இளங்கோவன் அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

சிறப்பு விருந்தினர் திரு.கலியபெருமாள் அவர்கள் அண்ணாவைப்பற்றிய நீண்ட ஆய்வுக் கட்டுரை ஒன்றை அப்படியே படித்துக்காட்டினார். அதுவே அண்ணாவைப்பற்றிய சிறப்புகள் அடங்கிய சிறப்புரையாக அமைந்தது.

அன்று அண்ணாவின் நூல்கள் விற்கப்பட்டன.


அக்டோபர் 25 - அண்ணா பேரவை- இரண்டாவது சிறப்புக் கூட்டம், தஞ்சாவூர்

தஞ்சாவூர் அண்ணா பேரவை சார்பில் அண்ணா நூற்றாண்டு விழாவின் இரண்டாவது சிறப்புக் கூட்டம் 25.10.2008 ஞாயிறு அன்று இனிதே நடைபெற்றது.

பேரவையின் தலைவர் திரு. வீ.சு.இராமலிங்கம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள். அவர் பேசும்போது இப்போதுள்ள ஈழத்தமிழர் பிரச்சனையையும் அதில் அப்போது அண்ணா கையாண்ட விதங்களையும் வைத்து கருத்துக்களை வழங்கினார்.

விழாவின் சிறப்பு சொற்பொழிவாளர் புதுக்கோட்டை 'ஞானாலயா' பா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அண்ணாவைப்பற்றி சிறப்பாக உரையாற்றினார். அண்ணாவின் எழுத்துக்கள், சொற்பொழிவுகள் பற்றி விரிவாகப் பேசினார்.

இதுவரை கிடைக்கப்பெறாமல் இருந்த அண்ணாவின் 'ஆற்றோரம்' என்ற தலைப்பி்ல் பேசிய சொற்பொழிவு கிடைத்துவிட்டது என்ற செய்தியை அவர் தெரிவித்தபோது கூட்டத்தில் இருந்த அனைவரும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். திருவள்ளுரில் கிடைத்த புத்தகத்தை பாரி நிலையம் பதிப்புக்கு ஏற்பாடு செய்துகொண்டிருப்பதாகவும் சொன்னார்.

அண்ணாவின் நூல்கள் சிடிக்கள் விற்கப்பட்டன.


அண்ணா பேரவை மூன்றாவது சிறப்புக் கூட்டம் - தஞ்சாவூர்
அண்ணா நூற்றாண்டு விழா மூன்றாவது சிறப்புக் கூட்டம் நவம்பர் 30 அன்று அண்ணா பேரவையின் சார்பில், இசையறிஞர் பி.எம்.சுந்தரம் அவர்கள் சிறப்புரையாற்றுவதாக இருந்தது. தமிழ் நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவிய மழை வெள்ளத்தின் காரணமாக கடைசி நேரத்தில் சிறப்பு விருந்தினர் வர இயலாத காரணத்தால், கூட்டம் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே செய்த விளம்பரகளின் காரணமாக பொதுமக்கள் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்திருந்த காரணத்தால், வந்தவர்கள் அமர்ந்து அண்ணாவைப்பற்றிய கருத்துக்களையும் தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர். சுமார் இரண்டு மணிநேரம் நடந்த இந்த கலந்துரையாடல் மூலமாக பல புதிய தகவல்களோடு செல்வதாக வந்திருந்தவர்கள் தெரிவித்தனர். திரு.பி.எம்.சுந்தரம் அவர்கள் பேசும் கூட்டம் எப்போது என்பது பின்னர் அறிவிப்பதாக தஞ்சாவூர் அண்ணா பேரவை தலைவர் திரு.வீ.சு.இராமலிங்கம் அவர்கள் தெரிவித்தார்.


27.12.2008 தஞ்சாவூர் அண்ணா பேரவை சிறப்புக் கூட்டம் 4

அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி ஒவ்வொரு மாதமும் தஞ்சாவூர் அண்ணா பேரவை நடத்திவரும் சிறப்புக் கூட்டம் வரிசையில் 27.12.2008 அன்று நடைபெற்ற 4-வது கூட்டத்தில்,
திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு அவர்கள் சிறப்புரையாற்றினார். அண்ணாவின் அரசியல் வாழ்க்கை பற்றிய ஆதாரப்பூர்வமான தகவல்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் அறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட வரலாற்று நிகழ்வுகளையும் அவர் அளித்தது பார்வையாளர்களுக்கு அரிய செய்திகளாக அமைந்தது. மேலும் பல தொடர் சொற்பொழிவுகளாக அவரை அழைத்து பேச வைக்க இருப்பதாக தலைவர் வீ.சு.இராமலிங்கம் தெரிவித்தார். தான் தயாராக இருப்பதாக க.திருநாவுக்கரசு அவர்கள் ஒப்புக்கொண்டார்.

24.01.2009 தஞ்சாவூர் அண்ணா பேரவை சிறப்புக் கூட்டம் 5
தஞ்சாவூர் அண்ணா பேரவையின் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவின் 5-வது சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
அண்ணாவோடு நெருங்கிப் பழகியவர்களுள் ஒருவரான இசையியல் வல்லுநர் டாக்டர் பி.எம்.சுந்தரம் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். அண்ணாவோடு தான் பழகிய காலத்தில் அவருடன் எற்பட்ட அனுபவங்கள் பற்றிய பல செய்திகளை வழங்கினார். அதில், அண்ணாவுக்கு இசையில் இருந்த ஈடுபாடு பற்றியும், அதுபற்றிய நுணுக்கங்களையும் அவர் அறிந்திருந்தார் என்பது பற்றியும் சில சம்பவங்கள் மூலம் எடுத்துக்காட்டினார். அதில், “ஒரு முறை நான் அண்ணாவிடம் உங்களுக்கு எந்த ஊர் என்று கேட்டதற்கு அண்ணா ‘நாரீசு ரம்பா, நகரேசு காஞ்சி, புஷ்பேசு சாதி, புருஷேசு விஷ்ணு’ என்று சமஸ்கிருதத்தில் வரும் வரிகளை சொன்னார். உங்களுக்கு சமஸ்கிருதம் கூட தெரியுமா என்று கேட்டதற்கு. அதெல்லாம் படிக்கவேண்டும் எனக்கு ஆசை என்று சொன்னார்” என்ற செய்தியை வழங்கினார். மேலும் ஒருமுறை சித்தூர் சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் காஞ்சிபுரத்தில் நடத்திவரும் தியாகராஜ சுவாமி விழாவில் சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளையே பாடிக்கொண்டிருந்தார். அப்போது முதலமைச்சராக இருந்த அண்ணா அவர்கள் வருகிறார்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். காஞ்சிபுரம் வந்த அண்ணா அவர்கள் சிறிது நேரம் தனது சிற்றன்னையிடம் பேசிவிட்டு பனியன், வேட்டி துண்டு, வெற்றிலை பெட்டியுடன் வந்து தன்னோடு வந்திருந்த பணியாளர்களை அனுப்பிவிட்டு முன் வரிசையிலே வந்து உட்கார்ந்தார். சித்தூர் சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் அப்போதுதான ஒரு தியாகராசர் கீர்த்தனையை பாட ஆரம்பித்தார், அண்ணாவைப் பார்த்த உடன் அந்த கீர்த்தனையை நிறுத்திவிட்டு அண்ணாவுக்காக தமிழில் வள்ளி மனாளா.... என்று பாட ஆரம்பித்தார். உடனே அண்ணா எழுந்து அண்ணா "இதையெல்லாம் நாங்கள் எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறோம். உங்க பாட்டைதான் நான் இப்போது கேட்க வந்திருக்கிறேன். நிங்கள் தியாகராசர் பாடலையே பாடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார். இது அண்ணா பழமையை தூக்கி எறிய விரும்பாதவர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்று தெரிவித்தார்.
விழாவில் 'உலக உத்தமர் மகாத்மா காந்தி' என்ற அண்ணாவின் கட்டுரை அடங்கிய சிறிய நூல் அண்ணா பேரவை வெளியிட்டது. அதை பி.எம்.எஸ் அவர்கள் வெளியிட பூண்டி புஷ்பம் கல்லூரி பேராசிரியர் மாசிலாமணி அவர்கள் பெற்றுக்கொண்டார்.
அண்ணா பேரவை தலைவர் வீ.சு.இராமலிங்கம் தொடக்கவுரையாற்றினார்.

21.02.2009 தஞ்சாவூர் அண்ணா பேரவை சிறப்புக் கூட்டம் 6
தஞ்சை அண்ணா பேரவை நடத்தும் அண்ணா நூற்றாண்டு விழா 6-சிறப்புக் கூட்டத்தில், அண்ணாவின் ஆட்சி என்ற தலைப்பில் இரா.சுப்பராயலு எம்பிஏ தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னால் துணை பதிவாளர் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் முக்கிய நிகழ்வுளான அவர் தமிழுக்கு செய்த அரும்பணிகள், தமிழ் நாடு பெயர் மாற்றம், உலகத் தமிழ் மாநாடு, இருமொழிக் கொள்கை விதவை மறுமணச்சட்டம் ஆகியவைகள் பற்றிய முழுமையான செய்திகளை தந்தது சிறப்பாக அமைந்தது. அண்ணாவின் ஆட்சி பற்றி மேலும் சில தகவல்களை தலைவர் வீ.சு.இராமலிங்கம் அவர்கள் வழங்கினார்.

21.03.2009 தஞ்சாவூர் அண்ணா பேரவை சிறப்புக் கூட்டம் 7
பேரறிஞர் அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு அண்ணா பேரவை நடத்திவரும் சிறப்புக் கூட்டங்கள் வரிசையில் ஏழாவது சிறப்புக் கூட்டம் 21.03.2009 அன்று மாலை தஞ்சாவூர் பெசண்ட் அரங்கில் நடைபெற்றது. அண்ணாவின் நாடகங்கள் என்ற தலைப்பில் தமிழ்ப்பல்கலைக்கழக நாடகத்துறைப் பேராசிரியர் முனைவர் க.இரவீந்திரன் அவர்கள் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்கள். அண்ணாவின் நாடகங்களில் இடம்பெற்ற நுணுக்கங்களை விளக்கிப் பேசினார். குறிப்பாக நாடகங்களில் முதன்முதலில் ஃப்ளாஷ்பேக் காட்சிகளை கையாண்ட விதத்தையும், க்ளைமேக்ஸ் காட்சிகளின் சிறப்புப் பற்றியும் விளக்கினார். மேலும் அண்ணாவின் நாடங்களில் இடம்பெற்ற முக்கிய காட்சிகள் பற்றிய தனது ஆராய்ச்சிக் குறிப்புகளை எடுத்துக்கூறினார். தஞ்சை அண்ணா பேரவையின் தலைவர் வீ.சு.இராமலிங்கம் வர்கள் வரவேற்றுப் பேசும்போது, கலைத்துறையில் அண்ணாவின் ஈடுபாடு பற்றியும், அதன் மூலம் மக்களுக்கு அவர் செய்த சேவைகள் பற்றியும் கூறினார். அடுத்தக் கூட்டத்தில் சிறப்பு பேச்சாளர் முனைவர் க.இரவீந்திரன் இயக்கி மேடையேற்றிய அண்ணாவின் செவ்வாழை நாடகத்தை சின்னத்திரையில் திரையிடப்போவதாக அறிவித்தார்.

 

25.04.2009 அண்ணா நூற்றாண்டு – தஞ்சாவூர் – 8 ஆம் சிறப்புக் கூட்டம்
தஞ்சாவூர் அண்ணா பேரவையின் அண்ணா நூற்றாண்டு விழாவின் 8வது சிறப்புக் கூட்டம்  நடைபெற்றது. இதில் கவிஞானி அ.மறைமலையான் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அண்ணாவின் பார்வையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். வீ.சு.இராமலிங்கம் அவர்களை விருந்தினரையும் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களையும் வரவேற்றுப் பேசினார்.

30.05.2009 அண்ணா நூற்றாண்டு – தஞ்சாவூர் – 9 ஆம் சிறப்புக் கூட்டம்
தஞ்சாவூர் அண்ணா பேரவையில் அண்ணா நூற்றாண்டு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடைபெற்ற 9வது சிறப்புக் கூட்டத்தில் அறிஞர் அண்ணாவால் வடஆர்காடு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டவரும் முன்னால் சட்டமன்ற உறுப்பினருமான தோப்பூர் திருவேங்கடம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். விழாவில் தோப்பூரார் நடத்திவரும் தென்புலம் என்ற பத்திரிகையின் அண்ணா நூற்றாண்டு மலர் வெளியிடப்பட்டது. தஞ்சை அண்ணா பேரவையின் தலைவர் வீ.சு.இராமலிங்கம் அவர்கள் வெளியிட முன்னால் சட்டமன்ற உறுப்பினர் குழ.செல்லையா அவர்கள் பெற்றுக்கொண்டு சொற்பொழிவாற்றினார். அப்போது அவர் அண்ணா பேரவை தமிழகமெங்கும் அமைக்க தன்னாலான உதவிகளை செய்வதாக உறுதியளித்தார். தோப்பூரார் அவர்கள் சிறப்புரையாற்றுகையில் அண்ணாவோடு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், அண்ணாவின் ஆட்சியின் சிறப்புகளையும் எடுத்துரைத்தார். அண்ணாவால் தான் சட்டமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டபோது அண்ணாவருக்கு தேர்தல் செலவுக்குக் கொடுத்த தொகை நான்காயிரம் என்ற தகவலையும், பல கோடீஸ்வரர்களையும், இலட்சாதிபதிகளையும் சாதாரண படித்த வேட்பாளர்களை வைத்து தேர்தலில் வெற்றிபெற செய்தார் என்பதையும் தெரிவித்தார். வீ.சு.இராமலிங்கம் அவர்கள் வரவேற்றுப் பேசுகையில் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அறிஞர் அண்ணாவின் அனுகுமுறைகள் பற்றி விளக்கினார். வழக்கம்போல அண்ணாவின் நூல்கள் விற்கப்பட்டன.

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.