அண்ணா கடிதங்களில் அரசியல் தகவல்கள்
(முனைவர் மு. ஞானத்தாய்
தேர்வுநிலை விரிவுரையாளர், இணைப் பேராசிரியர்,
பச்சையப்பன் மகளிர் கல்லூரி,
காஞ்சிபுரம்
)

அண்ணாவின் பல்வேறு இலக்கியப் படைப்புகளைப் பற்றி ஆய்வு எழுந்த வண்ணம் இருக்கிறது. ஆய்வாளர் பலர் அண்ணாவின் நாடகங்கள், நாவல்கள், சிறுகதைகள், பேச்சுகள், நடை முதலான தலைப்புகளில் ஆய்வு நிகழ்த்தியுள்ளனர். அண்ணாவின் கடிதங்கள் குறித்து ஆய்வு அரியனவே நிகழ்ந்துள்ளது.

அண்ணா தம் திராவிட நாடு வார இதழில் 8.5.1955 முதற்கொண்டு தொடர்ந்து தம்பிக்கு கடிதங்கள் வரையத் தொடங்கினார். 1962 பிற்பகுதியில் அகவிலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு வேலூர் சிறைக்குச் சென்றார். கடிதம் எழுதுவது தடைப்பட்டது. 2.6.1964 முதல் தொடங்கி, தாமே நடத்திய காஞ்சி இதழில் தொடர்ந்து எழுதினார்.

ஒவ்வொரு கடிதமும் இதழ் அளவில் ஆறு முதல் பன்னிரண்டு பக்கங்கள் வரையில் உள்ளது. அண்ணா எழுதிய கடிதங்கள், ஆயிரக்கணக்கானவை தம்பியர்க்கு, கழகத்தவர்க்கு எழுதிய உண்மைச் செய்திகள். அண்ணா எழுதிய கடிதங்களில் பாகம் ஒன்றில் காணக்கிடக்கும் அரசியல் தகவல்கள் பற்றி தகவல் கொடுப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

கப்பல் கூறும் அரசியல்
செக்கிழுத்தார் சிதம்பரனார் என்ற நெஞ்சை நெக்குருகச் செய்யும் சேதியை எடுத்துச் சொல்லச்சொல்லி, பலபலன் கண்டனர் காங்கிரசார். கப்பலோட்டிய தமிழன், வாழ்க்கைக் கலம் சுக்குநூறாயிற்று. அந்தச் சோகக் கதையைக் கூறிக்கூறி அரசியல் உல்லாசப் படகினிலே ஒய்யாரமாகச் செல்கின்றனர் பலர். இதோ கேள் தம்பி, ஒரு கப்பலின் கதை கூறுகிறேன். இதைக் கதை என்று கூறுவதால் கவனச் சிதறல் கூடாது. இது நவிலும் நயமான கருத்தே இந்திய அரசு, கப்பல் செயல்பட உதவ வேண்டும் என்பதே. இதற்கு மத்திய அரசே மனம் திறக்க வேண்டும் என்கிறார் அண்ணா!

சென்னை - ரங்கூன் செல்லும் கப்பலொன்று, சிந்தியா கம்பெனியார் நடத்தி வந்தனர்.

முன்பு வெள்ளைக்காரக் கம்பெனி நடத்தி வந்த தொழில் சுதேசி இயக்கத் தத்துவம் காரணமாகச் சிந்தியாவுக்குக் கிடைத்தது.

சிந்தியா கப்பல் விட ஆரம்பித்ததும், வெள்ளைக்காரக் கம்பெனி விலகிக் கொண்டது.

இருபது நாட்களுக்கு ஒரு முறை சிந்தியா கப்பல் செல்லும்.

இதிலே இங்கிருந்து ஏழை எளிய மக்களே ஏராளமாகச் செல்வர். கட்டணம் அதற்குத் தகுந்தபடி இருந்து வந்தது.

பர்மாவுக்கு இங்கிருந்து பண்டங்கள் போகும். பர்மாவிலிருந்து தேக்கு முதலிய பண்டங்கள் இங்கு வரும். மொத்தத்தில் தென்னாட்டவருக்கு வசதியானது இந்தக் கப்பல் போக்குவரத்து.

நஷ்டம் என்று காரணம் காட்டியும், கப்பல் பழசு, பழுதாகிவிட்டது. புதுப்பிக்கப் பெரும் பொருள் செலவாகும் என்று கூறியும் சிந்தியா இப்பொழுது இந்தக் கப்பலை நிறுத்திவிட்டது.

ஏழைக்கு இடி! சென்னை - ரங்கூன் வியாபாரத் தொடர்புக்குத் தாக்குதல் - கண்டனம் கிளம்பியிருக்கிறது.

இனி - சென்னையிலிருந்து கல்கத்தாவுக்குக் கப்பலில் சென்று அங்கிருந்து பர்மாவுக்குக் கப்பல் தேட வேண்டும்.

அந்தக் கப்பலில் ஏழைகளுக்கான மேல் தட்டு, பிரயாண வசதி மலிவான கட்டண வசதி கிடையாது.

இப்போது செலவாவது போல இரட்டிப்புச் செலவாகும்.

பண்டங்களை அனுப்புவதிலும் பாரம் ஏறும். பாரம் ஏறினால் வடக்கே வங்கம். வங்கத்துக்கு அருகே உள்ள இடங்களிலிருந்து கிளம்பும். சரக்குடன் தென்னகத்துக்குச் சரக்குப் போட்டியிட்டுச் சமாளிக்க முடியாது. இக்கடிதம் தரும் தகவல்கள்

1) பர்மாவிற்கும் - தமிழகத்திற்கும் வணிகத் தொடர்பு இருந்துள்ளது.
2) சென்னைக்கும் - ரங்கூனுக்கும் சென்றுவர உதவிய கப்பல் சிந்தியா கப்பல்.
3) தென்னாட்டவர்க்கு - வசதியானது.
4) ஏழை எளியவருக்குக் கட்டணக் குறைவு உண்டு.
5) நஷ்டம் என்று மொழிந்து கஷ்டப்பட வைத்தது மத்திய அரசு.
6) தென்னாட்டவர், வடநாட்டவருடன் சரக்குப் போட்டியில் சமாளிக்க இயலாது. அண்ணாவினது நாட்டுப்பற்று. அதிலும் குறிப்பாகத் தென்னாட்டுப் பற்று இனப்பற்று.

இந்திய சர்க்கார் மேற்கொள்ள வேண்டிய செயல்களை நாசூக்காக வெளியிடும் பாங்கு.

பவனம் தரும் பாடம்
இந்திய நாட்டிலே வேறுபாடு காணக்கிடக்கிறது இதை வேரோடு அறுக்க வேண்டும். அரசியல் ஆதாயம் அகற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு புனையப்பட்ட கடிதம் அங்கே பவனம் இங்கே படம் என்ற தலைப்பு. இதில்,
... வட நாட்டினர் என்றால் அவன் அகதியாகட்டும், அன்னிய நாடுகளில் வசிப்பவனாகட்டும், ஆளும் இனத்தவன் என்ற காரணத்தால் மதிப்பும் சலுகையும் பெறுகிறான்.

அகதிகளுக்காக இந்திய சர்க்கார் அள்ளித் தந்த பணம் கொஞ்சமா?

அகதிகளுக்கு இங்கு எல்லா வகையான வியாபாரமும் செய்து கொள்ள வரியும், வசதியும் தரப்பட்டன.

புதிய அங்காடிகளே அமைக்கப்பட்டன.

.... இதோ இலங்கையில் இடர்ப்படுகிறார்கள் திராவிடர் - நாட்டற்றவர்கள் என்று நையாண்டி செய்யப்படகிறார்கள் - யார் அவர்களைக் காப்பாற்றக் கவலை கொள்கிறார்கள்.
இந்தப் பிரச்சினையைச் சென்னை சர்க்கார் கவனித்துக் கொள்ளும் என்று தேஷ்முக் தெளிவளிக்கிறார். எவ்வளவு திகைப்பூட்டும் பிரச்சினையையும் மிகச் சாதாரணமாகக் கருதி மிகத் தாராளமாக வாக்களித்துக் கொண்டு வரும் காமராசரோ, இது ஒரு பிரச்சினையே அல்ல, இலங்கையிலிருந்து வருபவர்கள் தாங்களாகவே இங்கு வேலை தேடிக் கொள்வார்கள், பிழைத்துப் போவார்கள் என்று கூறிவிடுகிறார்.

பம்பாய் மாகாணக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பட்டேல் கிழக்கு ஆப்பிரிக்கா சென்று அங்கு வாழும் இந்தியர்களிடம் பல இலட்ச ரூபாய் வசூல் செய்துகொண்டு வந்திருக்கிறார். இந்த பவனம் அமைக்கும் செயலில் ஈடுபட்டிருக்கிறார்.

இலட்சக் கணக்கிலே பணம் தந்து, பட்டீலை மகிழ்விக்கச் செய்ய முடிகிறது வடவரால்.

கண்ணீரைத் தான் காண்கிறோம் இலங்கையில், இடர்ப்படும் திராவிடரிடம் அதைக்காண வெட்கமும் வேதனையும் அடைகிறோம்.

அவர்களுக்கென்று இங்கோர் தாயகம் இருக்கிறது.

எல்லா வளமும் கொஞ்சும் நாடு.

எனினும் அவர்களுக்கு இங்கு ஒரு கவளம் சோறு இல்லை.

அவர்கள் படும் அவதியைத் துடைத்திடும் ஆற்றல் படைத்த ஒரு சர்க்கார் இல்லை.

அவர்கள் சொந்த நாட்டிற்கே அகதிகளாக வந்து சேரும் போது வித மக்களைக் கட்டித் தழுவிடும் நலிவுற்ற தாய் போலாகிறது நாடு.

வாழ்கிறார்கள் வளமாக வெளிநாடுகளிலேயும், வடவர், அந்த வசீகரத்தின் மெருகு கெடாதிருக்கச் செய்வதற்காக பம்பாயில் பவனம் கட்டுகிறார் படீல்.

வடக்கு வளர்கிறது. தெற்கு தேய்கிறது என்பதோட இலங்கைத் தமிழர்களின் அவலம் துடைக்க அவனியில் ஓர் அரசு இல்லை என்ற ஆதங்கம் இக்கடிதத்தில் எங்கும் இழையோடிக் கிடக்கிறது. வடநாட்டு அரசு அவர்களை மட்டுமே கவனிக்கிறது. மற்றவரை மறக்கிறது என்று மனம் புழுங்குகிறார் அண்ணா. அண்ணாவின் பார்வை தொலை நோக்குப் பார்வை தொல்யை£ல் துவளும் எப்பகுதித் தமிழரையும், தலைநிமிரச் செய்ய வேண்டும் என்ற உத்வேகம் உதிரத்தில் ஓடிக் கொண்டே இருந்தது என்பதை எண்ணிப் பார்க்கும் தமிழன் ஒவ்வொருவரும், தமிழர்களுக்குக் குரல் கொடுக்க வேண்டும். கொடுமை நிகழக் கூடாது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். சுட்டிக் காட்டுவதோடு, அப்போதிருந்த பம்பாய் மாகாணக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் படீலைப் பற்றிய செய்தியையும், தமிழகத் தலைவர், காமராசரைப் பற்றிய தகவலையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

நேருவும், குருஷேவும் தங்கத்திரை என்ற கடிதத்தின் இறுதியில் இந்திய நாட்டுப் பிரச்சினையை, ரஷிய நாட்டு அதிபர் வந்து கண்டிக்கும் தன்மையைக் காண முடிகிறது.

... பாரதத்தின் முடிசூடா மன்னனோ ஜீப் ஊழல், உரபேர ஊழல், மாளிகை வாங்குவதில் ஊழல் என்று அடுக்கடுக்காக தன் ஆட்சியிலே ஊழல்கள் நடந்து கொண்டிருப்பது பற்றி அக்கறையே காட்டாமல் ஒரே அறையில் 32 பற்களும் வீழ்ந்ததா! என்று வியந்திடும் நிலையில் இருக்கும் போது பெரம்பூரில் எஃகு பாழாக்கப்படுவது பற்றியா அக்கரை காட்டுவார். குருஷேவ் வந்து அல்லவா இதைக் கூறி கண்டிக்க வேண்டியிருக்கிறது.

மக்களை ஆள்வது என்பதற்கும், மக்களாட்சி நடத்துவது என்பதற்கும் உள்ள வித்தியாசம் நன்கு தெரியத்தானே செய்கிறது. நேருவுக்கும் குருஷேவுக்குமே மனப்போக்கிலும், கண்ணோட்டத்
திலும் இந்த வகையான மாறுபாடு இருக்கிறது என்று இந்திய நாட்டு பிரதமராகிய நேருவிற்கு இல்லாத பற்று ரஷிய நாட்டு அதிபருக்கு இருப்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது மேற்குறிப்பிட்ட அரிய செய்தி.

முடிவுரை
அண்ணா தமது விருப்பத்தை வெளிப்படுத்த புலன்களால் உணர முடியாதவற்றைப் புலனறிவுக்கு உட்பட்டு சுவைக்க, சிந்திக்க, தமது படைப்பாற்றலை வெளிப்படுத்த கடித - இலக்கியத்தைப் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளார்.

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai