நீரினும் இனிய சாயல் அண்ணா
திரு. முத்து

உலக உத்தமர் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டபோது கலங்கிக் கண்ணீர் விட்டதைவிட அதிகமாக மக்கள், பேரறிஞர் அண்ணா அவர்கள் காலமானபோது அதிர்ச்சியுற்று - ஆற்றாது அழுதார்களே - அது எதனால்?

இந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் நாள் அண்ணா பிறந்த நாள் விழாக்கள் நடைபெற்ற அன்று, படமாகத் தொங்கிய அவர் கனிவுத் திருமுகத்தைக் கண்டபோது இந்தக் கேள்வி நெஞ்சில் எழுந்தது.

அவர் இழப்பைத் தாங்க முடியாமல் மக்கள் தவித்தார்களே அது எதனால்?

அவர் வெறும் கட்சித் தலைவர் - அரசியல் ஞானி - அறிவுலக மேதை - என்பதாலா? இல்லை; நிச்சயமாக இல்லை!

அத்தனைக்கும் மேலாக, மக்கள் மனம் புரிந்து வாழ்ந்த மனிதர் - அண்ணா!

மக்களோடு மக்களாய் - தொண்டரோடு தொண்டராய் - அவர்கள் வாழ்வின் இத் துன்பங்களில் இழைத்து ஊடாடிய மனிதர் - அண்ணா!

பேரறிஞர் அண்ணா அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நாட்களில் - தன்னேரிலாத எதிர்க்கட்சித் தலைவராகத் தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் செய்த நாட்களில் - அவருக்குத் துணையாகச் செல்லும் நல்வாய்ப்பு எனக்கு அடிக்கடி ஏற்பட்டது; அப்போதெல்லாம் அவரை, நான் மிகக் கூர்மையாகக் கவனித்திருக்கிறோன்; அவர் பிறந்த நாள் விழா நேரத்தில், அவரைப் பற்றிய சில நிகழ்ச்சிகள் நெஞ்சில் மேலோங்கி நிற்கின்றன!

சுற்றுப்பயணங்கள் செல்லும் நாட்களில், எங்கோ மூலை முடுக்கில் இருக்கின்ற ஊர்களில் கூடக் கழகத் தொண்டர்களைச் சந்திக்கின்ற போது - அவர்கள் யாராக இருந்தாலும் - அவர்கள் வாழ்க்கையைப் பற்றிக் கேட்பார்.

தம் கட்சித் தொண்டர்களின் வாழ்க்கைப் போக்கை நோட்டமிடும் போக்கில், மனத்தைத் தொடுவன சில கேள்விகள்:

போன தடவை வந்தபோது, கொடிமரத் தகராறில் காங்கிரசக்காரர்கள் வெட்டிட்டதால் கையிலே காயம் இருந்ததே, இப்போ எப்படி இருக்கு? இந்தக் கொடிக் கம்பந்தானே அது?

மற்றோரிடத்தில்,
உன் பெரிய பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தாயே - நல்ல இடம் அமைந்ததா?
புன்னகையோடு பிறக்கும் கேள்வி! அதற்கும் பதில் வந்த உடனே, கல்யாணத்துக்கு என்னிடம் தேதி கேட்காதே; அந்த நேரத்தில், இங்கே இருக்கின்ற யார் தலைமையிலாவது கல்யாணத்தை நடத்திவிடு; வீண் செலவு செய்யாதே! ஓர் அறிவுரை இன்னொரு இடத்தில், உன் மனைவிக்கு உடம்பு சரியில்லைன்னு பெரிய டாக்டரிடம் காட்டச் சென்னைக்கக் கூட்டி வந்தாயே - இப்போது எப்படி இருக்கு?

பிறிதோரிடத்தில்
பையனைப் படிக்கவைக்க நிலத்தை அடமானம் வச்சியே - இப்போ நிலைமை எப்படி இருக்கு?அதை மீட்டிட்டாயா?பையன் நல்லாப் படிக்கிறானா?
இப்படி - நெஞ்சைத் தொடும் சில கேள்விகள்

தங்கள் வாழ்வில் அறிஞர் அண்ணா அவர்களுக்கு இருக்கும் அக்கறையில், அவர்கள், லயித்துப் போவார்கள்.

ஒவ்வொருவரைச் சந்திக்கிற போதும், அவர் பற்றிய ஒரு நிகழ்ச்சி அவர் நினைவுக்கு வரும்!
அண்ணாவின் வியப்பூட்டும் நினைவாற்றல் போலவே, ஒரு பார்வையில் பட்டென்னு சூழ்நிலையைப் படம் பிடிக்கும் கூர்த்த மதி!

அவருக்கு இயல்பாகவே அமைந்துவிட்ட அளப்பரிய பேராற்றல் அது.

இது என்ன - இந்தப் பக்கம் புதுசா ஓர் அறை? போன தடவை நான் வந்த போது இல்லையே!

பையனைக் காலேஜிலே சேர்த்திருக்கேன்; அவனுக்குப் படிக்க வசதியா இருக்கட்டும்ணு இந்தச் சின்ன அறையைக் கட்டினேண்ணா! இப்படி இலட்சக்கணக்கானவர்கள் வாழ்வின் சுகதுக்கங்கள் - நெளிவு சுழிவுகள் பற்றித் தெரிந்து வைத்திருந்து, வாய்ப்பு வரும்போது அவை பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ளும் இந்த ஆற்றல் வேறு யாருக்கு வரும்?

அதனால்தான், அவர் மறைந்து போனார் என்று அறிந்ததுமே - ஆபத்து என்பதையும் உணராமல் - இரயில் வண்டியின் மேற் கூரையிலும் பயணம் செய்து கடைசி முறையாக அவர் திருமுகத்தைக் காணத் துடித்தார்கள்!

பெரியாரிடம் சிக்கனப் பயிற்சி பெற்றிருந்தார்; ஆனால் எளிமை, அவருக்கு இயல்பாக உள்ள ஒன்று!

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கென்று கொடியைத் தேர்ந்தெடுத்தாரே - அதில்தான் எவ்வளவு எளிமை!

மக்கட் சந்தடியும் - போக்குவரத்து வசதிகளும் அற்ற ஒரு குக்கிராமத்தில் வாழும் கட்சியின் அடித்தளத் தொண்டர் கூட ஒரு கறுப்புத் துணியையும் - ஒரு சிகப்புத் துணியையும் வைத்துத் தைத்துவிட்டால், கொடி தயார்!

தேர்தல் சின்னம் தேர்ந்தெடுத்தாரே - அது, எவ்வளவு முன் யோசனையுடன் கூடியது என்கிறீர்கள்!
இரண்டு மலைகள் போன்ற வளைவுகள் - இடையே ஓர் அரை வட்டம் - அதன் மேலே, மேல் நோக்கிக் கதிர்கள் - அவ்வளவுதான்; வசதியற்ற இடங்களில் கூடக் கழகத் தோழர்கள் - மிக எளிதில் - நினைத்த இடத்தில் அதனைப் பொறித்திட முடிந்ததே! அதுதான் எவ்வளவு எளிமை!
அண்ணா அவர்களைத் தோழர்கள் பாராட்டிப் பெருமை பேசினால், அந்தப் பெருமைகளுக்கெல்லாம் காரணம் நீங்கள்தான் என்பார்!

குற்றஞ் சாட்டுவது போல் யாரும் பேசிவிட்டாலோ, அத்தனைக்கம் தாமே பொருப்பேற்றுக் கொண்டு, என்ன செய்ய? நன் ஐந்தடி உயரந்தான்; என்னால் இவ்வளவுதான் எட்ட முடிகிறது; இதற்குமேல் முடியவில்லை என்பார்.

06.03.1967-ல் சென்னையில் - இராஜாஜி மண்டபத்தில் தமிழக முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்து வெளிவந்ததும், காவல் துறையின் கட்டுக்காவல்களை மீறி - கைகளை அகல விரித்தபடி மக்களை நோக்கி ஓடினாரே - அந்த மனத்தை என்னவென்று சொல்ல? திரும்பி வந்து வண்டியில் ஏறியபோது, கசங்கி இருந்த கண்களை-மேல் துண்டால் - மெல்லத் துடைத்துக்கொண்டாரே!

அவர், மக்கள் தலைவரே! மக்கள் காவலர்! அதனால்தான் காவலரின் துணையையும் உதறிவிட்டு, மக்களிடம் ஓடினார்!

அதே நாள் 06.03.1967 மாலையில் - சென்னைக் கோட்டைக்குள் - இராணுவத்தினர் திடலில் அரசு ஊழியரைக் கூட்டிவைத்துப் பேசுகையில், தோழர்களே என்று விளித்தாரே - அது என்ன அழைப்பு!

ஏ, அப்பா! என்ன அற்புதமான மந்திச் சொல்(நுஉயவேபே) என்றல்லவா நாளிதழ்கள் தலையங்கம் தீட்டி அண்ணாவை விமர்சித்தன!

சொல்லுகின்ற நிலையாலும் - நேரத்தாலும் - உணர்ச்சிக் குழைவினாலும்தானே, வெறுஞ்சொல், மந்திரம் ஆகிறது!

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழிதானே மந்திரம் என்பதம் திறமைகளை வெளிப்படுத்துவதற்காக அண்ணா அவர்கள், எதையுமே சொன்னதில்லை - செய்ததில்லை!

கழகத்தின் சேவையில் - அவரையும் மீறி அந்தத் தனித் திறமைகள் வெளிப்பட்டு - நம் கவனத்தைக் கவர்ந்து நம் பாராட்ப் பெற்றுவிடும் - அவ்வளவுதான்!

ஆரவாரமில்லாமல் அமைதியாகக் காரியம் ஆற்றுவதில், அவருக்கு மிக விருப்பம்!

யேல் பல்கலைக் கழக விருந்தினராய் மெரிக்க நாடு சென்றிருந்தபோதுகூட, இப்படிப் பெரிய மனிதராக வந்து, தாம் எல்லார் கவனத்தையும் கவராமல், ஓர் எளிய குடிமகனாய் வந்து அமெரிக்கர் வாழ்வினைப் புரிந்துகொள்ள முடியவில்லையே!

என்று மிக வருந்தினாராம் - அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக் கழகத்து டாக்டர். எம்.எஸ்.உதயமூர்த்தி எழுதியிருந்தார்.

அண்ணா அவர்களே, மேலை நாட்டு உடையில் பார்ப்பதில் நாம் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறோம்? ஆனால், தொடர்ந்து அதை அணிந்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்ட போது, அவர் தேனைப்பட்டதை, அதே டாக்டர் உதயமூர்த்தி எழுதியிருந்தார்.

பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு எளிமையில் அப்படி ஒரு நாட்டம் இருந்ததனாலேதான் அவரோடு தொடர்புகொண்ட இலட்சக்கணக்கானவர்களின் நெஞ்சங்களில், அவர் அமைவாகக் குடியிருக்கிறார்!

அறிஞர் அண்ணா அவர்களைப் பற்றி - அவர் வாழ்ந்த நாட்களில் - அடிக்கடி குறை கூறுவோர் உண்டு.

பல நேரங்களில், 10 மணிக்கு என்று ஏற்பாடு செய்திருந்த கூட்டத்துக்கு, அண்ணா, பகல் 1 மணிக்குத்தான் வந்தார் - 2 மணிக்குத்தான் வந்தார் என்று சிலர் குறைபடுவதுண்டு. ஆனால், அதற்குக்கூட, அண்ணாவின் அன்பும் - மென்மையுமே காரணம்!

சுற்றுப்பயணத்தின்போது ஒரு நாளைக்கு 20 நிகழ்ச்சிகள்தான் திட்டமிடப்பட்டிருக்கிறது என்றால் - இடையில் ஓர் ஊரிலிருந்து இன்னொரு சேராமல் - இரண்டு கொடியேற்றல் இருக்கும்;

இரண்டு மாலை அணிவித்தல் இருக்கும்!

இந்தச் சேரியிலேயே, துணிந்து, முதன் முதலாகக் கூரை வீடு கட்டியிருக்கிறேன் அண்ணா; நீங்கள் வந்து கால் மிதித்துவிட்டுப் போங்களேன் என்பார் ஒருவர்!

இரண்டு வார்த்தை பேசுங்கள் அண்ணா என்று கண்ணீரில் குழையும் வேண்டுகோள்! அதன் பின்னே, அதை ஆதரிக்கும் பல குரல்கள்!

அன்பாலே இளகிய அந்த நெஞ்சங்களின் வேண்டுகோளை மறுக்கின்ற மனவலிமை அண்ணா அவர்களுக்கு என்றுமே இருந்ததில்லை!

அதுதான், அடுத்தடுத்த நிகழ்ச்சிகளுக்கு அண்ணா காலந்தாழ்ந்து சென்றமைக்குக் காரணம்!

அன்புக்கு இல்லை அடைக்குந் தாழ் என்று வள்ளுவர் என்ன நயம்படச் சொல்லியிருக்கிறார் என்பது, இப்போதுதான் விளக்கம் பெறுகிறது! காலை எட்டு மணிக்கு ஒரு வாய் காப்பி குடித்ததோடு சரி; பகல் இரண்டு மணிக்கு எங்காவது ஓரிடத்தில், புறாவைப்போல கொஞ்சம் உண்டிருப்பார்; அதோடு, இரவு 1-மணி 2 மணி வரை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார்; நேரம் ஆக ஆக உடல் சோர்வுறும்; விரைந்து நிகழ்ச்சிகளை முடித்துக்கொள்ள எண்ணுவார்; ஆனால், மணிக்கணக்கில் தமக்காக ஆவலோடு காத்திருக்கும் மக்கள் கூட்டத்தைக் கண்டதுமே - தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டு அவர்களை ஏமாற்றிவிடக் கூடாதே என்று நெடுநேரம் பேசுவார்!
தொடர்ந்து, 20-30 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கையில், ஆங்காங்கே தொழர்கள் தரும் சோடாவை மட்டுமே சாப்பிடுவார்!

தொடர்ந்து பேசுவதால் உண்டாகும் நாவறட்சியைப் போக்கிக்கொள்ளவும் - உடல் சோர்வை நீக்கிக்கொள்ளவும் ஆக - அந்தச் தோடாவிலே சேர்த்துச் சாப்பிடக் கொஞ்சம் உப்பும், சில எலுமிச்சம் பழங்களும் வாங்கி வைத்துக்கொள்ளும்படி, காரில் உடன் வரும் தோழர்களிடம் முன்னதாகவே சொல்லிவிடுவார்; ஏனென்றால், தமக்கு அவை தேவைப்படும் அந்த நேரத்தில், அவர் அதைக் கேட்டு - கூட்டம் ஏற்பாடு செய்த தோழர்கள், இல்லை என்று தவிக்கக் கூடாதாம்! ஐயோ - மிக எளியதான இதனைக் கூட அண்ணாவுக்குக் கொடுக்க முடியாமல் போய்விட்டதே என்று தோழர்கள் மனம் கவலக்கூடாதாம்!

அப்பப்பா! என்ன மனம் அண்ணாவுக்கு!

நீரினும் இனிய சாயல் பாரி

என்று பாரியைப் பற்றிக் கபிலர் பாடிய உணர்ச்சி வரிகள் நினைவை நிறைக்கின்றன!

அண்ணாவுக்குத்தான் அது எவ்வளவு பொருத்தம்!
(முத்து - கழகக் குரல் - 06.10.1974)

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai