சிறப்புக் கட்டுரை


தை. . . தை. . . என்று. . .
டாக்டர் அண்ணா பரிமளம்

தை பிறந்தால் வழி பிறக்கும்

மனிதா நீ தை . . . தை என்று மகிழ்ந்து ஆடியது போதும்!

இனி நீ சிலரை உன் காலடியில் போட்டு தை . . . தை என்று மிதிக்க வேண்டும்!

யாரை?

இதோ பட்டியல்:
விஞ்ஞானம் நமக்களித்த அறிவியல் படைப்புகளை அழிவுக்குப் பயன்படுத்தும் ஆதிக்க வெறியர்களை!

ஒழுக்கம், பண்பு, நாகரிகம் இவற்றையெல்லாம் குழிதோண்டிப் புதைத்து விட்டு - சன நாயகத்தைக் கேலிக் கூத்து ஆக்கும் அரசியல்வாதிகளை . . .!

மதம், சாதி இவற்றில் மனித சமுதாயத்தைச் சிக்க வைத்துவிட்டு, அதிலே குளிர் காய்கின்ற மதவாதிகளை!

உணவுப் பொருள்களில் கலப்படம் செய்து மனித வாழ்வுக்கு வேட்டு வைத்து வரும் வியாபாரிகளை!

சட்டம் - காவல் - மருத்துவம் - கல்வி - அரசு திருவாசகம் - இப்படி பல துறைகளில் மலிந்து கிடக்கும் புல்லுருவிகளை!

சமுதாய நாற்றங்காலில் முள் செடிகளாய் முளைத்துக் கிளைக்கும் அழிவுச் சக்திகளை!

இன்னம் - பொதுமக்கள் புழுங்கிக் கலங்க அவர்களைச் சிறை செய்வதுபோல் சாலை மறியல் செய்யும் சாத்வீக(?) தொண்டர்களை!

வெற்றி விழா - வீர உலா - பிறந்தநாள் விழா - நடத்திப் போக்குவரத்தைப் பாதிக்கச் செய்து, எண்ணெய், காய்கறி போன்ற உணவுப் பொருள்களின் தட்டுப்பாட்டை அதிகமாக்கி, விலைவாசி ஏற்றத்துக்கு அடிகோலிவிட்டு - வறுமைக்கோட்டிற்குக் கீழே உழன்று வாடும் மனித உருவங்களைப் பார்த்து சிக்கனம், சேமிப்பு இவையே நாட்டுயர்வு! என்ற போதனை புரியும் போதிமர குத்தகைகாரர்களை!

மனித தெய்வங்களின் பெயர்களை எச்சரித்துக்கொண்டே மனிதர்களை மாடாய் நடத்தும் மனித மிருகங்களை!

செய்திகளில் சாயம் பூசுவது, போதை ஏற்றுவது - போன்ற கொடுமைகளைக் கூசாமல் இழைக்கும் - பத்திரிகையாளர்களை விலை எழுத்தாளர்களை பொய்பேசி நத்திப் பிழைக்கும் கவிஞர்களை!

வெள்ளி திரையின் நிழலாட்டங்களில் மதிமயங்கிய மக்களால் மந்தகாச வாழ்வைப் பெற்ற மந்ததாப்பு மனிதர்களை!

இவர்கள் எல்லோரையும். ஓ மனிதா,
நீ தை தை என்று. . . உன் உரமேறிய உழைக்கும் கால்களால்.....!
(டாக்டர். அண்ணா பரிமளம் - 09.01.1993 காஞ்சிநாடு இதழ்)

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai