சிறப்புக் கட்டுரை


அண்ணா ஓர் உரைநடை வேந்தர்

வேளூர். நாகமாணிக்கம்

பேரறிஞர் அண்ணா அவர்கள், தாய்த்திருநாடு வாழவும் வளரவும் தம் சைரமிகு உரைநடையை, உடம்பின் தன்மையறிந்து உயிர் காக்கும் மருத்துவம், செல்லும் வழியெல்லாம் ஆராய்ந்து அயராது பயன்படுத்தினார்.

அண்ணா அவர்கள் வையத்தின் பழநிலவாம் தமிழ் மொழியின் தரம் மறந்தார், தரம் மறைத்தார் நிலையும் நினைப்பும் அகன்றிடத் தன் ஊற்றமிகு உரைநடையை ஏற்றம் பெற விழையாதாரும விழைந்து ஏற்றம் பெற்றிடப் பயன்படுத்தினார்.

வாழ்வின் ஓர் அங்கமாய் அமைந்திட வேண்டிய மக்களாட்சிப் பண்புகள் மங்காது மறையாது நாளும் வளர்பிறைபோல் வளர்ந்திடத் தம் முத்தான உரைநடையை என்றும் பெரும் சொத்தாகக் கொண்டு பயன்படுத்தினார்.

வீட்டுக்கம் நாட்டுக்கும் நலஞ்செய்யும் நாநலத்தை எந்நலத்தினும் தன்னலமாகக் கைவரப் பெற்றிருநத அண்ணா அவர்கள் வீறுமிக்க, விசைகொண்ட - அதே நேரத்து அனைவரையும் தாளமிடச் செய்யும் தரமான இன்னிசை போன்ற உரைநடையையும், மனித மேம்பாட்டுணர்வுகள் முனைப்புடன் உயர்ந்திடப் பயன்படுத்தினார்.

தீயன நிக்கா நெஞ்சும், தேனென இனிக்கும்
மொழியும், வையகம்
போற்றும் நெறியும் நமக்கு

உரித்தானவை என்கிறார்.
(இசைபட வாழ்வோம் 14.01.1959)

அண்ணாவின் பளிங்கு போன்ற உளப்பாங்கும், கன்னல் நிகர்த்த அவருடைய உரைநடைப் பாங்கும் மேலிரண்டு வரிகளில் இழையோடித் தவழ்கின்றன.

நெஞ்சத் தூய்மை அமையின் தீயன அகன்று நன்மைகள் பெருகும்; தேனென இனிக்கும் மொழியைப் போற்றின் வானென நம் நலிவெல்லாம் அகலும்; நலமெல்லாம் கூடும் என்றார்.

அண்ணாவின் நெகிழ்ந்த நெஞ்சகத்தே மலர்ந்து மணம் பரப்பிய எண்ணங்கள் ஆயிரம்! ஆயிரம்!

அவை, பாசம் மிக்கன; பண்பாடு மிகுந்தன; தூய்மை நிறைந்தன.

பண்பாட்டின் கருவூலமாய் விளங்கிய அண்ணாவின் எண்ணங்கள், மண்ணின் சுவைபோன்று உரைநடையாய் உருக்கொண்டபோது, அம் மறுமலர்ச்சி நடையின் குணம் உணர்ந்த உயர்ந்தோர், அண்ணாவின் உரைநடையை வியந்து போற்றினர்.

நெகிழ்ந்த நெஞ்சங்கொண்ட அண்ணாவின் உரைநடை, எவரையும் ஏமாற்றாத, அதேபோது எவரிடமும் ஏமாறாத சதுரப் பாடுடையதாக அமைந்து அணிபெற்றது.

அண்ணாவின் உரைநடையில் அறிவின் கூர்மையும், அன்பின் அழகும், இன்பம் பாய்ச்சும் பொதுத் தொண்டின் அகலமும் விரிவாக அமைந்திருந்தன. அதேநேரத்து அவற்றைச் சொல்லும் முறையில் அவர்தம் உரைநடை, குளிர்முகப் பார்பையும், இளநகைத் தென்றலும் வீசிட அனைவரையும் தம்பால் ஈர்த்தது.

அண்ணாவுன் உரைநடையில் அதிகாரம் இராது; அதிகாரமும் தலை தூக்காது; ஆனால் செய்திகளைப் பகுத்துக் கூறும் அதிகாரங்கள் பலவாக அமைந்திருக்கும்.

தென்னை தருவதுதானே என்பதால் கள் விரும்பத் தக்கது ஆகிவிடாது. அதுபோலவேதான் தம்பி! செயல் வீரதீரமிக்கது என்பதால் மட்டுமே பாராட்டப் படத்தக்கது போற்றப்படத்தக்கது என்று கூறிவிடமுடியாது
(முள்ளு முனையிலே 17.04.1960)

இப்பகுதியில் அண்ணா அவர்கள், நம்மை உய்த்துணர்ந்துகொள்ளுமாறு ஓர் அரிய கருத்தினைக் குறிப்பிடுகின்றார்.

தென்னை இயல்பாக இளநீரைத் தருகின்றது; கள்ளை அன்று, ஆனால் ஆகாக் குணங்கொண்ட மனிதர்களைத் தம்மிடம் நெருங்கிவிட்டதால் அன்றோ; தென்னை கள்ளையும் தரநேர்கின்றது.

வீரமும் தீரமும் அப்படித்தான்! நல்வழிகளை நாடாது அழிவு தரும் பாதையில் விரைந்து செல்லுமாயின், ஆகா நெறிகளைத் தோழர்களாகக் கொள்ளுமாயின், அவ்வீரமும் தீரமும இளநீருக்கு மாறாகக் கள்தரும் தென்னைபோல, அலங்கோலத்துககும் அழுகுரலுக்கும் வித்திடும் விபருதங்களாகவே அமையும் என்பதனை எவ்வளவு அழுத்தமாகக் கூறுகின்றார்; உய்த்துரைவும் வைக்கின்றார்.

செங்கிஸ்கான், தைமூர் போன்றோர் விளைவித்த கொடுமைகளின் கடுமையைச் சாடுகின்றார். அக்கொடுமைகள் இயற்கை சில வேளகளில் கக்கிடும் கொடுமைகள் போன்ற கொடுமைகள் என்று கண்டனங் கலரந்த உரைநடையால் வெளிப்படுத்துகின்றார்.

அண்ணாவின் உரைநடை, எவரையும் ஆட்படுத்தாத அதேநேரத்து எவரிடத்தும ஆட்படாத அளவில், நிமிர்ந்த நெஞ்சும் நேர்கொண்ட பார்வையும் வாய்ந்த உரைநடை.

அண்ணாவின் உரைநடை, தாயினும் சாலத் தமிழரிடம் உறவும் உரிமையும் ஏற்படுத்திக் கொண்ட கனிவுமிக்க உரைநடை.

திருவள்ளுவர், அளவு கடந்த மகிழ்ச்சியினால் ஏற்படும் சோர்வு (மறதி) வரம்பிலாச் சினத்திலும் தீது என்பார். மேலும் அச்சோர்வினால் அழிந்தவரை நினைவில் கொள்க என்பார்.

திருவள்ளுவத்தின் எச்சரிக்கையை உளங்கொண்ட அண்ணா அவர்கள்,
மகிழ்ச்சி மயக்கமகுதல் கூடாது; மதுமாந்திடும் மந்தி போன்றதன்ற மனிதகுலம் மகிழ்ச்சி புது முயற்சிகட்கு ஊக்குவிக்கம் மாமருந்து; மதுவன்று, ஒரு விளைவு, மறுவினைக்குத் துவக்கம்; மகிழ்ச்சி வினையின் இறுதி முடிவல்ல; வினைப் பயன்; புதிய வினைக்கு அழைப்பு என்று வினையில் தூய்மையும், வினையில் உறுதியும் வேண்டுமென்பார் வினை என்றும் முடிவதில்லை என்றும் கூறித் தன் உரைநடையைச் செயல் ஆககமும், செயல் ஊக்கமும் செறிந்திடச் செழிப்புடன் பயன்படுத்தினார்.

தொன்மையும் நன்மையும் வாய்ந்த தமிழச் சான்றோரின், உலகச் சான்றோர்களின் வழிநின்றும், ஆயிரமாயிரம் நற்சிந்தனைகளை, அசைந்தசைந்து வரும அலங்காரத் தேர் போன்ற அழகு நடையில் அள்ளி அள்ளி வழங்கிய தமிழகத்தின் விடிவெற்றியாம் - வாராது வந்த மாமணியாம் - தமிழையும் தமிழ் மரவினையும் நன்காய்ந்த தலைமகனாம் பேரறிஞர் அண்ணா அவர்களை, மனம் இனிக்க, சொல்மணக்க முறைதிறம்பா உரைநடை வேந்தர் என்றழைப்பதால் நாம் பெருமை பெறுவோம்.

வாழ்க! வாழ்க! அண்ணா வாழ்க! வளர்க! வளர்க! அவர் தம் பண்பாடு வளர்க!

(காஞ்சிநாடு - 07.04.1992)

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai