சிறப்புக் கட்டுரை


வரட்டுமே வள்ளலார்!
அறிஞர் அண்ணா

வள்ளலார் வருகிறாராம்! வறுமையில் வாடிடுவோருக்கு வாரித்தரவல்ல, ஏழை எளியவருக்கு இதம் புரியவல்ல, வள்ளலார் என்றால், பொருளில் அல்ல, அருளில். அருள் அரனடி அடைய வழி செய்யுமேயொழிய, வறுமையை ஓட்டவல்ல! வள்ளலார் என்பது ஜோதி இராமலிங்கருக்கு, அவர் பால் பக்தி கொண்டோர், வேறு எதுவும் தர இயலாது இதையேனும் தருவோம் என்று தந்த பட்டம். கஞ்சி வரதப்பா! கஞ்சி வரதப்பா!! என்றானாம், கருடவேர்வையைக் கண்ட பக்தன். பக்கத்திலே நின்ற காய்ந்த வயிறான், பசி தீர்க்கும் கஞ்சிதான் வருகிறது என்று எண்ணிக்கொண்டு, எங்கேயப்பா! என்று ஏக்கத்துடன் கேட்டானாம். அதைப்போல, தான் அருட்பா பாடிய வள்ளலார் வருகிறார் என்றதும் அடேடே! எங்கேயப்பா, என்று ஏழைகளே, தோழரகளே, கிளம்பி விடாதுர்கள், வள்ளலார் வருவது அதல்கல்ல. சுயமரியாதைக் காரர்களை மிரட்ட, விரட்ட; ஆத்திகப்படை திரட்ட சம்சயவாதிகளைச் சுருட்ட, வருகிறாராம். ஆமாம்! அன்றோர் நாள், மறைந்தவர், இதுபோது, வடலூர் விழாவிலே, வெளியே வருகிறாராம்! இதைக் கேட்டு ஆத்திக அன்பர்காள் ஆர்த்தி எடுங்கள், வட்டம் சுழற்றுங்கள், அரனடி வாழுங்கள், அன்னதானம் செய்யுங்கள் வாருங்கள் என்று விழாவுக்குவிடவில்லை. ஏ! சுயமரியாதைக்காரர்காள்! வைதிக வைரிகாள்! வருகிறார் எமது வள்ளலார், உஷார், கவர்தார், சத்து, என்று மிரட்டி, சுயமரியாதைக்காரர்களுக்குக் காதிக ஓலைகள் விடுகின்றனர். பாபம்! பனங்காட்டு நரிகள் சலசலப்புக்கு அஞ்சாது எனும் பழமொழியும் அறியாத இந்தப் பச்சிளங்கு குழவிகள், மழலை பேசித் தவழ்வது காண சம்மியமாக இருக்கிறது என்ற ம் எண்ணிக்கொள்வோமென்று நினைக்கின்றன போலும். வடலூர் வள்ளலார் வருகிறார், வருகிறார் என்று தொண்டை நீர் வரளக் கத்தினால் கத்துபவரின் காது செவிடுப, சுயமரியாதைக்காரர்கள், வரச்சொல், வரச்சொல் என்றுதான் முழக்கம் செய்வார்கள். வரட்டுமே வள்ளலார், தாராளமாக வரட்டும், இவருககு முன்பே மறைந்த இரண்டொருவரைத் துணைக்கு அழைத்துக் கொண்டும் வரட்டும. நாம் தடுக்கப் போகிறோமா, கதவைத் தாளிட்டு அடைக்கப் போகிறோமா? வந்தால் தான் என்ன, வாய் பிளந்து நின்று தெண்டனிட்டுத் திணறி அபயம், அபயம் என்று அஞ்சலி செய்து கூவுவோமா ஓ! வந்தது யார்? வள்ளலாரா? வெள்ளையாடை வேதாந்தியே! இத்தனை காலமாக எங்கெங்கு சென்றீர் என்னென்ன கண்டீர்? இப்போது மக்களுக்குத் தர என்ன கொண்டு வந்தீர்? என்றுதான் கேட்போம். வராவிட்டால் சரி வரவில்லையா! இதுகள், ஏதேதோ கத்தினவே, வருகிறார், வருகிறாரென்று, எங்கே ஆசாமி ஆஜராகக் கானோம் சரி, வழக்குக்கு வாய்தா கொடுங்கள். இருக்கும் ஆசாமிகளுக்குச் சம்மன் பிறப்பித்து, ஈரங்கி இல்லை என்று கூறி, ஜப்திக்க ஆர்டர் கேளுங்கள் என்று கூறுவர் சுயமரியாதைக்காரர்கள். வழககு மன்றத்திலே வாதி தயாராக நிற்கிறான். அவன்தான் சுயமரியாதைக்காரன். பிரதிவாதிகள் தான் வக்கீலைக் கொண்டு வாய்தா பெற்று கெள்கின்றனர். தலைமறைவாக இருக்கும் பிரதிவாதியிலே ஒருவர் வடலூர் வள்ளலார். அவர் வருகிறார் வருகிறார் என்று கூறும் வக்கிரங்களே! கேண்மின், வாதி, வழக்கு மன்றனத்திலே தயாராகத்தான் இருக்கின்றார், வரச்சொல்லும், பிரதிவாதியை!!

நாதன் வருவானென்று நறுமலர் சூடினேனே!
நாதனைக் காணாததால், நங்கையே!
நானுமிக நொந்தேனேடி நங்கையே!

என்றோ, கட்டிய குதிரை, கடுவேகமாக ஓடி கண்ணிய வின் ஆகவே தோழனே, காத்திருந்தேன் காணலையே, தோழனே,
காத்துக் காசு போச்சுதடா

என்றோ,

வேகுவது கண்டு நானே
விருந்தேன இருந்தேனே,
வெந்ததைத் தின்றானதும்,
சொக்கனே,
வேறு வீடு பார் என்றாரே,
என் சொக்கனே!
வேறு வீடு பார் என்றாரே

என்றோ, ஏமாந்த காதலி, காசிழந்த கிண்டிப் பித்தன், அலுத்த ஆண்டி பாடுவதைப் போல, வருவார் வருவாரென்று வாய் திறந்து நிற்கும் பக்தர்கள் வள்ளலார் வராது, அவரது வாலர்கள் சமைத்ததின் மணமும், தரிசனமும்; திருவிழிச் சந்திப்பு மட்டும் கண்டால்,

வருவார், வருவாரென்று, வாய்சலிக்கச் சொன்னீரே,
வந்தாரே? வள்ளலாரும்,
வாய்வீரரே,
வந்தாரோ வள்ளலாரும்

என்று கண்ணி, பாடி ஆடி, இடித்துக கேட்கக் கூடும். அவர்களிலேயே ஏமாளிகள், இந்த ஆண்டு வரவில்லை. அடுத்த ஆண்டு வருவார் என்று திருப்தி கொள்ளக்கூடும். அது அவர்களின் சொந்த ஜோலி - சிலாக்கியமானது அவர்கள் எண்ணத்தின்படி! அதிலே குறுக்கிட நமக்கென்ன உரிமை? அழகான சோநலை அதோ இருக்க, இந்த ஆபாசக் குப்பையிலே புரளுவானேன் என்று போதை ஏறினவனிடம் கூற எந்தப் போதகாசிரியர் புறப்படுவார், கதைப்பிடித்திழுத்துக் கன்னத்திலறைந்து; புளித்த கள்ளைக் குடித்துவிட்டு இளித்துக் கிடக்கும் பித்தனே, புறப்படு ஸ்டேஷனுக்கு என்று கூறிட வேண்டியது, போலீஸ்பாரர் வேலை. தாமரைத் தடாகத்திலே தவழ்ந்தாடும் அன்னம், நாற்றச் சேறு நிரம்பிய குட்டையிலே புரளும் எருமையிடம் சென்று, இங்கேவா எருமையாரே! என் தடாகத்தில் மூழ்கிடுவீரே!! என்று கூவி அழைக்கவா போகிறது. இயல்புக்கேற்ற இடம்! இடத்திற்கேற்ற இயல்பு! என்ற நியதியை மாற்றுவது சுலபமல்ல. ஆகவே, பக்திப் பிரபாவத்திலே மூழ்கிடும் பரம பாகவத சிரோமணிகளை, அடியார்களை, நாம் அழைக்கத் தேவையில்லை. அவர்கள், வடலூர் மட்டுமல்ல, கச்சி காளத்தி தில்லை கடம்பூர் மருதூர் ஆகிய தலங்களிலே சென்று நித்த நித்தம் பூஜிக்கட்டும், சித்தம் நாடட்டும், இறைவன் திருவடி நிழலை அடையட்டும், நமக்கென்ன! ஆனால், சுயமரியாதைக்காரர்களே! வள்ளலார் வருகிறார், வடலூர் வாருங்கள்! வந்து காணுங்கள்! உங்கள் கொட்டம் அடங்கம், விதண்டாவாதம் வீழ்ந்து போகும், என்று விளம்பரங்களை விடுக்கும்போது, எனக்குத் தோழர்களே, வயிற்றுப் பிழைப்புக்காக வலை கட்டி, தடி நட்டு, தமுக்குக் கொட்டி தெருக்கோடியிலே ஆடிடும் கழைக்கூத்தன், கடைதி வித்தை காட்டுவனே அந்த நினைப்பே வருகிறது. இதோ இந்தக் கூடையிலே பாம்புத் தோல், அதோ அதிலே பாருங்கள் கீரித்தோல், ஆமாம், ஒரு சொக்குப் பொடி போடுவேன்; காளி, மகமாயி, காத்தவராயா, கழனிக் குடையோனே, பழனிமலையப்பா, இருளா, இடும்பா, வா! அந்தரத்திலே நின்று, பம்பரம் போல் சுழன்று, இந்தக் கூடையிலே ஒரு பாம்பு படமெடுக்கச் செய், அங்கே இருந்து கீரி வரச்செய். இரண்டையும் சண்டைக்கு விடு என்று கூறி, மேளத்தைத் தட்டி, மண்ணைத்தூவி, பிள்ளைக்குட்டி பெத்தவங்களே! ஏதோ உங்க வாய்க்கு வெத்தலை பாக்கு, நம்மள் வயத்துககுச் சோறு, காலணா, அரையணா, ஓரணா, எதுவோ போடுங்க, இதோ அஞ்சே நிமிஷத்திலே பாம்பும் கீரியும் பாருங்கள் வரும் என்று கெஞ்சிப், பிச்சை வசூலித்து, எண்ணிப்பார்த்து, முடிபோட்டு, எடுடா மூட்டையை எட்டேகாலணாதான் கிடைச்சு, என்று சோக்கராவிடம் கூறிவிட்? கூடைகளைத் தூக்கிக்கொண்டு போய்விடுவானே, அதுபோல் இருக்கிறது, வருகிறார் வள்ளலார்! வாருங்கள், வாருங்கள்! என்று விளம்பர மடித்து ஊரூருக்கும் விடுத்து, ஆள் சேர்க்கும் வித்தை! சுயமரியாதைக்காரருக்கு இது தெரியும், யோசீந்திரர்களோ, யாகேந்திரர்களோ, அந்த வித்தையைச் சுயமரியாதைக் காரரிடம் காட்ட வேண்டாம், பலிக்காது.

வரட்டுமே வள்ளலார்! வந்தால், அவருக்கல்லவா, வண்டி வண்டியாக வேலை இருக்கிறது செய்ய! அவரை வணங்கி வழிபட்டு, அகப்பட்டோரை அடித்துப் பணம் பறித்து, அருட்பெருஞ் ஜோதி என்ற அழுது, தொழுத, அவரைப் பிஞ்சுப் பொரியலும் ஆத்தூர்க் கத்தரிச் சாம்பாரும், பூசனி மோர்க் குழம்பும் பெங்க்ளூர்க் காய்கறிக் கூட்டும், அப்பளமும் வடையும், அதிருசியான பாயசமும் செய்து, வளிறு புடைக்கத் தின்று தொந்தியைத் தடவித் தேரடுடையாளைத் தேடி, தனிப்பெருங் கருணைக்குத் தபால்விட்டு, அருட்பெருஞ் ஜோதிகாண இருட்டறையோ, சரிந்த சத்திரமோ, சாவடித் திண்ணையோ, சாலை ஓரமோ தேடிடும் பக்தர்கள் இருககிறார்களே, அவர்களுக்கல்லவா, கோறடா கொடுததுக் கேள்விமோல் கேள்வி கேட்பார், அருட்பா பாடிய அன்பர். சுயமரியாதைக்காரர்களைச் சுடு சொல் கூறார். அவர்கள் ஒரு கூட்டம் கூவிக் கொண்டிராவிட்டால், இந்தக் கோணங்கிகள் குவலயத்தை இன்னமும கெடுததுக குட்டிச்சுவராக்கி விட்டிருப்பரே என்று கூறுவார். ஈரோட்டுக்கு இரயிலேறுவார், ஈ.வெ.ரா. பெரியாரைக் காண்பார், இவரன்றோ என் மொழியே மக்களின் முன்னேற்ற வழியென்றுரைத்து வந்தார் என்று சிந்தை மகிழ்ந்து செப்புவார். செந்தமிழ் நாட்டவரே! சீலரே! சிலந்தி உள்ளங் கொண்ட இந்தச் சலசலப்புக் கூட்டம், வடலூர் விழாவுக்கு, வரிசை தேட, ஆள்கூட்ட, படை திரட்ட, இந்த விளம்பரம் செய்கின்றனரேயன்றி, வேறெத்ற்குமில்லை இது இயற்கை, வியாபாரம், மார்க்கட் நிலவரம் அவர்கக்ளை ஞஞனம் செய்யச் செய்கிறது, அவர்கள் மீதும் தப்பில்லை. மக்கள் பாவம், எத்தனை விழாத்தான் கொண்டாடுவார்கள், எத்தனை மகான்களைத் தான் கும்பிடுவார்கள், எத்தனை அடியவர்களைத்தான் தேடுவார்கள், சலிக்காதா, மூவரைத் தேடி முடியை அவர் தம் அடியிலே சாய்த்துப் பார்க்கின்றனர்! தேவர்களின் திருவடித் தாமரைகளைத் தொழுகின்றனர், கஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி, நாகை நீலாயதாட்சி என்று எத்தனையோ தேவிகளைப் பூஜை செய்கின்றனர்; இந்த ரகங்கள் தீர்ந்தது. அடுத்த ரகம் நால்வர், ஆழ்வாராதிகள் அவர்களுக்குப் பூஜை செய்த பிறகு, ராமகிருஷ்ணர், விவேகானந்தர், ரமணரிஷி, அரவிந்தர், ராமாநந்தர் என்று ஏத்தித் தொ-ழுது பார்க்கிறார்கள், பிற மௌனசாமிகள் மிளகாய்ப்பொடி சாமிகள், புல் தோட்டத்துச் சாமி, பிடி மண் தின்னும் சாமி, பிஸ்தா பருப்புண்ணும் சாமி, பின்கை கட்டிய சாமி என்று ஊருக்கோர் சாமியாக ஆரம்பித்து அவர்களைத் துதித்துப், பால் பழம் தந்து பருப்பு நெய் அளித்தும், கஞ்சா அபின் கொடுத்தும், கைகட்டி நின்று, இவர்களின் அருளாலாவது கஷ்டம் தீருகிறதா என்று பார்க்கின்றனர், பிற மெய்வழி மகான், நன்னெறிக் கோமா, நந்தவனத்து ஆண்டி, குளத்தங்கரை கோவணாண்டி, சாயிபாபா, ராம்லிங்க தாதா, என்று ஒரு லிஸ்டு எடுத்து இவர்களைக் கும்பிட்டு கூத்தாடிப் பார்க்கிறார்கள்! இவ்வளவு அருள் மருந்து பக்த கோடிகள் தெரிந்து கொண்டது என்ன? அன்று எழுதி அழித்தா எழுதப்போகிறார்கள் என்பதுதான். இன்று ஏன் இப்படி இழுத்த இழுப்புக்கு வரும் ரப்பர் போல், மனதை கொண்டு, நினைத்தவனுக்கு தூக்கியாகிறாய், நெற்றி வியர்வை சொட்டப் பாடுபட்டுத் தேடிய பொருளை பாழ் செய்து கொள்கிறாள், வீன் பயன் என்ன என்ற கேட்டாரோ அவர்களின் காட்டானை கலக்கிய குட்டைபோலாகி விடுகிறது, நம்மை ஏதோ சைத்தான் ஏவியவன் என்ற சபிக்கின்றன.

**********

தேவைக்கான பொருளானால் தேடுவாருண்டு, தெருக்கூட்டி விற்கத் தேவையில்லை. தேவைப்படாத பொருள், அதிகம் பல ரகம் மார்க்கட்டிலே குவிந்துவிட்டால் கூவிக்கூவி விற்றால்தானே, கூடை காலியாகும். ஆகவேதான், மகான்கள், மகரிஷிகள், சாமிகள், சாதுக்கள் ஆகியோரின் பட்டி விரிந்துவிட்டதால், விலையாகாத பண்டத்தை சாலையோரத்திலே விற்பதுபோல, சாயிபாபாவுக்குச் சான்கடிக்கும் சமயமாக இருக்கிறதே என்று சஞ்சலப்பட்டு, சமரச சன்மார்க்கத்தினர், சற்று சந்தடி கிளப்பி வருகிறார் வள்ளலார்! வந்து பாருங்கள்!! என்று விளம்பரம் செய்கின்றார், வேளை வெட்கத்தையும் விட்டு விடச் செய்து விட்டது போலும்! பாவம். போனால் வராது பொழுது போனால் நிற்காது, காசுக்கு இரண்டு என்று விற்கின்றனர். பார்க்கட்டும், மார்க்கட் நிலவரத்தையும்!!

**********

தனக்கிருக்கும் கோபம், அவர்களின் வியாபார தந்திரத்தைக் கண்டல்ல! ஆடுவதும் பாடுவதும், ஆளடிமையாக்குவதும் தேடுவதும், தங்கமே ஒரு சாண் வயிற்றுக்கடி, ஞானத்தங்கமே, ஒரு சாண் வயிற்றுக்கடி, என்ற பாடல் போலிருக்கிறது. ஆகவே நான் அவர்கள் மீது கோபிப்பதற்கில்லை. ஆனால் சுயமரியாதைக்காரர்களின் மன நிலவரத்தைத் தெரிந்து கொள்ளாமல், இங்கும் இருக்கின்றனரே, அக்கிரகாரத்திலே அயிரை மீன் விற்கப் போனால் போணி ஆகுமா! பகலில்!! அது போலத்தானா, இங்கு வந்து, வருகிறார் வள்ளல் என்று வாலாட்டம் காட்டுவது என்று நான் உங்கள் சார்பாக, உண்மையை உணர முடியாதுள்ள ஊன் பொதிகளுக்கு உரைக்கிறேன். மேலும் கூறுகிறேன், மேதாவிகளே! கூட்டி வாருங்கள் வள்ளலாரை! இராமலிங்கரே! கேளீர்! சாதி மத பேதமெல்லாம் பித்துப்பிள்ளை விளையாட்டு என்று கூறினீரே, இதோ உமது விழாக்கொண்டாடும் விவேகிகளைப் பாரீர், சாதிமத பேதமெனும் பித்தம் இவர்கள் சித்தத்தை விட்டு அகன்றதா கேளீர்! இவர்கள் நீறு பூசுவர் நெற்றியிலே, நினைப்போ, ஜாதி மத பேதமெனும் நீசத்தன்மைதான் பூசிக்கொண்டிருக்கிறது. சாதியிலே பூரிப்பு, குலத்திலே ஆணவம் குறைந்ததா என்று கேளும்; இதோ எம்மைப்பாரும், சாதி மத பேதமெனும் பித்தத்தைச் செத்திடும்படி, சாடுகிறோம், பித்துப்பிள்ளைகளைத் தேடிப் பிடித்து, அவர்களின் விளையாட்டைக் கண்டிக்கிறோம், ஒன்றே குலமடா தோழனே! என்றுரைக்கிறோம். ஓராயிரம் சாதி கூடாதடா என்று கூவுகிறோம், உயர் சாதி என்றுரைப்போரைப் பிடித்திழுத்துச் சந்தியில் நிறுத்தி சாயம் வெளுக்க வைக்கிறோம், யாரைய்யா வள்ளலாரே! உமது சமரச சன்மார்க்கத்தைப் பரப்பியவர்? சந்தமமைத்து உம் சிந்து பாடி, சுடரைக் கண்டு இடலி விழுந்தோன் போல் புரண்டு, உமது பக்தர் என்ற கூறிக்கொண்ட இவர்களா? நாங்களா? என்று கேட்பேன். வடலூரார், அவரது அடியார்களைக் காணவும் வெட்சி, என் பக்தரே என் பகைவர்! நீவிரே என் சித்தமதை உணர்ந்து,, செந்தமிழிற் செப்பி, சீலத்தைப் புகுத்தினோர், செப்புவேன் இதனைச் சிற்சபையிலும், என்றே கூறுவார், சுயமரியாதைக்காரர்களை நோக்கி, ஆகவே தான் வரட்டுமே வள்ளலார் என்று கூறுகிறேன். வரட்டுமே, வரட்டும்!

கண்மூடி வழக்கமெலாம் மண் மூடிப்போக என்று கூறின உமது கருத்தெங்கே, உம்மைக் கைகூப்பித் தொழுது பட்டப்பகலில் விளக்கேற்றி, பாடலுக்குப் பல்லக்குத் தூக்கி, பழமைக்குப் பட்டாமணியமாகி நிற்கும் உன் பக்தர்களின் பாசு படர்ந்த உள்ளமெங்கே! ஓடினீர், பாடினீர், உலகிலே உண்மையை உரைக்க, ஓரோர் சொல்லால் சூட்சுமத்தை விளக்கினீர், உமது அருட்பாவின் அழகிலே சொக்கினரேயன்றி, கருத்தை எங்கே காரியத்திலே புகுத்தினீர், கழறுவீர் என்று கேட்கமாட்டேனா? சுயமரியாதைக்காரர்கள், எத்தகைய சுத்த சன்மார்க்கியும் சொல்லுக்கேற்ப செயலிலே காட்டாது சோம்பித் திரிந்தும் சொரூபத்தை மறந்தும், தேம்பித்திரிந்தும் வாழும் நாட்களிலே, அருள் மொழி பெறாது, மருளுரை கண்டு மனம் உடையாது, போருளுடையார், நிலமுடையார், நெஞ்சிலே நஞ்சுடையார் எனம் எவருக்கும் அஞ்சாது, ஒன்றே சமூகம் என்றெண்ணார்க்கே இறுதி! இறுதி! இறுதி! என்று எச்சரிக்கை விடுத்து வந்தனர், வருகின்றனர், கண்கள் மங்கம் போதும், அவர்களின் கருத்து மங்காது, அவர்களிடமா, அவர் வருகிறார், இவர் வருகிறார் என்று கூறி அஞ்ச வைக்கலாம் என்ற எண்ணுவது! நெருப்பை எரிக்கக் கரையானா நீரைக் கழுவிட முயற்சியா! நடக்கக் கூடியதா!!

வள்ளலார், வருவதானால், தாமுரைத்த மொழி வழி மக்கள் நடக்க வேண்டிய முயற்சியிலே ஈடுபட்டு, பத்திருபதாண்டுகளாவது பாடுபட வேண்டி இருக்கும். சொன்னது நடக்கவில்லையே என்று சோகம் தீரவே ஓராடு ஈராண்டாகும். சோதி கண்டோம் என்று கூறிச் சோடசோபசாரம் செய்யும் சூதுக்காரர், சொல்லை மென்றனரேயோழிய, செயலில் செய்தனரில்லையே என்று துக்கித்து, துக்கந் தீர்க்கத் திருத்தாண்கம் பாடிட வேண்டும். பிற சமுதாய சீர்திருத்தத்திலே ஈடுபட்டுழைக்க வேண்டும். கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக வேண்டும், பாடுபட்டால்தானே, பயமின்றிப் பணியாற்றினால்தானே; பதிகம் பாமரத்தன்மையைப் போக்கிடுமா! சமாராதனை சாதிப் பூசலைப் போக்கிடுமா! குத்துவிளக்கொளியும், கூடத்திலே பாட்டொலியும், பாட்டாளியின் பரிதாப மனப்பான்மையைத் தூய்மைப்படுத்திவிடுமா! வள்ளலார், வாட்டும், வேலைநிறைய இருக்கிறது, மிகமிக அதிகமாக இருக்கிறது.

**********

அவர் என்ன! அன்று உமையம்மையிடம் பாலுண்ட ஞானசம்பந்தர் வரட்டுமே! அப்பா! மக்களுக்கும் ஞானத்துக்கும் நம்மந்தமே காணோமே, செப்புவாய் ஒரு வழி, இந்தச் சீர்குலைவு போக, என்று கேட்போம். எலும்பைப் பெண்ணுருவாக்கியவரே, நீர் அந்த அற்புதம் செய்யாவிட்டாலும் போகிறது, இதுபோது பெண்கள் எலும்புருவாகாதிருக்க வழி செய்யும் என்ற கேட்போம். வள்ளலாருக்க வழிகாட்டிகளாக இருந்தோர் வந்தாலும் வழக்கு மன்றத்திலே வேலை இருக்கிறது. ஏன்? இவர்கள் தொழும் ஈசனே வந்தாலும், ஈரங்கியின்றி வழக்கு உண்டு. அப்பனே! இப்பிலா மணியே! இதோ, இந்த ஈளைகட்டி இழுக்கம் நெஞ்சினன், எழுந்து நடமாட முடியாத பெருநோய் கொண்ட முடவன், காண இயலாக் குருடன், கந்தலணந்த காய்ந்த தலையன், கைகால் மெலிந்த கஷ்டாளி, பரிதாபத்துக்குரிய பாட்டாளி, உன் மகன்தானே! ஏனடப்பா உன் குடும்பத்திலே இந்தக் கோணல்? ஆலவாயப்பா! ஆறுகாலப் பூசை உனக்க நடக்க, உன் அருமந்த மக்கள், அரைவயிற்றுக் கஞ்சிக்கு ஆலாகப் பறக்கின்றனரே, தந்தை தயாபரன், தனயன் பராரி! தகப்பனார் ஜெகத்ரட்சகன், மைந்தன் ஓட்டாண்டி! இது என்ன விசித்திரமப்பா! ஏனப்பா, உன் பிள்ளைகளிலே, இந்தப் பேதம்? என்று கேட்போம்.

அவன் வினை! நாம் செய்வது என்னை? என்று பதில் அளிப்பரேல், அவனன்றி ஓரணுவும் அசையாதே அப்பனே, நீயன்றி, நின்மகள் செய்வது எதுதான் முடியும். அவன் வினைக்கும் காரணம் நீயேயன்றோ! அஃது ஏனோ? என்று கேட்போம். அது மட்டுமா! அவன் வினை என்று கூறும் அரனே! ஐரோப்பாக் கண்டத்திலே ரஷியா நாட்டிலே, இத்தகைய இன்னல்கள் ஒரே புரட்சியின் மலம், துடைக்கப்பட்டு, புது உலகம் வைக்கப்பட்டு ஓடப்பர் ஒப்பப்பர் ஆனரே, உண்மையில், இது உமக்குத் தெரியாதா என்றும் கேட்போம். ஆமாம்! வடலூர் விழாவுக்கு வரச்சொல்லும் கண்ணியரே! வள்ளலார் மட்டுமல்ல, நாயன்மார்கள், ஆழ்வார்கள், வருவதானாலும் சரியே, எமக்கொன்றும் சஞ்சலமில்லை, வந்தால் அவர்கட்கே வேலை இருக்கிறது மிகுதியாக! போய், அழைத்து வாரும், அவர்களை; புறப்படும், புறப்படும்!!
முகம் வௌத்தவன் எவனையாவது பிடித்துவைத்து, வெள்ளை முக்காடிட்டு, இவரே வள்ளலார் என்று கூறி ஏமாளிகளை ஏய்க்கலாம் - அது சுயமரியாதைக் காரரிடம் பலியாது!
(திராவிடநாடு - 06.02.1942)

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai