அண்ணா களஞ்சியம்


இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்


மொழி
பகுதி: 2

பகுதி: 1 2

» இந்தியாவின் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழிகளும் ஆட்சி மொழிகளாக ஆக்கப்படுகிறவரை ஆங்கிலம் மட்டும் ஆட்சிமொழியாக இருந்திடல்வேண்டும்.

» தமிழ் மொழியின் சுவையினை ஆழமாக சுவைக்கின்ற எவரும் - தமிழ் மொழி மட்டும்தான் தேசிய மொழியாக இருக்க முடியும், இருக்கவேண்டும் என்று கண்டிப்பாக விரும்புவர்.

» தமிழை பாடமொழியாகவும், பயிற்சி மொழியாகவும் ஆக்கி, அதனால் ஆங்கில அறிவு குறையும் என்று கருதினால், ஆங்கில அறிவை அதிகப்படுத்த என்ன வழிகளை மேற்கொள்ளலாம், என்பதைப் பற்றி ஆராய்ந்து, ஆங்கில அறிவும் கெடாமல், தமிழ் உரிமையும் பாதுகாக்கப்படக் கூடிய அளவில் நம்முடைய கல்வி திட்டம் திருத்தி அமைக்கப்படவேண்டும்.

» மானுட பண்பியல்புகளுக்கு ஓர் உறைவிடமாய் - வாழ்க்கை வழி, நெறிமுறைகளுக்கான வழிகாட்டியாய் அமைந்துள்ளது நமது திருக்குறள். காலக் கூறுக்கு ஏற்ற இலக்கியம் திருக்குறள் அன்றி உலகினில் வேறு ஏது? என்று நாம் கேட்டிடலாம், எவரைப் பார்த்தும், உலகெங்கும் பறை சாற்றிடலாம். அஞ்சிடத் தேவையில்லை. வள்ளுவன் தன் உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நமது நாடு. எதனால் இப்படி கூறினார் பாரதியார். அந்த வள்ளுவர், திருக்குறள் என்ற பொய்யாமொழியினை - வாழ்க்கை நெறிக் கோட்பாட்டு மறைதனை தீட்டியதால்தான்.

» வைரத்தை பட்டை தீட்டத்தீட்ட அதனுள் பல வண்ணங்கள் தெரிவதுபோல், திருக்குறளை ஆராய ஆராய அதில் பல புத்தம் புதிய அருமையான கருத்துகள் புலப்படும்.

» சொல்லிலே ஏற்படும் மாற்றம் சொல் அளவினதல்ல - கருத்தினுக்குக் கருவியன்றோ சொல்! எனவே சங்கராந்தி தமிழர் திருநாள் ஆனது. ஒரு பதத்திற்கு பதில் வேறொன்று என்று ஏற்பட்டதல்ல - ஒரு கருத்து ஒழிந்து பிறிதோர் கருத்து மலர்ந்ததைக் காட்டுவதாகும். அதைப்போலவே கன்னிகாதானம் - திருமணமாகி - திருமணம் இன்று வாழ்க்கைத்துணை ஒப்பந்தமாகியிருக்கிறது.

» வாழ்க்கை நெறிமுறைகளிலும், நாகரீக நல்வாழ்வு நயத்திலும் மிக மேம்பாட்டுடன் வாழ்ந்திட்ட பண்டை திராவிடர்தம் மொழியாக தமிழ்மொழி எல்லாம் வல்லதாய், பல்வளமும் பல்கிப் பெருகியதாய், நீண்ட நெடுங்காலந்தொட்டே நிலைபெற்று நீடித்து வழங்கி வருகின்றது என்பது மொழிபேறிஞர் அனைவராலும் போற்றப்படுகின்றது. இன்று தமிழின் சிறப்பியல்புகளை - செம்மொழிக்கேற்ற சீரிளம் இயல்புகளை, மொழிவல்லார் பலரும் மெத்தவும் மெச்சிடுகின்றனர்.

» தமிழ்மொழி காலத்தால் மிகமிகத் தொன்மையானது. இலக்கண இலக்கிய விதிகளையும் வரைமுறைகளையும் செவ்வனே பெற்றுள்ளது. தூயது - தூய்மையானது. துல்லியமான எண்ணங்களை வெளிப்படுத்திடும் சொல் வளம் மிகவும் படைத்தது. உணர்வுகளை நுட்பமாகவும், நுண்ணியமாகவும், நேர்மையாகவும் நேர்த்தியாகவும் ஊட்டிடும் நயம் மெத்தவும் மிக்கது. எண்ணங்களை, ஏற்பாடுகளை, கொள்கைகளை, கோட்பாடுகளை வழுவாமல், பிறழாமல் கருத்துணர்த்திக் கூறிடும் சொல்லாட்சியும் உடைத்தானது.

» சூடு, சுவை, சூட்சுமம், மதிநுட்பம் வாய்ந்த குறிப்புரை, விரிவுரை, விளக்கவுரை அத்துணையும் ஆற்றிடவல்ல, சொல்லாரம் தமிழ்க்களஞ்சியத்தில் ஏராளம்; மிக, மிக ஏராளம். எடுக்க எடுக்க குறையாதது. கொடுக்கக் கொடுக்க மாளாதது நம் தமிழ் மொழியின் வளம் - வல்லமை.

» ஆங்கிலம் எந்தெந்தக் காரியங்களுக்குப் பயன்படுகிறதோ, அந்தந்தக் காரியங்களுக்கு இந்தியாவில் உள்ள மொழிகளில் எது தகுதி உள்ள மொழி என்றால் அது தமிழ், தமிழ் என்று சொல்லத் தயங்கமாட்டேன். அவ்வளவு வளம் உள்ள மொழி தமிழாகும்.

» வாழ்க என்பது தமிழ்ச் சொல் மட்டுமல்ல. தமிழ்ப் பண்பு, கனிந்த மனத்துடன் மற்றவரின் வாழ்க்கை செழித்து, அவர் இன்புற்று இருப்பது, அவருக்கு மட்டுமல்லாமல், சமூகத்திற்கும் நல்லது என்பதால், வாழ்த்துவது தமிழ் மரபு! அந்தச் சொல்லிலே இசை ஒலியும் இதயக் குழைவும் இருப்பதனை இதயமுள்ளோர் எவரும் உணர்வர்.

» தமிழ் உமது முரசாகட்டும், பண்பாடு உமது கவசமாகட்டும், அறிவு உமது படைக் கலனாகட்டும், அறநெறி உமது வழித்துணையாகட்டும். இவை அனைத்துக்கும் தமிழ் துணை செய்யும்.
(1968)

» மொழிப்பற்று இருப்பது எந்த வகையிலும் வருந்தத் தக்கதல்ல, போற்றத் தக்கது.

» சிந்தித்தால் உரையாற்றலாம். சிந்தித்து நெகிழ்ந்தால் மட்டுமே கவிதை இயற்ற முடியும்.



பகுதி: 1 2

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai