காந்தியம் ஒன்றே உலகிற்கு நல்வழி காட்டும்

இந்த அடிப்படையில்தான் மகாத்மா காந்தியின் அகிம்சை உள்ளது. அகிம்சை என்றால் கேடு செய்யாமை என்ற எதிர்மறைப் பொருள் மட்டுமல்ல. மகாத்மாவின் அகிம்சைக்கு உடன்பாட்டு அர்த்தம் உள்ளது. அகிம்சை என்பது அன்பு செய்தல் ஆருயிர்க்கெல்லாம் அன்பு செயல்வேண்டும் என்றார் வள்ளலார். எனவே அகிம்சை என்ற சொல்லிற்கு அன்பு என்பது பொருள். உலகத்தை அன்போடு பார்க்கத் தொடங்கினால் நல்லது விளயும். அன்பின் வழியது உயிர்நிலை. அன்பு இல்லாமல் செய்தால் தீமை விளயும். எனவே இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு என்று கூறினார் வள்ளுவர். அன்பிலாது உலகம் இல்லை. என்பிலதனை வெயில்போலக் காயுமே அன்பிலதனை அறம் என்றார். வள்ளுவர் கூறிய குறட்கள் இங்கே உள்ளன. இதன்படி வாழ குஜராத்திலிருந்து வந்தார் காந்தி. வள்ளுவர் கூறிய அன்பைத்தான் மகாத்மா அகிம்சை என்றார். அகிம்சை இருந்தால் தீமையே விளயாது.

அகிம்சைதான் உலகைக் காப்பாற்றும். இன்றைக்கு வேறு வழி ஏது? மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்காவில் காந்தியைப் பின்பற்றியவர். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, தான் ஜனாதிபதியாக வெற்றி பெற்றதற்கு காந்திதான் காரணம் என்றார். இந்தியாவிற்கு வந்தபோது காந்தி சமாதிக்கு முதலில் சென்று வணங்கினார். இதற்கு வித்திட்டவர் மார்ட்டின் லூதர் கிங். இவர் காந்தியைக் குருவாகக் கொண்டவர். அட்லாண்டா என்ற இடத்தில்தான் மார்ட்டின் லூதர் கிங்கிற்கு நினைவிடம் உள்ளது. அங்கே ஒரே சிலைதான் உள்ளது. அந்தச் சிலை காந்திதான்.

அங்கு எழுதப்பட்டுள்ளது. It is not the question of Violence or Nonviolence, but Nonviolence or Nonexistence வன்முறையா அல்லது அகிம்சையா என்பதல்ல பிரச்னை. அகிம்சையா அல்லது அழிவா என்பதுதான் பிரச்னை. அகிம்சை இருந்தால்தான் வாழ்க்கை. வன்முறை இருந்தால் அழிவே. இது காந்தியின் அகிம்சை பற்றி மார்ட்டின் லூதர் கிங் கூறியது.

ஊழலா! விருப்பக்கட்டுப்பாடா!

இன்றைக்கு உலகில் என்ன நடக்கிறது. எதைவைத்து சண்டை நடக்கிறது? உலகம் ஏன் இந்தியாவை எடுத்துக்கொள்வோம். எங்கு பார்த்தாலும் ஊழல். ஆனால் ஊழல் செய்வதில்தான் அரசியலில் போட்டியே தவிர ஊழலை ஒழிக்க வேண்டும் என்று போராடுவதெல்லாம் பொய். உண்மையில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று எவரும் எண்ணுவதில்லை. சட்டம் போட்டால் மட்டும் போதாது. மனிதர்களும் மனம் மாறவேண்டும். உங்களில் தவறு செய்யாதவன் இந்தத் தவறான பெண் மீது கற்கள எறிக என இயேசுநாதர் கூறியவுடன் அங்கிருந்தோர் அனைவரும் சென்றுவிட்டனர். ஏன்? அனைவரும் பாவிகள். அமெரிக்காவில் மது ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்தார்கள். ஒரு மாகாணத்தில் அந்த நாட்டின் கடலின் கரையிலிருந்து மூன்று கடல் மைல் வரை அமெரிக்க ஆளுகைக்கு உட்பட்டது. அதற்கு அப்பால் சர்வதேச எல்லை. எனவே அங்கே கப்பலை நிறுத்தினர். அங்கு போய் அனைவரும் குடித்து வந்தனர். எனவே வெறும் சட்டம் மட்டும் போதாது. மக்களும் மனம் மாறவேண்டும்.

மகாத்மா காந்தி கள்ளுக்கடை மறியல் என்று மட்டும் கூறவில்லை. மது ஒழிப்புப் பிரச்சாரமும் செய்தார். எனவே மது அருந்தும் ஆவலை மக்கள் விட்டனர். அண்ணா முதலமைச்சராக இருந்தவரை மதுவிலக்கு அமலில் இருந்தது. இன்றைக்கு மதுவிலக்கு அகற்றப்பட்டவுடன் நிகழும் பல குற்றங்களுக்குக் காரணமே மதுதான். இதனை யார் பிரச்சாரம் செய்கிறார்? எனவே சட்டம் மட்டும் போதாது, மக்களயும் மனம் மாற்றமடையச் செய்ய வேண்டும். இதனை ஏன் கூறுகிறேனென்றால் ஊழலை ஒழிக்கச் சட்டம் கொணரவேண்டுமென்று கூறுகின்றனர். இது தவறு. ஊழலை ஒழிக்க வேண்டுமென்றால் மக்களிடம் செல்ல வேண்டும். ஏன் இவ்வளவு சொத்துக்குவிப்பு ஆசை வந்துள்ளது? வாழ்க்கையே பணத்தை மையமாகக் கொண்டதாகிவிட்டது.

இன்றைக்குப் பெரிய பெரிய கல்விக் கூடங்கள் கலை, அறிவியல், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்காக நிறுவப்பட்டுள்ளன. இவை எதற்காக? மகிழ்ச்சியான வாழ்விற்காகவா! அறிவின் மேம்பாட்டிற்காகவா! அனைத்துமே பணம் குவிப்பதற்காகத்தான். மக்களில் பலர் தங்கள் புதல்வர்களும் புதல்வியர்களும் அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் இருப்பதாகப் பெருமிதம் கொள்கின்றனர். படித்தது இந்தியாவிற்குச் சேவை செய்வதற்கல்ல. அயல்நாட்டு மோகம்தான் இது. சி.சுப்ரமணியம் தனது புதல்வனை அமெரிக்காவில் படித்தாலும் இந்தியாவில் வந்து பணியாற்றுமாறு கூறினார். பணிக்காக அயல்நாட்டிற்குச் செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டார்.

பாரதியார் பாடினார்:

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே
இங்கே பிறந்து, வாழ்ந்து, இங்கேதான் இறக்க வேண்டும். இதல்லவா கல்வி? ஆனால் தற்போது நிலைமை வேறு. அமெரிக்கா செல்லவேண்டும். இலண்டன் செல்லவேண்டுமென்ற ஆவலே உள்ளது! எதற்கு அங்கு செல்ல வேண்டும்? அங்கே போய் ஏதாவது அறிவியல் பூர்வமாகக் கண்டுபிடிக்கவா? இல்லை பணம் குவிப்பதற்காகத்தான். எனவே ஊழலுக்குக் காரணம் இந்தப் பணவெறிதான். இந்த வெறி ஏன் வந்தது. வெறிதான் ஊழலுக்கு வித்திட்டது. அரசியலில் எவ்வகையிலும் பணம் சம்பாதித்த பணக்காரர்களுக்குத்தான் இந்த சமூகத்தில் மரியாதை உள்ளது. பணமில்லாத, உண்மையான அரசியல்வாதிக்கு எக்கட்சியிலும் மதிப்பில்லை. எனவே இந்த மனோபாவம் நிலவுவதால்தான் ஊழல், கொள்ள தொடர்கிறது. பெண்களும் இதற்கு ஒரு காரணம். பிறவீடுகளப் பார்த்து அவ்வாறு வாழத் தாங்களும் தலைப்படுகின்றனர். அனைத்து தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்களிலும் பெண்களத்தான் காட்டுகின்றனர். பெண்ணுரிமை பேசுகிறவர்களும் இதனைப் பெண்ணடிமை எனப் பேசுவதில்லை. இது பெண்கள் முன்னேற்றத்திற்கான அறிகுறி அல்ல. பெண்கள விலைபேசுகின்றனர். விளம்பரங்களில் பெண்களக் காட்டிச் சம்பாதிக்கின்றனர். மற்றவர்கள் போல் ஏன் சம்பாதிக்கவில்லை என்று பெண்கள வைத்துக் கேட்க விடுகின்றனர். இதனால் ஊழல், கொள்ளயில் ஈடுபடுகின்றனர். இதற்குக் காரணம் பணப்பேராசைதான்.

ஆகவேதான் மகாத்மா காந்தி கூறினார். இயற்கையிடம் மனிதன் தேவைக்கு போதுமானதாக உள்ளது. ஆனால் மனிதனின் பேராசைக்கு இயற்கையிடம் ஒன்றுமில்லை. எனவே ஆசையைக் கட்டுப்படுத்த வேண்டும். நாகரிகம் என்பது புறவசதிகள் அல்ல. நாகரிகம் என்பது ஆசைகள நிறைவேற்றுவதில் இல்லை. தேவைகளயும் ஆசைகளயும் கட்டுப்படுத்துவதில்தான் உள்ளது என்று உலகமே மகாத்மாவின் குரலைக் கேட்க வந்தது. அப்பேற்பட்ட மகாத்மா குழாய் நீர், தொலைபேசி, மின்சாரம், தொலைக்காட்சிப் பெட்டி அல்லது ரேடியோ இல்லாத ஒரு குடிசையில் வாழ்ந்தார். இவ்வாறு மகாத்மா வாழ்ந்து உலகிற்கே வழிகாட்டவில்லையா! இரயிலில் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்தார். வெளிப்புற ஆடம்பரம் தேவையில்லை என்று வாழ்ந்தவர். எளிய வாழ்வு, உயர்ந்த சிந்தனை என வாழ்ந்து காட்டியவர். எளிய வாழ்வும் உயரிய சிந்தனையும் மனிதனை மேம்படுத்துகின்றன. எனவே பணமிருப்போரை மதிக்காது மனிதனை மதிக்க வேண்டுமென்ற மனோபாவம் வரவேண்டும். பணக்காரனும் நேர்மையானவனும் தேர்தலில் நின்றால் நேர்மையானவன் வெற்றிபெற்றால் நல்லது நடக்கும். பணம் வாங்கி ஓட்டுப்போட்டால் ஊழல்தானே நடக்கும். இதற்கு யார் குற்றவாளி. எனவே மனிதன்தான் மாறவேண்டும். மனித வாழ்க்கை எதில் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

எனவே மகாத்மா போல் சிந்தனையில் மேம்பட்டு வாழ வேண்டும். மகாத்மா தலைமையிலான காங்கிரசால்தான் சுதந்திரம் வந்தது. இன்றைய இளஞர்கள் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். மகாத்மாவால்தான் சுதந்திரம் வந்தது. ஆனால் அவருடைய நான்கு புதல்வர்களில் ஒருவர் கூட அரசியல் பணியோ, பதவியோ பெறவில்லை. 1942 ஆகஸ்டு புரட்சியில் கைது செய்யப்பட்டு காந்தி, கஸ்தூரிபா மற்றும் அவரின் செயலர் மகாதேவ் தேசாய் ஆகியோர் ஆகாகான் மாளிகை சிறையில் வைக்கப்பட்டனர். அப்போதும்கூட இத்தகைய மாளிகைச் சிறைக்குப் பதிலாக எளிய கட்டடத்தில் சிறைவைக்கக் கூடாதா? என்று காந்தி கேட்டார். கஸ்தூரிபா மற்றும் மகாதேவ் தேசாய் சிறையிலேயே இறந்தனர். அங்கேதான் அவர்கள் சமாதிகள் உள்ளன. இத்தகைய அர்ப்பணிப்புள்ள தியாகக் குடும்பம்தான் மகாத்மா குடும்பம். ஆனாலும் பெண்களுக்கு உதாரணமாக இந்திராகாந்தி போன்று அதிகாரத்தில் அமர்ந்த பெண்களத்தான் காட்டுகின்றனர். வீரத்தியாகம் புரிந்த கஸ்தூரிபா அன்னையாரை பெண்களுக்கு உதாரணமாகக் காட்டுவதில்லை என்பது வெட்கக்கேடான விஷயமாகும். இந்த கஸ்துரிபாதான் மகாத்மாவின் பின்னணியாக இருந்தார். இத்தகைய உயர்ந்த பெண்மணி நமக்கு ஓர் எடுத்துக்காட்டல்லவா?

பெண்ணியம்

இன்று பெண்ணியம் பேசுகின்றனர். ஆனால் இந்தியாவில் பெண்ணியத்தைத் தொடங்கிவைத்தவர் மகாத்மாதான். காங்கிரஸ் மாநாட்டிற்குத் தொடக்கத்தில் இரு பெண்மணிகள்தான் வந்தனர். ஒருவர் அன்னிபெசன்ட் அம்மையார். இவர் ஆங்கிலேயர். பிறிதொருவர் காமா. இவர் பார்சி. பின்னர் பிரான்சு நாட்டுக்கு சென்றுவிடடார். இவர்கள் இருவரைத்தவிர வேறு பெண்கள் இல்லை. ஆனால் மகாத்மா தென்னாப்பிரிக்காவில் அறப்போராட்டம் நடத்தியபோது அதில் கஸ்தூரிபாயும் கலந்து கொண்டார். தமிழ்ப்பெண்கள் பலபேர் காந்தியின் தலைமையில் சிறை சென்றார்கள். ஆணுக்குப் பெண் நிகராகப் போராடிச் சிறைபோக முடியும் என்று நிதர்சனமாகக் காட்டியவர் மகாத்மா. இவ்வாறு தென்னாப்பிரிக்காவில் சிறை சென்று இறந்தவர்தான் தில்லையாடி வள்ளியம்மை. பூர்வீகம் தமிழகம்தான். தமிழகம் பலவகையிலும் பெருமையுடையது. தென்னாப்பிரிக்காவில் காந்தியுடன் பெரும்பான்மைத் தமிழர்கள் நெருக்கமாக இருந்தார்கள். பாலசுந்தரம் வழக்கு விவரமாக நீதிமன்றத்தில் நீதி கிடைக்கச் செய்தார். இவர் ஒரு தமிழர். இந்தியாவில் குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய இரு மாநிலங்களில் தான் மதுவிலக்கு அமுலில் இருந்தது. இது அண்ணா வரை தொடர்ந்தது. அவருக்குப் பின் மதுவிலக்கு இல்லை. எனவே தமிழகமும் காந்தியை விட்டுச் சென்றுவிட்டது என்பதைத்தான் இது காட்டுகிறது. மகாத்மா வந்தபின்தான் பெண்கள் அரசியலுக்கு அதிகமாக வந்தார்கள். நகையிலும், பட்டுப்புடவையிலும் மோகம் இருப்பதால்தான் பெண்கள் அடிமையாக உள்ளனர் என அவர்களுக்கு அறிவுரை கூறினார். மேலும் வயிற்றுப் பிழைப்பிற்காக உடலை விற்றுப் பிழைப்போர்களிடம் பேசினார். அவர்கள நல்வழியில் வாழ வழிகாட்டினார். பெண்ணிற்கு ஞானத்தை வைத்தான். புவி மேவிடும் ஈசன். மண்ணுக்குள்ள சிலர் அந்த அறிவைக் கெடுத்தார் என்றார் பாரதியார். பெண்களுக்கு உரிமை வேண்டுமென்றவர் மகாத்மா காந்தி. தன்னையே தாயாகவும் பாவித்து உதவியவர் மகாத்மா. பெண்ணுக்கு உயர்வு தந்தவர் மகாத்மா. நடைமுறையிலும் செய்து காட்டியவர். இன்றைக்குப் பெண்ணியம் பேசுவோர் மகாத்மாவைக் குறிப்பிடுகின்றனரா? அவரிலிருந்து தொடங்குகின்றனரா? அமெரிக்கா, இங்கிலாந்தைக் குறிப்பிடுகின்றனர். இங்கிலாந்தில் பெண்களுக்கு ஓட்டுரிமை போராடித் தாமதமாக வந்தது. இந்தியாவில் உடனடியாக வந்தது. கணவனுக்கு மனைவி சேட்டன். சேட்டன் என்றால் சொத்து. இதுதான் ஆங்கிலச் சட்டம். ஆனால் சுதந்திர இந்திய அரசியல் சாசனத்தில் கணவன் மனைவி சமம் என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்திய அரசியல் சாசனத்தில் தரப்பட்டிருக்கும் மானிட உரிமைகள் அனைத்தும் மகாத்மாவால் போதிக்கப்பட்டவை. இதனை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். ஆங்கிலேயர்கள் தந்ததல்ல. இன்றைக்குப் பெண்ணுரிமை என்று பேசுவதெல்லாம் பெண்ணை அடிமைப்படுத்துவதும் கேவலப் படுத்துவதுமாகும். அனைத்து இடங்களிலும் பெண்களத்தான் வேலைக்கு வைத்திருக்கின்றனர். ஆணுக்குப் பெண் சமம் என்றால் சிந்தனையில் சமம் என்று அர்த்தம். ஆனால் நிலைமை இதற்கு நேர்மாறாக உள்ளது. தொலைக்காடசிப் பெட்டியில் பெண்கள அலங்கோலமாக ஆடவிட்டுப் பெற்றோர்கள ரசிக்கிறார்கள், பாராட்டுகின்றார்கள்.

இது எதைக் காட்டுகிறது? இது பெண்களுக்கு முன்னேற்றமல்ல. எவரோ ஒருவர் பெண்ணை வைத்துச் சம்பாதிக்கின்றார். அனைத்துக் கடைகள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பெண்கள் சுரண்டப்படுகின்றனர். இவையெல்லாம் அநாகரிகம் என்று மக்களுக்குத் தெரியவில்லை. முழத்துண்டை உடுத்திக் கொண்டு காந்தி எவ்வளவு கெளரவமாக வாழ்ந்து காட்டினார்! டாக்டர் இராதாகிருஷ்ணன், இராஜாஜி மற்றும் மெத்தப்படித்த மேதாவிகள் முதற்கொண்டு காந்தியை வணங்கினர். அவருடன் இருந்த பெரும் சிந்தனையாளர்கள், பேராசிரியர்கள் அனைவரும் அவரிடம் கைகட்டி நின்றனர். அவர் கொண்டிருந்த சிந்தனை, அவரின் வாழ்க்கைதான் இதற்குக் காரணம். கஸ்தூரிபாய் எவ்வாறு இருந்தார்? குஜராத்திலுள்ள கிராமத்துப் பெண்ணைப் போலவே இருந்தார், வாழ்ந்தார். எனவே ஆண் பெண் சமத்துவம் என்பது சிந்தனை உயர்வில்தான் உள்ளது. இதற்காக பெண்கள் அழகாக இருக்கவேண்டாம் என்பதல்ல. அதுவே வாழ்க்கை அல்ல.

காந்தி கண்டது அனைவரின் நலம்

அடுத்து சர்வோதயம் என்பது அனைவரும் நலமாக வாழ வேண்டுமென்பதாகும். இன்றைக்குள்ள பொருளாதார முறையில் வலுத்தவனே வாழ முடியும். ஆனால் சர்வோதயத்தில் கடைக்கோடி மனிதனும் வாழ முடியும். பொதுவுடைமை பலாத்காரம் சார்ந்தது. காந்தி கண்ட சர்வோதயம் அன்பின் வழி சார்ந்தது. அனைவருக்கும் எழுச்சி மற்றும் மேன்மை என்பதே சர்வோதயம். மகிழ்ச்சியாக இருந்து உலகைப் பார்த்தால் அன்பாகத் தெரியும். இன்றைக்கு வன்முறைக் குழப்பங்களுக்கு மூலகாரணம் பகைமை உணர்வுதான். பாபர் மசூரி இடிக்கப்பட்ட டிசம்பர் 6ஆம் நாள மறவாதீர் என்று போஸ்டர் ஒட்டப்படுகிறது. இதற்கு என்ன காரணம்? வெறுப்பு அரசியல்தான். நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்லது அன்றே மறப்பது நன்று என்று வள்ளுவர் கூறினார். ஆனால் நன்றல்லதை மறவாதே என்று கூறுவது எவ்வளவு கொடூரமானது. இன்றைக்கு சினிமாக்களில் வெட்டு, குத்து, கொலைச் செயல்கள குளாஸ் அப்பில் காட்டுகின்றனர். இது எவ்வளவு கொடூரமானது. கலை, இலக்கியம் என்பது அன்பை, பண்பை மேம்படுத்த வேண்டும். மக்களுக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தரவேண்டும். கொடூரத்தை தருவது எவ்வகையில் இலாபம்? டிசம்பர் 6ஆம் நாள மறவாதே என்பது எவ்வகையில் நல்லது? இது நடந்தது பாபர் மசூதி இடித்தல் தொடர்பாக. இதனை இடிக்கத் திருநெல்வேலியில் இருந்து கூட கடப்பாரையுடன் சென்றான். தமிழகத்திலே நிறைய பாழடைந்த கோவில்கள் உள்ளன. இதனைச் சரி செய்ய ஆள் இல்லை. அன்று அப்பர் உழவாரப்படையுடன் சென்று புல் செதுக்கி கோவிலைச் சுத்தப்படுத்தினார். பாபர் மசூதி இடிப்பதற்குக் கண்ட காரணம் விநோதமானது. அது இராமர் பிறந்த இடம். இராமர் கோவில் கட்ட வேண்டுமென்று அத்வானி இந்த யாத்திரை மேற்கொண்டனர். இராமரைக் காப்பாற்ற இப்படியொரு முயற்சி. ஆனால் மகாத்மா காந்தி தன்னை இராமர் காப்பாற்றுவதாகக் கூறினார். பாபர் மசூதி விவகாரம் அரசியல் சார்ந்தது. அதனை இடித்ததில் முஸ்லீம்களினால் கலவரம் ஏற்பட்டு இந்துக்களிடம் அனுதாப ஓட்டுப் பெறலாம் என்ற எண்ணம் ஒரு கட்சிக்கு. இடிக்கும் வரை அங்கு முஸ்லிம் தொழுகை நடைபெறவில்லை. இடிப்பதை அரசாங்கமாவது தடுத்திருக்க வேண்டும். அரசும் தடுக்கவில்லை. அரசியல் கட்சித் தலைவர்கள் போய் தடுக்கவில்லை. ஏன், முஸ்லிம்கள பாபர் மசூதியைச் சுற்றித்திரண்டு நின்றிருந்தால் இடித்திருக்க முடியுமா? காரணமென்ன? இடித்து ஓட்டு வாங்க எண்ணியது ஒரு கட்சி. இடிக்கட்டும் என்றிருந்து ஓட்டு வாங்க முயன்றது பிறிதொரு கட்சி.
மகாத்மா காந்தி இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? காந்தியவாதிகள் முயன்றிருந்தால் இது நடந்திருக்குமா? காந்தியே அங்கு சென்று உண்ணாவிரதமிருந்திருப்பார்? தன்னைச் சுட்டுவிட்டு இடி என்று கூறியிருப்பார். இன்றைக்கு காந்தி எவ்வளவு பொருத்தமானவர் என்று தெரிகிறதல்லவா? இது நிதர்சனமான உண்மை. காந்தி காலத்தில் குருத்துவாராவைக் காப்பாற்ற காந்தி வழியில் ஆங்கிலேயர்களின் அடக்குமுறையைத் தாங்கி இரத்தம் சிந்திக் காப்பாற்றினார்கள் சீக்கிய மறவர்கள். இதே மாதிரி பாபர் மசூதியைக் காப்பாற்றியிருக்கலாமல்லவா? ஏன் காப்பாற்றவில்லை. மதத்தை அரசியலாக்குகின்றனர் இவர்கள். மகாத்மா அரசியலை மதமாக்கினார்.

எனவே நம் சிந்தனையில் வன்முறை உள்ளது. இது நீங்க வேண்டும். பகத்சிங் வீரத்தியாகி எனினும் அவர் வழியில் சுதந்திரம் வரவில்லை. வெளியிலிருந்து பல தலைவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அன்றைக்குப் பீகாரில் சுதந்திரத்திற்காக என்னவெல்லாம் செய்தார்களா அதனையே இன்றைக்கு மாவோயிஸ்டுகள் அங்கு செல்கின்றனர். மனித உரிமைக் கழகம் என்று உள்ளது. இதன் செயல் என்னவென்றால் சிறையில் இருப்பவர்களுக்குத் துன்பம் தரக்கூடாது. உரிமை வேண்டும் என்று கோருவதாகும். மனித உரிமைகள் பற்றிப் பேச காந்தியைவிட வேறு யார் உண்டு. ஆனால் மனித உரிமைகள் தொடர்பாக காந்தியைப் பற்றி எவரும் பேசவில்லை. இப்படி உரிமைகோருவோர் மாவோயிஸ்டுகள் மக்களக் கொல்வதைப் பற்றிப் பேசுவதில்லை. ஒரு ஊரில் அவர்களப் பற்றிய செய்தியைக் கூறியதற்காக அவனை மாவோயிஸ்டுகள் தடிகொண்டு தாக்கியதாகத் தொலைக்காட்சியில் காட்டினர். ஆனால் புரட்சியாளர்கள் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை. காந்தியப் பாதையில் இது நடக்குமா? எல்லோரையும் அடித்துக் கொன்றுவிட்டு எவருக்காகப் போராடப் போகிறார்கள்? 1942இல் ஆகஸ்டு புரட்சி நடந்தது. மூன்றே மாதத்தில் ஆங்கிலேயர்கள் இதனை அடக்கினர். ஆனால் மகாத்மாவை அடக்க முடியவில்லை. வன்முறையை அடக்கத் தெரிந்த ஆங்கிலேயர்களுக்கு அகிம்சையை ஒடுக்கத் தெரியவில்லை. அகிம்சையை ஒடுக்க முடியவில்லை. சாதாரண மக்கள, சேரியில் வாழும் மக்களயும் சுதந்திரத்தாகம், ஆசை ஏற்பட வைத்தார் மகாத்மா. எனவே ஆங்கிலேயர் இந்த நாட்டை ஆளமுடியாமல் வெளியேறிவிட்டனர். இதற்குக் காரணம் மக்கள் உள்ளத்தில் ஏற்பட்ட சுதந்திர எழுச்சிதான். இதற்கு அடிப்படையாக அமைந்தது அச்சமின்மைதான். அச்சம் இல்லை எனில் அப்பொழுதே அவன் சுதந்திரமானவன். திலகர், விவேகானந்தர், பாரதியார் ஆகியோர் அடிமை நாட்டில் அச்சமின்றி சுதந்திரமாக வாழ்ந்தவர்கள். ஆனால் நாமெல்லாம் சுதந்திர நாட்டில் அடிமைகளாக வாழ்பவர்கள். இன்றைக்கு பஞ்சாயத்து தலைவர், எம்.எல்.ஏ. அமைச்சர், தாதா, போக்கிரி என்று பலருக்கு மக்கள் அடிமை. அச்சமின்றி மக்கள் வாழ்கின்றனரா? இல்லையே ஏன்? அச்சம் அவனிடமிருந்து வரவில்லை. ஒருவர் உள்ளத்தில்தான் உள்ளது. பயமில்லாதவரை எவரும் அச்சுறுத்த முடியாது. இதைத்தான் காந்தி கற்பித்தார். பணக்காரனுக்கு அல்ல, சாதாரண பாமரனுக்கு அதனைக் கற்பித்தார்.

தீண்டாமை நீக்கம் மகாத்மாவின் மகத்தான தொண்டு

இறுதியாக நான் கூறுவது தீண்டாமை பற்றி. தீண்டாமை பேரளவில் ஒழிந்துவிட்டது. எங்காவது இருக்கலாம். மகாத்மா காந்தியால்தான் தீண்டாமை ஒழிந்தது. இதனை இளஞர்கள் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். இன்று பட்டியலிடப் பட்டோரும் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். தீண்டாமை முற்றிலுமாக நீங்கவேண்டும் என்று கூறியவர் மகாத்மா. சாதி சம்பிரதாயங்கள ஆங்கியேலர்கள் தங்கள் சுரண்டலுக்காக ஆதரித்தனர். தற்போது ஹரிஜன் என்ற சொல்லை வெறுக்கின்றனர். ஆனால் ஹரிஜன் என்றால் கடவுள் மக்கள் என்று நல்ல அர்த்தம்தான். யூதர்கள் கடவுளால் தேர்ந்தெடுத்த மக்கள் என்றே அழைக்கப்படுகின்றனர், யூத மத மரபில். நரசிம்ம மேத்தா பயன்படுத்திய ஹரிஜன் என்ற சொல்லை ஒரு தாழ்த்தப்பட்டவர் காந்திக்கு எழுதியபோது இச்சொல்லை காந்தி பயன்படுத்தத் தொடங்கினார். காந்தி கூறினார் என்று பலர் தவறாக எண்ணுகின்றனர். ஹரிஜன் என்ற சொல் உயர்வான சொல். மற்றவர்களத் துர்ஜன் என்றார் காந்தி. ஹரிஜனுக்குத் தொண்டு செய்தால் நல்லவராகலாம் என்றார் காந்தி. ஹரிஜன சேவா சங்கத்தில் மேல்சாதித் தலைவர்கள உறுப்பினர்களாக்கி ஹரிஜன மக்களுக்குத் தொண்டாற்றச் செய்தார் காந்தி. இதுதான் காந்தி வகுத்த விதி.

அன்று மேல்சாதிக்காரர்களின் மனதிலிருந்து தீண்டாமை உணர்வை நீக்கப்பாடுபட்டார் காந்தி. அதனால்தான் இராஜாஜி, சடோபாத்தியாய போன்ற பிராமணத் தலைவர்கள் அர்ப்பணிப்புடன் தீண்டாமை ஒழிப்பிலும் ஹரிஜன் சேவையிலும் ஈடுபட்டார்கள். தீண்டாமையைக் கடைப்பிடிப்போர் காங்கிரசில் உறுப்பினராக இருக்க முடியாது என்றும் சட்டம் கொண்டுவரச் செய்தார் காந்தி. அரசியல் சட்டம் 17ஆவது பிரிவு தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்று கூறுகிறது. இதனைச் செய்தவர் காந்தி. அரசியல் நிர்ணய சபையில் பெரும்பாலும் இருந்தவர்கள் காங்கிரஸ்காரர்கள். இந்திய அரசியல் நிர்ணய சபையில் தீண்டாமை ஒழிப்பு சட்டத்தை மேல்சாதிக்காரர் ஒருவர் கொண்டுவர, மேல்சாதியைச் சார்ந்த ஒருவர் ஆமோதித்தார். அப்போது அங்கிருந்த தாழ்த்தப்பட்ட உறுப்பினர் உட்பட காந்திக்கு ஜே என்று குரல் தந்தனர். இதனை இன்றைய காலத் தலைவர்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். மகாத்மா காந்தி வகுப்புவாதப் பிரதிநிதித்துவம் வேண்டாமென்றார். அப்போதே அவர் கருத்து தேர்தலில் கடைப் பிடிக்கப்பட்டிருந்தால் சாதி போயிருக்கும். அமெரிக்காவில் ஒரு நீக்ரோ அனைத்துப் பிரிவினரும் ஓட்டுப்போட்டு தலைவரானார். ஆனால் இந்தியாவில் ஹரிஜன் இடஒதுக்கீட்டுத் தொகுதியில்தான் போட்டியிடுகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் பொதுத் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றிபெறும் தைரியம் வரவேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள், என்றும் தாழ்த்தப்பட்டவர்களாகவே இருக்க வேண்டியதில்லை. அன்று அம்பேத்கார் தலைவராக வந்தார். அதுபோல் இன்றும் வரவேண்டும். 1933 வாக்கில் மகாத்மா ஒரிசாவில் ஹரிஜன யாத்திரை சென்றார். அப்போது தாழ்த்தப்பட்ட ஒருவர் மண்டியிட்டு வந்து மகாத்மாவிடம் ஒரு ரூபாய் நிதி தந்தார். காந்தி அவரின் செயலைப் பார்த்து வாங்க மறுத்து அவரிடம் மூன்று சத்தியங்கள வாங்கினார்.

1. எக்காரணத்தாலும் எந்த மனிதன் காலிலும் விழமாட்டேன். 2. சாராயம் குடிக்க மாட்டேன், 3. செத்த மாட்டு மாமிசம் சாப்பிடமாட்டேன். இதுதான் எனக்கு நிதி என்று கூறினார். அவனுடைய ஊரில் இது முடியாதென்றால் ஊரைவிட்டுச் சென்றுவிட வேண்டும்; சத்தியத்தை விட்டுவிடக் கூடாது என்றார். இவ்வாறு ஹரிஜனங்கள் மேம்பாட்டிற்காக அவர் பாடுபட்டார்.

நந்தனார் இருந்தார். மேல்சாதியினர் கோவிலுக்குப் போகத் தடுத்தது வேறு. ஆனால் அவர் குலத்தவரே நம் சாதிக்கு இது அடுக்குமோ என்றனர். தீண்டாமையைப் பாவம், கேடு என்று அவர்கள் எண்ணவில்லை. இது இறைவன் விதி என்று நம்பினர். அவர்களிடம் காந்தி கூறினார், தீண்டாமை என்பது இறைவன் வகுத்ததல்ல, மனிதன் வகுத்தது. எனவே அவர்களும் மனிதர்கள என்று. மண்ணில் நீயும் ஓர் மனிதன் என்று பாரதிதாசன் கூறியதுபோல தாழ்வு மனப்பான்மையை விட்டு வெளியில் வந்து சமத்துவத்திற்குப் போராடு என்று ஹரிஜனங்களிடம் கூறினார். மேல்சாதியினரையும் இதற்காகப் போராடவைத்தார். இது எத்தகைய மாபெரும் புரட்சி! ஆயிரமாயிரம் ஆண்டுகள் இருந்து வந்த வழக்கத்தை, புத்தர் காலத்திலும் இருந்து வந்த வழக்கத்தை ஒழித்தவர் காந்தி. இது புகழ்ச்சிக்காகக் கூறவில்லை. அவர் கூறியவாறு செய்தால் அனைவரும் சமத்துவமாக இருப்பர்.

இன்றைக்குத் தீண்டாமை வேறு விதத்தில் எதிர்மறையாகச் செயல்படுகிறது. சாதிக் கணக்கு எடுக்கப்படுகிறது. சாதியை ஒழிக்க விழையும் தலைவர்கள் இது பற்றிக் கவலைப்படுவதில்லை. இட ஒதுக்கீடு பல சாதிகளுக்கு இன்று பிரித்துப் பிரித்துத் தரப்படுகிறது. அனைவரும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று வந்தால்தான் தீண்டாமை ஒழியும். ஹரிஜன் என்ற சொல்லிற்குப் பதிலாக தலித் என்று கூறுகின்றனர். இது மராட்டியச் சொல். அம்பேத்கார் மராட்டியராதலால் இச்சொல்லைப் பயன்படுத்தினார்.

ஹரிஜன் என்ற சொல் எல்லோருடனும் இணைக்கும் சொல். தலித் பிரிக்கிற சொல். ஒடுக்கப்பட்டவர் என்று பொருள். காந்தி அனைத்துச் சாதியினருக்கும் தலைவர். அரசியலில் ஒவ்வொருவரும் சாதிக்கட்சி வைத்துள்ளனர். இதனை எவரும் எதிர்ப்பதில்லை. இவ்வளவும் மகாத்மாவை மறந்ததால் வந்தது. அவர் கூறியதை ஏற்றிருந்தால் சர்வோதயம் மலர்ந்திருக்கும். வட்டமேஜை மாநாட்டில் வகுப்புவாதப் பிரதிநிதித்துவத்தை எதிர்த்தார். தாழ்த்தப்ட்டவர் நின்று அவர்கள் மட்டுமே ஓட்டுப்போடுவர் என்று வட்டமேஜையின் போது அறிவிக்கப்பட்டது. அப்போது காந்தி, முஸ்லிம் முஸ்லிமாக இருப்பார், கிறித்தவர் கிறித்தவராக இருப்பார், சீக்கியர் சீக்கியராக இருப்பார், ஆனால் தாழ்த்தப்பட்டவர் என்றும் தாழ்த்தப்பட்டவராகத்தான் இருக்க வேண்டுமா? என்று கேட்டார். இதனை உயிரை தந்தாவது தடுப்பேன் என்றார். அவர் சிறையில் இருக்கும்போது ஹரிஜனங்களுக்கு தனித்தொகுதிக்கான மசோதா வந்தது. அவர் உண்ணாவிரதமிருந்து தடுத்தார். அப்படி மகாத்மா செய்யாதிருந்தால் இன்று அனைவரும் இவ்வாறு சமத்துவமாக அமர்ந்திருக்க முடியுமா? பிரிவு பிரிவாக இருப்பர் எனவே ஒற்றுமை வேண்டுமெனில் ஹரிஜன் என்ற சொல் வேண்டும். இந்தக் குஜராத்திச் சொல்லிற்கு முன்னால் தமிழகத்தில் இச்சொல் வந்துவிட்டது. தாழ்த்தப்பட்டவரின் கையைப் பிடித்து குளத்தில் இறங்கிக் குளித்தார் இராமானுஜர். மற்றவர்கள் ஆட்சேபம் செய்தபோது அவர்களத் திருக்குலத்தார் என்றழைத்தார். தமிழில் திரு என்றால் தெய்வீகம் என்ற பொருளுடையது. எனவே ஹரிஜன் என்ற சொல் வேண்டாமென்றால் தலித் என்பதற்குப் பதிலாக இச்சொல்லைப் பயன்படுத்தலாமே. ஆனால் மற்றவர்களிடமிருந்து அவர்களப் பிரித்துத் தலைவராகி அரசியல் நடத்தும் சூது நடக்கிறது.

எனவே தனிமனித வாழ்விற்கு, குடும்ப வாழ்விற்கு, சமுதாய வாழ்விற்குப் பின்பற்ற முன்மாதிரியானவர் மகாத்மா. அவர் பற்றிய நூல்கள் ஏராளம். எனினும் அவர் சொல், செயல் இரண்டுமாக இருந்தார். காரல்மார்க்ஸ் எழுதிய தத்துவத்தைப் பிறர் நிறைவேற்றினர். ஆனால் காந்தி தானே சிந்தனையாளராகவும் செயல்படுத்துபவராகவும் இருந்தார். அவர் செயலிலிருந்தே தத்துவம் கண்டு செயல்பட்டவர். அவரிடம் செய்தி கேட்டபோது என் வாழ்க்கையே என் செய்தி என்றார். எனவே மகாத்மா, அவர் எழுதியதை விடவும் பேசியதை விடவும் பெரியவர் என்று தாகூரே கூறியுள்ளார்.

வாழ்க்கையே செய்தி என்று வேறு தலைவர்களுக்குக் கூறமுடியாது. மகாத்மா வாழ்க்கையில் பொய்மை இல்லை. இரகசியம் இல்லை. திறந்த புத்தகம் அவர். அவர் வாழ்வே சத்தியசோதனை. எனவே அவர் வாழ்க்கையை அனைவரும் படிக்க வேண்டும். இளஞர்கள்தான் இச்சமூகத்தைத் தூக்கி நிறுத்த முன்வரவேண்டும். காந்தி இளம் வயதிலேயே களத்திற்கு வந்தார். இந்தியாவில் காந்தி போராடியபோது இளம் வயதிலேயே வந்து தன்னலமற்று அர்ப்பணிப்புடன் போராடியவர்கள்தான் பின்னாளில் தலைவர்களாக வந்தார்கள். எனவே காந்தி வாழ்க்கையைப் படிக்க வேண்டும். இளஞர்கள் முன்வந்து நாட்டை மேம்படுத்த வேண்டும்.

(கருப்பூர், கெளடசி நிறுவன ஊழியர் பயிற்சி முகாமில் ஆற்றிய உரை 13.08.2011. சொற்பொழிவைத் தொகுத்தவர் முனைவர் எஸ்.ஜெயராஜ்)