அன்பே சிவம்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங் கருணை அருட்பெருங்சோதி
எத்துணையும் பேதமுறாது
எவ்வுயிரும் தம்முயிர்போல்
ஒத்துரிமை உடையவராய்
உவக்கின்றார் யாவர்
அவர் உளம்தான் சுத்த சித்துருவாய்
எம்பெருமான் நடம்புரியும்
இடமென நான் தேர்ந்தேன்
அவ்வித்தகர்தம் சேவடிக்கு
எவல் செய்ய சிந்தமிக விளந்ததாலோ

இந்தப் பெரியத் தொண்டை நிகழ்த்துகிற வணக்கத்துக்குரிய தம்பையா அவர்கள, எனக்கு முன்னால் உரையாற்றிய புலவர் இராமலிங்கம் அவர்கள என்னை அறிமுகப்படுத்திய நண்பர் பழனிச்சாமி அவர்கள, கந்தசாமி அவர்கள, பெரியோர்கள தாய்மார்கள, இந்த இடத்திலே என்னையும் ஓர் பொருளாக்கி இந்த கற்றோர் அவையில் வள்ளல் பெருமான் பற்றிப் பேசப் பணித்தமைக்காக தம்பையா அவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் இப்பொழுது கடவுள் நம்பிக்கை உடையவனாக இருக்கிறேன். நான் முற்காலத்திலே நம்பிக்கை இல்லாதவனாக இருந்தேன். படிக்கிற காலத்திலே தனித்தமிழ் இயக்கத்தை நடத்தினோம். தூய வளனார் கல்லூரியில் படிக்கிற காலத்திலே ஒருவர் பெயரைச் சொன்னால் உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். தமிழ்க்குடிகன் என்ற ஒரு அமைச்சர் இருந்தார். அவர் பெயர் சாத்தையா. பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்று இருக்கிற இளவரசு என்று ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் பிச்சை. நாங்கள் எல்லாம் சேர்ந்து, தமிழ்ப் பேராயம் என்ற ஒரு அமைப்பை அன்றைக்கு தூய வளனார் கல்லூரியிலே இருந்த புதிய மாணவர் விடுதியிலே நடத்தினோம். ஏன் அதை அழுத்தமாக சொல்கிறேன் என்றால், அந்தக் காலத்திலே தமிழுக்குப் பெருமை கிடையாது. றீமி. மூலிவிஸ்ரீஜுவி ளீலியியிஆல் போய் தமிழில் பேசிக்கொண்டிருப்பதே மரியாதைக் குறைவான விஷயம். தனித்தமிழ் பேசுவதென்றால் எவன் கேட்பான். எங்களுக்கு இருக்கிற முரட்டுக் குணத்தினாலே அடிப்பான் உதைப்பான்னு பயந்து கேட்பார்கள். அப்போது படித்த ஷண்முகம் கூட இங்கே இருக்கிறார். தமிழ்ப் பேராயம் என்று ஒன்று வைத்தோம். தனித் தமிழ் பெயராக எல்லோரும் வைத்துக்கொண்ட காலத்தில் சாத்தையா தமிழ்க்குடிமகனானார், பிச்சை இளவரசு ஆனார், நான் தொல்காப்பியன் என்று வைத்துக்கொண்டேன். சட்டக் கல்லூரியிலே படிக்கிறபோது கூட தொல்காப்பியன் என்றே நான் என்னை அழைத்துக்கொண்டேன். கெசட்டிலே மாற்றவில்லை. எனக்கு பெற்றோர் இட்டப் பெயர் இந்த இராமலிங்கம். ஒரு நாள் நான் விடுமுறையிலே வீட்டுக்கு வந்தபோது, அந்தக் காலத்திலே உணவு கேட்க வருகிறவர்கள் அரிசி வாங்க வருகிறவர்கள் தாயுமானவர் பாட்டைப் பாடுவார்கள், வள்ளலார் பாட்டைப் பாடுவார்கள், குணங்குடி மஸ்தான் பாட்டைப் பாடுவார்கள். இப்போது அதெல்லாம் கிடையாது. ஒருவர் உருக்கமாக எங்கள் வீட்டுக்கு முன்னாலே வந்து பொழிந்து தள்ளினார். அது எந்தப் பாட்டு என்று இப்போது எனக்கு நினைவில்லை. அப்போது நான் சாமி கும்பிடுவது இல்லை. ஆனால் அந்தப் பாட்டை கேட்டு உருகாமல் என்னால் இருக்க முடியவில்லை. எனக்குக் கடவுள் பக்தி என்று ஒன்று இல்லாமலேயே வள்ளலார் பாட்டு என்னை உருக்கியது. அதைக் கேட்டவுடன் முடிவு செய்தேன், நம்முடைய அப்பா நமக்கு நல்லப் பெயரையே வைத்திருக்கிறார். இந்தப் பாட்டைப் பாடிய பெருமானுடைய பெயர் நமக்கு இருக்கிறது. எனவே மாற்றிக்கொள்வதில்லை என்று நான் முடிவு செய்தேன். வள்ளலார் என்னை அப்படி ஆட்கொண்டார். அப்போது கடவுள் பக்தி என்று ஒன்று வந்துவிடவில்லை. இன்றைக்கும் கூட நான் வள்ளலாரைப் பற்றி படித்துவிட்டேன் என்று சொல்வது தவறாக இருக்கும். நான் நிறைய பேசிவிட்டேன். எல்லா இடங்களிலும் பேசிவிட்டேன். இப்பொழுது பேசாமல் இருப்பது நன்றாக இருக்கும்போல எனக்குத் தோன்றுகிறது. அமைதியாக இருந்து எல்லாவற்றையும் கேட்டு நாம் அறிவை வளர்த்துக் கொள்வோமா என்று எனக்கு வரவரத் தோன்றுகிறது. இப்பொழுது இந்தப் பேச்சு என்பது நான் எனக்குத் தெரிந்ததைச் சொல்லி உங்களத் தெளிவுப் படுத்துவதற்காக என்று நான் நிச்சயமாகக் கருதவில்லை. இங்கே இருப்பதிலே பலர் வள்ளலார் பாடலை அப்படியே திருப்பிச் சொல்ல, மனப்பாடமாக சொல்ல வல்லவர்கள் என்பதை நான் அறிவேன். என்னுடைய மாமா ஒருவர் இருக்கிறார் இரத்தினம் என்று. அவர் இங்கேயே வந்து திருவருட்பாவெல்லாம் பாடுவார். அப்படி ஒரு பாடலைக் கூட என்னால் நினைவில் வைத்து சொல்ல முடியாது. எனவே நான் உங்களுக்கு விளக்கம் சொல்லிவிடப் போகிறேன் என்ற பெருமையிலே நான் இங்கே இல்லை. வள்ளலாரைப் பற்றிப் பேசுகிறப் புண்ணியம் எனக்குக் கிடைக்கிறது என்று நான் மெய்யாகவே நம்புகிறேன். நல்லோரைப் பற்றிப் பேசுவதுவும் அவர்கள் புகழ் உரைப்பதுவும் நன்றே என்கிற உண்மையான, ஏனென்றால் வள்ளலாரைப் பற்றி நினைக்கிறபோது நாம் நம்முடைய மாசு அகன்று நம்முடைய குறைகள் நீங்கி நாம் சற்று உயர்ந்து நிற்போம். நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே என்றப் பாடலுக்கு என்னப் பொருள் என்பதை அண்மைக் காலத்தில்தான் தெளிவாக உணர்ந்தேன். நல்லவர்களப் பற்றிப் பேசுகிறபொழுதும், சிந்திக்கிறபொழுதும், அவர்களப் பற்றி உணர்கிறபோதும், அந்த நேரத்திலாவது நாம் உயர்கிறோம். அதையே திரும்பத் திரும்ப செய்துகொண்டிருந்தால் அந்த உயர்வு நிலையாக இருக்கும். கீழே விழமாட்டோம். ஆன்மா என்பது சாந்ததன்வண்ணம் என்று சைவ சித்தாந்தம் சொல்கிறது. நீங்கள் நல்லதையே சார்ந்திருப்பது, நல்ல சகவாசத்தையே வைத்திருப்பதுதான் உங்களக் காப்பாற்றக் கூடியது. அந்த முறையில் வள்ளலாரைப் பற்றி பேசுகிறபொழுதெல்லாம் நமக்குத் தோன்றும். என்ன தலைப்புக் கொடுக்கலாம் என்று ஐயா அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டபொழுது, வள்ளலாரைப் பற்றிப் பேசுவதற்கு அன்பைவிட வேறு என்ன இருக்கிறது? என்று சொன்னேன். அப்படியே பேசலாமா என்றார். ஆகவே அன்பே சிவம் என்று இருவரும் முடிவு செய்துவிட்டோம்.

அன்பே சிவம் என்கிற பெரியத் தத்துவப் பொருள நான் விளக்கிவிடப்போவதில்லை. ஆனால் எனக்கு அந்த சொற்றொடரை விட வள்ளலாரைப் பற்றிப் பேசுவதற்கு பெரிய விஷயம் இருப்பதாகத் தோன்றவில்லை.

அன்பும் சிவனும் இரண்டென்பார் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே

என்றார் திருமூலர். இந்தத் திருமந்திரத்துனுடைய வாழ்வுதான் வள்ளல் பெருமானின் வாழ்வாக எனக்குத் தோன்றுகிறது. பாடல்களப் படித்து சொற்களுக்கு என்ன பொருள், ஒவ்வொரு சொல்லும் என்ன சொல்கிறது, என்பதையெல்லாம் சிந்திக்காமல் வள்ளலார், அவர் பாடல்கள் என்று நம் காதிலே ஒலிக்கிற பாடல்கள் அவரைப் பற்றி நாம் பெறுகிற செய்திகள் அல்லது அவர் உருவத்தைப் பார்க்கிற நம்முடையப் பார்வை அதிலிருந்து வெளிப்படுகிற, தோன்றுகிற எண்ணம் என்ன? அன்பும் கருணையும் தான். வள்ளல் பெருமான் அறிவித்தார் வாழையடி வாழையென வந்த திருக்கூட்டத்தில் நானும் ஒருவனன்றோ அந்த வாழையடி வாழை என்பது என்ன? நம்முடைய ஞானப் பரம்பரையிலே அவர் வந்தார். நம்முடைய ஞானம் எந்தக் காலத்திலே உதித்தது? அந்த ஞானத்தை போதித்த ஞானி யார்? நமக்குத் தெரியாது. என்று பிறந்தனள் இவள் என்று தெரியாதத் தாய் என்று பாரதியார் பாடினாரோ அப்படி உலகத்திலேயே மிக மூத்தத் தத்துவ மறபை கொண்டது இந்த நாடு. தமிழ்நாடு, ஞானமுடைய நாடு என்று பாரதியார் சொன்னார். விவேகானந்தர் சிக்காகோவிலே போய் பேசப்போகிறபோது சொன்னார் I come from the most ancient order of munks என்று சொன்னார். உலகத்திலேயே மிகப் பழமையான துறவிகளின் கூட்டத்தின் பிரதிநிதியாக நான் வந்தேன் என்று சொன்னார். அப்படி நாம் அடி காண முடியாத தொல்புலங் காலத்திலிருந்து வந்த ஞானப் பரம்பறையில் வள்ளலார் வந்தார். நமக்கு முன்னாலே எத்தனையோ சிவனடியார்கள், வைணவ அடியார்கள் இருந்தார்கள், இன்னும் எத்தனையோ மார்க்கங்களுக்கு துறவிகளும் ஞானிகளும் ஞான நூல்களப் பொழிந்து தள்ளியிருக்கிறார்கள். எதிலே வேறுபாகிறார் நம்முடைய வள்ளல் பெருமான்? எனக்குத் தோன்றுகிறது, அவர் ஒன்றும் தான் வேறுபட்டு இருப்பதாகச் சொல்லவில்லை. வள்ளல் பெருமான் திருஞானசம்பந்தரைக் குருவாகக் கொண்டார். திருஞானசம்பந்தர் முருகன் அம்சம் என்பது மரபு. அதனால்தான் கந்தக் கோட்டத்து முருகனை இவர் பாடி கந்தக்கோட்டம் என்பது புகழ் பெற்றது. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளும் இவரும்தான் அதைப் பாடியிருக்கிறார்கள். இவர்கள் பாடுவதற்கு முன்னால் அது ஒன்றும் விளக்கம் பெறவில்லை. கந்தக்கோட்டத்தை வைத்து வள்ளலாரால் பாடப்பட்டப் பாடல்கள்தான் இன்றைக்கும் எல்லோராலும் பாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முருகனைப் பாடினார், சிவனைப் பாடினார் எல்லா தெய்வங்களயும் பாடினார். ஆனால் அவர் கொண்ட நூல் திருவாசகம். திருமுறைகள நீங்கள் படித்துவிட்டு, திருவாசகத்தைப் படித்து பாட்டைச் சொல்லாமல் வள்ளல் பாட்டைச் சொல்லுங்கள், அதுவும் திருவாசகம் போலவே இருக்கும். வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பம் சாற்றினிலே தேன்கலந்து பால் கலந்து செழுங்கனி தீஞ்சுவை கலந்து என் ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே. ஒவ்வொரு சொல்லும் பொருளுடையது. திருவாசகம் எல்லாரும் படித்தாலும் அப்படியே சுவைத்து வந்து விடாது. வான் கலந்த மாணிக்க வாசக அது வானில் கலந்துவிட்டார் சிதம்பரத்திலே என்றும் சொல்லலாம் அல்லது தெய்வக் கலப்புடைய மாணிக்கவாசகர் என்றும் பொருள் கொள்ளலாம். வான்கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால். நீங்கள் அதிலே ஈடுபட வேண்டும். அதிலே உருக வேண்டும். அப்படி ஈடுபட்டுப் பாடுகிறபொழுது, தேன்கலந்து பால் கலந்து செழுங்கனி தீஞ்சுவை கலந்து... இதற்குமேல் எப்படி ஒருவர் சொல்ல முடியும் அந்த உருக்கத்தை? திருவாசகம் என்ற நூலை உருக உருக பயின்று இவருடைய நூல் அடுத்த திருவாசகமாக நமக்கு இருக்கிறது. எந்தப் பாட்டைவேண்டுமானாலும் படிக்கலாம். உருக்கமில்லாத ஒரு பாட்டைக் கூட நாம் பார்க்க முடியாது. திருவாசகம் அவருக்கு நூல். அனால் எல்லோரையும் விட மாறியிருக்கிறார் வள்ளல் பெருமான். எதிலே மாறினார்? எல்லோரும் இறைவனின் திருவடி சேரத்தான் பாடினார்கள். அவர்களுடைய அனுபவங்களக் கொட்டினார்கள். மூவர் முதலிகளும், மாணிக்கவாசகரும் தம்முடைய ஆத்மானுபவத்தை இறை அனுபவத்தைத் தம்முடைய செந்தமிழ்ப் பாடல்களாகப் பொழிந்தார்கள். அவர்களுடைய நோக்கமெல்லாம் இறைவனை அடைவதுதான். ஆனால் வள்ளல் பெருமான்தான் நான் அறிய நம்முடைய வரலாற்றில் நம்முடைய ஞானிகளின் வரலாற்றில் பிற உயிர்க்கு வருத்தப்பட்ட ஜீவன் அவர்தான். எந்த தேவார திருவாசகங்கள் அல்லது ஆழ்வார்களது அருட்செயல்கள எடுத்துக்கொண்டாலும் அவர்களுடைய அனுபவங்களப் பாடினார்கள். ஐயோ இவனுக்குப் பசிக்கிறதே என்று பாடியவர்கள் யார்? வாடியப் பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று முதன்முதலாகப் பாடியவர் நம்முடைய வள்ளல் பெருமான். தான் முக்தி அடைந்தால் போதுமென்று அவர் வரவில்லை. தன்னுடைய பிறவிக்கு அர்த்தம் சொல்கிறார். அறியாமை இருட்டிலே தவிக்கிற இந்த ஆன்மாக்கள இந்த மக்கள சன்மார்க்கத்து ஒளியிலே கொண்டுவந்து அடைப்பதற்காக தான் பிறந்ததாக வள்ளலார் சொல்கிறார். அஞ்ஞானத்தைப் போக்கி, எதற்காக அதைச் செய்யவேண்டும். நம்முடைய மரபு என்ன சொல்கிறது? அது அத்வைதம் ஆகட்டும், சித்தாந்தம் ஆகட்டும், விஸிஷ்டாத்வைதமாகட்டும் எதுவாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு ஆன்மாவும் தன்னுடைய வினைக்கான விளவைப் புசிக்கவேண்டும். தன்னுடைய செயலுக்கான விளவை அவர்கள் அனுபவிக்க வேண்டும். அப்படி அனுபவித்து அனுபவித்துத்தான் அந்த ஆன்மா முக்தியடையவேண்டும். இன்னொரு ஆன்மாவை ஒரு ஆன்மா கையைப் பிடித்துக் கொண்டுபோய் முக்திக்கு சேர்க்க முடியாது. நம்முடைய தத்துவம் அப்படி சொல்லவில்லை. எல்லாரும் சொல்லுகிற விளக்கம் என்ன? அவ்வளவு பெரிய ஞானி அப்பழுக்கற்ற மாசுமடுவற்ற இராமகிருஷ்ண பரமஹம்சருக்கு கண்டமாலை வந்தது. நான் என்ற அகந்தையை ஒழித்தவிட்ட ரமண பகவானுக்கு காலிலே புற்று நோய் வந்தது. ரமணரிடம் போய் நீங்கள் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று சொன்னபொழுது, அதுபாட்டுக்கு இருந்துவிட்டுப் போகிறது உனக்கு என்ன? என்று கேட்டாராம். அவர் உடலையும் ஆன்மாவையும் பிரித்துப் பார்க்க வல்லமைப் பெற்றவர் என்று சொல்லுகிறார்கள். அவர்களுக்கு ஏன் அது வருவானேன்? அது உடல் முற்பிறவியிலே செய்த வினைக்கான விளவை அது அனுபவித்தேத் தீரவேண்டும். அவ்வளவு பெரிய ஞானி விவேகானந்தார் 39 ஆண்டிலே நீரிழிவு நோய் வந்து இறந்துபோனார். இது விதி என்று நமது தத்துவம் சொல்லுகிறது. அதனாலே நம்முடையை ஆன்மா இன்னொரு ஆன்மாவை அழைத்துப்போக முடியாது. ஆகவேதான் அடுத்துவருக்கு உதவி செய்வது இல்லை. யார் யாருக்கு உதவினர் யார் யாருக்கு உதவிலர் திருஞானசம்பந்தர் பாட்டு. இதுதான் நம்முடைய மரபு. ஆனால் நமமுடைய வள்ளல் பெருமான் இந்தத் தத்துவ வியாக்கியானங்களுக்குள்ள போகவில்லை. அவருடைய உயிர் இறக்கம், இந்த உயிர்கள் துன்பப்படுவதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனவே அந்தப் பாடலை,

வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினால் இளத்தே
வீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்
நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
ஈடின்மா னிகளாய் ஏழைகளாய்நெஞ்
சிளத்தவர் தமைக்கண்டே இளத்தேன்

கட்டோடே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர்
கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர்
பட்டோடே பணியோடே திரிகின்றீர் தெருவில்
பசியோடே வந்தாரைப் பார்க்கவும் நேரீர்
கொட்டோடே முழக்கோடே கோலங்காண் கின்றீர்
குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர்
எட்டோடே இரண்டுசேர்த் தெண்ணவும் அறியீர்
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே

நம்முடைய வள்ளல் பெருமானுக்கு முன்னால் யாரும் அப்படிப் பாடவில்லை. இவ்வளவு துன்பப்பட்டாரே, அவருக்கு பசி வந்தது. அவருக்கு நன்மை கிடைக்கவில்லை. தம்முடைய துன்பத்தைப் போக்குவதற்குப் பாடியார் என்று சொல்ல முடியுமா இல்லை. அதையும் ஒரு பாடலிலே சொல்கிறார்.

இதுவரை அடியேன் அடைந்தவெம் பயமும் இடர்களும் துன்பமும் எல்லாம்
பொதுவளர் பொருள பிறர்பொருட் டல்லால் புலையனேன் பொருட்டல இதுநின்
மதுவளர் மலர்ப்பொற் பதத்துணை அறிய வகுத்தனன் அடியனேன் தனக்கே
எதிலும்ஓர் ஆசை இலைஇலை பயமும் இடரும்மற் றிலைஇலை எந்தாய்

எனக்கு ஆசை இல்லை எனவே பயம் இல்லை. எனக்கு எந்த இடரும் இல்லை ஒரு இடரும் இல்லாமல் இன்பத்திலேயே திளத்துக்கொண்டிருக்கிற ஆன்மாவைப் பெற்ற வள்ளல் பெருமான். நம்முடைய ஊரன் அடிகள் வரலாற்றிலே சொல்கிறார் மரபுப்படி சொல்லவேண்டும் அவருடைய முற்பிறப்பிலே இப்பிறப்பிற்கு வருகிறபொழுது முன்பிறப்பின் ஞானத்தோடே வருகிறவர்கள் சாமு சித்தர் என்று ஒரு பிரிவு இருக்கிறார்கள். அவர்கள் சாமு சித்தர் என்று சொல்கிறார். அவருக்கு எல்லாம் இருக்கிறது. எல்லா வல்லமையும் இருக்கிறது. அவருடைய வாழ்க்கையிலே அற்புதங்கள் நிகழ்ந்திருக்கின்றது.ஆனாலும் துன்புற்றார். அழுதார். அதைச் சொல்கிறார், நான் எனக்காக அழவில்லை ஐயனே, மற்றவர்களுக்காக நான் அழுகிறேன். இந்த அன்பும் இந்தக் கருணையும் அவரை ஒரு சங்கம் நிறுவச்செய்தது.ஒரு சங்கம் நிறுவி அதிலே சாமான்ய மக்கள ஒன்றிணைத்து அவர்கள எல்லாம் கடைத் தேற்றுவதற்கென்று, ஒன்றைத் தெரிந்துகொள்ளவேண்டும்; நான் முன்பே சொன்னதுபோல நம்முடைய சமயத்தில் நம் கோயில்களுக்குப் போனால் தனித்தனியாகத்தான் நீங்கள் போய் ஆண்டவனை வணங்க முடியும். கூட்டமாய் போய் வணங்குவது என்பது நமக்கு உடன்பாடு அன்று. தெய்வத்துக்குப் போகிறபோது, கணவன் வேறு மனைவி வேறு ஒவ்வொரு ஆன்மாவும் வேறுதான். சர்ச் மாதிரி, பள்ளிவாசல் மாதிரி நீங்கள் போய் வணங்க முடியாது. அப்படித்தான் நம்முடையத் தத்துவம் இருக்கிறது. ஆனால் கிருத்துவ மதம்தான் சொல்கிறது, ஈசகுமாரன் ஏசுநாதர் மனிதன் ஆதாம் ஏவாள் தொடங்கி செய்த பாவங்களயும் இனி தீர்ப்பு நாள் வரையிலே செய்யப்படுகிற பாவங்களுக்குமாக சேர்த்து சிலுவையிலே அறையப்பட்டு தன்னுடைய இரத்தத்தால் அனைவருடைய பாவத்தைக் கழுவுகிறார். எனவே நீ ஏசுவைச் சேர்ந்துவிட்டால் உன்னுடைய பாவம் கரைந்துபோகும் என்று சொல்கிறது. பிற ஆன்மாக்களுக்காக தான் வருந்த முடியும் என்பதை அந்த மதம் சொல்கிறது. நமக்கு அந்த நம்பிக்கை இல்லை. வள்ளல் பெருமான் கிருத்துவர் அல்ல. ஆனால் மக்களுக்குத் தொண்டு செய்வது இறைவனுக்கு செய்கிற தொண்டு என்பதை அவர் கண்டார். முதன் முதலாக. அதனால்தான் மகாகவி பாரதியார் வடலூர் இராமலிங்கம் பிள்ள போன்ற மகான் என்று எழுதினார். நம்முன்னாலே வாழ்ந்திருக்கிறார் சுவாமி. அது புராணக் கதையல்ல. வரலாற்றுப் பதிவிலே இருக்கிற ஒரு வாழ்க்கை. எல்லாரும் பார்க்க வாழ்ந்தார். சராசரி மனிதனாக வாழ்ந்துக் காட்டினார். எல்லோரையும் போலவே ஆடை உடுத்தி, உணவு உண்டு, வீட்டிலே தங்கி எல்லா மனிதர்களப் போல வாழ்ந்தார். அவர் எதைச் சொல்கிறார், அவருடைய வாழ்க்கை எதைச் சொல்கிறது? இப்படி எல்லோரும் வாழ முடியும் என்பதைக் காட்டுவதற்காக. எல்லோரும் வாழ வேண்டும் என்பதற்காக. அதனால்தான் சேரவாரும் செகத்தீரே என்று அழைத்தார். நான் பெரிய ஞானி நான் மட்டும்தான் வாழ முடியும் என்று கருதியிருப்பாரேயானால் சங்கம் வைத்திருக்கமாட்டார். அவர் மக்களுக்கு தொடர்பில்லாத ஒரு உயரத்திலே இருந்துகொண்டு எல்லோரையும் காலை வணங்கச் சொல்லி ஆசீர்வாதம் செய்வதோடு போயிருப்பார். அப்படிச் செய்யவில்லையே ஏன் ஜீவகாருண்யம் வேண்டும்? நம்முடைய மந்திரமாக நாம் சொல்வது என்ன?

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்சோதி

வெரும் அறிவு மட்டுமல்ல. அன்பாய் இருக்க வேண்டும். அதுதான் திருமூலர் சொன்னார். அன்பும் சிவனும் இரண்டென்பார் அறிவிலார் என்றால் சிவம் என்பது பேரறிவு. அன்பு கலவாத அறிவு பேரறிவு அல்ல. அது ஒரு டெக்னிக். அது ஒரு சாமர்த்தியம். அது ஒரு வித்தை. அறிவு என்பதற்குப் பொருள் அன்பு கலந்திருக்கவேண்டும். அன்பு கலவாத அறிவு என்பது நாசத்தை விளவிக்கும். அன்புடன் கலந்த அறிவுதான் அருளாகப் பரிமளிக்கும். இன்றைக்கும் விஞ்ஞானம் அறிவு. வித்தை. அதனுடைய விளவு என்ன? உலகமெல்லாம் நாம் அணுகுண்டுகளப் பார்க்கிறோம். உலகமெல்லாம் செல் போனிலே வெடிக்கிறான். அறிவுதான். ஏன் சொல்போன் வெடிக்கிறது? அறிவு நாசத்தை விளவிக்கிறது. அன்பு கலந்திருந்தால் நாசம் வராது. எனவே வள்ளல் பெருமான் ஜீவகாருண்ய ஒழுக்கத்தைத் தன் தலைமேல் கொண்டார். ஜீவகாருண்ய ஒழுக்கத்தை சொல்கிறபொழுது, பசியைப் பற்றி எல்லோரும் சொல்கிறார்கள். பசியை எப்படிப் பார்த்தார் பெருமான். எல்லோரும் சொல்லுவது ஞான முதிர்ச்சி வந்துவிட்டால் பசி தெரியாது, உடல் இச்சைகள் தெரியாது. நமக்கு அதுதான் மரபு. ஆனால் சுவாமி அதைத் தலைகீழாகச் சொன்னார்கள். சீவர்களுக்குப் பசி அதிகரித்தக் காலத்தில் சீவ அறிவு விளக்கமில்லாமல் மயங்குகின்றது. நம்முடைய அனுபவத்தில பார்க்கிறோம். விவேகானந்தர் சொன்னார் பசியிலே தவிப்பவனுக்கு இறைவன் சோறு உருவத்திலே வருகிறான் என்று. சோறுதான் அவனுக்கு இறைவன்.

ஜீவர்களுக்கு பசி அதிகரித்த காலத்தில் ஜீவ அறிவு விளக்கமில்லாமல் மயங்குகின்றது
அது மயங்கவே அறிவுக்கறிவாகிய கடவுள் விளக்கம்
மறைபடுகின்றது அது மறையவே புருடதத்துவம்
சோர்ந்துவிடுகிறது. அது சோரவே பிரகிருதி தத்துவம்
மழுங்குகின்றது அது மழுங்கவே குணங்களல்லாம்
பேதப்படுகின்றன. மனம் தடுமாறிச் சிதறுகின்றது
புத்தி கெடுகின்றது சித்தம் கலங்குகின்றது அகங்காரம்
அழிகின்றது பிராணன் சுழல்கின்றது பூதங்களல்லாம்புழங்குகின்றன வாதபித்த சிலேட்டுமங்கள் நிலை மாறுகின்றது
கண் பஞ்சடைந்து குழிந்து போகின்றது, காது கும்மென்று செவிபடுகின்றது நா உலர்ந்து வரளுகின்றது
நாசி குழைந்து அழல்கின்றது தோல் மெலிந்து
ஸ்மரணை கெடுகின்றது கை கால் சோர்ந்து
துவளுகின்றன மல சல வழி வெதும்புகின்றது, மேனி கருக்கின்றது ரோமம் வெறிக்கின்றது நரம்புகள் குழைந்து நைகின்றன நாடிகள் கட்டுவிட்டுக் குழைகின்றன எலும்புகள்
கருகிப் பூட்டுகள் நெக்குவிடுகின்றன இருதயம் வேகின்றது மூள சுருங்குகின்றது சுக்கிலம் மாமிசம் குழைந்து
தன்மை கெடுகின்றது வயிறு பகீரென்று எரிகின்றது.
தாப கோபங்கள் மேன்மேலும் உண்டாகின்றன. உயிரிழந்து
விடுவதற்கு மிகவும்சமீபத்த அடையாளங்களும்
அனுபவங்களும் மேன்மேலும் தோன்றுகின்றன.
பசியினால் இவ்வளவு அவத்தைகளுந் தோன்றுவது
ஜீவர்களுக்கெல்லாம் பொதுவாகவே இருக்கின்றது.

யாராவது யோசித்திருப்போமா? பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்று சூத்திரத்தைப்போல் நாம் எல்லோரும் சொல்லிக்கொண்டிருக்கிறோம். அவர் எவ்வளவு ஆழ சிந்தித்து, பசி வந்துவிட்டால் மூள வேலை செய்யாது என்றார். ஒரு முறை பாரதியார் பாடினார் உயர் வேதமும் வெறுப்புற சோர் மதியும் என்றார். பசியினால் வாடிக்கொண்டிருக்கிறவனிடம் ஞானத்தைப் போதிக்க முடியாது. அவன் எப்படி மானிட வாழ்வு வாழ்வான்? பசி என்பது விலங்குகளுக்கும் மனிதனுக்கும் பொதுவான விதி. விலங்கு நிலையிலே இருக்கிற அந்த வேட்கையையாவது தணித்தால்தானே அவன் மனிதனாவான். இதைப் பார்த்தார் சுவாமி. யாரும் பார்க்காத நிலையிலே அதைப் பார்த்துத்தான் அவர் தர்மச் சாலை வைத்தார். சங்கம் அமைத்தார். அந்தப் பேரியக்கம் இன்றைக்கும் நடைபெறுகின்றது. அவருடைய தத்துவம் எத்தனை பேருக்குத் தெரியும்? அவருடைய ஆறாவது திருமுறையிலே இருக்கிற எத்தனை உலகங்களப் பற்றியோ சொல்கிறார். அதெல்லாம் யாருக்காவது தெரியுமா? படித்துப் புரிந்துகொள்வது சாதாரண விஷயம் இல்லை. ஆனால் இவற்றை எல்லாம் கடந்து எல்லா ஊர்களிலும், தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் வள்ளல் பெருமானுடைய உருவம் இருக்கிறது. அவருக்கு மடங்கள் இருக்கின்றன. சின்னக் குக்கிராமத்திலே வள்ளல் பெருமானுக்கு மடம் இருக்கிறது. வள்ளலாரை அந்தக் குக்கிராமத்து மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? அன்பின் உருவாக, கருணையின் உருவாக, எனவே அவர் போதிக்க நினைத்ததெல்லாம் அன்பும் கருணையும் தான். அதுதான் அவருடைய மொத்த உருவம். அவரை வேறுவார்த்தையிலே சொல்ல வேண்டுமானால் அன்பு என்று சொல்லலாம்.