வீ.சு.இராமலிங்கம் அவர்களைப் பற்றி

ஆழ்ந்த படிப்பாளி! சிறந்த பேச்சாளி! "வீ.சு.இராமலிங்கம்''
முனைவர் இரா.கலியபெருமாள்

அன்னை தந்தையர்க்கு அருமந்த மகனாய், அண்ணன் தம்பியர்க்கு அன்பிற்கினிய உடன் பிறப்பாய், இருயிர்த் துணைவிக்கு உயிரனைய தோழராய், பிள்ளைகளுக்குத் தந்தையாய் - இசானாய் - நண்பனாய், நண்பர்களுக்கெல்லாம் உற்றுழி உதவும் கரங்களாய், ஏற்றுக்கொண்டிருந்த பணியை உயிரெனக் கருதும் உயர்ந்த வழக்கறிஞராய் எல்லாவற்றிற்கும் மேலாக நாணயமான நல்ல மனிதனாய் வாழ்ந்தவர், வீ.சு.இராமலிங்கம்.

தஞ்சை மாவட்டத்திலுள்ள, வல்லம் என்னும் சிற்றூரில் திரு.ம.வீ.சுந்தர உடையார், திருமதி.செல்லம்மாள் ஆகியோரின் இரண்டாவது மகன் திரு.வீ.சு.இராமலிங்கம். திரு.மருதமுத்து, திரு.சின்னப்பன், திரு.சிவக்கொழுந்து, திரு.அருணாசலம், திரு.சைவராசு, திரு.பாண்டியன் மற்றும் திருமதி.ஆரவல்லி ஆகியோர் இவருடன் பிறந்தோர். திருமதி.கற்பகவல்லி இவரது இல்லத்தரசியாவார். செம்பியன், சேரலாதன், மைதிலி, ரேணுகா தேவி ஆகியோர் இவர் தம் மக்கள்
இவர் ஆயிரக் கணக்கில் நூல்களைக் கற்றார். அதுவும் ஐயம் திரிபறக் கற்றார். ஐயங்கள் தோன்றினால் அகற்றிக் கொள்ள அறிஞர்களை நாடினார்; கருவி நூல்களைத் தேடினார்; அறிஞர் குழாத்தொடும் கூடினார். எத்துறை தொடர்பான நூலினைக் கையில் எடுத்தாரோ, அத்துறையின் ஆழம் காணும் வரை மெய்வருத்தம் பாரார்; கண் துஞ்சார்; காலம் போவதையும் கருத்தில் கொள்ளார்; காசினைப்பற்றிக் கவலையே கொள்ளார்; நீள நினைந்து இன்புறுவார். தான் இன்புற்றதைப் பிறரும் உணர்ந்து இன்புறத் தருவார்.

மேடையில் பேசும் வாய்ப்பினைப் பெற்றால் ஓர் கொளத் தருவார். இல்லை எனில் தன் செலவில் மேடைபோட்டு, வருபவர் போகிறவர் பற்றிக் கவலைகொள்ளாமல் கைவிரல்களின் எண்ணிக்கையில் கூட்டம் இருப்பினும், கருதியவற்றை - கற்றவற்றை - நெஞ்சறிய மெய் என்று உணர்ந்தவற்றை, யாரைப் பற்றியும் கவலைப்படாமல், "என்ன நேருமோ?' என்று அஞ்சாமல் எடுத்துரைத்து வேட்கை தீர்வார். கேட்போர் வியப்புறுவர்.

ஞானவேட்கை கொண்ட இந்தச் சாதகப் பறவைக்கு வான மழையாக வரந்தந்தவை - வேடந்தாங்கலாக விருந்தளித்தவை - தன் வீட்டு நூலகம்; தண்டமிழ் காத்தளித்த தமிழ்த் தாத்தா நூலகம், தமிழ்ப் பல்கலைக்கழக நூலகம், ரோஜா முத்தையா செட்டியார் நூலகம், சேக்கிழார் அடிப்பொடியாரின் "செவ்வியல் நூலகம்" ஆகியனவாகும். இந்நூலகங்களில் இவரின் கண்படாத, கரங்கள் தொடாத நூல்கள் இருக்க வாய்ப்பே இல்லை என்பது மிகைபடக் கூறியதாகாது.

தஞ்சை மாவட்டத்தில், தஞ்சை மாநகரில் பொதுக்கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள், தேவாரத் திருமுறை மன்றங்கள், திவ்யப் பிரபந்த அவைகள், இசையரங்குகள், ஆய்வரங்கங்கள், எந்தெந்த இடங்களில் நிகழுமோ, அந்தந்த இடங்களில் அமைக்கப்பட்ட மேடைகளில் எல்லாம் ஏறி நின்று உரையாற்றிய பெருமை, இவர்க்கே உரியது என்பது வெள்ளிடை மலையாகும். பொதுவாகவும், குறிப்பிட்ட தலைப்புகளில் நின்றும் முழங்கிடும் ஆற்றல் இவருக்குக் கைவந்த கலையாகும். இவரின் உரையைக் கேட்பவர் மகுடியில் மயங்கும் நிலையை ஒப்பார்.

தமிழ்நாட்டில் மிகப்பெரும் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களான திருவாவடுதுறை இராசரத்தினம், குளிக்கரை பிச்சையப்பா, காருகுறிச்சி அருணாசலம், திருமெய்ஞ்ஞானம் நடராசசுந்தரம், மதுரை சேதுராமன் - பொன்னுசாமி, சேக் சின்ன மௌலானா, திருச்சி ஐ.கே.சி.நடராசன், வீணை பாலச்சந்தர், மாண்டலின் சீனிவாஸ், வல்லம் கிருஷ்ணன் போன்ற கருவி இசைக் கலைஞர்களிடமும், மதுரை சோமு, கழுகுமலை கந்தசாமி, தருமபுரம் சுவாமிநாதன், திருத்தணி சுவாமிநாதன், "அருட்பாமணி' ஞானமணி ராஜாப்பிரியர், மழையூர் சதாசிவம் போன்ற குரலிசைக் கலைஞர்களிடமும் நேரில் பேசிப் பழகியவர், அவர்களின் இசைப் பதிவுகளை நாளும் நாளும் கேட்டு மகிழ்பவர்; தன்னை மறந்த லயத்தில் அவற்றைச் சுவைப்பவர்.

திருச்சிராப்பள்ளி தூயவளனார் கல்லூரியில் மாணவனாகப் பயின்ற காலத்திலேயே "தமிழ்ப்பேராயம்' என்ற ஃர் அமைப்பை நிறுவி முனைவர் தமிழ்க்குடிமகன், பேராசிரியர் இரா.இளவரசு ஆகியோரின் துணையோடு பாவாணர், மறைமலையடிகள் பேணிய தனித் தமிழ் இயக்கநெறி நின்று "தொல்காப்பியன்' என்று தனக்குப் புனைப்பெயர் சூட்டிக் கொண்டு மகிழ்ந்தவர்.

அவருக்குச் சிறுவயதிலிருந்தே படிப்பில் நாட்டம் அதிகம். தான் படிக்கின்ற வகுப்பிற்கான நூல்களை விரும்பிப் படிக்கிறாரோ இல்லையோ, தமிழிலக்கியம் சார்ந்த - தன்மான இயக்கஞ் சார்ந்த நூல்களை விரும்பிப் படிப்பார். அந்தச் சின்ன வயதிலேயே பட்டினத்தார், கடுவெளிச் சித்தர், குதம்பைச்சித்தர், பாம்பாட்டிச்சித்தர் போன்ற பதினெண் சித்தர்களின் பாடல்களடங்கிய நூலினை எப்போதும் தன் கையில் வைத்திருப்பார். பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் ஆகியோர் இவரது காவிய நாயகர்கள்.

படித்த நாளில் தமிழ்ப்பேராயம், வல்லத்தில் திருக்குறள் கழகம், தஞ்சையில் பாரதி சங்கம், அண்ணா பேரவை, காந்தி இயக்கம், திருவையாற்றில் பாரதி இயக்கம் போன்ற அமைப்புக்களோடு தொடர்பு கொண்டு, ஒத்த கொள்கைகளைக் கொண்ட நண்பர்களின் உறுதுணையோடு தான் நன்றெனைக் கருதிய பணிகளை மனம் விரும்பி ஆற்றினார்.

"எத்தொழிலைச் செய்தாலும் ஐதவத்தைப் பட்டாலும்
முத்தர் மனம்இருக்கும் மோனத்தே''

என்ற பட்டினத்தார் பாடலுக்கேற்ப மில்டன், சேக்ஸ்பியர், பெர்னாட்ஷா, ரஸ்ஸல், டால்ஸ்டாய் போன்ற மேனாட்டு இலக்கியக் கர்த்தாக்களின் இலக்கியங்களைப் படித்தாலும்- காரல் மார்க்ஸ், இங்கல்ஸ் போன்றவர்களின் அரசியல் படைப்புகளை ஆய்ந்தாலும் - சாணக்கியர், காளிதாசன், தாகூர், இராமகிருட்டினர், விவேகானந்தர் போன்ற வட நாட்டுச் சான்றோர்களின் கருத்தினைக் கற்றாலும்- வேதங்கள், உபநிஷத்துக்கள், கீதை, இதிகாசங்கள் போன்றவற்றைப் புறந் தள்ளி விடாமல் பேணினாலும் - அறிஞர் அண்ணாவின் படைப்புகளை, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடல்களை, மகாகவி பாரதியாரின் எழுத்துக்களை, வள்ளல் பெருமானின் அருட்பாத் தொகுப்புகளை, அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கையைப் படிப்பதிலும், அவற்றை நேசிப்பதிலும் மிகவும் ஆர்வம் காட்டினார்.

எல்லாருடைய வாழ்க்கையிலும் போராட்டம் வரும். போராட்டங்களே வாழ்க்கையாய்க் கொண்டு, அவற்றில் வெற்றியும் பெற்றவர் வீ.சு.இராமலிங்கம். ஈடுபாடு காட்டிய அரசியல் வாழ்விலும், எடுத்துக்கொண்ட வழக்கறிஞர் வாழ்விலும், ஏற்றுக்கொண்ட இல்லற வாழ்விலும், பெற்ற பிள்ளைகளைப் பேணி வளர்ப்பதிலும், "இவர்போல் வாழ வேண்டும்' என்று எல்லாரும் எடுத்துக்காட்டும் அளவுக்கு இமயமாய் நிறைவாழ்வு வாழ்ந்த ஒரு மாமனிதர்.

வேடம் இவர் விரும்பாதது; அச்சம் இவர் அறியாதது; அஞ்சாமை இவர் உடன் பிறந்தது; தன்மானம் இவர்க்குத் தந்தை தந்தது. இந் நான்குமே இவரை நமக்குத் தந்தது.

செயப்பிரகாஷ் நாராயணனைக் காணச் சென்றாலும், சர்வோதய சபையில் உரையாற்றப் போனாலும், சன்னிதானங்களைச் சந்திக்கத் திருமடங்களுக்குச் சென்றாலும், "தமிழ்க்கடல்' கோபாலய்யர் அவர்களிடம் தன் ஐயங்களை அகற்றிக் கொள்ளச் சென்றாலும், கரை போட்ட வேட்டியை அணிந்தே செல்வது இவருக்கு வாடிக்கை. இந்தச் செயலை அவர் வேண்டு மென்றே செய்வதில்லை; அச்செயல் அந்தச் சான்றோர்களைப் பாதித்ததுமில்லை.

"நான் தி.மு.கழகத்தவன்'' என்று பெருமைப்படச் சொல்லிக் கொள்வார். தலைவர் கலைஞர் அவர்களை உரிமையுடன் புகழ்படப் பேசுவார். தலைவரைப் பிறர் பேசினாலோ, சீண்டினாலோ நெருப்பாவார். தனக்குத்தான் உரிமை; அது நெருக்கத்தில் உள்ள உரிமை என்பார். இவரிடம் இனமானப் பேராசிரியர் மனம்விட்டுப் பேசி மகிழ்வார்.

அண்ணா, கலைஞர், பேராசிரியர் ஆகியோரிடம் பற்றும், தி.மு.கழகக் கொள்கைகளில் பிடிப்பும் கொண்ட இவர் 1972இல் அ.இ.அ.தி.மு.க. உருவான போது அந்த அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.

மேடையிலே ஏறி ஒலிவாங்கி முன்நின்று பேசத் தொடங்கிய ஒன்றிரண்டு மணித்துளிகளில் விழி வழியாகவும், செவி வழியாகவும் கேட்பவரின் சிந்தையில் இறங்கி விடுவார். பேசத் தொடங்கியதும், அவரின் சிந்தனையில் இருந்து வெளிப்படத் தொடங்கிய கருத்துக்கள், வார்த்தைகளுக்காகக் காத்திருப்பதும் இல்லை; வெளிவரத் தயங்குவதுமில்லை. கேட்பவர் அனைவரும் "தான் வேறு; பேசுபவர் வேறு' என எண்ணிட முடிவதேயில்லை. உரையில் இருக்கின்ற திண்மை, அவை வெளிவரும் வேகம் - முறை ஆகியவை அரங்கில் இருப்போரை, ஆடாமல் அசையாமல் செய்துவிடும்.

இவற்றைக் கண்டவர், கேட்டவர் வியந்து போவர். இத்தனைப் பெரிய ஆற்றல் எப்படிக் கைவரப் பெற்றார்? என்பது விளங்கிக்கொள்ள முடியாத புதிராக இருப்பதைக் காணலாம். ஒரு கருத்தினை எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அதனை ஒட்டி அடுக்கடுக்கான மேற்கோள் வருவதற்குக் காரணம், அவ்வளவு படிப்பறிவும் பட்டறிவுந்தான். ஏராளமான நூல்களைக் கற்று உள்வாங்கிக் கொண்டு, அடிக்கடி கற்றவற்றை அசைபோட்டு மனத்தில் இருத்திக் கொண்டிருக்கும் இயல்பு பெற்றவராயிற்றே!

பாரதி சங்கத்தின் சார்பில் "மூதறிவாளர் வாழ்வும் வாக்கும்' என்னும் தலைப்பில் அறிஞர் பலரை அழைத்து மாதந்தோறும் தொடர்ந்து கூட்டங்கள் நடத்தி வந்தவர். பாரதி இயக்க நண்பர்கள் திரு.ச.பிரேமசாயி, திரு.த.மோகன் ஆகியோர் பாரதிப் பணிகளில் இவருக்குத் துணை நின்றவர்கள்.

தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் 2012 இம் ஆண்டு தஞ்சை மாவட்ட தி.மு.கழகச் செயலாளர் திரு.எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், தஞ்சையார், பேராசிரியர் பாரி ஆகியோரும், தஞ்சை நண்பர்களும் ஒன்று சேர்ந்து பாராட்டுவிழா ஒன்றை மிகச் சிறப்பாக நடத்தினர். அவ்விழாவில், "இராமலிங்கத்தின் பார்வைகள்'' என்ற சிறந்த நூல் வெளிவர மாண்புமிகு எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் அவர்கள் துணை செய்தார்.

இவ்விழாவில் மதுரை சர்வோதய இலக்கியப் பண்ணையின் பொறுப்பாளார்கள் திரு.க.மு.நடராசன், திரு.மு.மாரியப்பன் ஆகியோரும் கலந்து கொண்டு பாராட்டினர்.

நாவன்மையும், எழுத்து வன்மையும், தொகுப்புத் திறமும் ஒருங்கே கொண்ட வீ.சு.இராமலிங்கம் அனைவர் நெஞ்சிலும் நிறைந்து வாழ்வார்.