வீ.எஸ்.இராமலிங்கம் அவர்களைப் பற்றி

நல்லதோர் வீணை
முனைவர் இரா.கலியபெருமாள்

கலைநலம் செழித்த கவினார் தஞ்சை
ஏரியூர் நாட்டு எழிலார் வல்லம்
விருந்தின்றி உண்ணா வெள்ளாளர் தெருவில்
ஐரால் வாழ்பவர் இல்லத்தில் தோன்றிய
சொல்லேர் உழவர் சுந்தர ராமலிங்கம்!
புலவர் தோழர்! புகழுடை அறிஞர்!
இன்றோர் துணைவர்! அறிஞருள் அறிஞர்!
சான்றோர் மெய்ம்மறை சற்குண சீலர்!
சொல்வலை வேட்டுவர்! துகளறு குரிசில்!
பல்துறை அறிஞர்! பழிப்பிலா மனத்தர்!
பட்டினப் பிள்ளை, பாரதி தாசன்
காஞ்சி அண்ணன், காந்தி அண்ணல்
பாட்டும் உரையும் பயின்ற பண்பினர்;
வல்லம் வந்த வள்ளல் பெருமான்!
வார்த்தையில் இவரை வடிப்பது என்பது
பெருமானைப் படத்தில் பிடிப்பது போன்றது.
இடியின் நிழலா அகப்படும் கையில்?
மின்மினிப் பூச்சிக்கு மின்னலா வசப்படும்?
சிலந்தி வலையில் சிங்கமா சிக்கும்?
வலியவர் தம்மைப் பணிவதும் இல்லை;
மெலியவர் இவரென இகழ்ந்ததும் இல்லை.
பெற்றது மகிழ்ந்தனர். பெறாதவைக் கேங்கலர்.
இவர்இழந்தன பலஎன இரங்கினர் தோழர்.
இவரோ,      
இரங்கினர்க் கிரங்குவர் என்னே இவரென!
அரியன என்பன அனைத்தும் அறிந்தவர்!
பெரியதில் பெரியதே பேணும் மனத்தினர்!
இனியன என்பன எல்லாம் நுகர்ந்தவர்,
கனிகளை விரும்பியே காய்கவ ராதவர்.
எனக்கிது போதும் என்னும் நினைப்பினர்.
வேகும் வெயிலில் வியர்வையில் மிதப்பார்.
விளைச்சலை மட்டும் பிறர்கொளத் தருவார்
விந்தை மனிதர் இவர்போல் எவருளார்?
சிந்தைக் கினிய செந்தமிழ் மறவரிவர்.
கேடும் ஆக்கமும் கெட்ட திருவினர்.
''ஒடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்.
கூடும் அன்பினில் கும்பிடல் இன்றியே
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்'' என்ற
சேக்கிழார் வாக்கின் சீர்சால் இலக்கியம்
காண விரும்பினால் இவரையே காண்க.
வழக்காடு மன்றம், வானொலி அரங்கம்.
நாளும் அரசியல் பேசிடும் மேடை,
குறைபடா ஞானம் கொண்டவர் இவரே!
குழலிசை, முழவிசை, குரலிசை, யாழிசை
நிகழிடம் என்றால் இவர்அங் கிருப்பார்.
மூதறி வாளர் வாழ்வும் வாக்கும்
உதென உணர்த்திய பேரறி வாளர்.
தொல்காப் பியன்எனும் துணைப்பெயர் கொண்டவர்
வள்ளுவர் கழகம் வல்லத்தில் நிறுவி,
வளமார் நல்லிசை விருந்து படைத்தார்.
பாரதி சங்கம், பாரதி இயக்கம்,
அண்ணா பேரவை அறக்கட் டளையென
சாரதி யாக இவரே நின்றனர்
எளியருள் எளியரும் இன்புறும் குணத்தினர்;
அறிஞருள் அறிஞரும் அவாவிடும் ஆற்றலர்.
இவரிலாப் பல்கலைக் கழக அரங்கம்
நிலவிலா வானம் எப்படி அப்படி!
சின்ன வயதில் சித்தர்மேல் பற்றினர்;
பிள்ளை வயதில் பாரதிப் பற்றினர்;
கனிந்த வயதில் காந்தியைப் பற்றினார்.
காலம் முழுமையும் அண்ணா பற்றினர்.
ஆற்றல் என்பதன் தோற்றமே இவர்தான்.
நடுக்கம் அறியா நக்கீர நாவினர்;
நாடக அரங்கிலும் நயமுறத் தோன்றுவார்!
மொழிப்போர்க் களத்தில் முனைமுகம் நின்று
சிறையும் புகுந்து சிறப்பினைப் பெற்றார்.
நேர்மையும் நீதியும் இவரிரு கண்கள்!
அண்டும் பகையின் இணிவேர் அறுப்பவர்!
நெஞ்சில் பட்டதை நேரில் உரைப்பவர்.
வஞ்சகம் சூது இவர்வாசல் வாரா!
இரண்டகம் இவரிடம் அண்டிட நடுங்கும்.
வெல்லா வழக்கும், வீண்அழி வழக்கும்
பொல்லா தனஎன புறத்தே தள்ளுவார்!
நிமிர்ந்த நடையும், நேரான பார்வையும்
தனக்கே வாய்த்த தன்னல மறுப்பினர்;
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் எனத்
திருமூலர் சொன்னது திருவாளர் இவர்க்கே!
திருக்குறள் அறிவார்! திருமுறை தேர்வார்!
திருக்குரான் விளக்கமும் தெளிவாய்த் தருவார்!
விவிலிய மறைநூல் விளக்கமும் தருவார்.
இதிகாசம் என்பன எல்லாம் உரைப்பார்.
இத்துணைப் பண்பும் இயல்பாய்ப் பெற்றவர்.
நலம்பெற வேண்டும் என்னும் நினைப்பில்
தஞ்சை மாவட்ட தி.மு.கழகச் செயலாளர்
தகவுறும் தோழர் பழநி மாணிக்கமும்,
தஞ்சைமண் போற்றும் தஞ்சை யாரும்,
விருத்தா சலனார் மைந்தர் பாரியும்,
இணைப்புறு நண்பர்கள் எல்லாரும் இணைந்து
நெஞ்ச நிறைவோடு நெடுவிழாக் கண்டனர்
இவரின் எழுத்துக்கு இலக்கியம் தந்தனர்.
எல்லோரும் மகிழ்ந்தனர் எமனைத் தவிர!
எத்தனை முறைதான் எமனே தோற்பான்?
இறுதியில் அவனே வென்றான் பாவி.