அண்ணா களஞ்சியம்

இனம்
| மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்

இனம்
பகுதி:
2

பகுதி: 1 2 3 4

» திருந்தாத வயலில் உழவு இல்லை. நம் நாடு திருந்தாத வயலாகவே இன்னமும் உள்ளது. எனவேதான் இங்கு தன்னாட்சி முளைக்கவில்லை. வரப்பு கட்டாவிடில் வயலுக்கு வயல் வம்பு வளரும். அஃதே போலத்தான் தமிழர் தம் நாட்டில் வரப்பு கட்டத் தவறி, அதாவது தமிழ் மொழி, கலை, மார்க்கம் ஆகியவைகள் ஆரியத்தால் சிதைக்கப்படாதிருக்க வேண்டித் தன்மானம் எனும் வரப்பு கட்டத்தவறியதால், இன்று நமது நாடு பிறருக்கே சந்தையாகிவிட்டது.
(திராவிடநாடு - கிழமை இதழ், பொங்கல் மலர் 14.01.1948)

தமிழர் மரபு
சீரிய செயல் காணின் பாராட்டவும் வீரம் காண்கையிலே எழுச்சி கொள்ளவும் தமிழர் மனம் பன்னெடுங்காலமாகவே பண்பட்டிருந்திருக்கிறது. அந்தப் பண்பு எத்துணை உயர்வானது என்பதனை அறிய, தமிழர் வாழ்த்தும் முறையை மேற்கொண்டதிலிருந்து மட்டுமல்ல; மக்களை மட்டுமேயன்றி, இயற்கையை அவர்கள் வாழ்த்தி இன்புற்றதிலிருந்து நன்கு உணரலாம். ஞாயிறு, திங்கள், மாமழை, மலர், அருவி, ஆடும் மயில், இசை பயிலும் குயில், கொஞ்சிடும் கிள்ளை என்பனவற்றையெல்லாம் வாழ்த்தினர். கொடைத்திறனை வாழ்த்தினர். புலமையை வாழ்த்தினர். வாழ்வுக்குச் செல்வமாக அமைந்த எதனையும் வாழ்த்துவதைத் தமிழர்தம் மரபு ஆக்கிக் கொண்டனர்.

ஒரு விளைவு மறுவினைக்குத் துவக்கம்!
மகிழ்ச்சி வினையின் இறுதி முடிவல்ல!
வினைப்பயன் புதிய வினைக்கு அழைப்பு!
புதிர் அல்ல!
புண்ணியம் பேசிடுவோர் கூறிடும் தத்துவமும் இஃதல்ல!
பொருள் பொதிந்த உண்மை!
தமிழருக்கு இது புதிதுமன்று!
(இல்லம் இன்பப் பூங்கா - 14.02.62)

» தாங்கள் யார்? என்ற கேள்விக்கு நான் இந்தியன் என்ற பதில் இங்கே பொருந்தாது - பொருள் விளங்காது. ஏனெனில் இந்தியன் என்றொரு இனம் கிடையாது எனவேதான் நிக்கோலஸ் நான் இந்தியா வந்தேன், இந்தியனைக் கண்டேனில்லை என்றார். உண்மைதானே. தமிழனை, மராட்டியனை, பஞ்சாபியை, அசாமியை, மார்வாடியைக் காண முடிந்திருக்கும்! இந்து, முஸ்லீம், சீக்கியர், ஆதிதிராவிடர் என்பவர்களை கண்டிருக்க முடியும். இந்தியனை கண்டிருக்க முடியாது. மதம், மொழி, இடம், இனம் எனும் பலவகையிலே, வேறுவேறாக உள்ள கூட்டங்களும் அந்தக் கூட்டங்களிலே, பல உட்பிரிவுகளும் மலிந்து கிடக்கும் இந்த நாட்டிலே, எப்படி இந்தியனைக் காணமுடியும்! எனவேதான் நிக்கோலஸ் எழுதினார். ஐயா! இந்தியா சென்றேன் இந்தியனைக் காணவில்லை என்று.
(கட்டுரை - நிக்கோலஸ் தீர்ப்பு, 01.04.1945)

» வெற்றிபெற்ற ஆங்கிலேயரால் இந்திய பூபாகத்தை கிருத்துவ நாடாக ஆக்கமுடியவில்லை. வெற்றிபெற வாள் எடுக்காத ஆரியத்தால், திராவிடத்தை ஆரிய சேவா பீடமாக மாற்றிவிடமுடிந்தது. உலக வரலாறு முழுவதும் தேடினாலும் இதற்கு ஈடாக வேறொரு கொடுமையைக் காணமுடிவதில்லை.
(கட்டுரை - விடுதலைப்போர், திருமுகம், 29.02.1946)

» கலிங்கராணி என்ற கற்பனை வரலாற்றுக் கதையில் மக்களில் சமய நம்பிக்கையையும், அதைக் கருவியாகக் கொண்டு பிழைக்கும், பாதிநதி கோயில் பூசாரி, பதஞ்சலியின் அட்டூழியத்தை காட்டுகிறார். ஆரியர்கள் சமயத்தை தங்களுக்குத் துணையாகக்கொண்டு, மகிமைகளை கற்பித்து, மன்னர்களையும் அரசிகளையும் ஆட்டிப் படைக்கும் கொடுமையை சித்தரிக்கிறார். மலர்புரி காசி சமய நம்பிக்கை காரணமாக கடவுள் மீது கொண்ட நம்பிக்கை, பூசாரி தனக்கு சாதகமாக வைத்துக்கொண்டு, அவனிடம் குழந்தையொன்று பெற்றுக்கொள்கிறாள். ஆரியன் காசியிடம் கொண்ட செல்வாக்கால் மக்களை மந்திர தந்திரங்களால் அச்சுறுத்தி வந்தான். தன் எண்ணம் போல் அரசியையும் மக்களையும் ஏமாற்றுவதற்கு சமய நம்பிக்கை அடித்தளமாக இருந்தது. ஆரியர்கள் சூழ்ச்சிகளை அறியாத தமிழர்கள், அவர்கள் கூற்றுகள் அத்தனையும் மெய்நெறி எனக்கொண்டு ஒழுகினர். இல்வேதனையை காலக்கிழவர் மூலம் வெளிப்படுத்துகிறது. ஆலயமென்பது ஆரியக் கோட்டை என்பதும், தந்திரயந்திரமென்பதும், பாமரருக்கு பலிபீடம் என்பதும், சிந்தனைச் சுதந்திரத்தை இழந்தவர் சிக்கிச் சிதையும் சிலந்திக்கூடென்பதும் அவருக்குத் தெரியும். அதனைத் தெரிந்திருந்த தமிழரோ அதனை மறந்தனர். சூதுகளை சூத்திரங்கள் என்று நம்பியும் மமதையாளரின் போக்கை மகிமை என்று எண்ணவுமான நிலை பெற்றது கண்டு வாடினர்.


கலை
» கலையை அழிக்கின்றனர், கம்பன் புகழை மறைக்கினற்னர் என்று கூறப்படும் பழிச்சொல்லை, நாங்களறிவோம். கலையிலே தேர்ந்து, அதிலே ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு கம்பனின் இராமாயணமும், சேக்கிழரின் பெரியபுராணமும் கலை என்று கருதும் அன்பர்கள், ஒரு பெரியாரின் போரால் ஓர் அண்ணாதுரையின் அனலால் அக்கலை அழிந்துபடும் என்று கருதுவரேல், அவ்வளவு சாமான்யமானது கலையாகாது. அத்தகைய கலை இருத்தலுமாகாது என்றுரைக்க ஆசைப்படுகிறேன். கலையைக் குலைக்கும் செயலல்ல, எனது கலையிலே புரட்சி உண்டாக்க விழைகின்றோம் - தக்க காரணங்களோடு.

» கலை ஓர் இனமக்களின் மனப்பண்பு. இவ்வின மக்களிடையே தோன்றும் தெளிவு, வீரம், ஆகியவற்றின் எடுத்துகாட்டு. எனவே, கலை இனவளர்ச்சிக்கு ஏற்றபடி மாறியும் விரிந்தும் வருமென்பதே நுண்ணறிவினரின் துணிபு. கலையுலகில் அவ்வப்போது மாறுதல் உண்டாகும். இனத்துக்கோர் கலையும், இடத்தின் இயல்பு, தட்பவெப்பம் ஆகியவற்றுக்கு ஏற்றமுறையிலும் கலை உண்டாகும், வளரும், மாறும்.
அரபு நாட்டுக்கலையிலே, தென்றலைப் பற்றிய கவிதை அதிகமிருக்க முடியாது எஸ்கிமோ நாட்டுக் கலையிலே கதிரோனின் ஒளி பற்றிய கவிகள் அதிகமிராது. ஆப்பிரிக்கா நாட்டு ஜுலு வகுப்பினரின் கலையிலே அவர்கள் நாட்டியம் கவியிலே இருக்கும். அது போலவே ஆரியக்கலையிலே கங்கையின் கவர்ச்சியும், கரையோரக் காட்சியும் சோலை மாட்சியும் என்பன போன்றவைகள் கவிதைகளாக இலக்கியமாக இருக்கும்.

» இந்தியா என்ற இந்த உபகண்டம், பல இனங்கள் வசிக்கும் இடம். ஆகவே, இங்குப் பல கலைகள் உண்டு இனத்திற்கோர் கலை என்றுண்டு. எனினும், இருபெரும் கலைகள் இங்குள்ளன என்று அறிவாளிகள் கூறியுள்ளனர். ஆரியக்கலை ஒன்று, திராவிடக்கலை பிறிதோன்று, இடத்திற்கோர் கலை உண்டென்றும் இனத்திற்கோர் கலை உண்டென்றும் கூறினேன். அவை ஒன்றை ஒன்று தழுவாவிடினும், மோதிக்கொள்ளாமல் இருத்தலுண்டு; அவை தனித்தனி அமைப்பு

பகுதி: 1 2 3 4

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai