அண்ணா களஞ்சியம்

இனம்
| மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்

இனம்
பகுதி:
3

பகுதி: 1 2 3 4

» தமிழர் தம் நல்வாழ்வுதனைக் குலைக்கும் நச்சரவு போன்ற நினைப்புகளும், நிலமைகளும், நிகண்டுகளும், அமைப்புகளும் நீடித்திருக்காவிடில் நன்றல்ல. நலம் மாய்க்கும் என்பதறிந்து அறிவுக் கருதினையை அறுவடை செய்து எல்லோரும் இன்புற்று வாழ்ந்திடலே இயற்கை நீதியெனக் கண்டு பணிபுரியும் ஆர்வம் பெற்றிடவேண்டும்.

» உண்மை, அறிவு, ஆராய்ச்சிகள் உடையோரை நம்மவர்கள் புறக்கணிக்கத் தலைபட்டார்கள். பொய்யர்களுக்கும் புளுகணிகளுக்கும் காலட்சேபம் செய்ய தலைப்பட்டதால்தான் நாளெல்லாம் நலிந்தோராய்க் கத்திக் கிடக்கிறோம்.

» தமிழர் தனி இனத்தவர். பன்னெடுங்காலம் பண்புடன் வாழ்ந்து, பாரோர் புகழ வாழ்ந்த கலைச் செல்வங்களைக் கண்டவர் வெவ்வேறாகவும், தனித் தனியாகவும், தனிப்பண்புகளுடன் விளங்கிவந்த ஆரிய, திராவிடக்கலைகள் கலக்க நேரிட்டது ஒரு பெரும் கேடாக முடிந்தது.

» தமிழரின் தனிச்சிறப்புக்களைக் கெடுத்த நூற்கள் ஒழிக்கப்பட்டு தமிழன் தனி இனம், தனிப்பண்பு படைத்தவன், தனிக்கலை உடையவன், தனியரசு கேட்பவன் என்பதை வலியுறுத்திப் பெறவேண்டும்.

கி தமிழர் இசையை வளர்த்ததுபோல் வேறு இனத்தினர் வளர்க்கவுமில்லை; தமிழர் இசையை இழந்ததுபோல் வேறு யாரும் இழக்கவுமில்லை. தமிழனின் இன்றய நிலை இழந்த இன்பத்தைப் பற்றி ஏங்குவதாக இருக்கிறது.

» இசை என்னும் சொல்லுக்கே, வயப்படுவது, இசைவிப்பது என்பது பொருள். இதனைத் தமிழர் நன்குணர்ந்து பயன்படுத்தி வந்தனர்; மகிழ்ந்தனர். மகிழ்வித்தனர்.

» பொன்னும் மணியும் பெலிவுடன் விளங்க, வீரமும், ஈரமும் கொண்டு ஆண்ட தமிழ் முன்னர்கள் மற்றைச் செல்வங்களை வளர்த்ததுபோல், கலைச் செல்வத்தை வளர்த்தே வந்தனர்.

» வளமான வாழ்ந்தோம் அன்று. இன்று வறுமை பள்ளத்தில் வீழ்ந்திருக்கிறோம். வெளியே நிலவொளி; உள்ளே இருள்! வெளியே உணர்சிப்பெருக்கு; உள்ளே மனம் உடைந்த நிலை!

கி தமிழ் வாழ்ந்தால்தான், தமிழர் வாழமுடியும். தமிழர் வாழ்ந்தால்தான் தமிழ்ச் சமுதாயம் வாழ முடியும் என்று நாம் உள்ளூர உணர்ந்திருக்கிறோம்.

கி வாழ்க என்பது தமிழ்ச் சொல் மட்டுமல்ல, தமிழ்ப்பண்பு. மற்றவரின் வாழ்க்கைச் செழித்து இன்புற்று இருப்பது அவர்கட்கு மட்டுமன்றிச் சமுதாயத்துக்கு நல்லது என்பதால் கனிந்த மனத்துடன் வாழ்த்துவது தமிழ் மரபு. அந்தச் சொல்லிலே இசையும், இதயக் குழைவும் இருப்பதை, இதயம் உள்ளோர் அனைவரும் உணரலாம்.

» திறமை வேறு, தன்மை வேறு, விளைவு வேறு. கம்பரின் கவித்திறமையைக் கண்டு நாங்கள் வியக்கிறோம். அந்தத் தன்மை ஆரியத்தை ஆதரிக்கும் தன்மையாயிற்றே என்பது கண்டு வியக்கிறோம். அதாவது கவிதையின் விளைவாகத் தமிழினம் தாழ்ச்சியுற, ஆரியத்தின் அடிமைப்படும் விளைவு அவரிட்டதைக் கண்டு நாங்கள் வேதனைப்படுகிறோம். நாங்கள் கண்டிப்பது கம்பனின் கவிதைத் திறமையல்ல. அதன் தன்மையை, விளைவை என்பதை அறிஞர்கள் தெரியவேண்டும்.

» நான்கு கோடிப் பேர் எங்கேயாவது நயவஞ்சகரின் நாட்டியப் பொம்மைகளாக உள்ளனரா? இல்லை திராவிடருக்கு மட்டுமே இக்கதி. இந்த இனம் இக்கதி பெற்றதன் காரணம் பூகோளப் பித்தலாட்டமன்றி வேறு என்ன?

» தமிழ்ப் பண்பாட்டை இழந்து, தேசிய ஒருமைப்பாட்டை அமைக்க விரும்பினால் அது பாரதியார் சொன்னதுபோலக் கண்ணிரண்டையும் விற்று சித்திரம் வாங்கியதாகத்தான் இருக்கும்.

» மிராசுதார் குடியானவனைப் பார்த்து கெட்டுப்போகாதே என்று சொன்னால் என்ன பொருள்? வெள்ளை வேட்டி கட்டாதே என்பதுதானே? இதைப் போலத்தான் இருக்கிறது. இராவணனைப் போற்றாதே என்பதும்.

» தமிழன் தமிழைப் படிக்கத் தொடங்கிவிட்டான். தமிழைப் போற்றத் தலைப்பட்டுவிட்டான். தனது மொழிக்கு, தன் தாய்மொழிக்கு தனது பணியைச் செய்ய முன்வந்துவிட்டான். ஆகவேதான் நாடெங்கும் தமிழ்த் திருநாள் முத்தமிழ் முழக்கங்கள் நடைபெறும் நன்னாளைக் காண்கிறோம் இன்று.

» தமிழ் என்றால், தமிழ் மக்கள் அனைவரையும் குறிக்கும். தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று கூடவேண்டுமென்ற உயர்ந்த கருத்தை, நான் வரவேற்கின்றேன்.

» தமிழர்கள் இன்று தங்களை உணரத் தலைப்பட்டுவிட்டார்கள் - தமிழனின் பண்பு யாருக்கும் தாழ்ந்தவனாக இருப்பதல்ல, யாரையும் தாழ்த்துவதும் அல்ல.

» தமிழர்கள் தமக்கு என்று இருப்பதை இழக்க ஒருகாலும் சம்மதிக்க மாட்டார்கள்! அவர்களிடம் உள்ளது அருமையானது என்று உலகில் உள்ளவர்களும் கூறுகிறார்கள். அப்படி அவர்கள் சொல்லும்போது தமிழர்கள் அதன் மேல் பற்று கொள்ளமாட்டார்கள் என்று எவரும் கருத முடியாது.

» தமிழர்களாகிய நாங்கள் எந்த மொழியையும் மதிக்கிறோம். உலகில் எந்தக் கோடியில் அறிவு இருந்தாலும், அதை எற்றுக்கொள்ளுகிறோம். உலகின் எந்தக் கோடியில் இருந்து வருபவராயினும் அவர்கள் அறிவை மதிக்கிறோம்.

» ஆரிய நாகரீகத்துக்கும், திராவிட நாகரீகத்துக்கும் வேற்றுமை - எதிலும் வேற்றுமை, எல்லாவற்றிலும் வேற்றுமை, எதற்கெடுத்தாலும் வேற்றுமை! கலையில், இனப்பண்பில், நடையில், வாழ்வில், வாழ்க்கை முறையில், உழைப்பில், உண்டுகளிப்பதில் வேற்றுமை.

» காடு இன்றி, நாடு ஏதும் சொந்தமின்றி கால் நடையாக இங்கு வந்து திராவிடர்களின் காலடியில் கிடந்தோர்கள், இன்று தங்கள் காலடியில் திராவிடர்களைக் கிடத்திக்கொண்டு பூவேர்களாக உலவுகின்றனர்! உலவலாமா?

» தமிழரின் இன்றய நிலமை தாழ்வுடையதுதான். இடர் மிகுந்ததுதான். ஆனால் எங்கள் இனத்தைக் கெடுக்கும் ஆரிய கொள்கைகளை அவர்கள நீக்காவிட்டால், அதன் பிறகு அவர்கள் விழித்தெழுந்த வேங்கையாகிவிடுவர். நினைவிருக்கட்டும்.

பாகப்பிரிவினை
தமிழர் தமிழ்நாடு, தமிழ்நாடு தமிழருக்கே என்று நாம் கூறிவந்தபோது தமிழர் என்றால், தனி இனம், ஆரியத்தின் கலப்புக்கு முன்பு உயர்ந்த பண்புகளுடன் வாழ்ந்த இனம், என்பதை வலியுறுத்தி வந்தோம். வெறும் பொழி மட்டுமல்ல தனியான வாழ்க்கை முறை கொண்டவர்கள், என்பதை விளக்கி வந்தோம். தமிநாடு தமிழருக்கே என்றபோது, தமிழ்நாடு இன்று மதம், அரசியல், பொருளாதாரம் எனும் துறைகளிலே முறையே, ஆரியர், வெள்ளையர், வட நாட்டார், என்பவைகளால் பாழாக்கப்படுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டி இந்தநிலை மாறினால் மட்டுமே தமிழ்நாடு வளமாக வாழ முடியும், இதற்குத் தமிழ்நாடு தனி அரசுரிமை பெறவேண்டும் என்பதை விளக்கினோம்.

தமிழர் தனி இனம், தனியான வாழ்க்கை முறை கொண்டவர்கள் என்பதை மேலும் ஆராயும்போது, ஆந்திரரும் கேரளரும் இது போன்ற நிலை கொண்டவர்களே, இவர்களும், தமிழரைப்போலவே, ஆரியத்துக்குப் பலியானவர்கள், வடநாட்டுப் பொருளாதாரத்துக்கு இரையாகிறர்கள் என்பதையும் எடுத்துக்காட்டி அவர்களும் தங்கள் நாட்டை, பார்ப்பன - பனியாப் பிடிப்பிலிருந்து விடுபடவேண்டும் என்று கூறினதோடு, கூட்டு முயற்சி செய்யவேண்டும் என்றோம். கூட்டு ஆட்சி நடத்தலாம் என்றோம் இவ்வளவுக்கும் ஆதாரமாக, இன்று தமிழர், தெலுங்கர், கேரளர், என்று மொழிவழி வேறு வேறாகக் காணப்படும் மூவரும், திராவிடர் என்ற மூல மனத்தவர் என்பதை விளக்கியதோடு, மொழியும்கூடத் தமிழிலிருந்தே மற்றவை என்பதையும் கூறினோம்.

கூறினோமென்றால், வெட்டிப் பேச்சாக அல்ல. நிலநூல், மொழிநூல் மனப்பண்பு நூல், வரலாறு ஆகியவைகளை ஆதாரமாகக் கொண்டு கூறினோம். திராவிடநாடு, திராவிடருக்கே என்ற கூறலானோம். தமிழருக்கு, எவ்விதமான புதுவாழ்வு தேவை என்ற விரும்பினோமோ, அதே விதமான புதுவாழ்வு ஆந்திரருக்கும், கேரளருக்கும் வேண்டும் என்று கூறினோம் என்று பொருள். மூவரும், இன்றுள்ளதுபோல மதத்திலே ஆரியருக்கும், அரசியல் பொருள் இயலிலே டில்லிக்கும் அடிமைப்பட்ருப்பது ஒழிக்கப்பட்டு, தமிழகமும், ஆந்திரர் ஆந்திர நாடும், கேரளர் கேரளமும் அமைத்துக்கொண்டு, தத்தமது எல்லையில் தத்தமது விருப்பப்படி வாழ்ந்துகொண்டு வருவதுடன், மூவரும் கூட்டாக நின்று, பொதுவான காரியங்களையும் மூன்று இடங்களின் முன்னேற்றத்துக்கான காரியத்தையும் கவனிக்கவேண்டுமென்றும் கூறினோம்.

தமிழ்நாடு தமிழருக்கே என்ற உரிமை முழுக்கத்தை அன்பழைப்பாக்கியபோது, அது திராவிடநாடு என்று வளர்ந்தது.

இங்குக் கவனிக்கவேண்டியது மூலநோக்கத்தை.

அந்த மூலநோக்கம், ஆரீய ஆங்கிலேய வடநாட்டுப் பிணைப்பிலிருந்து விடுபடவேண்டும் என்பது.

இந்த மூல நோக்கத்தை ஏற்றுக்கொள்ள ஆந்திரமும் கேரளமும் இசைந்தால், திராவிடநாடு எனும் அளவுக்குத் தரணி விரிந்திருக்கும்.

அவர்கள் இசையாவிட்டால், தமிழகம் என்ற அளவோடு இருக்கும். ஆனால், அதுதான் முக்கியம் - அளவு குறைந்து இருப்பினும் மூலநோக்கம் முறியாது - தனி அரசுரிமை இருக்கும். இந்த விளக்கத்தைக் கவனியாததாலேயே பலரிடையே குழப்பம் உண்டாகிறது.

துவக்கத்தின்போது கிளம்பிய கேலிக் கண்டனத்தை நாம் புறக்கணித்துவிடுகிறோம். இன்றுள்ள நிலையைக் கவனிக்கவேண்டியதே முக்கியம். திராவிட நாடு திராவிடருக்கே என்ற பேச்சுக்க் எதிப்பு பல ரகம்.
1, பாரத் வர்ஜத்தைப் பிளக்கக்கூடாது என்று பேசுபவர்கள். நமது அனுதாபம் அவர்கட்கு, ஏனெனில் அவர்களின் பாரத்வர்ஜம் தேய்ந்துவிட்டது.

2. திராவிடர், திராவிடர் என்று இங்கே கூறி என்ன பயன்? ஆந்திரர் ஏற்றுக் கொண்டனரா? கேரளம் இசைகின்றதா? ஏன் நாமாக, வலிய வலிய அவர்களுக்காகப் பேசவேண்டும்? நம் காரியத்தைக் கவனிப்போம். தமிழ்நாடு வரை பேசுவோம் என்று கூறுபவர்கள் இவர்களிலும் இரு வகை உண்டு.
(அ) ஆந்திரமும் கேரளமும் சென்று திட்டத்தை விளக்கவில்லையே என்ற வருத்தத்தால் பேசுபவர்கள்,
(ஆ) பேசிப் பயன் கிடையாது, ஆந்திரரும், கேரளரும், தமிழருடன் கூடி வாழவேமாட்டார்கள் என்று எண்ணுபவர்கள்.

3. தமிழ்நாடு என்று மொழிவாரிதான் பிரியவேண்டும் உள்விவகாரத்தைக் கவனிக்க உரிமைவேண்டும். ஆனால் மத்திய சர்க்கார் ஒன்று வேண்டும். அது இந்திய சர்க்காராக இருக்கவேண்டும். பாகிஸ்தான் மத்திய சர்க்காரோடு இணைந்திருக்கவேண்டும் என்பவர்கள் அதாவது.

உறவுக்கு எல்லை இமயம்
உரிமைக்கு எல்லை வேங்கடம்
என்று பேசுபவர்கள்

இந்த மூன்று வகையினரின் பிரச்சாரம், பிரச்சனையைச் சிக்கலாக்கத்தானே செய்யும்.

இந்த சிக்கலை நீக்கவேண்டியது நமது கடமை. எனவேதான், இந்தக் கிளர்ச்சியின் வளர்ச்சியை விளக்கினோம். மூல நோக்கத்தை எடுத்துக் காட்டினோம்.

பாகப் பிரிவினை தேவை - என்று மட்டும் கூறவில்லை - பிரிகிறபாகம் எப்படி இருக்கவேண்டும் என்பதை கூறுகிறோம்.

நாடு தேவை என்று எல்லையை மட்டும் கூறவில்லை - நாட்டிலே என்ன நிலை இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

இங்கிருந்து அதுவரையில் என் நாடு என்று அம்பு எய்வது மட்டுமல்ல இங்கு இன்று இந்நிலை இருக்கிறது. அது நல்ல நிலையல்ல; நான் நல்ல நிலைமையடைய வேண்டுமானால் இன்னின்ன பிணைப்புகளிடமிருந்து, ஆரியம், ஆங்கிலம், வடநாடு எனும் பிணைப்புகளிலிருந்து ஜெபமாலை, துப்பாக்கி, தராசு எனும் கருவிகளைக் கொண்டு நமது வளத்தைக் கருக்கும் தொடர்புகளிலிருந்து விடுபடவேண்டும் என்று கூறுகிறோம்.

நாம் கோருவது, புது அரசு முறை - வெறும் சர்வே செய்து எல்லைக்கல் நாட்டுவது அல்ல.

நமது இலட்சியம், மொழியால் மட்டுமல்ல; இனத்தால், அதாவது தனியான வாழ்க்கை முறையினால் சித்தரிக்கப்படும் நாடு ஆகும்.

இந்த மூல நோக்கத்தை, ஆந்திரமும் கேரளமும் ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறோம் - ஏற்றுக்கொள்வதிலே அந்த இரு மக்களுக்கும் நலன் இருக்கிறது என்ற நம்புகிறோம், அவர்கள், டில்லியுடன் இணைந்து இருப்பதைவிட, கூட்டாட்சியாக நம்மோடு இருப்பது நல்லது என்று எண்ணுகிறோம். இதை எடுத்துக் கூறும் அளவுக்கும், நமக்கும் அவர்களுக்கும் பாத்தியதை, உறவு, ஒரே இனம் என்ற உரிமை இருக்கிற காரணத்தால்.

அவர்கள் அடியோடு இந்த அன்பழைப்பை ஏற்க மறுத்தால் என்ன ஆகும்? நமது மூலநோக்கம் கைவிடப்பட மாட்டாது தமிழகம் வரையிலேனும், நாம் இன்பத் திராவிடம் - (புது முறையான சமுதாய பொருளாதார, மத ஆட்சி முறை) இருக்கும். திராவிடம் என்பது நிலப்பரப்பை மட்டுமல்ல, வாழ்க்கைத் தத்துவத்தைக் காட்டும் சொல். ஆரியம்! என்ன பொருள்? ஒரு இடமா? இல்லை! ஒருவகை வாழ்க்கை முறை. திராவிடம்? வாழ்க்கை முறை. அத்துடன், வாழ்க்கை முறையைக் கொண்ட ஒரு பூபாகம் - தரணி.
இந்த வாழ்க்கை முறை, பண்பாடு, ஆந்திரம், கேரளம் ஆகிய பகுதிகளிலும் இருக்கவேண்டும் என்பது நமது ஆசை அது ஈடேறாவிட்டால் வாழ்க்கை முறையையே விட்டு விடுவோம் என்றல்ல அர்த்தம் - ஏற்றுக் கொள்ள இயும் இடம் வரையில் அமைப்போம் என்று பொருள்.

» தஞ்சையின் வீழ்ச்சிக்குக் காரணம் வெங்காண்ணா எனும் வேதியன் என்பது எவ்வளவு பேருக்குத் தெரியும். தேரிந்து சிலர் கூறினாலும் எவ்வளவு பேருடைய செவியில் வீழ்ந்து சிந்தனையைக் கிளறுகிறது? பிறந்தது தமிழகத்தில், வாழ்ந்தது! தமிழகத்தில்! பழகியது தமிழருடன்! பேசியது தமிழ் மொழி! எனினும் தமிழகத்தின் பூந்தோட்டத்தை, மராட்டியருக்குக் காட்டிக்கொடுத்தான் கயவன்! அன்னிய ஆதிக்கத்தைப் புகுத்தினான்.
(தஞ்சை வீழ்ச்சி - குறும் புதினம், 1953)

ஆரியத்தின் அணைப்பில் அவதியுற்ற திராவிடம்
இங்கு நெடுங்காலமாகவே, ஆரியத்தின் அணைப்பிலிருந்து விடுபட, திராவிடம் பலமுறை முயன்றிருக்கிறது. சில நேரத்தில் செயலற்று இருந்தது என்ற போதிலும், அடியோடு சரண் புகுந்ததில்லை. அடிக்கடி தனித்தமிழ், வேளாள நாகரிகம், உண்மைச் சைவம், பண்டை நாகரிகம் என்று பல்வேறு தலைப்புகளிலே கிளம்பிய இயக்கங்கள் யாவும், மூல முயற்சியின் சிறு சிறு பதிப்புகளேயாகும். இவை ஒவ்வொன்றும், தேவை, பலனுமுண்டு இவைகளால் என்ற போதிலும், இவை, மக்களில் ஒரு சிலரால் மட்டுமே உணரக்கூடியதாக இருந்த காரணத்தால், மூலமுயற்சியை இந்த இயக்கங்கள் பலப்படுத்த முடியவில்லை. ஒவ்வொன்றும், தனித்தனி இயக்கங்களாக மாறிவிட்டன. முரண்பாடுகளாகவும் தெரியலாயின.

ஏன் எதிர்ப்பு
சூத்திரன் கொல்லப்பட்டால் என்ன தண்டனை தெரியுமா? பூனை, அணில், கோட்டான், காடை, தவளை, நாய், உடும்பு, காக்கை இவைகளில் ஒன்றை கொன்றால் செய்யவேண்டிய பிராயசித்தம் யாதோ அதை சூத்திரனுக்கு செய் என்று மனு அருள்கிறார்.

மது அத்யாயம் 3 சுலோகம் 257 ஹோம திரவியங்களைக் குறிப்பிடுகிறார் அவை யாவை?
செந்நெல்லின் சோறு, பசுவின் பால் சோமபதையின் சாறு, தீ நாற்றமற்ற இவைகள் அவிசுகள். அதாவது ஹோமத்துக்குரியன அம்மட்டோ, மதுபர்க்கம் எனும்பண்டமும் அவர்களுக்குண்டு, அப்பண்டம் யாது? மாட்டிறைச்சியை நெய்யில் வேகவைத்து தேன் கலந்து செய்யும் சிற்றுண்டி அஜமேத யாகம், ஆடு தின்ன உதவிற்றே தவிர ஆங்கிலேயனை விரட்ட முடியவில்லை! ஹோமப்புகை துப்பாக்கி புகை முன்பு மாயமாய் மறைந்தது.

» எங்கும் காணப்படாத அளவு இலக்கியச் செல்வத்தை தந்துள்ளேன், எனினும் என் மக்களில் பெரும்பாலோர் எழுத்தறிவும் அற்றவராயுள்ளார். கற்றோரிலும் மிகப் பலர் பகுத்தறிவும் மிகப்பலர் பகுத்தறிவற்றுக் கிடக்கின்றனர். என் செய்வேன் என்று எண்ணி, எண்ணி தமிழன்னை குமுறுகிறாள்.
(14.01.1967)

» தமிழ் பேசிடுவோர் அனைவரும் தமிழர் ஆகார்! அவ்வாறு எண்ணுவது பிழை! பொருளின் புறத்தோற்றத்திலேயே மயங்கிவிடாது, நுண்ணறிவுடன் கண்டவர்கள் தமிழர். தமிழர் சிந்தனைக்கும், வினைத் தூய்மைக்கும் மாட்சிக்கும், நேர்மைக்கும் சிறப்பு நல்கி தமிழர்களாக வாழ்ந்தவர்களையே தமிழரென்போம்.
எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு எனும் குறளின் பொருளும் அதுவே.
(வாரி வழங்குங்கள் - கடிதம் - 04.11.1962)

» மகிழ்ச்சியே மயக்கம், 'மன்னுயிரைத்தான் மாய்க்கும்' என்று கூறினால் அல்ல நம் தமிழர் எனினும் மகிழ்ச்சியே வினை, வேறு செயல் வேண்டாம் என்றிருத்தல் நன்றன்று. வினை வித்து! மகிழ்ச்சி விளைவு! அந்த விளைவு அவ்வளவும் தின்று தீர்த்துவிட்டால் பின் வினைக்கு வித்தேது? எனவே விளைவு அளிக்கும் சுவையினை உண்டு மகிழ்ந்திருப்பதுடன், இருந்துவிடாது, வித்து எடுத்துவைத்து மீண்டும் வினைமேற்கொள்ளவேண்டும். அங்ஙனம் முறை வகுத்துக்கொண்டால்தான், வாழ்வில் வளம் காண வகை கிடைக்கும். தொடர்ந்து மகிழ்ச்சி மயக்கமாகுதல் கூடாது! மது மாந்திடும் மந்தி போன்றதல்ல மனிதகுலம்! மகிழ்ச்சி புது முயற்சிகட்கு ஊக்குவிக்கும் மாமருந்து, மதுவன்று!

» மொழியால், கலையால், பண்பாட்டால், வரவாற்றால், பழக்கவழக்கங்களால், பூகோள ரீதியாக திராவிடர் வேறு, வடவர் வேறு. அப்படியிருக்க நாம் அனைவரும் ஒன்று என்று எப்படிச் சொல்ல முடியும்? இந்த மதத்தைத் தழுவியவர்கள் இந்தியா முழுவதும் உள்ளவர்கள். ஆகவே இந்தியா ஒன்றாக இருக்கவேண்டும் என்றால் இஸ்லாம் மதத்தைத் தழுவியவர்கள் எல்லோரையும் ஓர் அரசின் கீழ் கொண்டு வரய இயலுமா? கிருத்துவ மதத்தைத் தழுவியிருக்கின்ற காரணத்தாலேயே அமெரிக்காவும், இங்கிலாந்தும், பிரான்சும், ஜெர்மனியும் ஓர் ஆடசியின் கீழ் இருப்பது சாத்யமாகுமா? அதைப் போலத்தான் திராவிடமும் இந்தியாவோடு ஒன்றாக இருக்க இயலாது.
(புதுப்பா - கடிதம் 18.09.1961)

பேதை
» 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' - என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு வள்ளுவர் கூறியிருக்கிறார். ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று இந்த நாளில் பாரதியார் எடுத்துக் கூறவேண்டியதாயிற்று. அதற்குப் பிறகும் ஜாதிப் பிடிப்பும், பித்தமும் நீங்கியப்பாடில்லையே! பேழையில் பொருளை அடைத்து பேதை ஒருவன் அதன் மீதே தலைவைத்து பட்டினி கிடந்த நிலையில் காய்ந்திருக்கிறான் என்றால், அப்படி ஒரு கதை சொன்னால் வியப்படைகிறோம்.
அறிவுப்பேழை இங்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே! ஆயினும் பேதம்! விளவு, மதியற்ற போக்கு, குருட்டு பிடிவாதம், முரட்டு வாதம், சே! தம்பி, இதனை எண்ணும்போது உள்ளபடியே வெட்கம் விலாவினை குத்திடுகிறது!
(கடிதம் 14.01.1965)


பகுதி: 1 2 3 4

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai