அண்ணா களஞ்சியம்

இனம்
| மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்
மதம்
பகுதி:
4

பகுதி: 1 2 3 4 5 6

புராணத்தை, மதபோதனை ஏடு என்று ஒப்புக்கொண்டு அதற்காகத்தான் அவை பயன்படும் என்பதை தைரியமாக ஒப்புக்கொள்ளவேண்டும். மலச்சிக்கல் முதல் கொண்டு மார்வலி வரையிலுள்ள 124 வியாதிகளைக் கண்டிக்கும் சூரணம். நோய் இல்லாவிட்டாலும் சாப்பிடலாம். தேக ஆரோக்கியத்துக்கு. அது மட்டுமில்லை. பித்தளைப் பாத்திரங்களை, இந்தச் சூரணத்தைக்கொண்டு துலக்கினால் அசல் தங்கம்போல் பிரகாசிக்கும் என்று வகையுள்ள எந்த வைத்யராவது தமது மருந்து பற்றி கூறுவாரா? அனுபவமுத் திறமையும் உள்ள வைத்தியர் ஒரே மருந்தைக் கூட, இன்ன விதமான தேகமுள்ளவர் தேனிலும், இன்னவிதமுள்ளவர் பாலிலும் கலந்து சாப்பிடவேண்டும் என்ற சொல்வார்களே. பிறவிப் பிணியைப் போக்கும் மருத்துவ முறையாம் மார்க்கம்! அதற்காக ரசாயனம், சர்பத்து, லேகியம், கஷாயம், மாத்திரைப் போன்ற பல மருந்து வகைகள் உண்டு. அவைகளின் புராணம் போதை தரும் லேகியம். தத்துவம் கஷாயம். காவியச்சுவையுடன் கூடிய கதைகள் சர்பத்து போன்றவை. எம்மிடம் உள்ள இம்மருந்து எப்பிணியும் போக்கும், பிணிபோக்கி மட்டுமல்ல, பீடைநீக்கி அதுமட்டுமல்ல பித்தளையைப் பொன்னாக்கும் என்ற பெருமை பேசுவது அழகா, நியாயமா, யூகமுள்ளச் செயலாக மதிக்கப்படுமா?
(புராணம், போதைதரும் லேகியம் - 03.02.1946)

திருந்தாத வயலில் தீங்கனி கோரி விதைத்தூவி தேன் பெய்தாலும் பயன்கிட்டுமா? ஆடை அணி புனைந்து, ஆடிப்பாட வரச்செய்தாலும் அலியை அணைத்துக்கொண்டால் சுகம் கிட்டுமா? ஆரியம் எனும் படுகுழி மீது புராணமெனும் பச்சிலைப்போட்டு மூடிக்கிடக்கிறது பச்சையைக் கண்டு இச்சைபட்டு செல்லும் பாமரர் நிச்சயமாக படுகுழி வீழ்வர் என்பது ஆரியருக்குத் தெரியும். கொக்கெனக் காத்திருந்து, குள்ள நரிபோல் குறியை வஞ்சகத்திலேயே நிறுத்தி, கள்ளமும் கபடமும் இல்லாதவரைக் கைதிகளாக்கிவிட்டனர். அவர்களின் வியர்வை, இரத்தம் ஆரியப் பண்ணைக்குப் பாய்கிறது. இதனை அறிந்தோரும் அஞ்சுகின்றனர், எடுத்துரைக்க எனில், அறியாதார் நிலைப்பற்றிக் கூறிடவும் வேண்டுமோ!
(களிமண்ணும் கையுமாக - கட்டுரை, 13.09.1942)

பூமி உருண்டை என்ற கருத்தை ஏற்றுக்கொண்டால் பூசூரக்கூட்டம் நஷ்டம் காண்பதில்லை. தேவலோகம் என்றோர் தனிஇடம் கிடையாது. இறந்தவர்கள் அங்குசெல்வதும் புரட்டு. அப்படி அவர்கள் அவர்களை அங்கு குடியேறச்செய்வதாகவே இங்கு பூதேவருக்குத் தட்சினைத் தரப்பட்டு. சில சடங்குகள் செய்யப்படுகின்றன. இது பொருள் பறிக்கும் தந்திரம் என்ற புதியக் கருத்தை ஏற்றுக்கொண்டால், பழைய கருத்தை நம்பும் மக்கள் தரும் பணம் கிடைப்பது நின்றுவிடும். ஆகவே கஷ்டம். ஆகவே நமக்கு நஷ்டம் தரக்கூடடியப் புதுக்கருத்துக்களை அப்பூசூரக்கூட்டம் எங்ஙனம் வரவேற்கும், எதிர்க்கத்தானே செய்யும். ஆயிரம் தத்துவத்தைவிட அரை ரூபாய் தட்சணைமேல் என்று எண்ணும் கூட்டமல்லவா அது.
(காமவேள் நடன சாலையில் கற்பூரக் கடை - 17.02.1946)

சிவலிங்கம் சாட்சி சொல்வது, எலும்பு பெண்ணுருவாவது, பண ஓலைத் துண்டு வெள்ளத்தை எதிர்த்துச் செல்வது, அறுத்து கரி சமைத்த பிள்ளை உயிர்பெற்று எழுந்து வருவது, பன்றியும் அன்னமும் அடிமுடி தேடுவது, ஒருவர் முதுகில் பிரம்பால் அடித்ததும் அனைவர் முதுகிலும் அடி விழுவது, யானை கதறினதும் ஆண்டவன் வருவது, சிலங்தி பந்தல் போடுவது, சிவனாரை பூஜித்த யானை சிவபாதம் அடைவது போன்றவைகள், எங்கும் எக்காலத்திலும் நிகழ்ந்திருக்க முடியாத கட்டுத் கதைகள். அண்டப்புளுகும் கூட!
அந்தந்த மதவாதிகள், தங்கள் தங்கள் சமயத்திற்கு ஆள் சேர்க்கவும், அவ்வாறு சேர்த்த பேர்களை ஏமாற்றி சுக ஜீவிகளாக காலங்கழிக்கவும் செய்துவைத்த தந்திரங்களே ஆகும். இவையனைத்தும் காட்டு மிராண்டிகாலத்துக் கருத்தோவியங்களாகும். இந்தக் குருட்டுப் போக்கு இந்த நாட்டில் மட்டுமன்றி எந்த நாட்டிலும் ஓர் காலத்தில் மக்களிடம் இருந்துதான் வந்திருக்கிறது. இந்த இழிநிலை, இருண்ட மதி மற்ற நாடுகளில் எல்லாம் மாறி அறிவுக்குகந்த புதிய போக்கு ஏற்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
(அதிசயமல்ல, அண்டப்புளுகு - 10.10.1948)

சங்கராச்சாரிகள் பீடம் அக்காலத்தில் காலியாக இல்லை. அந்தக் காலத்தில் ஓர் யாகம் செய்து வெள்ளையனை தடுத்திருக்கக் கூடாதோ, வெள்ளையன் வேதமறியாநீகன்! என்றனரே, ஒரு வேள்வி செய்து அவனே விரட்டியிருக்கலாகாதோ, பிராமணர்கள் பூதேவதாயிற்றே. ஏன் வெள்ளையன் வந்ததும் கடையைத் கட்டிக்கொள்ளத் தொடங்கினர்.
எங்கே அந்த யாக யோக பயம்? திராவிடப் பெருங்குடி மக்களை ஏய்க்கப் போட்ட தவவேடம் என்னவாயிற்று? மக்களை மிரட்ட எழுதி வைத்துக்கொண்ட ஏடுகளில் காணப்படும் பாசுபதாந்திரம், வர்ணாஸ்திரம், வாயுவாஸ்திரம், அக்னியாஸ்திரம், போகனாஸ்திரம், இந்திராஸ்திரம், வாமபாணம், திரிஆலும், தண்டம், கதை, மாகாளிவாள் இவைகள் எங்கே போயின? இத்தனையும் பொய் என்பதை மேனாட்டு படை எடுப்பும் அத்துடன் கலந்து வந்த புத்துலக வாடையும் காட்டி, மக்களை விழிப்படையச் செய்தது.
பிறகே மக்கள் கண்டனர், யாகம் யோகம் என்ற பேச்சு பார்ப்பனர் போக போக்கியத்துடன் வாழவேண்டும் என்பதற்காக செய்யப்படும் சூது என்பதை பிறகே அறிந்தனர். யாகம் தெரியாத பிரிட்டன், பிரான்சு அமெரிக்கா முதலிய வல்லரசுகள் வாழ்வதை. ராபர்ட் கிளைவ் துப்பாக்கியுடன் வந்து நாட்டைப் பிடித்தானே தவிர, தாமரைக் குளத்தருகே தனி இடம் அமைத்து தவம் செய்ததால் அல்ல என்பது தெரிந்தது. கண்டனர் மக்கள்.
சரஸ்வதி பூசை உள்ளநாட்டிலே 100, 90 பேர் தற்குறிகளாகவும், லட்சுமி பூசை உள்ள நாட்டிலே தரித்திரம் தலைவிரி கோலமாக ஆடுவதையும், சக்திபூசை செய்யும் நாட்டிலே சக்கைகள் எனும் மனிதப் பிண்டங்கள் வாழ்வதையும், இவைகள் இல்லாத, தெரியாத, நாடுகளிளே இன்பம் பெருகி இருப்பதையும், கண்டனர். எனவேதான் பார்ப்பனீயத்தை எதிர்த்தனர்.
(ஏன் எதிர்ப்பு - கட்டுரை, 20.07.1947)

பாடுபடுவதற்கு பரமன் கட்டளை வேண்டுமா? வேண்டாம். பலரும் பாடுபட்டுத்தான் ஆகவேண்டும் பாங்கான வாழ்க்கை நடத்த. ஆனால் இந்த வேதன் விதி, ஒரு பெரிய சதி. நாதன் கட்டளை நாணயமற்றச் செய்கை. ஏன் ஓர் குலம் (பார்பனர்) மட்டும் பாடுபட வேதன் விதியில்லை. என் அவர்களையும் உழைப்பாளிகளாக்க உரமில்லை அந்த உத்தமனுக்கு. ஒருவனை பிறப்பால் உயர்ந்தவனாகவும் உல்லாசியாகவும் குருவாகவும் படைத்து, மற்றவனைத் தாழ்ந்தவனாவும், உழைப்பவனாகவும் அடிமையாகவும் அமைக்கிறார் அந்த ஆண்டவன். எல்லோரையும் தன் குழந்தைகள் எனக் கருதும் ஆண்டவன் செயலாக அமையுமாகிறது? எப்படி ஒரே ஆண்டவன் ஒருவனை வேதமோதுபவனாகவும், மற்றவனை அவன் திருவடி தொழுபவனாகவும் படைப்பார்? அவருக்கு அறிவில்லையா? அன்பில்லையா? அறம் அறியாரா அவர்? அத்தகைய ஆண்டவன் உண்மையில் இருந்தால் அதைவிட நயவஞ்சகப் பொருள் இந்த அகில உலகிலும் இல்லை, இருக்க முடியாது!
(திராவிடர் நிலை - 24.10.1948)

ஆண்டவனுக்குப் பேசும் சக்தியிருந்து அவன் உங்களிடத்தில் பேசுவதானால், அது ஒன்றே ஒன்றாகத்தான் இருக்கமுடியும். ஆண்டவன் நவஞ்சகமற்றவரானால், அறிவுடைய, அன்புடைய அறம் மிகுந்த தந்தையானால் அவர் கேட்பார், உங்களை, அப்பா நான் இந்த அகில உலகை அண்டசராசரங்களைப் படைத்தேன் அதிலே ஜீவராசிகளைப் படைத்தேன், நெல்லைப் படைத்தேன், நீரைப் படைத்தேன், கடலைப் படைத்தேன், அதிலே முத்தைப் படைத்தேன், முத்தெடுக்கும் முறையைப் படைத்தேன், திமிங்கிலத்தைப் படைத்தேன், அதை விலக்க எதையும் எண்ணிச் செய்ய, பகுத்துச் செய்ய, பகுத்தறிவைப் படைத்தேன் உனக்கு. அதன் மூலம் பாராள்வாய், பலரும் வாழவகை செய்வாய் என நினைத்தேன். அதை விட்டு நீ எனக்கு அனா வீசை வெண்பொங்கல் தந்து வரம் வேண்டுகிறாயே! வகையற்ற மூடனே! அறிவைக் கொண்டு ஆவன செய் என்றுதான் கேட்பார். ஆனால் ஆண்டவன் அவ்விதம் கேட்பதில்லை, உங்களை ஏன்?

அவர் எப்போதும் பேசினதில்லை
எப்பொழுதும் வெளிப்படையாக, விவேகத்துடன் பேசிப் பழக்கமில்லை, அவருக்கு. அவர் பேசியிருப்பதெல்லாம், தம் திருத்தூதர் வாயிலாக, சித்தர்கள், ஆச்சாரியார்கள் அந்தணர்கள் வாயிலாகத்தான், ஒன்றுக்கொன்று முறண்பட்ட குணங்கள், கூறக்கூசிடும் குடிகாரச் செயல்கள், கடவுளை குணமற்ற கயவனாக கபோதியாகக் காட்டும் கதைகள், இவைதானா மக்களை இன்பபுரிக்கு இழுத்துச் செல்லும் மார்க்கம்?
(திராவிடர் நிலை - 24.10.1948)

பகுதி: 1 2 3 4 5 6

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai