அண்ணா களஞ்சியம்

இனம்
| மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்
மதம்
பகுதி:
6

பகுதி: 1 2 3 4 5 6

பணம் கோயில்களிலே நகையாய், வாகனமாய், நிலமாய் முடங்கிக் கிடக்கிறது. இந்த முடக்குவாதம் தீர்ந்தால் முடிவுறும் வறுமை, கொடுமை, இல்லாமை என்பவனவெல்லம். இது எதை உணர்த்துகிறது? இந்த நாடு ஏழை நாடு என்பதையா? எப்படி ஏழை என்று கூறமுடியும் இந்த நாட்டை? தில்லைக் கூத்தரின் தங்க ஓடு வேய்ந்த சன்னிதானத்தையும், வரதனின் வைர நாமத்தையும், காஞ்சி காமாட்சியின் வைடூரிய கற்களையும் அரங்கநாதனின் அற்புத இரத்தினங்களையும், வேங்கிடத்தானின் பத்து இலட்சம் பெறும் வைர முடியையும், காணும் போதும் கேட்கும் போதும், அதிலும் இந்த திரவியம் எவ்வித நலனுமின்றி மூலையில் முடங்கிக் கிடக்கிறது. ஒரு சில சாமி (ஆசாமி)களின் உல்லாச வாழ்வைக் கருதி என்பதை அறிந்த பிறகு இந்த நாட்டை ஏழை நாடென்று ஏதாவது கூற முடியுமா? பொருளில்லையா இந்த நாட்டில்? இருக்கிறது. யாரிடம் பொருள் இருக்கிறது? மதத்தின் பெயரால் போயிலாகவும், வாகனமாகவும் ஆண்டவன் சொத்தாகவும் அடைந்து கிடக்கிறது. அந்தப் பொருள் பிறவி முதலாளிகளை(பார்ப்பனனை) கொழுக்க வைக்கப் பயன்படுகிறது. பரமன் பேரால் உள்ள பணம் அதிர்வெடிக்கும், அலங்கார ஆர்பாட்டப் பூசைக்கும், தேருக்கும், திருவிழாவிற்கும் உபயோகமாகிறது. அனாவசியமாக, அர்த்தமற்று. இது நீதியா? முறையா? என்று கண்டிக்கிறோம். இதில் தவறென்ன? நாட்டிலே பொருள் இவ்விதம் ஒரு மூலையில் குவிந்து முடக்குவாதமாய் முடங்கிக்கிடக்க, மக்கள் பசியென்றும், பிணியென்றும் பதறி அழுகின்றார்கள். பகவானைப் பிரார்த்திக்கின்றார்கள். பசிப்பிணி நீக்கிட, படையல் போட்டு என்ன பரிதாபநிலை?
(திராவிடநாடு - 24.10.1948)

சமதர்மம்
பணம் படிப்பு இவைகளின் மூலம் ஜாதி பேதத்தின் கொடுமையை ஓரளவுக்கு குறைக்க முடியுமேயொழிய அடியோடு அழிக்க முடியவுல்லை. அரசியலில் சமத்துவம் ஏற்பட்டுவிட்டால் மட்டும் சமூகத்தில் உள்ள பேதங்கள் போய்விடுவதில்லை. அந்த பேதம் இருக்கும் வரையில் சமதர்மம் என்ற இலட்சியம் கனவில் காணும் காட்சியாகவே இருக்க முடியும். மக்களுக்குள் ஏற்படும் பேதம் பல காரணங்களால் அமைவதால், பேதத்தின் உருவம் பல வகையாகக் காட்சி அளிக்கிறது. ஜாதியால், மதத்தால், குலத்தால், அரசியல் நிலையால் பொருளாதாரத்தால் பேதம் ஏற்படுகிறது. இவையனைத்தையும் அகற்றியாக வேண்டும். ஆனால் இந்த நாட்டில் ஜாதிதான் மக்களுக்குள் பேதத்தை ஏற்படுத்தும் முதல் சாதனம். மக்களின் இரத்தத்தில் கலக்கப்பட்டிருக்கும் கடும் விஷம். மனதிலே இடக்கு நோயைப் புகுத்திவிட்ட முறை. எனவேதான் பேதமற்ற சமுதாயத்தை சமத்துவத்தை, சமதர்மத்தை நாம் காண வேண்டுமேயானால் முதலில் ஜாதி தொலைந்தாக வேண்டும் என்று நான் சார்ந்துள்ள அறிவியக்கம் பலகாலமாகக் கூறிவருகிறது.
(சமதர்மம் - பொழிவு)

பார்ப்பணன் பொருளை கேட்டதே பக்குவமறிந்துதான். தந்திரமாய் தட்டிப் பறிக்கிறான். தனத்தை மிரட்டிப் பறித்தால் ஏன் என்று அதட்டிக் கேட்பார்கள், ஆனால் அவன் மக்களிடம் பெறுவது அனைத்தும் மிரட்டியல்ல, தந்திரமாகக் கேட்கிறான். சமயமறிந்து போகிற கதிக்குப் புண்யமென்று புளுகிப் பெறுகிறான். தானம் என்று தகிடுதத்தம் செய்கிறான். ஆச்சாரம் அனுட்டானம், சிரார்த்தம், மீந்தம், கலியாணம், கருமாதி, பிறப்பு, இறப்பு எதிலும், எங்கும் தோன்றி ஆசானாகஆண்டவன் தூதுவனாக, ஆசிர்வாதம் அளிப்பவனாக, சந்தோஷம் தருபவனவாக துக்கம் நீக்குபவனாக நடிக்கிறான், நடக்கிறான். பாவனைச் செய்கிறான், பார்ப்பனன். அவனில்லவிட்டால் அனைத்தும் அபசகுனம் என்று அஞ்சும்படி வஞ்சகம் செய்து அன்புப் பரிசு அடைகிறான். கோயில் குருக்களாயும், குடும்பத்துக்கே குருவாயும், குலுக்கி மலுக்கி, மயக்குகிறான். மக்களைப் பஞ்சாங்கம் படிப்பவனாய், பாவம் தீர மந்திரம் ஜெபிப்பவனாய் பசுப்புகிறான். வேதமோதுபவனாய், விவகாரம் தெரிந்தவனாய் வீம்பு செய்கிறான். வியாசர் வாக்கு, வசிஷ்டர் வாக்கு என்று வாய்ப்பறை அடிக்கின்றான். மக்கள் மனத்தை மடமைக்குள்ளனாக்குகின்றான். மதியை விரட்டி, விதியைப் புகுத்தி தன் தொந்தியை நிரப்புகின்றான். அவர் அது செய்து அந்தப் புண்ணியம் பெற்றார். இவர் இது செய்து இன்பமடைந்தார் என்று இச்சகம் பேசி இழுக்கிறான் பொருளை. நாம் தருவது நமக்கு பளுவாகத் தோன்றாதவாறு நயமாகக் கொள்ளை கொள்ளுகிறான். சிந்தனையைச் சீர்குலைத்து சீர்கள் பெருகின்றான். குலத்தைக் காட்டி குதர்க்கங்கள் செய்து குருவாகக் குந்தித் திண்கிறான். பிரம்மன் படைத்த விதம் இது, மனு செய்த மார்க்கமிது, மாந்தாதா வகுத்த வழி இது என்று வழக்காடுகிறான். இந்த வழக்கம், வாடிக்கை வழி வழி முறை ஆகியவையெல்லாம் இந்த வம்பர்கள்(பார்ப்பனர்) தாம் வாழ்வதற்காக வகுத்துக்கொண்ட வழி என்று மக்கள் மனதில் உறுத்தினால் அன்றோ அழியும் இந்த ஆரியமாயை; விலகும் இந்த வீணர் கூட்டம், அழியும் இந்த சுரண்டல் கும்பல். அந்த மனப்பாங்கு, மனோதிடம் திராவிடரிடையே ஏற்படத்தான் வேண்டும். எல்லோரும் இன்ப வாழ்வு நடத்த, ஏய்ப்பர் ஒழிய, உழைப்பவர் உயர மதி பெருக, மடமை மறைய.
(திராவிடர் நிலை - 24.10.1948)

தருமம் என்பது தர்பைக்காரர்களுக்கு தட்சிணை தருவது, சமாராதனை செய்வது என்பதல்ல பொருள். மேல் உலகத்தில் இன்பம் பெற இங்கு தரப்படும் லஞ்சமல்ல. தருமம் வியாபாரமல்ல என்று நமது மக்களுக்கு எடுத்துக் கூறி, தருமம் என்றால் அறம் என்பதை விளக்க வேண்டுமே!
(கல்விக் கழகங்கள் நாடெங்கும் வேண்டும் - பொழிவு - 18.07.1948)

மதம்
சைவத்திற்குக் கணணைத் தந்தார்கள். பெண்ணைத் தந்தார்கள். கறியாக்கிப் பிள்ளையைத் தந்தார்கள், பக்தர்கள், மெத்தச்சரி. சைவம் என்ன தந்தது?
சாந்தியை அளித்து சமரசத்தைத் தந்ததா? வாழ்க்கையில் நிம்மதியைத் தந்ததா?
இருள் துடைத்ததா?
மடமையை அழித்து, தன்னலம் தகர்த்ததா?
பொது நலனை பீடத்திலமர்த்தி என்ன தந்தது?
இல்லையெனாது எதையும் தந்த பக்தர்களிடம் பலப்பல பெற்ற விறகு, ஏதுமறியாத பாமரரும் ஏதேதோ தந்ததை பெற்றபிறகு, புலவர்கள் பாசுரம், பூமான்களின் பொன்னாடை, இசைவாணரின் இதயகீதம் என்று எவ்வளவோ பெற்றுகொண்ட எம்மான், சைவத்தைக் கொண்டவருக்கு தந்தது என்ன? தரித்திரத்தைத் தந்தது யார்? நோய் தந்தது எவர்? சூதும் பொய்யும், வஞ்சனையும், வாட்டமும் கூத்தாடவிட்டது யார்?
(மதுரைக்கு டிக்கட் இல்லை - சிறுகதை - 1948)

காஞ்சி கோயில்களிலே முப்பது இலட்சம் பெறுமான பொன், வைரம், நவரத்தினம் இவைகளாலான நகைகள் இருக்கின்றன. இதைப் போன்று நவரத்தினங்களாலான சிலுவையைக் காட்டுங்கள்! பொன்னாலான ஏசுநாதரை நீங்கள் எங்கும் பார்க்க முடியாது. வைரத்தால் தீட்டப்பட்ட சிலுவையையும் நீங்கள் எங்கும் பார்க்க முடியாது. கிருத்துவர்கள் கையில் வைரம் கிடைத்தால் அது லயோலா கல்லூரியாக இருக்கும். மிஷின் ஆஸ்பத்திரியாக இருக்கும்.
(பொழிவு - சொல்லும் பயனும் - 04.08.1951)

கடவுள்
பகவத் சிங் பிணமாகாமல் இருக்க பகவான் அருளவில்லை! திருப்பூர் குமரனைத் தடிகொண்டு தாக்கியபோது பாண்டியன் தந்த பிரம்படி, அனைத்து உயிர் மீதும் பட்டது போன்ற அற்புதம் நிகழ்த்தி, அவரை ஆண்டவன் காப்பற்றவில்லை! வ.உ.சிதம்பரனார் செக்கிழுத்தபோது நந்தன் தூங்கும்போது சிவகரணங்கள் உழவு செய்தது போல, சிதம்பரனார் செக்கு தானாக சுற்றவில்லை. அவரேதான் இழுத்தார்.
(திருமுகம் - 14.01.1955)


கொடுமையும், கோயில்பூசையும்

அக்கிரமம் நெளிகிறது, அநீதி தலைவிரித்தாடுகிறது, கொடுமை கொக்கரிக்கிறது. கொட்டு முழக்குடன் திருவிழாக்கள் நடக்கின்றன. சித்தம் உருக பாடிடுவோருக்குப் பஞ்சமில்லை! செய்த வினையெல்லம் பொறுத்திடுவோம். சேவற்கொடியோனே என்று பஜனை பாடிடுவோருக்கும் குறைவில்லை.
களவும் நடந்தபடி இருக்கிறது, காவல் நிலையமும் புதிது புதிதாக அமைந்தபடி இருக்கிறது என்பது போலவேதான், கொடுமையும் இருக்கிறது, கோயில்களில் பூசைகளும் குறைவின்றி நடக்கின்றன! (கிழக்குவெளுத்திடும் வேளை - கடிதம் - 21.11.1965)

அநீதியும் அக்ரமும் நெளியும்போது கடவுள் இருக்கிறார், கவனித்துக் கொள்வார் என்று கருதியிருந்து வந்த காலமும், கடவுளே இந்த விதமானஅக்ரமம் நடக்கிறதே, இதனைச் செய்திடுவோனை அழித்திடலாகாதா என்ற முடியிட்ட காலமும், கடவுள் இருக்கிறாரா? என்ற வெகுண்டுரைத்த காலமும், மனிதன் சூது சூழ்ச்சிகளுக்கு கடவுள் ஏன் பொறுப்பேற்க வேண்டும்! மனிதனை மனிதன் கெடுக்கும்போது, கெடுமதியாளனை வீழ்த்திட வழி தேடிட வேண்டுமேயன்றி, வந்து அவனை வதைத்திடுக! என்று கடவுளை வழிபாடு செய்து கொண்டிருப்பதா! என்று கேட்டு கொதித்தெழுந்து, கேடுகளைந்திட முனைந்திடும் காலமும், இன்னோரன்ன வகையான காலம், பல வடிவமெடுத்தன. இவைகளுக்கு கவிஞர்கள், தமது கருத்துச் செறிவினால் வடிவம் கொடுத்து வந்தனர். சீர்திருத்தவாதிகள் செயல்முநை வகுத்தனர். கேடு களைந்திட ஆற்றல் மிக்க அணிவகுப்புகள் ஆங்காங்கு அமைந்தன. அந்த அணிவகுப்புகளுக்கு ஆண்டவன் அருள் உண்டு என்று, புதுமுறை காண விழைந்திடுவோர் கூறி வரவேற்றனர். பழைய முறைகள் சர்வேஸ்வரனின் சம்மதம் பெற்றவை என்று உபதேதித்து வந்த மார்க்க அமைப்புகளில் இடம் பெற்ற புதுமுறைக்கு சர்வேசன் சம்மதம் தந்துள்ளான் என்று கூறிட முன் வந்தனர்.
(சமதர்மமும் சர்வேஸ்வரனும் - கட்டுரை - 18.07.1965)

பகுதி: 1 2 3 4 5 6

tsU«. . .

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai