மதுரை சோமுவின் வாழ்க்கை வரலாறு

இசைப் பேரறிஞர் மதுரை S.சோமு
(முனைவர் இ.அங்கயற்கண்ணி, பேராசிரியர், இசைத்துறை, தமிழ்ப் பல்கலைக் கழகம்)

தமிழ் மூதறிஞர் வாழ்வும் வாக்கும் என்ற தொடர் சொற்பொழிவின் 342 ஆவது பொழிவில் இசைப் பேரறிஞர் டாக்டர் மதுரை சோமுவின் வாழ்வும் சாதனைகளும் பற்றி வேசுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ் முதறிஞர் என்ற நிலையில் மதுரை சோமு எப்படி இடம் பெறலாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் தமிழிசை எனப்பெறும் கர்நாடக இசையால் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்தவர். மருதமலை மாமணியே முருகையா' என்ற பாடலின் மூலம் உலகம் கொண்டாடும் இசைக் கலைஞராக மாறியவர். அவர் படித்தது 9 ஆம் வகுப்பு மட்டுமே. ஆனால் இசைத் தறையில் 'பத்மஸ்ரீ', 'கலைமாமணி','இசைப் பேரறிஞர்' ஆகிய பட்டங்களை ஒருங்கே பெற்ற தமிழ் மக்கள் கொண்டாடும் தமிழ் முதறிஞராக, தமிழிசைப் படைப்பாளியாக இன்றைக்கும் அனைவராலும் குறிப்பிட்டு பேசக் கூடிய உலக மகா இசைக் கலைஞராக நம்மிடையே திகழ்கிறார்.

பாரதி சங்கத்தினர் இந்த தொடர் சொற்பொழிவில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டவுடன் நானே விரும்பி கொடுத்த தலைப்பு இசைப் பேரறிஞர் மதுரை சோமு அவர்கள். இதற்குக் காரணம் நான் அவரை நேரில் பார்த்திருக்கிறேன். பழகியிருக்கிறேன். அவருடைய இசை மேதாவிலாசமும், தமிழ்ப் பற்றும், ஆன்மீகப் பற்றும் எளிமையான பண்பும் என்னைப் பெரிதும் கவர்ந்தது. இன்றைக்கு உள்ள இளைய தலைமுறையினர் கண்டிப்பாக அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவரைப்பற்றி உங்கள் முன் வந்திருக்கிறேன்.

மதுரை சோமு அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி அதிகம் தெரியவில்லை. என்னுடைய நெறி ஆளுகையில் முனைவர் பட்ட ஆய்வுக்கு வந்த ஒரு மாணவருக்கு இந்த தலைப்பில் ஆய்வு செய்ய கூறினேன். அவர் ஒரு கண் பார்வையற்ற மாணவர். இருப்பினும் மதுரை சோமுவிடத்தில் நல்ல ஈடுபாடு கொண்டவர். அவர் பல இடங்களில் அவருடைய குடும்ப உறுப்பினர்கள், அவருடன் வாசித்த பக்க இசைக் கலைஞர்கள், சீடர்கள், அவருடைய இரசிகர்கள், நண்பர்கள் என்றவாறு பலரிடமும் நேர்காணல் கண்டும், அவருடைய ஒலி நாடாக்களில்ர, அவர்பாடியிள்ள பாடல்களைப் பகுப்பாற்வு செய்தும் தம் ஆய்வேட்டை நிறைவு செய்து அளித்துவிட்டார். மதுரை சோமு அவர்களைப் பற்றிய குறிப்பு சேகரிக்கும்போது, சீதை பதிப்பகம் 2010 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள மகா கலைஞன் மதுரை சோமு என்ற நூலை பார்க்கக் கூடிய வாய்ப்பும் கிடைத்தது.

இக்குறிப்புகளைக் கொண்டு மதுரை சோமுவின் வாழ்க்கையைப் பின்வருமாறு பிரித்து கொள்ளலாம்.

1. பிறப்பு
2. கல்விப் பருவம்
3. குடும்ப வாழ்க்கை
4. இசைப் பயிற்சி
5. இசையில் சாதனைகள்
6. தனித்துவ மிக்க பண்புகள்
7. இசைப் படைப்பாளி
8. இசை நிறுவன தொடர்புகள்
9. சீடர்கள்
10. இறுதி வாழ்க்கை

பிறப்பு
தஞ்சை மாவட்டத்தில் சுவாமி மலையில் இசை வேளாளர் மரபில் 1919 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் நாளில் மதுரை சோமு என்று அழைக்கப்படுகிற மதுரை எஸ்.சோமசுந்தரம் அவர்கள் பிறந்தார். இவரின் பெற்றோர் சச்சிதானந்தம் பிற்றை - கமலாம்பாள். இவர்களின் கடைசி பிள்ளையாக பிறந்தார்.
மீனாட்சி சுந்தரம், முத்தையா ஆகியோர் இவரது மூத்த சகோதரர்கள். தங்கம்மாள், ராஜம்மாள், காளியம்மாள் ஆகிய மூன்று சகோதரிகளையும் உடையவர்.

மதுரை சோமுவின் தந்தை அரசு அலுவல் காரணமாக மதுரைக்குக் குடி பெயர்ந்தனர். மதுரை சோமுவின் தாய் மாமா டெபுடி கலெக்டர் நாகசுந்தரம் பிள்ளை என்பர். இவர் மிகுந்த செல்வாக்குடையவராகத் திகழ்ந்தார்.

இளமைப் பருவம்:
சகோதரர்கள் குற்தி பயில்வான்களாக இருந்தமையால் சோமுவும் தொடக்கக் காலத்தில் குஸ்தி பயின்றார். நல்ல உடற்பயிற்சி செய்தமையால் சரீரம் வலுப்பெற்றது. ஆனால் குரல் வளம் கெட்டுவிட்டது. இளம் பருவத்திலேயே இசைக் கலையின் மீது மதுரை சோமுவுக்குப் பற்றுதல் ஏற்பட்டது. தானாகவே காதில் கேட்ட இசைப் பாடல்களை திரும்பிப் பாடுவதற்குரிய முயற்சி மேற்கொண்டார்.ஆனால் குரல் வளம் இல்லாமையால் சோர்வுற்றார். இந்நிலையில் இசையில் யாரேனும் ஒருவரை குருவாகக் கொண்டால் இசையில் சாதிக்க முடியும் என்ற எண்ணம் இவருக்கு ஏற்பட்டது.

அப்போது மதுரையில் சேத்தூர் ஜமீனின் ஆஸ்தான வித்வானாக விளங்கியவர் வயலில் வித்வான் சுந்தரேச பட்டர் என்பவர். இவர் மருங்காபுரி கோபால கிருஷ்ணய்யருடைய சீடர். எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு ஆசிரியர் காஞ்சீபுரம் கோபால கிருஷ்ணய்யருடைய சீடர். காஞ்சீபுரம் நாயனா பிள்ளைக்குப் பலகாலம் சங்கிதத்தில் நண்பராக விளங்கியவர். இவரிடத்தில் மதுரை சோமு அவர்கள் தனது ஆரம்ப இசைக் கல்வியைத் தொடங்கினார். ஏழு ஆண்டுகள் இடைவிடாத பயிற்சி மேற்கொண்டார்.

மதுரை பொன்னுச்சாமி பிள்ளையின் மகன்களான நடேச பிள்ளை, சண்முகம் பிள்ளை ஆகியோர் மிகச் சிறந்த நாகஸ்வர கலைஞர்களாக இருந்தனர். அவர்கள் வீட்டின் எதிரிலேயே மதுரை சோமு வசிக்க நேர்ந்தது. எனவே காலையில் சுந்தரேச பட்டரிடம் பயிற்சியும், மாலை நேரங்களில் நாகஸ்வர வித்வான்களின் வாசிப்பையும் கேட்டு அதைத் திருப்பிப் பாடும் பழக்கத்தையும் பயிற்சியையும் மேற்கொள்ளும் வாய்ப்பு மதுரை சோமுவுக்குக் கிட்டியது. இதன்முலம் கட்டை குரலாக இருந்த மதுரை சோமுவின் குதல் நாகசுவரம் ஒலியைப் போன்று பெருத்த ஒலியுடைய குரலாக மாறியது. மேலும் நாகசுவர பயிற்சியையும் மேற்கொண்டதால், மூச்சு அடக்கி, நீண்ட கார்வைகள் கொடுத்துப் பாடும் பயிற்சியும், துல்லியமான குரல் வளத்தையும பெற்று இசைக்குரிய குரலாக மாற்றிக் கொண்டார்.

மதுரை சோமுவின் தாய்மாமா பிரிட்டிஷ் அரசாங்கத்தில் சித்தூர் மாவட்டத்தில் துணை ஆட்சியராகப் பதவி ஏற்றதால், தனது சகோதரி மகனின் இசை வளர்ச்சியில் ஆர்வம் கொண்டு தாம் வாழ்ந்து வந்த சித்தூரில் அப்போது பிரபலமாக இருந்த சங்கீத வித்வான் சித்தூர் சுப்பிரமணிய பிள்ளையை அணுகி மதுரை சோமுவின் இசைக் கல்விக்கு ஏற்பாடு செய்தார். இஃது மதுரை சோமுவின் வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்தது. சித்தூர் சுப்பிரமணிய பிள்ளையிடம் 14 ஆண்டுகள் குருகுல வாசம் செய்து குருவருள் பெற்றார்.

திருமணம்:
மதுரை சோமுவின் பெற்றோர் இவருக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணினர். அப்போது மிருதங்க மேதை இராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி அவர்கள் மதுரை சோமுவின் இசையில் அபிமானம் கொண்டு அவருடைய குடும்ப நண்பராக விளங்கி தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருகாவூரில் சிறந்த இசைக் குடும்பத்தைச் சேர்ந்த சரோஜா என்ற பெண்மணியை மணமுடித்தும் வைத்தார்.

மதுரை சோமுவின் முதல் கச்சேரி:
மதுரை காளியம்மன் கோவில் செம்பியன் கிணற்றுச் சந்துவில் முதல் கச்சேரி. முறையான கற்சேரி என்று பாடியது திருச்செந்தூரில்தான். அது முதல் அவர் இறப்பதற்கு சில நாட்கள் முன்வரை கச்சேரி நடத்தினார். திருக்கருகாவூர்ல் நடந்த கச்சேரிதான் அவரின் இறுதி கச்சேரியாக அமைந்தது.

கச்சேரியின் தனித்தன்மைகள்:
கால நேரம் பாராமல் கச்சேரி செய்பவர். பெரும்பாலும் இரவு 8 1/2 மணிக்குத் தொடங்கி பின் இரவு 2 1/2 மணிக்கு முடிப்பார். ஆறுமணிநேரம் தொடர்ந்து பாடக்கூய ஆற்றல் பெற்ற அரும் அலைஞர் மதுரை சோமு.

ஒரே நாளில் மூன்று கச்சேரிகள் கூட செய்துள்ளவர்.

பணம் குறைவாக கொடுத்தால் குறைவான நேரம் படுவது என்பதெல்லாம் மதுரை சோமுவிடத்தில் இல்லை. இக்காரணம் பற்றியே திருமுருக கிருபானந்த வாரியார், மதுரை சோமுவைப் புகழ்ந்து "சோமு மணி பார்த்து பாடமாட்டார். காரணம் அவர் moneyக்காக (காசுக்காக) பாடுவதில்லை" என்று கூறியுள்ளார். மேலும் மதுரை சோமு செய்வது வெறும் பாட்டுக் கச்சேரி அல்ல. என் அப்பன் முருகனை நினைத்து செய்யும் நாதோ உபாசனை (பாட்டால் இறைவனை திரிகரண சுத்தியோடு வழிபடுவது) என்றார்.

இவருடைய கச்சேரியைக் கேட்டு டைகர் வரதாச்சாரியார், ஜி.என்.பாலசுப்பிரமணியம் கோன்ற அக்கால ஜாம்பவான்கள் பாராட்டிப் புகழ்ந்துள்ளனர்.

சோமு அவர்கள் தன் குருவினிடத்தில் வைத்திருந்த பக்தி அவருக்கிருந்த கடவுள் பக்தியை விட மேலானது. தம் வாழ்நாள் முழுவதும் சோமி நடத்திய இசைக் கச்சேரிகளில் சித்தூராரை எண்ணிப் பாடும் குரு தோத்திரம் இருக்கும்.

தம் குருநாதர் சித்தூராரை நினைத்து காண்களில் நீர் ததும்ப, கைகள் நடுங்க, வாய் துடிக்க, "எந்தன் குருவே சித்தூரார்" என்றும், "இசை லய ஞானமெல்லாம் இந்த சோமனுக்க சொல்லிக் கொடுத்த அந்த சுப்பிரமணியன்" என்றும் கச்சேரி இடையிடையே நினைந்து போற்றுவார்.

தம் குருநாதர் பற்றி ஆபேரி இராகம், ஆதி தாளத்தில் ஒரு பாடலும் இயற்றி தம் கச்சேரிகளில் பாடியுள்ளார். அப்பாடல் வருமாறு.
பல்லவி:
ஏழுமலை வாசனுக்கும் எங்கள் மதுரை செக்கனுக்கும்
எப்பவுமே ஒரு சொந்தமுண்டு

அனுபல்லவி:
கூடிவரும் அன்பருக்கு சொக்க பெருமான்
சோலைமலை அழகனுக்கு மைத்துனர் முறையாம்

சரணம்:
ப்ரணவ பொருளை சோமசுந்தரருக்கு
சொல்லி தந்த சீடன் சுப்பிரமணியம்
ஸ்ருதி ஞான ஸ்வரலய ஞானங்களெல்லாம்
சொல்லித் தந்த குருவாம் சுப்பிரமணியம்
இந்த சோமனுக்கு சொல்லித் தந்த குருவாம்
சித்தூர் சுப்பிரமணியம்.

மதுரை சோமு சைவ, வைணவ சமய காழ்ப்புணர்வுகளுக்கெல்லாம் அப்ப்ற்பட்டவராக திகழ்ந்துள்ளார். என்பதை பின்பரும் கச்சேரி சம்பவத்திலிருந்து உணரலாம்.

ஒரு சமயம் திருவரங்கத்தில் மதுரை சோமுவின் கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. ஏற்பாடு செய்தவர் இசை ஆர்வலர் மதுரை சோமுவின் தீவிர ரசிகர் அமைச்சர் சௌந்திரசாஜன். விவரமறிந்த ஜீயர், மற்றம் பட்டாச்சாரியார்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தனர். அமைச்சர் அவர்களை சமாதானப்படுத்தி மதுரை சோமுவிடம் தம்முடைய இக்கட்டான நிலையை தெரிவித்தார். சோமு எதுவும் கூறாமல் தலையசைத்துக் கொண்டார். மேடைக்கு வந்தமர்ந்த சோமுவை பார்த்ததும் எல்லோருக்கும் அதிர்ச்சி. காரணம் சோமுவின் நெற்றியில் நாமம் போன்ற தோற்றத்தில் சந்தன கீற்று (கோபி சந்தனம்) நடுவே குங்கும பொட்டு. கச்சேரியை "சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம்" என்று தொடங்கினார். பின்னர் பிருந்தாவன சாரங்கா இராகத்தில் சிறி ஆலாபனையோடு, 'ரங்கபுர விஹார ஜெயகோதண்ட கிசுமாவதார - ரகுவீர'என்ற முத்துசுவாமி தீட்சிதரின் கீர்த்தனையை கணீரென்ற குரலில் திருவரங்கம் கோவிலின் ஒவ்வொரு தூணிலும் எதிரொலிக்கும் வண்ணம் பாடி பார்வையாளர்களை மெய்யுருக வைத்துவிட்டார். எல்லோரும் ரெங்கா ரொங்கா என்றம் பெருமாளே பெருமாளே என்றும் மெய்யுருகி நின்றனர். இசை நிகழ்ச்சி முடிந்து நள்ளிரவுக்குப் பின்னர் 90 வயதைத் தாண்டிய ஜீயர், சோமு பாடிய ஒலிநாடாவை கேட்டு அவன் "துர்க்காயுசா இருக்கட்டும்" என்று வாழ்த்தினாராம்.

எல்லா கச்சேரியையும் சிறப்பாகப் பாட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். கச்சேரி முடியும் நேரம் வந்து விட்டபோதிலும், யாராவது பைரவி பாடுங்கள், காம்போதி பாடுங்கள் என்றால் சலிக்காமல் பாடுவார். ரசிகர்களுக்காகத்தான் பாடுவார்.

நாகசுவர பாணியில் பாடுவது இவரின் தனிச்சிறப்பு. தோடி, பைரவி, நாட்டக்குறிஞ்சி ஆகிய இராகங்களை நாகசுவர பாணியில் பாடுவார்.

வெளிநாடுகள் சென்று கச்சேரி செய்வதில் இவருக்கு விருப்பம் இல்லை. ஒரு முறை சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். ஒரு முறை இலங்கை சென்றுள்ளார்.

தமிழகம், கேரளாவில் இவர்தம் கச்சேரிகள் நடக்காத கோவில்களே இல்லை எனலாம்.

புகைவண்டியில் சென்றால்ர முதல் வகுப்பில் செல்லமாட்டார். பயணச் சீட்டு முதல் வகுப்ல் வாங்கி இருந்தாலும் அதில் பயணம் செய்யமாட்டார். சாதாரண பயணிகளோடு சென்று அவர்கள் கேட்கும் பாடல்களை உடனே பாடிவிடுவார்.

தொண்டை சரியில்லையென்றால் சுடுதண்ணீரில் உப்பு போட்டு கொப்பளித்துவிட்டு கச்சேரிக்குப் போய்விடுவார். கச்சேரியில் முதல் அரைமணிநேரம் அமைதியாக பாடுவார். 1/2 மணி நேரத்திற்குப் பிறகுதான் கச்சேரி சூடு பிடிக்கும். அதன் பிறகு மழை கொட்டுவது போன்று பாடி ரசிகர்களை மகிழ்ச்சிப் படுத்துவார். கச்சேரி முடிந்ததும் அவர் குரலில் சத்தமே வராது. இதைப் பற்றி கவலை படமாட்டார். தோடி, சங்கராபரணம், பைரவி, கல்யாணி இராகங்களைத் தவிர, நீலமணி, ஆதி - என்னகவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை இன்னும் என்ன சோதனையா முருகா - அன்னையும் அறியவில்லை தந்தையோ நினைப்பதில்லை மாமியும் பார்ப்பதில்லை மாமனும் கேட்பதில்லை.

கதரம், சுமனேச ரஞ்சனி முதலான அபூர்வ இராகங்களிலும் பாடல்கள் இயற்றிப் பாடியுள்ளார்.

தியாகராசர் கிருதியானாலும் தெலுங்கு கிருதியானாலும் சுத்தமான உச்சரிப்பு.

இவரின் பிரவலமான பாடல்கள் பத்ராசலம் இரமதாசர் இயற்றிய ஓ ராம நீ நாமம் எந்தருசீரா - பூர்வி கல்யாணி

கனகதாசரின் கிருஷ்ணா நீ பேகனே பாரோ - அடானா
ராமநாமமு ஜன்மரட்சக மந்த்ரம் - தியாகராசர் கீர்த்தனை

விருத்தம் பாடுவதில் வல்லவர். இராகமாலிகை விருத்தம் பாடுவார்.

திரையிசையில் மதுரை சோமு:
சம்பூர்ண இராமாயணம் திரைப்படத்தில் இராவணன் கதா பாத்திரத்திற்கு மதுரை கோமு 4 பாடல்கள் பாடியதாக தெரிகிறது. ஆனால் இராவணன் பாத்திரத்தில் நடித்த டி.கே.பகவதிக்கு இவர் பாடிய வேகத்திற்கு வாயசைக்க இயலாத காரணத்தால் இவர் பாடியவை அப்படத்திலிருந்து எடுக்கப்பட்டுவிட்டது. சிதம்பரம் எஸ்.ஜெயராமன் பாடினார். அதிலிருந்து சினிமாவில் படுவதில்லை என்று முடிவெடுத்தார். அதன் பின்னர், 'தெய்வம்' படத்தில் கிருபானந்த வாரியார் கேட்டுக்கொண்டதால், 'மருதமலை மாமணியே முருகையா' என்ற பாடலை கச்சேரி அமைப்பில் பாடினார். இப்பாடல் உலகப் புகழ் பெற்று நிலைத்து நிற்கிறது. இன்றும் இப்பாடலை கேட்டால் அனைவரும் மெய்மறந்து நிற்கிறோம் என்பதுதான் உண்மை. தெய்வம் திரைப்படம் 1069 ல் வெளிவந்தது. கோவிலில் கச்சேரி செய்வது போல் இப்பாடல் உள்ளது. தர்பாரி கானடா இராகத்தில் ஆதி தாளத்தில் பாடப்பட்டுள்ளது.
விருத்தம்:
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
கொங்கு மணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை ...
ஆ ... ஆ ... ஆ ... மருதமலை ... மருதமலை . . . முருகா ...

பல்லவி:
மருதமலை மாமணியே முருகையா
(மருதமலை மாமணியே முருகையா . . . தேவாரின் குலம் காக்கும் வேலையா அய்யா ...
மருதமலை மாமணியே முருகையா)
தேவாரின் குலம் காக்கும் வேலையா அய்யா . . . மருதமலை மாமணியே முருகையா
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம் (2)
அய்யா உனது மங்கல மந்திரமே
(மருதமலை)

அனுபல்லவி்:
தைப்பூச நன்னாளில் ... தேருடன் திருநாளும் . . . பக்தர்கள் கொண்டாடும் கந்தையா ... ஆ ... (2)
(மருதமலை)
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் . . . ஆ ... ஆ ... ஆ ...

சரணம்:
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடி என் வினை தீர ... நான் வருவேன் (2)
அஞ்சுதல் நிலை மாறி ... ஆறுதல் உருவாக . . . எழு பிறப்பிலும் உன்னை எட்டுவேன் ... ஆ ... (2)
(மருதமலை)

மத்யமகால சாகித்யம்:
சக்தித் திருமகன் முத்துக் குமரனை மறவேன் ... நான் மறவேன்
பக்திக் கடலென பற்றிப் பெருகிட வருவேன் ... நான் வருவேன் (2)
பரமனின் திருமகனே ... அழகிய தமிழ் மகனே (2)
காண்பதெல்லாம் ... உனது முகம் ... அது ஆறுமுகம்
காலமெல்லாம் ... எனது மனம் உருகுது முருகா (2)
அதிபதியே குருபரனே ... அருள் நிதியே சரவணனே (2)
பனி அது மழை அது நதி அது கடல் அது . . . சகலமும் உனதொரு கருணையில் எழுவது (2)
வருவாய் ... குகனே ... வேலையா . . . ஆ ... ஆ ... ஆ ... ஆ ...
தேவர் வணங்கும் மருதமலை முருகா ...
(மருதமலை).
மேலும் சஷ்டி விரதம் என்ற திரைப்படத்தில் மதுரை சோமு அவர்கள் பாடியுள்ளார். நம்பிக்கை வைத்திருந்து நாளும் நினைத்திருந்து கும்பட்டால் காத்தருளம் குமரனுன்க குடமுழுக்கு
துணைவன் வழி துணைவன் வாழ்கைத் துணைவன்.

பட்டங்கள் - பதவிகள்:
சென்னை தமிழிசைச் சங்கம் இசைப்பேரறிஞர் பட்டமளித்து சிறப்பித்தது.

அண்ணாமலை பல்ரகலைக் கழகம் கௌரவ டாக்டர் பட்டமளித்தது

இந்திய அரசு பத்மஸ்ரீ விருதளித்தது

மதுரை ஸ்ரீ சத்குரு சங்கீத சமாஜம் 1980 ஆம் ஆண்டு மதுரகலா பிரவீனா என்ற பட்டத்தை வழங்கியது.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இரண்டு முறை இசைத்துறைத் தலைவராகவும் புலத் துலைவர் பதவியையும் கொடுத்து சிறப்பித்தது.

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் சத்குரு ஸ்ரீ சங்கீத வித்யாலயா இசைப் பாடத் திட்டங்களை நிர்ணயம் செய்யும் குழுவின் பாடத்திட்ட உறுப்பினராக இருந்தார்.

தமிழ்ப் பல்கலைக் கழக இசைத்துறையில் பாடத் திட்டக்குழு உறுப்பினராகவும் இருந்தார்.

1985 ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக் கழக இசைத் துறையில் என்னை விரிவுரையாளராக நியமனம் செய்யும் குழுவிலும் வல்லுநராக செயல்பட்டார் என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள் விரும்புகிறேன்.

இவரின் சீடர்கள்:
மதுரை சாமிநாதன், கழுகுமலை கந்தசாமி

இறுதி:
09.12.1989 ஆம் ஆண்டு இவ்வுலகை நீத்தார்.