அண்ணா களஞ்சியம்


இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்

அரசியல்
பகுதி: 2

பகுதி: 1 2 3 4

» சந்தைக் கடையில் இருக்கவேண்டியவர்களை சட்டசபைக்கு அனுப்புவது, கட்சியின் நன்மைக்கு என்று கருதுவது, தாய்மார்களுக்கு தெரிந்த அளவு, தெளிவும் அரசியல் கட்சிப் பணியாளர்களுக்கு, கட்சி பற்று காரணமாக தெரியாமல்போய்விடுவதுதான்.
(ஐயா சோறு, சோறு - நேரு பாரு, பாரு - 10.12.1960)

» தனிப்பட்ட ஆள் எவ்வளவுதான் அறிஞராக இருந்தாலும், வீரராக இருந்தாலும், கட்சி பெரிதே தவிர தனிப்பட்ட ஆளல்ல . . . பொது வாழ்வில் உள்ள வெளிச்சம் மயக்கமூட்டும் ஒளி, இதனால் மகிழவே கூடாது என்பதல்ல அது முடியாத காரியம் - இதனால் மயக்கமடைந்துவிடக்கூடாது. அந்த மயக்கம் வராமலிருக்கத்தான், புகழுரைக் கேட்கும்போது, தூற்றுபவரும் உள்ளனர் என்பதை மறவாமலிருக்கவேண்டும். . . . . புகழ்வர்களே, பிறகு இகழ்வார்கள் என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் மன மயக்கம் ஏற்படாது.
(லேபில் வேண்டாம் - 30.03.1947)

» எப்படி தனிப்பட்ட ஆளைவிட கட்சி பெரிது என்பது உண்மையோ அதேபோல அதைவிட அதிகமான முக்கியத்துவம் வாய்ந்த வேறோர் உண்மையும் உண்டு. அது என்னவெனில் கட்சியைவிட கொள்கையே முக்கியம்.
. . . . கட்சியை விட்டுவிட்டாகிலும் கொள்கையை கைப்பிடிக்கவேண்டும். கொள்கை முக்கியமே ஒழிய கட்சியல்ல என்று கூறும் நெஞ்சுரம் ஏற்படவேண்டும்.
(லேபில் வேண்டாம் - 30.03.1947)

» அரசியல் மூலம் நாம் வேண்டுவது சில்லரைப் பதவிகளையல்ல, சிங்கார வாழ்வையல்ல, நமது இனத்தின் விடுதலையை நாம் விரும்புகிறோம். அதற்கே அரசியலை நாம் துணை கொள்ளுகிறோம். அதன் பொருட்டே அரசியலில் பணியாற்றுகிறோம்.
(வீரர் வேண்ம் - 10.09.1944)

» தம்பி, நீ விரும்பினால் இந்த நாட்டை பொன்னாடு ஆக்கமுடியும், அதற்கு ஒன்று தேவை. பொன்னும் பொருளும் நமக்கு மட்டும் கிடைத்தால் போதும் என்று எண்ணும் தன்னலம் சுட்டெறிக்கப்படவேண்டும்.
(04.01.1957)

» பொதுப் பணி என்ற பெயரால் தான் பெற்ற செல்வாக்கை பணப் பெட்டியை நிரப்பும் வழியாக உபபோகிப்பவன், மக்களால் வெறுக்கப்படுவான். அவன் எவ்வளவு அருமையான கொள்கைகளை கூறினாலும் அது செம்பாகுமே தவிர பொன்னாக மதிக்கப்படமாட்டாது.
(பொதுவாழ்வு ஒரு பொன்னாடு)

» வெற்றி எந்த நேரத்தில் எந்தக்கட்சிக்கு கிட்டுகிறதோ, அந்தக் கட்சியை வலுவுள்ளக் கட்சி என்று எண்ணிக்கொள்வதும், வலிவு இருக்கிற காரணத்தினாலேயே, அது நியாயமான கட்சி என்று எண்ணிக்கொள்வதும் கூர்த்தமதி படைத்தோனின் போக்கல்ல. தெளிவற்றோர் பெற்றிடும் மனமயக்கம்.
(18.04.1965)

» திராவிட பெருங்குடி மக்களே! உங்களுக்கு நான் பெருமையுடன் சொல்லிக்கொள்வேன். நாம் போட்டிருக்கிற இந்த அடித்தளம் சாமானியமானதல்ல, காலத்தாலே கில்லி எறியப்படக்கூடியதுமல்ல, காதகர்கள் எவ்வளவு பெரிய கல் நெஞ்சத்தை கடப்பாறையாக்கி அவர்கள் கல்லினாலும், போடப்பட்டிருக்கும் இந்த அடித்தளத்தை அவர்களாலே கில்லி எறியமுடியாது. அந்த அளவுக்கு பலமான அடித்தளம் போட்டாகிவிட்டது.
(சிதம்பரம் கூட்டம் - உருவாகும் வரலாறு - 25.08.1957)

» வெற்றி - எப்படியும் வெற்றி எதை செய்தாகிலும் வெற்றி - என்று மட்டும் கருதுபவர்கள், எதிர்த்து நிற்பதைவிட இணைந்து பலன் பெறலாம் என்கின்றனர். அதிலே அவர்கள் வெற்றியும் காண்கின்றனர். ஆனால் அந்த வெற்றி அவர்களுக்குச் சுவைதரும். சமூகத்திற்கு பலன் கிடைத்திடாது. கழகம் மேற்கொண்டுள்ள பணி சமூகத்திற்கு, குடியாட்சி நெறிக்கு வெற்றியைத் தேடித் தரும் பெரும் முயற்சியாகும்.
(குடியாட்சி கோமான் - 14.01.1965)

» பொது வாழ்வு புனிதமானது, உண்மையோடு விளங்கும் உயர் பண்புதான் அதற்கு அடித்தளமானது. ஆனால் அரசியல் இயக்கம் பொதுப் பணி உணர்வோடு கூடிய கூட்டமாக அமையாவிடில், பதவியைப் பெறும் வாயிலென்றும், உடமையாளன் தன் உடமையைக் காக்கும் பீடம் என்று கருதும் மனப்போக்கு உருவாகிவிடும்.

» தமிழ் எவ்வளவு சிறப்பான மொழி என்பதை தமிழினிடத்திலேயே தமிழன் எடுத்துச் சொல்லவேண்டி நேரிட்டிருப்பதை அவமானத்தின் அறிகுறி என்றே நான் கருதுகிறேன்.
(கடிதம் - 03.07.1960)

» சாதாரண மக்களை யார் வேண்டுமானாலும் ஏய்த்துவிடமுடியும் என்று நினைக்காதீர்கள். சாமான்யன் நிரம்ப படித்தவனாக இல்லாது இருக்கலாம். ஆனால் வளமான பொது அறிவு பெற்றிருக்கிறான். வெண்ணெய் எது? சுண்ணாம்பு எது? என்று வித்யாசம் கண்டறிய அவனுக்குச் தெரியும்.
(இராச்சிய சபையில் - 03.02.1963)

» கோலெடுப்போரில் பெரும்பாலோர், குறைமதியை துணையாகக்கொண்டு அழிந்துபட்டனர்.
செஞ்சிக்கோட்டை செல்பவரை எல்லாம் தேசிங்கு ராசா என்றா கூறுவது! இங்கே இந்தக் கோட்டையிலும், கதர் சட்டையில் இருக்கிறவர்களையெல்லாம் காங்கிரஸ்காரர் என்று கூ.றுவதற்கில்லை!
(ஆலிங்கனமும் அழிவும் - 05.05.1957)

» இன்று வெறுப்பு, அருவருப்பு, பகை எனும் உணர்ச்சியின் துணைகொண்டு மட்டுமே அரசியலில் தம்முடன் மாறுபட்டிருப்பவர்களை மட்டம்தட்டி, தாம் சார்ந்திருக்கும் அரசியல் அமைப்பிற்கு ஏற்றம் தேடித் தரமுடியும் என்ற எண்ணம் தடித்துக் கிடக்கிறது. கொள்கையில் நம்பிக்கை சுரந்ததால் அல்ல இருந்த இடத்தில் கசப்பு வளர்ந்ததால், பகைகக்கி இழிபொழிபேசியே, மாற்றுமுகாமினரை ஒழிக்க முடியும் என்ற நினைப்புடன் நாப்பறை கொட்டுகின்றனர் . பழுதுபட்ட மங்கை பழுக்க மங்சளை முகத்தில் அப்பிக்கொண்டு பத்தினிவேடம் போட்டிடும் கதைப்போல்! மற்ற கட்சி தலைவர்களை மதித்திடுவது நம் கொள்கையை நம்மிடமிருந்து பெயர்த்தெடுத்துவிடும் என்று எண்ணுவதும் பேதைத்தனம்.
செல்வாக்கு சிதைந்து வரும் நிலையில் புதுக்கட்சி பணம் சேர்த்து, புதிய பலம் பெற நினைப்பது, ஆடிக்கெட்ட முதியவன், ஆசை அடங்காததால் தங்க பஸ்பம் சாப்பிடுவதற்கு ஒப்பானது. முறுக்கு ஏறும் வேகமானது, அதைவிட வேகமாக முறுக்கு தளர்ந்துவிடும். முறிந்தேகூடப் போய்விடும்.
(கடிதம் - 11.07.1965)

» பொதுவாக எல்லா தேர்தல்களும் சாதாரணப்போக்கில்தான் நடைபெறவேண்டும். அதற்காக ஒரு பரபரப்பு நீக்கப்படவேண்டும். பொதுமக்களைப் பின்னால் தள்ளிவிட்டு அரசியல்வாதிகள்தாம் முன்னே நிற்கிறார்கள். பொதுமக்களுக்குத்தான் முக்கியத்துவம் தரவேண்டும். தேர்தல் விவகாரங்களில் சூடு தேவையில்லை. வீணான ஆரவாரங்கள் தேர்தலுக்குப் பின்னும் பல மாதங்கள் நீடித்து வேறு விளைவுகள் கரடுமுரடாக அமையக் கூடாது. அரசியலில் மென்மை போக்குதான் தேவை. அவசியம் இதில் அரசியல்வாதிகள் தேர்ச்சிபெறவில்லையென்றால், அரசியல் நல்லவர் கரங்களைவிட்டுப் பொல்லாதவர்கள் கைகளில் போய்ச்சேர்ந்துவிடும்.
(செய்தியாளர்களிடம் - 19.10.1967)

நாம் மிகமிகச் சாமான்யர்கள்!
நாம் சாதித்துள்ளவைகளோ, மிகப் பெரியவை!
நாம் சாதித்தாகவேண்டியவற்றுடன் ஒப்பிடும்போது, இவை கடுகளவு!
நாம் சாமான்யர்களானாலும் சாதிக்கவேண்டியவற்றை சாதித்தே தீருவோம்.
நாம் சாமான்யர்களானாலும் என்பது கூட தவறு.
நாம் சாமான்யர்கள் - எனவேதான் நாம் சாதிக்கவேண்டியதை சாதிக்கப்போகிறோம்.
சாம் சாமான்யர்கள் - எனவேதான் சாமான்யர்களின் பிரச்சினையைக் கவனிக்கிறோம்.
(திருமுகம் - 14.01.1955)

» மக்கள் கரமும், மன்னன் சிரமும் (ஸ்காத்லாந்து)
மக்கள் கரம், மன்னன் சிரத்தையும் கொய்துவிடும் வலுப்பெற்றது.
அது ஏர் பிடிக்கும், துலாக்கோல் பிடிக்கும், கூப்பும், தழுவும், வரி செலுத்தும், வணக்கம் கூறும். ஆனால் தாங்கொணாத கொடுமை செய்து உரிமையைப் பறித்திட கொடுங்கோலன் கிளம்பினால், அந்தக் கரம் அவன் சிரம் அறுக்கும்.
சார்லஸ் சம்பவம் இதைக் காட்டும், பயங்கரப் பாடம். பாராள்வோர் எப்போதும் நினைவில் வைத்திருக்கவேண்டிய பாடம்.

» பணம் மட்டும் குவிந்திருக்கும்போது செருக்கு பிறரை துச்சமாக எண்ணும். துடுக்கு ஏற்பட்டுவிடும். ஆனால் பதவி கிடைத்துவிட்டாலோ எவரையும் எதுவும் செய்துவிடமுடியும் என்கின்ற மண்டைகனம் எவனால் என்ன என்ற போக்கு, எடுத்தேன், கவிழ்த்தேன் என்கின்ற பேச்சு; யாருக்கு நான் அஞ்சவேண்டும் என்ற நோக்கத்துடன் நடவடிக்கைகள் - இப்படி பலப்பல நோய்கள் ஒருசேர குடியேறிவிடும். பதவியும், அதனால் கிடைத்திடும் அதிகாரமும் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்ற நினைப்பும் தடித்துவிடும். பிறகு நெறித்த புருவம், கனல் உமிழும் பார்வை கடும் சொற்கள்.
(05.05.1960)

» அக்கிரமம் தென்படும்போது மிகப்பலருக்கு அது தன்னை தாக்காதபடி தடுத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணமும், ஒதுங்கிக்கொள்வோம் என்ற பாதுகாப்பு உணர்ச்சியும்தான் தோன்றும். எதிர்த்து நிற்கவேண்டும் என்ற எண்ணம் எழுவதில்லை.

» தம்பி, திடுக்கிடவைப்பது நாவினால் சுடுவது பிரச்சாரத்தில் ஒருவகை. வாதிடுவது, வழிக்குகொண்டுவருவது, வாஞ்சனையைப் பெறுவது, பிரச்சார முறையில் மற்றொருவகை. தம்பி நமக்கு இந்த இரண்டாவது முறையே போதும்.
(கடிதம் - 19.08.1956)

ஆதிக்கம்
கட்டிப்போட்டக் காளை வயிறார உண்ட பிறகும் கட்டை அவிழ்த்துக்கொண்டு தன்னிச்சையாக உலவத்தான் விரும்புகிறது. அதே காளை வயதாகிவிட்டால், கட்டிபோட்ட இடத்திலேயே, போட்டதை தின்றுகொண்டு, நமக்கு இதுதான் கதி என்கின்ற நிலைக்கு வந்துவிடுகிறது. ஆதிக்கத்தைப் புகுத்துவோர், விடுதலை உணர்ச்சி வீறு கொண்டு எழும்வேளை, கட்டிப்போட்டோ வெட்டி சிதைத்தோ, தடுத்துவிட்டால் பிறகு கிழடு தட்டிய மாடு பெற்றிடும் இயல்புபோல் அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் ஆகிவிடுவர்!
(ஆணை பிறந்தது - கடிதம் - 26.06.1960)

பகுதி: 1 2 3 4

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai