அண்ணா களஞ்சியம்


இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்

அரசியல்
பகுதி: 4

பகுதி: 1 2 3 4

» தி.மு.கழகம் என்று வருகிறபோது திராவிடநாடு தனியாக வேண்டும் என்ற கருத்து இருக்கிறது. திராவிடநாடு தனியாகப் பிரியக் கூடாது என்று சொல்லுகிற டாடா கம்பெனியைச் சேர்ந்த ஒருவர் தி.மு.கழகத்திற்கு செலாளராக வரவேண்டும் என்றால் என்ன அர்த்தம்? கட்சியைக் குத்தகைக்கு விடுகிறோம் என்று அர்த்தம். டாடா கம்பெனி நம் கட்சியை விலைகொடுத்து வாங்கிவிட்டது என்று பொருள்.

» கருத்து மோதல் நமக்குள் ஏற்படலாம். வளர்ச்சிக்கு அறிகுறி அது. நாம் மக்கள் வனவிலங்குகள் அல்ல. இது நாடு காடு அல்ல. காட்டு முறையைக் கையாண்டால் அதற்குப் பெயர் ஜனநாயகமாகாது - பாசிச முறை அது.
(பொழிவு - காஞ்சிபுரம் - 25.12.1948)

» ரசம் கலையாத கண்ணாடி முன் நின்று பார்த்தால்தான் முகம் சரியாக தெரியும்! ஜனநாயகப் பண்பு கெடாத நிலை ஆளுங்கட்சிக்குஇருந்தால்தான் எதிர்க்கட்சியின் தரம் தெரியும்!!
(விழாவும் விளக்கமும் - திராவிடநாடு - 28.04.1957)

» ஜனநாயகத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கின்ற நாம் அதனின்று ஒதுங்கிவிட முடியாது. ஆற்றில் குதித்த பிறகு நீந்தித்தான் ஆகவேண்டும். நீந்தாவிடில் வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்பட்டுவிடுவோம். எனவே அரசியலை புறக்கணிக்காதீர்கள். புறக்கணித்தால் அரசியல் உங்களைப் புறக்கணித்துவிடும்.

» சேக்ஸ்பியர் - சீசரின் மனைவியைப் பற்றி குறிப்பிடுகையில் சீசரின் மனைவி குற்றங்களுக்கு அப்பற்பட்டவராக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார். அதுபோல பெரிய அரசை நடத்திச் செல்பவர்களும் எவ்விதமான குறைகளுக்கும் அப்பாற்பட்டவர்களாக இருக்கவேண்டும்.

» அமைச்சர்கள் கொள்ளையடித்துவிட்டார்கள், இலஞ்சம் வாங்கினார்கள் என்றால் மட்டும்தான் நிர்வாகத்திலே ஊழல் ஏற்பட்டுவிட்டது என்று பொருள் கொள்ளக் கூடாது. அமைச்சர்கள் ஒரு துரும்பு கூடத் தமக்காக எடுத்துக்கொள்ளாத தர்மவான்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் நடத்தும் துறைத்தளத்தில் ஆறு லட்சத்திலே கட்டி முடிக்கப்பட வேண்டிய ஒரு பாலம் ஏட்டு இலட்சம் விழுங்குகிறதென்றால், அதிலே ஒரு காசுகூட அமைச்சருக்கு செல்லாவிட்டாலும் நஷ்டம், நஷ்டம்தான், நிர்வாகம் ஒழுங்கில்லை என்பதுதான் பொருள். நாங்கள் என்ன, போருளை எங்கள் வீட்டுக்கா எடுத்துக்கொண்டு போய்விட்டோம்! என்று பட்டம் பறக்கவிடும் பள்ளிச் சிறார்போல அமைச்சர் ஒருவர் பேசியதாகப் பத்திரிக்கையில் பார்த்தேன். அப்படி யாரும் சொல்லவுமில்லை; செய்தால் மக்கள் சும்மாவும் விடமாட்டார்கள்.
(ஒலியும் ஒளியும் - திராவிடநாடு - 19.06.1960)

» நாம் என்பது வலிவும், பொலிவும் கொண்டதோர் தத்துவம். நான் என்பது வேதாந்தத்திலேயே அதை அகம்பாவம், அல்லது மனமயக்கம் என்கிறார்கள், என்றால் அரசியலில் அது அர்த்தமற்றது மட்டுமல்ல, அனுமதிக்கப்பட்டுவிட்டால், ஆபத்தை அடுக்கடுக்காக கிளப்பிவிடக்கூடியதுமாகும். நான் என்பதிலிருந்து நாம் என்ற கட்டம் பயணமாவதற்கு, ஒவ்வொரு நாடுகளிலே கொட்டப்பட்ட வியர்வையும் இரத்தமும் காணிக்கையும் கொஞ்சமல்ல.
இவ்வளவு பலிவாங்கியும் கூட இன்னம் நாம் என்பதை நான் என்பது சமயம் கிடைக்கும்போதெல்லாம் உலுக்கிப்பார்த்திடக் காண்கிறோம்-நாடுகளிலேயும் சரி கட்சிகளுக்கு உள்ளேயும் சரி, வீடுகளிலும் கூடத்தான்.
(15.04.1956)

» பதவிதானே, பறிபோனால் என்ன என்று தம்பி, நீ வெகு எளிதாகச் சொல்லிவிடுவாய். அவர்களுக்கல்லவா அதனுடைய அருமை தெரியும். அது போய்விட்டால் பிறகு இவர்கள் இருக்குமிடம் நோக்கி, யார் திரும்பிப் பார்ப்பார்கள்? இவர்கள் சென்று, சென்று பார்த்தாலும் யார் முகம் கொடுத்துப் பேசுவார்கள்? நீ, கூறிவிடலாம், பதவியா பெரிது என்று! பதவிதானே அவர்களின் நிலையைப் பெரியதாக்கிற்று! அதைப்போய் இழப்பதென்றால்!!

» அதிகாரம் அகந்தையை ஈன்றெடுத்து அளித்திடும்; அதன் வயப்பட்டாருக்கு முன்னால் நிலைமைகளும், நினைப்புகளும் கூட மறந்து போவதுண்டு.

» சீறும் சிறுத்தையைவிட, நயவஞ்சக நரிகள்தான் அரசியலுக்கு பேராபத்து.

» பொறுப்பு வரும்போது அடக்கம் வரவேண்டும். பெருமித உணர்ச்சி தடித்துவிடக் கூடாது.

» நம்மிடம் ஆற்றல் இருக்கிறது; நல்ல நம்பிக்கையுடன் நாம் நடைபோட்டால் வெற்றிபெற முடியும்.

» ஜனநாயகம் வளர்ந்து, முழுமைபெறும்போது கட்சிகளுக்கிடையே காணும் கொள்கை வேறுபாடு சிதைந்துவிடும்.

» எப்படி ஏற்றம் இறைப்பவர்கள் மேலே உள்ளவர்கள் கீழே போய், கீழே உள்ளவர்கள் மேலே போனால்தான் கேணியில் இருக்கிற தண்ணீர் வெளியே வருவதைப்போல், எதிர்கட்சி ஆளும்கட்சி, ஆளும்கட்சி - எதிர்கட்சி என்று மாறி மாறி ஏற்றம் இறைத்தால் தண்ணீர் வருமே தவிர, நான் ஒருவன்தான் இருப்பேன் வேறு யாரும் கூடாது என்றால் எப்படி அப்பா ஏற்றம் நடக்கும்.
(மேடைப் பேச்சு - 09.02.1957)

» நீண்ட பேச்சினால் அல்ல, நாசுக்கான அரசியலால் அல்ல, உயிரை இழக்கவும் தயாராயிருந்த உத்தமர்கள் சிந்திய இரத்தத்தால்தான், உலகிலே எந்த உன்னதமான கொள்கையும் நிலை நாட்டப்பட்டிருக்கிறது.


பகுதி: 1 2 3 4

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai