அண்ணா களஞ்சியம்


இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்

அரசியல்
பகுதி: 3

பகுதி: 1 2 3 4

» பணத்தால் இயங்கவேண்டிய நிலையுலுள்ள அரசியல் இயக்கம் பணக்காரர்களின் இயக்கமாகிவிடும். அங்கே தியாகமும், தொண்டுணர்வும் பின்னுக்குத் தள்ளப்படும். சுழல் சொல்லர்களும், தன்னலங்களும் தலமையேற்றுவிடுவர்.
(பொழிவு - வானொலி - ஜனநாயகம்)

» அதிகாரம் கள்ளினும், காமத்தினும் போதை மிக்கது. அதிக அதிகாரம் அளவு கடந்த போதையைத் தரும். அதிகாரத்தைக் கையாண்டு ஒரு முறை அனுபவப்பட்டுவிட்டவர்கள், வெகு சுலபத்தில் அதனைக் கைவிடத் துணியார் என்றும் தன்னிடத்திலேயே அதிகாரம் சிரஞ்சீவியாக நிலைத்திருக்கப் பார்த்துக்கொள்வதில் மிக்க கவலை எடுத்துக்கொள்வர் . . . .

இந்தக் கோட்பாடு, போக்கு அரசியலில் பெரியதோர் நோயின் அறிகுறியாகும் மக்களாட்சி முறைக்கு இது முற்றிலும் புறம்பானது. இதனை முளையிலேயே கிள்ளி, நசுக்கி , நமிக்கவேண்டியது மக்களாட்சி முறையில் நம்பிக்கை கொண்டவர்களின் நீங்காத கடமையாகும்.
(இரட்டை நாவினர் - 28.12.1947)

» மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுக்குத் தாங்களே நம்பிக்கை உள்ளவர்களாக நடந்துகொண்டால் மட்டும் போதாது. தேர்ந்தெடுத்த மக்களுக்கும் நம்பிக்கை உள்ளவர்களாக நடந்துகொள்ளவேண்டும்.

» அரசியலில் சொல்லித் தெரிந்துகொள்வது ஒன்றுமில்லை, எண்ணித்தான் தெரிந்துகொள்ளவேண்டும். எண்ணி என்றால் சிந்தித்து அல்ல - ஒன்று, இரண்டு, மூன்று என்று ஆளை எண்ணித்தான் தெரிந்துகொள்ளவேண்டும்.
(பொழிவு - 04.05.1962)

பொதுவாழ்க்கை
கதம்பத்தில் மலர்கள் குறைவாகவும், தழை அதிகமாகவும் இருப்பின் மாதர் கொள்ளார். அதுபோலவே பேசும் பேச்சிலே கருத்து அங்கொன்றும், இங்கொன்றுமாகி சுவைக்கு உதவாதன அதிகமாயிருப்பின் எவரும் கொள்ளார்.

» இலட்சியத்தை அடைய, கஷ்ட நஷ்டம் அடைதல் எனும் விலை கொடுத்தாகவேண்டும்.

» கிளிகொஞ்சிடும் சோலையாயினும், நடுநிசி வேளையிலே ஆந்தையும் அலறத்தான் செய்யும்.

» நமக்கு இடையில் ஏற்படும் சபலங்களை விரட்டிடும் துணிவு மட்டும் வந்துவிட்டால் நாம் நிச்சயம் வெற்றியடைவோம்.

» வீசும் புயலுக்கிடையே, கொட்டும் மழையில் சரளைக்கல் மீது நடந்து குன்றின் உச்சியில் கொண்டுபோய் வைக்க ஆகல் விளக்கு ஏற்றி, அதனை அணையாமல் காத்து உச்சிநோக்கி ஏறுவிடுகின்ற மன உறுதியும், கொள்கை ஆழமும் இருந்திடில் யாரும் அசைத்திட இயலாது நம்மை! அணைத்திட இயலாது நமது இலட்சியத் தீபத்தை!

» அவையடக்கம், தெளிந்த அறிவு இவைப்போன்றவைகள், எதிர்கட்சிகளுக்கு இருக்கவேண்டிய இலட்சணங்கள் என்று நான் படித்த - அதிக அளவு படிக்கவில்லை; ஆனால் படித்தவரை கவனத்துடன் படித்திருக்கிறேன்.

» விடுதலை இயக்கம் தடையால், படையால் அழிவதில்லை. விடுதலை இயக்கம் அழிந்துவிட்டது, அழித்துவிட்டோம் என்று எண்ணி எதேச்சாதிகாரிகள் எக்காளமிடலாம். ஆனால் எது புதைகுழியை பிளந்துகொண்டு மீண்டும், மீண்டும் எழும். (முதல் பந்தி - 20.08.1961)

மக்களாட்சி
அமைதியான வாழ்வுகொண்ட சமூகந்தான் அறிவு வளர்ச்சியில் அக்கறை காட்டமுடியும் அதன் மூலமாகத்தான் உலகத்தின் பொதுசொத்தான அறிவுச் செல்வம் மேலும் மேலும் வளர்ந்து மனிதகுல மேம்பாட்டினுக்கு உதவிடமுடியும். மக்களாட்சி இல்லாத நிலையில் பெரும்பாலான மக்கள் ஓநாயிடம் சிக்கிய ஆடுகளாகவோ, அல்லது பட்டியில் போட்டடைக்கப்பட்டவைகளாகவோ, ஆக்கப்பட்டுவிடுவார். மனிதத் தன்மை மாய்ந்துவிடும். கற்காலத்தில் இருந்து வந்து நிலமையை நோக்கி மனிதகுலம் துரத்தப்படும். கொடுமை படை எடுத்திடும்.
(27.06.1965)

இனம்
மொழியால், கலையால், பண்பாட்டால் வரலாற்றால், பழக்க வழக்கங்களால், பூகோள ரீதியாக, திராவிடர் வேறு, வடவர் வேறு. அப்படியிருக்க நாம் அனைவரும் ஒன்று என்று எப்படி கூற முடியும்? இந்து மதத்தை தழுவியர்கள் இந்தியா முழுமையும் உள்ளவர்கள் - ஆகவே இந்தியா ஒன்றாக இருக்கவேண்டும் என்றால், இஸ்லாம் மதத்தைத் தழுவியவர்கள் எல்லோரையும் ஓர் அரசின் கீழ்கொண்டுவர இயலுமா? கிருத்துவ மதத்தை தழுவி இருக்கின்ற காரணத்தினாலேயே அமெரிக்காவும், இங்கிலாந்தும், பிரான்சும், ஜெர்மனியும் ஓர் ஆட்சியின் கீழ் இருப்பது சாத்தியமாகுமா? அதைப் போலத்தான் திராவிடமும், இந்தியாவோடு ஒன்றாக இருக்க இயலாது.
(புதுப்பா - 18.06.1961)

» தனக்கென்று ஓர் இலட்சியம் கொண்டோர் எவரும் அதற்காகப் பணியாற்றுகையில் குறுக்குப் பாதை கண்டால் அதிலே நுழைந்து, இலட்சியத்தை இழந்துவிட சம்மதிக்கமாட்டார்கள். இலட்சியத்தைநோக்கி செல்வோருக்கு அதற்கான ஆக்கமும் ஊக்கமும் அளிப்போரே, தலைவர்கள், நண்பர்கள் வழிகாட்டிகள், ஞானாசிரியர்கள். இடையில் இளநீர் கொடுப்போர் நன்றிக்குரியோர், இதயம் நோகப் பேசுவோர் பரிதாபத்துக்குரியோர். உடனிருந்து கெடுப்போர் கண்டனத்துக்குரியோர், பாதையில் பயணத்தின் கடுமைத் தாங்கமாட்டாமல் பட்டுப்போவோர் அனுதாபத்துக்குரியோர்.
(குருபக்தி - 25.12.1955)

» மாற்றத்தக்கது ஆட்சி, நீக்கத்தகவர் மக்கள் என்ற இலக்கணத்தின் அடிப்படையில் அமைக்கப்படாத அரசுகள் அடித்தளம் அற்ற கட்டிடங்கள் ஆகும். மக்களின் கோபம் எனும் கடுங்காற்று வீசும்போது சரிந்து விழுந்துபோகும்.
(கனா நீகழ்ச்சி ஒரு பாடம் - 31.03.1966)

» பயனற்றுப் பேசுவதிலேயும் தம்பி இருவகை உண்டு. ஒன்று தெரியாமல் பயனற்றன பேசிவிடுவது, மற்றொன்று தேரிந்தே திட்டமிட்டு வேண்டுமென்றே கேட்பவர்களை ஏய்க்க என்றே பயனற்றவைகளை பயனுள்ளவை போலத் தோற்றம் கொள்ளும்படி செய்து பேசி வைப்பது. முன்னது அறியாமையின் விளைவு! மற்றது கயமையின் ஒரு வகை!
(கங்கா தீர்த்தம் - 30.05.1965)

» நாமின்றி என்ன செய்ய இயலும் என்று ஓர் எண்ணம் நம்மால்தான் எல்லாம் என்ற எண்ணத்தில் இருந்து பிறக்கிறது. பிறகு நாமில்லாதபோது எதுதான் இயங்கும் என்று தோன்றும். பிறகு நாமின்றியும் ஒன்று இயங்குவதா, அதை நாம் விட்டுவைப்பதா என்று தோன்றும். பிறகு இயங்குவதை ஒழித்தாகவேண்டும் என்ற அரிப்பு ஏற்படும். அது இயலாது என்ற ஐயப்பாடு குறுக்கிடும், குறுக்கிட்டதும் நாம் மட்டும் போதாது, ஒத்த கருத்துடைய மற்றவர்களின் துணையை நாடவேண்டும் என்ற எண்ணம் பிறக்கும். அது வளர்ந்திடும்; வேறொரு கூட்டமைப்பு ஏற்படும். ஏற்பட்டதும் இந்த மொத்தத்தில் நம் நிலை என்ன என்ற எண்ணம் எழும். எழுந்ததும் பழைய கதையேதான். நம்மால் - நம்மாலேதான் - நம்மால் மட்டும்தான், நாமின்றி என்ன ஆகும். நாம் நாமாகிவிடுவோம். இந்தக் கட்டங்கள வடிவெடுக்கும். இது சரியா?
(கடிதம் 28.05.1961)

விடுதலை இயக்கம்
காய்கறி நறுக்கி எடுத்து கொதிநீரில் வேகவைத்து சுவை கூட்டியான பிறகே பச்சை காய்கறி பண்டமாகிறது, உண்டு மகிழ! மரணவாயில் போய், போய் வந்த பிறகே தாய் பிள்ளை பேறு காண்கிறாள். கீழ்மண் மோலாக உழுது கிளரியப்பிறகே போட்டது முளைக்கிறது. விடுதலை இயக்கம் மட்டுமென்ன வாய்ப்பந்தலிட்டு வார்த்தை கொடி படரச்செய்து பறித்தெடுக்கும் என்று நினைத்தாயோ? இல்லை தம்பி இல்லை.
(சுடும் சுவையும் - 02.06.1962)

» அவன் (நெப்போலியன்) கல்லறை புகுந்தான். ஆனால் அவன் கொண்டிருந்த ஓரரசு, பேரரசு, வல்லரசு, என் அரசு எனும் விபரீத எண்ணம் கல்லறைக்கு அனுப்பப்படவில்லை. அனுப்பிவிடவேண்டும் என்று பாடம் புகட்டத்தான் அந்த மாவீரன் கல்லறை காட்சிப் பொருளாகி நிற்கிறது.
(இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் - குறும்புதினம் - 1963)

ஜனநாயகம்
உண்மையான ஜனநாயகம் ஒரு மரபினை ஏற்படுத்தித் தருவதுடன் ஒரு தலைவர்கள் வரிசையையும் ஏற்படுத்தித் தருகிறது; அல்லது அமைந்திட துணை செய்கிறது. ஒரு தலைவர் மறைந்த பிறகோ அல்லது ஓய்வு பெற்ற பிறகோ, அவர் செய்து வந்ததை, அதே முறையில் அதே அளவில், அதே தரத்தில் செய்ய முடியாமற்போயினும், மக்களின் நலனுக்கு ஏற்ற விதத்தில் தொடர்ந்து செய்து கொண்டு போகத்தக்க மற்றவர்கள் கண்ணுக்குத் தெரிகிறார்கள். தம்பி, ஜனநாயகம் ஓர் அரசு முறை மட்டுமல்ல வாழ்க்கை நெறி, மனிதத் தன்மையை மேம்பாடுடையதாக்கிடவல்ல மார்க்கம்.
(இடியோசையில் கேட்காது இன்பநாதம் - கடிதம் - 27.06.1965)

தலைவன்
சட்டியில் காய்கறிவேகுகிறது. அடுப்பின் வெப்பத்தை சட்டி தாங்கிக்கொண்டு வேண்டிய வெப்பத்தை மட்டுமே கொடுத்து காய்கறி வேகுகிறது. தலைவன் சட்டியைப் போன்றவன் எதையும் தாங்கவேண்டும்.
(கைதி எண் 6342 - கடிதம் - 04.1964)

» கருத்தளிப்பவர் சிறுபான்மையினரா, பெரும்பான்மையினரா, என்பதல்ல முக்கியமாகக் கவனிக்கப்படத்தக்கது. அளிக்கப்பட்ட கருத்து ஏற்புடையதா அல்லவா என்பதுதான் முக்கியம். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற வள்ளுவர் வாக்கு இதற்கும் சேர்த்துத்தான் என்பதை உணரலாம்.
(ஏழ்மையால் எழில் கெட்டு - கடிதம் - 28.03.1965)

பிரச்சாரம்
பிரச்சாரம் என்பதன் உட்பொருளே, தான் விரும்புகின்ற கருத்தை மற்றவர்கள் விரும்புகின்ற வகையிலும் நம்புகிற முறையிலும் பல்வேறு வகைகளில் எடுத்துச் சொல்வதுதானே. இதுவே பிரச்சாரம் என்கின்ற பொருளுக்கு இலக்கணமாகும்.
(நாடகக் கலை - பொழிவு - 10.09.1967)

» 4 ஆயிரம் மருத்துவ மனைகள் கட்டினேன். 300 பாலங்களை கட்டினேன். 100 ரேஷன் கடைகளை திறந்தேன் என்று கூறிக்கொள்வதில் அதிகப் பெருமையடையவில்லை. என்றய தினம் சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ளவன் சம நிலைக்கு கொண்டுவரப்படுகிறானோ அன்றுதான் சமூக நீதி ஏற்படும். அந்த சமூக நீதி இந்த அரசாங்கத்தில் நாட்டப்படுவதைத்தான் நான் விரும்புகிறேன். ஒருவரை ஒருவர் கெடுக்காமல் வாழமுடியும். ஒருவரை ஒருவர் பகைக்காமல் வளரமுடியும் என்ற நிலை நிலைநாட்டப்படுவதை விரும்புகிறேன். (மேடைப்பேச்சு - 1968)

» மக்களாட்சி என்பது ஓர் அரசு வகை மட்டுமன்று. அது புதிய வாழ்க்கைக்கு ஓர் அழைப்பு. நலன்களையும் நாட்டங்களையும், பொறுப்புகளையும் பகிர்ந்துகொள்ளுங் கலையில் ஓர் ஆய்வு; பொது தொண்டிற்காக ஒவ்வொரு தனியாளிடமும் உள்ள இயல்பான ஆற்றலை இயக்குவதற்கும் ஒருமுகப்படுத்துவதற்கும் ஒரு முயற்சி.
(அண்ணாமலை - 18.11.1967)

பொதுத் தேர்தல்
பலர் பார்த்து சிலர் நமக்காக ஆட்சி நடத்தட்டும் என்று அனுமதி கொடுத்தான பிறகு, ஜனநாயத்தின் தூய்மை கெடுக்கப்பட்டுப் போய்விட்டால் சிலர் ஆட்டிப் படைப்பவர்களாகவும் பலர் அனுபவித்து தீரவேண்டியவர்களாகவும் ஆகிவிடுவர். குடியாட்சியே கொடுங்கோல் ஆட்சியாகிப் போகும் அதுபோல ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே அந்த பலர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையேனும் அந்தச் சிலர் எல்லாம் தெரிந்தவர் என்ற எண்ணத்தை கொஞ்சம் தளர்த்தி நமக்காக சென்றவர்கள் சரியானபடி சிந்தித்து சிந்திக்கத் தெரிந்த பலருடைய அறிவுரைகளையும் கேட்டு தமது யோசனையை செம்மைப்படுத்திக்கொண்டு நமக்கு போதுமான நலன்களை செய்தளித்துள்ளனரா என்று கணக்குப் பார்க்கும் முறை-பொதுத் தேர்தல் வகுத்தளிக்கப்பட்டுள்ளது. (சிலர் பலர் - காஞ்சி - 29.05.1966)

ஜனநாயகம்
ஆணவம், அகங்காரம், அதிகாரச் செல்வச் செருக்கு ஆகியவை எந்த உருவத்தில் ஆதிக்கம் செலுத்தத் தலை தூக்கினாலும், அந்த ஆதிக்கக் கொடுமையை, அடக்குமுறை பிடியினை அடியோடு முறித்தெறியுங்கள். சுதந்திரம் சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய சமரச கருத்தூட்ட வாழ்விற்கு ஆதிக்க உணர்வு பேரெதிரி என்பதால்.

» ஒரு கட்சியினுடைய வலிமை அதனுடைய சுயபலத்தில் இல்லை. அந்தக் கட்சியை எதிர்க்கின்ற எதிர்கட்சிகளின் வலிவின்மையில்தான் இருக்கிறது.

» அரசியலில் ஒத்து போதல் என்பது வேறு; தேர்தல் உடன்பாடு என்பது வேறு. இரண்டுக்கும் தத்துவரீதியாக பெறும் வேறுபாடு உண்டு.

» நமது அரசியல் சட்டம் நிலையானது அல்ல. ஏனென்றால் ஒரு சனநாயக நாட்டில் அரசியல் சட்டத்தைத் திருத்த அந்த மக்களுக்கு எப்போதும் எல்லா உரிமையும் உண்டு.

» ஜனநாயகம் பின்னோக்கிச் செல்லும் நிலை கூடாது. சிறந்த ஜனநாயகச் சூழ்நிலை வளர அனைவரும் கடுமையாக உழைக்கவேண்டும்


பகுதி: 1 2 3 4

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai