அண்ணா களஞ்சியம்

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு
பொருளாதாரம்
|
பெண் | சமுதாயம்


சமுதாயம்
பகுதி: 10

பகுதி: 1 2 3 4 5 6 7 8 9 10

விஷமிட்டது போன்ற சோகச் சம்பவங்கள் நடைபெற்ற காலத்திலெல்லாம், பழிவாங்குவது, அழுது உறுதிமோழி கூறுவது என்ற அளவோடு மக்கள் இருந்துவிட்டனர் - இந்தச் சம்பவங்களின் காரணமாக, இனித் தொடர்ந்து, மனதை விசாலப்படுத்திக் கொண்டே இருந்தாகவேண்டும் என்று எண்ணி முயற்சிக்கவில்லை. பழிக்குப்பழி வாங்குவதிலே சுவை ஏற்பட்டது. சூட்சுமம் மறக்கப்பட்டுவிட்டது. பழிக்குப் பழி வாங்குவது என்ற முறையைக் கையாண்டதால், மக்கள், அந்த வேலையோடு தங்கள் கடமை முடிந்தததாகக் கருதி, மன மாளிகையின் வாயிற்படியைப் பழுது பார்க்கும் காரியத்தைக் கூடச் செய்யாமலிருந்துவிட்டனர்.

வெறுப்புணர்ச்சி இயற்கையானதல்ல! மூட்டிவிடப்படுவது மனிதத்தன்மைதான் இயற்கையானது. அதனை போர் மாய்த்துவிடுகிறது
(இரும்பு முள் வேலி - 1960)

பட்டதாரிகள்
சமூகத்திடம் இருந்து நீங்கள் பெற்ற உபகாரத்தை எந்த விதத்திலாவது திருப்பிச் செலுத்திடாமல் போனால் சமூகத்தின் பெருநிதிப்பேழை வரண்டுவிடும். நாளாவட்டத்தில் பொதுவாழ்வு பாலைவனமாகிவிடும்.
(அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா உரை - 1968)

அரசு இருந்தும் அமைதியில்லை. மார்க்கம் இருந்தும் எழுக்கமில்லை. அறநெறிகாட்டப்படும் அறம் நிலைத்து நிற்கவில்லை. அறிவாளர் முயன்றும் அறிவுத் தெளிவு ஏற்படவில்லை. அநீதிகளை ஒழிப்பதிலே வெற்றிபெற்ற இயக்கங்கள் மீண்டும் அதுபோன்ற அநீதிகள் எழமுடியாத நிலமையை நிலைத்திடச் செய்யவில்லை. தூய்மை படுததப்பட்ட இடம் மீண்டும் பாழ்படுகிறது.
(கடிதம் - 16.05.1965)

அமைதியான வாழ்வுகொண்ட சமூகந்தான் அறிவு வளர்ச்சியில் அக்கறைகாட்ட முடியும் அதன் மூலமாகத்தான் உலகின் பொது சொத்தான அறிவுச் செல்வம் மேலும் மேலும் வளர்ந்து மனித குலமேம்பாட்டினுக்கு உதவிட முடியும். மக்களாட்சி இல்லாத நிலையில் பெரும்பாலான மக்கள் ஓநாயிடம் சிக்கிய ஆடுகளாகவோ, அல்லது பட்டியில் போட்டடைக்கப்பட்டவைகளாகவோ, ஆக்கப்பட்டுவிடுவர். மனிதத் தன்மை மாய்ந்துவிடும். கற்காலத்தில் இருந்த நிலமையை நோக்கி மனிதகுலம் துரத்தப்படும். கொடுமை படை எடுத்திடும்.
(கடிதம் - 27.06.1965)

கூடி வாழ்தல், கேடு செய்யாதிருத்தல், உழைத்து பிழைத்தல், பகிர்ந்தளித்தல் என்பதை, பாராட்டத்தக்கப் பண்புகள் என்ற நிலை மாறி இவையே மனித குலத்தின் வாழ்முறைகள் என்றாகவேண்டும்.
(கடிதம் - 16.05.1965)

சங்கராச்சாரியாரிலிருந்து, சாதாரண அய்யரிலிருந்து, சாதாரண சாமியார் வரை படித்த பார்ப்பனர்களிலிருந்து, படிக்காத பாமரர் வரை, அவர்கள் யாராக இருப்பினும் இது வரை சீர்திருத்த முறையில்தான் திருமணங்கள் நிகழ வேண்டும், நடத்தப்படவேண்டும் என்பதற்காக சுயமரியாதைக் காரர்களாகிய நாங்கள் கூறிவரும் காரணங்களை ஒருவரும் மறுத்துப் பேசியது கிடையாதே! அவர்கள் நாங்கள் கூறும் காரணங்களை மறுத்துப் பேசுவதில்லை, பேசவும் முடிவதில்லை. ஆனால் அர்த்தமற்ற சடங்குகளை, பொருத்தமற்ற காரணங்களைக் காட்டி கடைபிடிக்கவில்லையென்றுதான் குற்றஞ்சாட்டுகிறார்கள். நாங்கள் (மேற் கூறப்பட்ட) எந்த சடங்குகளையும் செய்வதில்லை செய்யத் தேவையில்லையென்றும் கூறுகின்றோம். அத்தகைய சடங்குகளை செய்வதற்கு எந்தவிதமான அர்த்தமுமில்லை, அதற்குக் கூறப்படும் காரணங்களும் பொருத்தமானதாகத் தெரியவில்லை. ஆகவேதான் அவைகளை நாங்கள் செய்வதில்லையென்பதுடன், செய்வதும் கூடாது எனவும் குறிப்பிடுகிறோம். (சுயமரியாதைத் திருமணம் ஏன்? - சொற்பொழிவு)

நீங்கள் யார்ரென்று கேட்டால் படையாச்சி, பிள்ளை, செட்டியார், கோணார், நாடார், நாய்க்கர் என்று கூற முடியுமே தவிர நான் தமிழன், திராவிடன் என்று சொல்வதில்லை. எங்கள் வேலை அந்த மறதியைப் போக்குவதுதான். சாதிகள் இடைக்காலத்தில் கட்டிவிடப்பட்டதே. ஆதியில் இல்லை.
(30.05.1960)

நெருப்பு வேண்டுமா, வேண்டாமா? என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? நிச்சயமாக வேண்டும் அடுப்புக்கு. அடுப்புக்கு பயன் படவேண்டிய நெருப்பு வீட்டுக்கூரையைப் பிடித்துக் கொண்டால் என்ன செய்வோம்? அக்னி தேவன் திருவிளையாடல் என்றா சொல்வோம்.
(04.09.1960)

பணம் படைத்தவர் அது எந்த வழியில் கிடைத்தது என்றாலும், சமூதத்தில் மூன்னிடம் பெற்றுவிடுவதைக் காண்கிறோம். அந்தப் பணம் பின்பு பண்பை அழிப்பதுடன் சமூகத்தில் பல முறைகேடுகளை மூட்டிவிடுகிறது.
(தமிழர் திருநாள் - கடிதம் - 14.01.1969)

முழுவயிறு காணாதோர், முதுகெலும்பு முறிய பாடுபடுவோர், வாழ்வின் சுவை காணார், வலியோரின் பகடைக்காய்கள், ஓடப்பர் ஆகிய இவரெல்லாம் தருகின்ற வரிப்பணமே, கோட்டையார், கொடிமரமாய் பாதையார் பகட்டுகளாய், அமுல் நடத்தும் அதிகாரிகளாய், அறிவு பெற அமையுங் கூடங்களாய் திகழ்கின்றன. வியர்வை பணமாகிறது; பல்கலைக்கழகம் முதல் தொடக்கப் பள்ளி வரை கட்டப்பட்டுள்ளன. செயலில் ஈடுபடுவதே இத்துணைத் தந்திடும் ஏழையர்க்கு, நாம் காட்டும் நன்றியறிதல் என்றறிவர். அது மாணவர் உலகில் புதியதோர் திருப்பத்தினைத் தந்திடும்.
கனவு காண்கின்றோனோ? இல்லை மாணவர் நினைப்பு அறிந்து கூறுகின்றேன். எதிர்காலம் அவர்களுடையது.
(மதுரை - பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா உரை - 07.09.1967)

நம்நாட்டு இளைஞர்களிடம், குறிப்பாக மாணவரிடம் கேடு நிறைந்த இயல்புகள் மிகுந்துவிட்டிருப்பதாகப் பலர் கவலை தெரிவித்துள்ளார்கள். நம்நாட்டு இளைஞர்களிடம் குறிப்பாக மாணவரிடம், நான் நம்பிக்கை இழந்துவிடவில்லை. மாறாக அவர்களின் இயல்பிலே அடிப்படையான கோளாறு எதுவும் இல்லை. அவர் முன் குறிக்கோள் சீரிய முறையிலே காட்டப்படாததாலும், அறிவுரை வழங்கிடும் அன்பர்களில் பலரும் தன்னலப் பிடியில் சிக்கத்தான் செய்கின்றனர் என்பதை காண நேரிடுவதாலும் அவர்கள் இயல்பு திரிந்துவிடுகிறது. நேர்வழி அடைபடுகிறது. கேடு தரும் முறைகள் இனிப்பளிக்கின்றன என்று கருதுகிறேன். எனவே இளைஞரும் மாணவரும் நல்லியல்புடன் இருந்துவிடவேண்டுமெனில், மற்றையோர் தமது சொல்லும் பொது நலனுக்கு உகந்ததாக அமைந்திடுமென்று பார்த்துக்கொள்வது இன்றைய அவசரத் தேவை என்பதனைக் கூறிட விழைகின்றேன். அதே போது மாணவர்கள் தமக்களிக்கப்பட்டுள்ள வாய்ப்பு எத்தனை அருமை மிக்கது என்பதனை உணர்ந்து அதற்கேற்பத் தமது செயலினை வகுத்துக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளுகிறேன்.
(மதுரை - பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா உரை - 07.09.1967)

ஏமாற்றம், திகைப்பு, துடிப்பு, வறுமை, ஏக்கம், பேராசை, சூது, மோசடி, காமக்களியாட்டம் எனும் பலகாட்டுமிருகங்கள் அவனைத் தாக்கி, தாக்கி, பிய்த்து கடித்து, கடித்து மென்று தின்று கீழே துப்பிவிட்டன.
(புதிய பொலிவு - புதினம் - 1956)

ஒரு சிறந்த நடிப்புக்குரிய இலக்கணம், ஒருவர் நடிப்பதைப் பார்த்தவுடன் நாமும் செய்யலாம் என்ற எண்ணத்தை உண்டாக்கவேண்டும் செய்ய ஆரம்பித்தால், செய்ய முடியவில்லையே என்று வருந்தவேண்டும், இந்த இரண்டுக்கும் இடையே இருப்பதுதான் நடிப்பினுடைய இலக்கணம். (நாடகத்தில் மறு மலர்ச்சி - சொற்பொழிவு - 1948)

பூமியில் உள்ள தங்கம் அத்தனையையும் நகையாகச் செய்துகொள்ள முடியாது. ஆகையால் தேவையான அளவுக்கு, தங்கத்தைக் கொடுத்து, நகைகள் செய்யச் சொல்வதுபோல் நம்மிடத்தில் ஏராளமான கருத்துக்குவியல் இருந்தாலும் தேவையானதை பயன்படுத்த முன் வரவேண்டும்.

மனித சமுதாயத்தின் அல்லலை விஞ்ஞானம் எந்த அளவு குறைத்திருக்கிறது, என்பது பற்றி, எண்ணினால் மக்கள் வீழ்ந்து வணங்கவும் செய்வார்கள், விஞ்ஞானத்தின் முன்பு. மனித சமுதாயத்தின் வேதனையை விஞ்ஞானம், அந்த அளவுக்குக் குறைத்திருக்கின்றது.

பாலாடையில் பருகிய குழந்தை, பிறகு கோப்பை தேடும் குமரனாகிறான். தொட்டிலிலிருந்து பிறகு காட்டிலிலும் ஏறவேண்டிவருகிறது. அவைப் போலத்தான் பழைய கழிதலும், புதியன புகுதலும், வழு அல்ல - அது கால வகை.

காலம் ஒன்றும் மாறவில்லை, அது சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது. மனிதன்தான் மாறிப்போனான்.

பிற்படுத்தப்பட்டவர்கள் என்றால், கல்வி, தொழில், அந்தஸ்து, பொருளாதாரம், அரசு அலுவலகங்களில் இடம், எனும் இவைகளிலெல்லாம், பிற்படுத்தப்பட்டு தாழ்நிலை தரப்பட்டு, கவனிப்பாரற்று ஓரவஞ்சனையாக, நடத்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு, உழல்பவர்கள்.
(திராவிடநாடு - இதழ்)

நம்பிக்கை என்பது சிறு புயல்காற்றில் துவளும் மென்மலரல்ல. அடிபெயரா இமயம் போன்றது.

அறம் வெல்லும், நிச்யமாக வெல்லும். அறம் ஆர்பரிக்காது. அத்துமீரிய காரியத்துக்கு, மக்களைச் செலுத்தாது; அதன் பயணம் துரிதமாக இராது! ஆனால் தூய்மையானதாக இருக்கும். அறம் நிச்சயம் வெல்லும். ஆனால் அது கடுமையான காணிக்கைகளைக் கேட்கும்!
(திராவிடநாடு - 21.10.1956)

தீண்டாதவர்கள் - ஊரார் சொத்தைத் தீண்டியதில்லை. வஞ்சனையைத் தீண்டியதில்லை. சூது சூழ்ச்சியை தீண்டியதில்லை, பாபத்தைத் தீண்டாதவர்கள்.
(சிவாஜி கண்ட இந்து ராஸ்யம் - நாடகம் 1945)

பகுதி: 1 2 3 4 5 6 7 8 9 10

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு
பொருளாதாரம்
|
பெண் | சமுதாயம்முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai