அண்ணா களஞ்சியம்

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு
பொருளாதாரம்
|
பெண் | சமுதாயம்


சமுதாயம்
பகுதி: 8

பகுதி: 1 2 3 4 5 6 7 8 9 10

நம் நாட்டில் படித்தவர்களைவிட, பாமர மக்கள், படிக்காத மக்கள் அதிகம் உள்ளனர். உங்களில் பலருடைய பெற்றோர்கள் பள்ளிக்கூடத்துக்கே சென்றிருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட நிலையில் நீங்கள், இன்றய மாணவர்கள் - உங்கள் பாமர மக்களுக்கு நன்மை கிடைக்க ஏதாவது ஒன்றைக் செய்ய வேண்டும்.

ஒரு பெருங்குறை உள்ளது நம் நாட்டு மக்களிடம். அறமொழித்து, பொருள் பெறுவார் தம்மை இகழ்ந்திருத்தல் எனும் இயல்பு எழுந்திடுவதில்லை. எவ்வழி அவர் சென்று எத்துணை சூதுடனோ எளியோரை ஏய்த்து பொருள் பெற்றிடினும், அவர் பெற்ற பொருளின் அளவு எண்ணி ஏத்துகின்றார். அவறாற்றல் அதுவென்று போற்றுகின்றனர். அடிபணிந்து நின்றிடவும் முயல்கின்றனர். அது கண்டு பெரும் பொருள் குவித்திட்டோன் என்பதனால். அவனி தூற்றும் என்று அஞ்சிக் கிடந்தேன் சின்னாட்கள் அது தவறு, மிகத் தவறு, கொல்லும் புலிமுன் எவரேதான் துணிந்து நிற்பர். கோலம் காட்டும் மானெனின் பிணைத்திடத் துடிப்பர். இப்புவியின் இயல்பு இது என்று இறுமாந்துக் கிடக்கின்றனர். மற்றும் சிலர் இம் முறையில் நாமும் முன்னேற வேண்டுமென்று முனைகின்றனர். அநீதி தானும் ஒன்றுக்குப் பத்தாகப் பெருகி நாட்டை காடாக்கிவிடுகிறது.
(28.09.1965)

இன்றய சமுதாயம் ஓர் வழுக்கு நிலம் போன்றது. வழுக்கு நிலத்தில் ஒருவன் எத்தனைக் காலம் விழிப்போடு நடக்க முடியும்? கனத்த காற்றடித்தால் அவன் வழுக்கி விழுவது திண்ணம். ஆகவே அவன் வழுக்கு விலத்தை செம்மைபடுத்துவதுதான் சிறந்த வழி. மாற்றி அமைப்பதுதான் மனதிற்கேற்ற மார்க்கம். அதுதான் என்றும் வழுக்கி விழாதிருக்கும் வழி!
(நல்ல தீர்ப்பு - பொழிவு - 19.02.1945)

ஆஹா என்ன அருமையான வாசனை! கம கமவென்று வீசுகிறதே! என்று பேசுகிறோம். மல்லிகை மணத்தில் மனத்தைப் பறிகொடுக்கிறோம். ஆனால் தோட்டத்துச் சொந்தக் காரனோ நமக்கு விரோதி! விரோதமிருக்கிற காரணத்தால் மல்லிகையின் மணம் கெடுவதுமில்லை. அந்த நறுமணத்தில் நாம் இலயிக்காமலும் இருப்பதில்லை, பாராட்டாமலும் இருப்பதில்லை. நாம் எதிர்ப்பது ஒரு திருப்பணி என்று கருதிக்கொண்டுள்ள பலருக்கு சுய மரியாதை இயக்க வாடை, மாற்றானுடைய தோட்டத்திலே மலர்ந்துள்ள மல்லிகையாகிறது மகிழத்தான் செய்கிறார்கள். வெளியே பேசும்போதோ வேறாகிப் பேசுவார்கள்.
(மாற்றானின் மல்லிகைத் தோட்டம் - கட்டுரை - 11.11.1945)

ஒரு நாட்டின் நிலை அதன் நினைப்பை உருவாக்குகிறது. உன்னத நிலையில் உள்ள நாட்டின் நினைப்பு உயர்ந்திருக்கும். தாழ்ந்த நிலையில் உள்ள நாட்டின் நினைப்பு தாழ்ந்திருக்கும். நிலை தாழ்ந்திருந்தால், நினைப்பும் தாழ்ந்திருக்கும். நிலைக்கேற்றபடி நினவிருக்கும்.
(நிலையும் நினைப்பும் - பொழிவு)

இன்னும் சாதி இருக்கிறது. பேதம் போக்கப்படவில்லை. ஆண்டையும் அடிமையும் இருக்கிறார்கள். வைதீகம் என்னும் நோய் இருக்கிறது. இன்னும் மாறவில்லை என்பதைக் காண்பார்கள். வைதீகம் என்னும் நோய்க்கு டாக்டர் மருந்து கொடுத்து குணப்படுத்த முடியாது. பின் யாரால் அந்த நோயைப் போக்க முடியும். வாலிப பருவத்திலுள்ள மாணவர்களால்தான் முடியும். பகுத்தறிவு எனும் ஒரே மருந்தால் வைதீகம் என்னும் நோயைப் போக்கமுடியுமே தவிர வேறு எந்த மருந்தாலும் போக்கமுடியாது.
(நிலையும் நினைப்பும் - பொழிவு)

மணம் செய்துகொள்வது மாடு பிடிப்பது போல இருக்கும்வரை, வாழ்க்கையில் பூரா இன்பத்தையும் நுகர முடியாது. அதனால் காதல் இன்பம் சுவைத்தறியாத ஆடவரும் பெண்டிரும் காமச் சேற்றில் புறகின்றனர். அதில் விளைவும் முட்புதரே விபச்சாரம்.
(தங்கத்தின் காதலன் - சிறுகதை - 09.07.1939)

ஆறு படை விழா! விதக்காது விளைந்த கழநியிலிருந்து வந்த செந்நெல்லைக் குத்தாது, அரிசியாக்கி வேகாது வடித்தெடுத்து உண்ணாது, காக்கைக்கு வீசிடும் உறுத்தல் விழாவல்ல - உழைத்தோம், பலன் கண்டோம். கண்ட பலனை மற்றவருடன் கலந்து உண்டு மகிழ்வோம், என்ற உயரிய நோக்குடைய விழா!
(திராவிடநாடு - கிழமை இதழ் பொங்கல் மலர் - 14.01.1951)

அம்மையை அய்யன் மணம் செய்துகொண்ட நாளல்ல, ஆவுக்கு மோட்சம் அளித்த நாளல்ல, சூரனைக் கொன்ற விழாவல்ல, தாளில் வீழ்ந்து தட்சணைத் தரவேண்டிய நாளல்ல - தமிழரின் தனித்திருநாள் இது - தவறிய பாதையில் புகுந்த தமிழர் வாழக்கமாகக் கொண்டாடும் பலரகப் பண்டிகைகள் போன்றதல்ல!
(திராவிடநாடு - கிழமை இதழ் - பொங்கல் மலர் 14.01.1948)

பட்டம் பெற்றிடுவோர் குறிக்கோளற்று இருந்திடின் நாடு நிலை குலையும், எதிர்காலம் எழில் உள்ளதாக அமையாது. குறிக்கோளற்ற நிலையே மனக்குழப்பம், கொதிப்பு, அதிர்ச்சி, ஆர்பரிப்பு, ஒழுங்கற்ற செயல்கள், ஊறுவிளைவுக்கும் போக்கு கலகம் விளைவித்தல், கட்டுக்கு உட்பட மறுத்தல் ஆகியவை எழக் காரணமாகிறது. இன்று எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களானாலும், உலக நிகழ்ச்சிகளைக் கொண்டு முன்னேற விரும்புகிறார்கள். தெளிந்த அறிவு காட்டும் நல்ல போக்கின்படி நடக்கத் துணிவு கொண்டு உள்ளனர். எனவேதான் நாள்தோறும் இப்படிப்பட்ட சீர்திருத்தத் திருமணங்கள் நடைபெற்றுவரும் நல்ல நிலமை ஏற்பட்டுள்ளது.

ஆணும் பெண்ணும் சரி, முன்னதாகவே ஒருவரைப் பற்றி மற்றவர் நன்றாக அறிந்து, தெரிந்துகொண்டபின்னர்தான் திருமணம் நடைபெறவேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம் செய்கிறோம்.

பகுதி: 1 2 3 4 5 6 7 8 9 10

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு
பொருளாதாரம்
|
பெண் | சமுதாயம்முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai