அண்ணா களஞ்சியம்

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு
பொருளாதாரம்
|
பெண் | சமுதாயம்


சமுதாயம்
பகுதி: 7

பகுதி: 1 2 3 4 5 6 7 8 9 10

» இன்று மனிதனைக் காட்டிலும் திறமையாய் பணியாற்றும் நவீனக் கருவிகளைப் பற்றிக் கூறுகிறார்கள். அதையும் மனிதன்தான் செய்தான் என்பதை மறந்துவிடலாகாது.

» காதல் சந்திரன் போல் ஜோதியாகவும் இருக்கும் சில சமயம் நெருப்பாகவும் எரிக்கும்.

» மழையாம் மழை! மழை நம்மை என்ன செய்யும்? என்று எருமை கூறுவதில்லை. அதன் நடவடிக்கை அதனுடைய நினைப்பை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

» மாட்டு வண்டி ஓட்டும்போது கடகட என்ற சப்தம் எவ்வளவு எழுந்தாலும் யாரும் கவனிப்பதில்லை. ஆனால் மோட்டார் வண்டி ஓடும்போது ஒரு சிறு சப்தம் கிளம்பினாலும் உடனே அது என்ன என்று கவனிக்கிறார்கள். காரணம் என்ன? மாட்டு வண்டியின் விலை குறைந்தது. மோட்டார் வண்டியின் விலை உயர்ந்தது.

» வீராவேசங்கொண்ட வேங்கையானாலும் சதுப்பு நிலத்திலே, படுகுழியிலே வீழ்ந்துவிட்டால் சாகத்தானே வேண்டும்.

» உழைத்துதான் வாழவேண்டும் - வாழ்வு உரிமை உழைப்பு கடமை, ஆனால் உழைத்தும் வாழ முடியவில்லையென்றால் அது சமூகத்தில் உள்ள கொடுமைகளைக் காட்டுகிறது.

» தண்டவாளத்தின் மீது சென்றிடும் இரயில் போகும்போதே தண்டவாளத்தையே தேய்த்துவிடுமானால் பிறகு பயணம் எப்படி நடந்திடும்? அது போலவே உழைத்து உருகுலைந்து போனால், ஒருவன் வாழ்க்கையிலே இன்பம் பெறமுடியாத நிலையினால் உழைப்பு அவனைப் பொறுத்தமட்டில் உயிர் குடிக்கும் நஞ்சாகிறது. உழைத்த பிறகு அவர் வாழ்வை அனுபவிக்கும் நிலையினனாகவும் இருந்திடவேண்டும்.

» மத்தாப்பு கொளுத்தும்போது எவ்வளவு வண்ணம்? எத்துணை ஒளி? ஆனால் எவ்வளவு சீக்கிரம் துர்ந்து போய்விடுகிறது! சிறு அகல் விளக்கானாலும், பரவாயில்லை மத்தாப்புபோல் அல்லாமல் நின்று நிதானமாக ஒளிவிட்டு இருளை அகற்றுகிறது.

» முரட்டுதனத்தினாலே மட்டுமே தீய காரியங்களைச் சாதித்துக் கொள்வது என்ற முறை இப்போது வெகுவாகக் குறைந்துவிட்டது! துய காரியம் குறையவில்லை! முறை மாறிவிட்டிருக்கிறது.

» அரசுக்கு அழகுதர மக்களின் ஒழுக்கம் தேவை. மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக வாழ சமதர்ம முறையில் அமைந்த வாழ்க்கைப் பாதை தேவை.

» நெஞ்சில் உரமும், நேர்மைத் திறமும் கொண்ட பருவம், அச்சம், தயை, தாட்சண்யம் அற்ற பருவம். ஊக்கமும், உற்சாகமும், உணர்ச்சியும் நிறைந்த காரியம் ஆற்றும் கருத்துள்ள பருவம் மாணவர் பருவம்.

» துணிக்கடைக்குச் சென்றால் கண்ணுக்குப் பிடித்தமான எல்லா துணிகளையுமேவா வாங்குகிறோம். அதுபோலத்தான் மனித வாழ்விலும் மனம் நாடுவதோ பல; கிடைப்பதோ ஏதோ ஒன்று.

» ஆங்கில நாட்டுப் பணத்தை கடனாகவும், இனாமாகவும் பெற்று தொழில் வளர்த்திட முனைவதைத் தேசிய தன்மானத்தைக் கெடுப்பது எனக்கொள்ளவேண்டும்.

» கூடிவாழ்வதால் கோடி இன்பம் - இனிய எளிய இலட்சியம் கூடி வாழ்வோம். உன்னிடம் உள்ளது எனக்கு. என்னிடம் உள்ளதும் எனக்கு என்று முறை வகுத்திடல் கூடி வாழ்வதாகாது.

» அறிவாலும் ஆற்றலாலும் ஆகாத காரியம் இல்லை அறிவும், ஆற்றலும் சேர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயமாகக் கிடைக்கும்.

» நமக்கு யாரும் கேடு செய்திட முடியாது. நமக்கு நாமே கேட்டினைத் தேடிக்கொண்டால் தவிர; பிறர் எவரும் நமக்கு கேடு விளைவித்திடமாட்டார்கள்.

» ஏழைகளுக்காகப் பேசிடும் கருணாமூர்த்திகள் பன்னெடுங்காலமாகவே இருந்து வருகிறார்கள். ஏழைகள் தொகையோ வளர்ந்துகொண்டே இருக்கிறது. பணம் சர்வரோக நிவாரணியல்ல. சேவை, தன்னல மறுப்பு இவைகள் மூலமாகவே பலன் காண முடியும்.

» விளக்கு இருக்குமிடத்தில் ஒளி இருக்கவேண்டும். அது போலவே ஆடவர் இடத்திலே அணங்குகள் இருக்கவேண்டுவது அவசியம் என்பதுதான் வாழ்க்கை.

» உணர்ச்சியால் உந்தப்படுபவன் மனிதன். அந்த மனிதன் அருமையான இயந்திரம்.

» ஏழை உலகத்து கெட்ட நடவடிக்கை மொந்தையிலே இருக்கிற கள்ளு மாதிரி; பொங்கி வழியும். பணக்கார உலகத்து கெட்ட நடவடிக்கை கார்க் கோட்ட சீசாவிலே ஊத்தி அனுப்புகிற சரக்கு மாதிரி, மங்கி வாழ்கிறது.

» இரக்கம் என்றால், பிறருடைய நிலமை கண்டு வேதனையைக் கண்டு பரிதாபப்படுவது! மனம் இளகி அவர்களுக்கு இதம் செய்வது.

» கடலுக்காக அல்ல, கடற்கறையிலிருக்கின்ற மக்களுக்காக காற்றடிக்கிறது.

» விளக்கை ஏற்றினால் தன் எதிரிலே இருக்கின்ற இருட்டைப் போக்க ஒளி பயன்படுமே தவிர, அதனடியில் இருக்கின்ற நிழலை போக்க முடியாது.

» ஒரு நல்ல நண்பனைப் பெறுவதற்கு ஒரே வழி, நீயும் நல்ல நண்பனாக இருப்பதே ஆகும்.

» ஒரு நல்ல நூலைப் போல, சிறந்த நண்பனைக் காட்டிலும் நெருங்கிய உறவினர் எவரும் இல்லை.

» மக்களிடையே மதிப்பை இழந்து, மாண்பை இழந்து கருணையை இழந்து இருக்கும் சோற்றுத் துருத்திகளால் நாட்டுக்கு ஏதாகிலும் பயன் உண்டா?

» எதையும் சரியா, தப்பா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். சரியில்லாததைத் தூக்கி எரியவேண்டும்.

» மதிப்பு ஒரு காலத்தில் மறையலாம். மரியாதை ஒரு நாளில் குறையலாம். ஆனால் அன்பு மட்டும் என்றும் நிந்தரமானது.

» அடிமைத்தனம் ஒரு கூட்டுச் சரக்கு.

» நம் நாட்டிலே அதிகமாகச் செலவழியும் புத்தகங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று பஞ்சாங்கம், மற்றொன்று இரயில்வே கைடு. இந்த நிலை மாறவேண்டும்.

» அமைதியிலே இரண்டு வகை உண்டு, ஒன்று விவரம் தெரியாமல் இருக்கிற அமைதி. இன்னொன்று எல்லா விவரங்களையும் தெரிந்திருக்கும் அமைதி.

» ஒரு ஆள் தனிப்பட்ட ஒருவரின் கெட்ட குணத்தை ஆதாரமாகக் கொண்டு அந்த ஆள் எந்த இனத்தவனோ, அந்த இனத்தையே அக்குற்றச்சாட்டுக்கு இலக்காக உள்ளாக்குவது மடைமையாகும்.

» ஓய்வு என்பது ஒரு உரிமை, வேலை செய்தவன் தன் அலுப்பைப் போக்கிக்கொண்டு இழந்த உற்சாகத்தை மீண்டும் பெற்று மறுபடியும் வேலையிலே ஈடுபடுவதற்கான, மாமருந்து. தூக்கத்தால் மட்டும் பாட்டாளியின் மனதிலே உள்ள சோர்வு போய்விடுவதில்லை.

» ஒரு மனிதன் வாழ்வதற்காக உழைக்கிறான். பிறருக்கு வாழ்வு அளிக்கவும் உழைக்கிறான். ஆனால் அந்த உழைப்பே அவனை உருகுலையச் செய்து, வாழ்வை நுகர முடியாதபடி ஆக்கிவிடுமானால் அவன் உழைத்து என்ன பயன்?

» ஏழை மக்களின் வாழ்வெனும் பாலைவனம், சோலைவனமாகிடவேண்டும். வருங்காலச் சந்ததிகளாவது வளம் பெற்று மகிழ்ந்திடவேண்டும். பணமல்ல பண்பாடே, படித்தவர்களிடமிருந்து சமுதாயம் எதிர்பார்ப்பது! நிலையில்லாத செல்வம் வேண்டாம்; என்றும் நிலைக்கும் தொண்டுள்ளம் கொண்டிடுக.

» உழைக்காமல் ஒரு திமையும் வராது. சிலபேருக்கு வரலாம், சாதுக்களுக்கும் சன்னியாசிகளுக்கும், அது கூடச் சில வருடங்களுக்குப் பிறகு நிலைப்பதில்லை என்று அந்த வட்டாரத்தில் உள்ளவர்களே சொல்லிக்கொள்ளுகிறார்கள். நம்மைப் போன்ற சாமான்ய மக்கள் உழைப்பின் மூலம்தான் அந்தத் திறமையைப் பெற முடியும்.

» மனிதன் மனிதனாக வாழவேண்டும். சூதுமதியும் சுரண்டலும் அறவே அகன்றிடல்வேண்டும். சமுதாயத்தில் மண்டிக் கிடக்கும் அறியாமை இருளகற்றி அறிவுச்சுடர் கொளுத்திட எண்ணும் அறிவியல் வாதிகளை ஊரும் உலகமும் உரத்தக் குரலிலே இழித்தும் பழித்தும் பேசிடக் காண்கிறோம்.

» இயற்கை என்னும் பல்கலைக் கழகத்திலே நாம் கற்றுணர வேண்டிய பாடங்கள் பல உண்டு. இயற்கையோடு அளவளாவ நமக்கெல்லாம் நேரமுமில்லை, நினைப்புமில்லை. நகர வாழ்க்கையும் நாகரிகப்போக்கும் மாறிவிடும்.

» தோல்விக்குக் காரணம் மனதினிலே தெளிவான திட்டமான கொள்கையும், அதைக் கடைப்பிடித்தாக வேண்டும் என்ற நேர்மையும் இருப்பதில்லை. அதனால் அடுத்து என்ன செய்வது என்பதுபற்றி முடிவெடுக்க இயலாமல் குழம்பிக் கிடக்கிறார்கள். அந்தக் குழப்பம் அவர்களின் திறமையை மண்ணாக்கிவிடுகிறது.

» என்றாவது ஒரு நாள் நமக்கு சங்கடங்கள் வரும் என்று எதிர்பார்க்காமல் இருப்பவன் ஏமாளி. ஆனால் சதா அதனையே எதிர்பார்த்து வருந்திக்கிடப்பவன் கோழை.

» உண்மையானத் தொண்டு தன்னலமற்றதாக இருத்தல் வேண்டும். பிறரையும் மகிழ்ச்சியுடன் வாழச் செய்தால்தான் நாம் மகிழ்வுடன் வாழ முடியும்.

» வேலை செய்யும் மனப்பான்மையற்றவர்கள் காலத்தைக் கொலை செய்வது ஓய்வு அல்ல - சோம்பல்.

» ஒருவரை ஒருவர் கண்டவுடன் முகமலர்ச்சி, சிரமமின்றி எற்படவேண்டும்; பயன் கருதி அல்ல. அர்த்தமற்றும் அல்ல! கண்டதும் களிப்பு - நம்மைப் போல் என்ற நினைப்பிலிருந்து அந்தக் களிப்பு மலரவேண்டும் - அதுவே தோழமை.

» மனிதனுக்குள் பேதத்தையும், அச்சத்தையும் மூட்டக்கூடிய, வளர்க்கக்கூடிய எந்த ஏற்பாடும் சுதந்திரத்தின் பரம விரோதிகள்.

» போற்றவேண்டியவை உண்மை, உழைப்பு, உயர்வு. பின்பற்றவேண்டியவை கனிவு, பணிவு, துணிவு. பேணப்படவேண்டியவை கடமை, கண்ணியம், கட்டுப்பாடு.

» செல்வத்துள் எல்லாம் சிறந்த செல்வம், கருத்துச் செல்வம் அடுத்து வரும் தலைமுறையினருக்கு அத்தகைய செல்வத்தை நாம் விட்டுச் செல்லவேண்டும். அதற்காக பணியில் ஈடுபட்டால் சமுதாயம் நன்கு வாழமுடியும்.

» மலர் கொண்டு மாலை தொடுத்தலில் கைத்திறன் முழுதும் காட்டி, காகிதப் பூமாலை தொடுத்தால் பயன் என்ன? மாலைக்கு முதற்பொருள் மணமுள்ள மலர். அதுபோல பேச்சுக்கு முதற்கொருள் பயனுள்ள கருத்துக்கள்.

» பாட்டாளிகளின் போராட்ட முயற்சியில் இடையிலே ஒரு நாள் ஓய்வு பெற்று, நின்று, சென்ற கால, வருங்கால கணக்கு பார்க்கும் திருநாளே இந்த மே மாதம்.

பகுதி: 1 2 3 4 5 6 7 8 9 10

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு
பொருளாதாரம்
|
பெண் | சமுதாயம்


முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai