அண்ணா களஞ்சியம்

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு
பொருளாதாரம்
|
பெண் | சமுதாயம்


சமுதாயம்
பகுதி: 6

பகுதி: 1 2 3 4 5 6 7 8 9 10

மகிழ்ச்சி
மகிழ்ச்சியே மயக்கம், மன்னுயிரைத்தான் மாய்க்கும் என்று கூறினார் அல்லர் நம் தமிழர் எனினும் மகிழ்ச்சியே வினை. வேறு செயல் வேண்டாம் என்றிருத்தல் நன்றன்று வினை வித்து! மகிழ்ச்சி விளைவு! அந்த விளைவு அவ்வளவும் தின்று தீர்த்துவிட்டால் பின் விளைக்கு வித்து ஏது? எனவே விளைவு அளிக்கும் சுவையினை உண்டு, மகிழ்ந்திருப்பதுடன் இருந்திடாது வித்து எடுத்து வைத்து, மீண்டும் வினை மேற்கொள்ள வேண்டும். அங்ஙனம் முறை வகுத்துக் கொண்டால்தான், வாழ்வில் வளம் காண வகை கிடைக்கும். தொடர்ந்து மகிழ்ச்சி, மயக்கமாகுதல் கூடாது! மது மாந்திடும் மந்தி போன்றதன்று மனித குலம்! மகிழ்ச்சி, புது முயற்சிகட்கு ஊக்குவிக்கும் மாமருந்து, மதுவன்று!
(தம்பிக்கு - திராவிடநாடு - 14.01.1961)

வினை-விளைவு
ஒரு விளைவு, மறு வினைக்கு துவக்கம், மகிழ்ச்சி, வினையின் இறதி முடிவல்ல! வினைப்பயன! புதிய வினைக்கு அழைப்பு! புதிர் அல்ல, புண்யம் பேசிடுவோர் கூறிடும் தத்துவமும் இஃதல்ல. பொருள் பதிந்த உண்மை தமிழருக்கு இது புதிதுமன்று! (இல்லறம் இன்பப்பூங்கா - திராவிட நாடு - 14.01.1961)

வாழ்க்கை
வாழ்க்கை ஓர் சுதந்திரமானச் சொல் ஆனால் சுகந்தேடிகள் இதைப்பற்றி சிறிதும் சிந்திப்பதில்லை! பிறந்தோம், பிறர் இருக்கின்றனர், உழைக்க வந்ததை வைத்து உடல் அலுக்காமல் வாழ்வோம். அதுதான் நாம் பிறந்ததின் பயன் என்ற ஊதாரிக் கொள்கை அவர்கள் உள்ளங்களில் ஊரிப்போயிருப்பதால்! இது வாழ்க்கையின் ஓர் நிலை. மாயப் பிரபஞ்சமிது. பொல்லாதது. மானிட வாழ்விது நில்லாது. காயமே இது பொய். காற்றடைத்த பை என்ற குருட்டு வேதாந்தம். இருட்டுக் கொள்கை. மக்களுடைய மனதிலே இடம் பிடித்து, அமர்ந்து ஆட்சி நடத்தும் காரணத்தால், பலருக்கு வாழ்க்கை என்பது பற்றி சிந்திக்கும் நினைவு கூட ஏற்படுவதில்லை. இது பிறிதொருநிலை. வாழ்க்கை என்ன, இது எப்படியேற்பட்டது. நாம் எல்லாம், யார்? மனிதன், மனிதவர்கம் என்றெல்லாம் கூறுகிறோமே அப்படி என்றால் என்ன, என்பது பற்றி எண்ணியது கூட இல்லை பலர். இது வேறோர் பக்கம்!
(1957)

பாமரர்
வகை அறியாதவர் அல்ல பாமரர்; காலம் வரட்டும் என்று காத்திருக்கும் பொறுமைசாலிகள். அறிவற்றவர்கள் அல்ல மக்கள்; ஆத்திரத்தை அடக்கிக் கொள்ள கற்றவர்கள். பிடி சாம்பலாகிப் போனவர்கள் அல்ல அந்த மக்கள்; நீறு பூத்த நெருப்பாகி நிற்பவர்கள்!
(ஐந்து கால் பசு - திராவிடநாடு - 16.10.1960)

இடிந்த மாளிகை, இரசம் போன கண்ணாடி, ஊசல் பண்டம், உடைந்த வாள், பிரிந்து போன கூடை, திரிந்த பால் இவைகள் ஏளனம் அல்ல! தம்பி, இரக்கத்தை எழுப்பத்தக்க பொருட்கள். காலத்தாலும், கருத்தற்றப் போக்காலும், கயவன் கரம் பட்டதாலும், பகையும் படியவும் கெட்டதற்குச் சான்றுகள்.
(பொழுது விடிந்தது - கடிதம் - 05.11.1961)

இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்
போர் என்பதே வெறிதான் - மனிதன் நிலை தடுமாறிடும்போது - அறநெறி மறைந்திடும்போது விளைவதே போர்! போர் எந்த நோக்கத்துக்காயினும் சரி, காரணம் எத்துணை உண்மையானதாக இருப்பினும், நோக்கம் எவ்வளவு தூய்மையானதாக அமையினும், போர் வெறுக்கத் தக்கதே! கண்டிக்கத் தக்கதே! ஒரு நாடு இழைக்கும் கொடுமை, கொண்டிடும் அநீதியான போக்கு என்பவைகளை தண்டிக்க, களைந்தெறிய நடத்தப்படும் போர் எனினும் கூடப் போர் மனித குலத்துக்கு இழைக்கப்படும் துரோகம், என்பதிலே, அய்யமில்லை. எத்துனை புனிதத் தன்மையுடையது என்று எடுத்து விளக்கப்பட்டாலும், போர் சூழ்நிலை ஏற்பட்ட பிறகு, மக்களிடம் விரும்பத்தகாத வெறுப்புணர்ச்சிகள், கிளம்பிவிடுவதை தடுக்க இயலுவதில்லை. அதனை கவனிக்கும்போது போர் மனித குலத்துக்கு கேடு பயக்கும் என்பதை மறுக்க இயலாது என்று பொது நீதி பேசுவோர் உளர். அந்தப் பொது நீதியை நிலை நாட்டுவது முடியாததாக இன்று வரை இருக்கிறதே தவிர, அதன் மாண்பினை, உண்மையினை, மறுத்து பேசுவோர் எவரும் இல்லை.

மாறுதல் இருக்கிறதே தம்பி, மிக மிகச் சுவை தருவது. ஒன்று மற்றொன்றாகிறது. அதாவது தம்பி, மாறுதல் வளர்ச்சியால் ஏற்படலாம்; கலப்பால் எற்படலாம். களைவதால் ஏற்படலாம், மாறுதல் வளர்ச்சியால் ஏற்படலாம்; மாறுதல் உண்மையானதாகவும் இருக்கலாம், போலியாகவும் இருக்கலாம்; . . . . பலன் தரும் மாறுதல், பொருளற்ற மாறுதல் எனும் வகைகள் கூட காணலாம். . . . எதிர் பார்த்தது, எதிர் பாராதது என்ற கூட கூறலாம்.
(கன்னி விதவையான கதை - சிறுகதை - திராவிடநாடு - 14.01.1961)

நெடி வேறு, மணம் வேறு அல்லவா? மணம் மெள்ள கிளம்பும், வேகமின்றி பரவும். ஆனால் நீண்ட நேரம் நிலைத்திருக்கும். மனதுக்கு நிம்மதியைத் தரும். நெடி சடுதியில் கிளம்பும் ; துளைக்கும், பரவும். மிக விரைவிலே மடிந்துபோகும். கோபம் நெடி போன்றது, கொப்பளிக்கும், துளைக்கும், எனினும் மடிந்து போகும். விரைவிலா, நீண்ட காலத்துக்குப் பிறகா என்பது இயல்புக்குத் தக்கப்படி. மணம் போன்றது, பொறுத்துக் கொள்ளும் பண்பு. தாங்கிக் கொள்ளும் இயல்பு. எளிதில் கிடைக்காது. கிடைத்தால் சடுதில் மடியாது!
(கன்னி விதவையான கதை - சிறுகதை - திராவிடநாடு - 14.01.1961)

இருண்ட இந்தியவில் எத்தனை முறை வேண்டுமானாலும் ஆண் மகன் திருமணம் செய்துகொள்ளலாமே. பெண்தானே, பருவ மங்கையாயினும், பட்டாடை உடுத்திக்கொண்டு பல்லாங்குழி ஆடி விளையாடும் சிறுமியானாலும் மணமாகி, பின்னர் கணவன் பிணமானால், விதவையாகிவிடவேண்டும். இளமை இருக்கலாம். ஆனால் இன்ப வாழ்வுக்கு அவள் அனுமதி பெற அந்தக் கூட்டம் அனுமதிப்பதில்லை.

பால்ய பிதவையான அந்தப் பெண்ணுக்கு சந்தோசம் எப்படி இருக்க முடியும்? விசித்திரமான நிலமை இது. அந்தப் பெண்ணின் நோய்ப் போக வேண்டுமானால் அவளுக்கு நான் மருந்து கொடுத்து பயனில்லை. சமூகத்தில் உள்ள பித்தம் தெளிய மருந்து தரவேண்டும். அப்போதுதான் அபலைகளை அலைக்கழிக்கும் அந்த நோய்ப் போகும்.
(கன்னி விதவையான கதை - சிறுகதை - திராவிடநாடு - 14.01.1961)

இருளிலிருந்து ஒளி பிறந்து, ஒளி மீண்டும் இருளாகும், இரைச்சலிலிருந்து ஒலியாயிற்று. ஒலி மீண்டும் இரைச்சலாகிவிடும். குழப்பத்திலிருந்து ஒழுங்கு பிறந்தது. ஒழுங்கு மீண்டும் குழப்பத்துக்கு இடம் கொடுத்துவிடும். அதுபோல சூன்யத்திலிருந்து வாழ்வு பிறந்தது. வாழ்வு மீண்டும் சூன்யமாகிவிடும் என்று கூறுவோர் ஓர் வகையினர்.

இவ்வகையினரிலும் பல வகையினர் தோன்றினர். இன்னும் தோன்றியபடியே உள்ளனர். அந்தப் பலவகையில் ஒரு வகையினர் நிலையற்ற வாழ்வு இது. அறியப்போகும் அவனி இது. எனவே இதிலே ஈடுபாடு கொள்வதும், மூழ்கிக்கிடப்பதும் தேவையற்றது. தீதும் பயப்பது, தவிர்க்கப்படவேண்டியது என்று கருத்தை மேற்கொண்டு உலகை வெறுத்து ஒதுங்கியவர்கள். உலகை வெறுத்து ஒதுக்கியவர்களில் ஒரு சாரார், அந்த நிலையிலேயும் எண்ணங்களை மடியச் செய்திடும், இயல்பினை பெற முடியாதவராகி உலகை வெறுத்ததன் பயனைக் காண முற்பட்டனர் - மற்றவர்க்கு எடுத்துக் கூற தலைப்பட்டனர் - துறவு முறை என்பது ஏற்பட்டது. இந்த துறவு முறையிலும், காயத்தின் கரமும் கருத்துக்களின் மோதுதலும், பல உருமாற்றங்களையும், உரை மாற்றங்களையும் உணர்ச்சி மாற்றங்களையும் புகுத்திடவே துறவு முறைப்பற்றிய மதிப்பீடு எழவேண்டி நேரிட்டது. துறவு, துறவுதானா? துப்புரவுதானா? வேடமா என்ற வினாக்கள் எழலாயின! விடைகள் தரப்பட்டன! தத்துவங்கள் தலை தூக்கின. அவைகட்கு குழுக்கள் ஏற்பட்டன! மதங்களாயின! மதங்களிடையே மோதல்கள் மூண்டன! இருள்! இரைச்சல், குழப்பம் மீண்டும் படையெடுத்தன. அழிவு, தன் அகன்ற வாயைத் திறந்த பசி தீரப் பலி கேட்டது, பெற்றது! பலியானவர்கள் போக மற்றவர், நமக்குள் நடக்கும் சமர் போதும், இனி நமக்கும் அறிவுக்கும் மூண்டுவிட்ட சமர்தான் முக்கியம் என்ற தெளிவு பெற்று அவரவர்க்கு விருப்பம் உள்ளது. அவரவருடையது, என்ற ஏற்பாட்டினைச் சொய்துபொண்டு, இருளும் இரைச்சலும் குழப்பமும் பெற இருந்த வெற்றியைத் தடுத்து நிறுத்தினர். மதங்கள், முறைகள் ஒழுங்குகள், சட்ட திட்டங்கள் இவை பல்வேறு வகைகளாய், ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுக்கும் மனமற்ற நிலையில், ஆனால் ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்ளும் போக்கினை கண்மூடித்தனமாக மேற்கொள்ளாமல் இருந்திடக் காண்கிறோம்.

அவ்வப்போது காணப்படும் கசப்புணர்ச்சி கலவர உணர்ச்சி, பகை உணர்ச்சி ஆகியவை ஓர் போது ஆதிக்கம் செலுத்திவந்த, இருள் இரைச்சல், குழப்பம் ஆகியவைகள் இழந்த இடத்தைத் திரும்பப் பெற ஏவிவிடும் கணைகள் எனலாம். பெரும் போர் ஓய்ந்திருக்கிறது. போர் உணர்ச்சி மடிந்துவிடவில்லை என்பதனையே இந்நிலை எடுத்துக் காட்டுகிறது.

போல் மூளாது என்று எண்ணி நிம்மதி பெறத்தக்க நிலை இல்லை. என்றேனும் அத்தகைய நிம்மதி ஏற்படுமா? என்பது ஐயப்பாட்டுக்குறியது - எனினும் போர் நிறுத்தப்பட்டிருக்கிறது. விளைவு பற்றிய நடுக்கம், விளைவைத் தடுத்துப் பிடித்து நிறுத்திவைத்திருக்கிறது.
(இருளகல - கட்டுரை - 14.01.1962)

பகுதி: 1 2 3 4 5 6 7 8 9 10

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு
பொருளாதாரம்
|
பெண் | சமுதாயம்


முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai