அண்ணா களஞ்சியம்

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு
பொருளாதாரம்
|
பெண் | சமுதாயம்


சமுதாயம்
பகுதி: 5

பகுதி: 1 2 3 4 5 6 7 8 9 10

சிங்காதனம் என்பது ஒரு பாம்புப் புற்று. அதன் மீது அமர்ந்தோரை அன்னார் ஏமாந்த நேரத்தில் புற்றிலிருந்து கிளம்பும் பாம்பு பொல்லாத பற்களால் கடித்துக் கொல்லும்; கொல்லாமல் எப்படி இருக்கும்

வருமான வரி அலுவலகத்துக்காக கணக்கு காட்டுவதற்காக மூன்று விதமான கணக்குகள், மூன்று விதமான கணக்குப்பிள்ளைகள் பொய் கணக்கு எழுதி வெற்றிபெற்றுவிட்டால், ஆண்டவனுக்கு உற்சவத்தை பரிசாக அளிக்கிறார்கள், சர்க்காரையும் ஏமாற்றுகிறார்கள்.

மக்களின் ஒழுக்கம்தான் ஓர் அரசின் அச்சாணி போன்றது. ஒழுக்கம் நிறைந்த மக்களை சமதர்ம அரசால் மட்டுமே உருவாக்க முடியும்.

ஒரு நாடு இன்னொரு நாட்டை அடக்கிவைக்க முடியாது. அடக்கினால் எரிமலை கக்கும் மக்கள் மனமென்னும் கடல் பொங்கி வழியும். புரட்சிப் புயல் வீசும் அந்தப் புயலின் முன்பு எந்தக் கொடியவனாலும் நிற்க முடியாது.

மாலைக்கு மலர் தேவை. மலருக்கு தோட்ட வளம் தேவை. இதுபோன்றே ஆயிணங்களுக்குள்ள புன்னகையை ரசிக்க கட்டழகனுக்கு காதல் உணர்வு தேவை.

அற்ப ஆசை என்பது ஆந்தையின் கண்ணுக்கோ, பூனையின் கண்ணுக்கோ ஒப்பாக இருப்பதில்லை. கண்களை மறைத்து கருத்தை ஈரட்டாக்கும் காமத் தனமே அற்ப ஆசையின் பெட்டகம்.

ஊசியில் நூலை கோற்கும்போது அவசரப்படாதே, நிதானம் தேவை. வீடு பற்றி எரியும்போது அவசரப்படு, அத்தோடு மதியும் தேவை.

மனம் எனும் மாளிகையின் மந்த மாருதம் எத்தனை இரம்மியமானது. இம் மனம் எண்ணும் பெருமாளிகையில் அந்தியின் அழகொளிரும், காலையின் கவர்ச்சித் தென்றல் வீசும் நள்ளிரவின் குளிர் மயக்கம் கொப்பளிக்கும், நண்பகலின் வெற்றிக் கொதிப்பும் உண்டு.

சுதந்திரம், விடுதலையென்றால் சட்ட சம்பந்தமான சொற்களின் மாற்றம் என்றல்ல. வாலிபன் எண்ணுவது, புதிய மகிழ்ச்சி நாடி புதுக் கோலம் கொல்வது என்று கருதுகிறான். உண்மை அதுதான்.

வீரம் என்றால் இதுதான் வீரம் என்று அறுதியிட்டு உறுதிப்படுத்த இலக்கணம் சொல்ல முடியாது

மனதில் மாசு, மதவெறி, சாதி ஆணவம், சுயநலம் இவற்றை மக்கள் விட்டொழிக்கவேண்டும். அப்பொழுதான் நம் நாடு முன்னேறும்.

தனி மனிதனின் வழிபாடு நாட்டில் பெருகிக்கொண்டே செல்கிறது. பழைய கடவுள்கள் தூக்கி எறியப்பட்டு புதுக் கடவுள்கள் முளைத்துக்கொண்டு இருப்பார்கள்.

இலக்கியங்கள் நல்ல முறையில், நல்ல கருத்துக்களைப் போதித்திடும் வழியில் மனிதனது எண்ணங்களைப் பண்படுத்தும் வகையில் அமைக்கப்படவேண்டியது அவசியமாகிறது.

நல்ல தோழமை, நல்ல உரையாடல், இவை இரண்டுமே நல்லொழுக்க வாழ்வின் நாடி நரம்புகள்.

சுகபோகிக்கு அடிப்படைத் தத்துவம் தெரிவதில்லை. மன உளைச்சலை அடிமனத்தோடு அடக்கிக்கொண்டு, ஏழ்மை இருட்டில் இடறி விழுந்து கிடக்கும் சுகவாசியைக் கண்டு பிறந்த ஏனை உந்து சக்தியை அவனை சுகபோகி ஆக்கிவிட்டது.

விஞ்ஞானம் குழைத்தரைக்கப்பட்ட வண்ணச் சுண்ணம். அதனைக் கொண்டு அழகான பெண்ணின் உருவையும் தீட்டலாம். கோரமான குரங்கின் உருவையும் தீட்டலாம். குற்றம் கிண்ணத்தின் மீதா, அதைப் புனையும் ஓவியம் மீதா?

பெண்களுக்கு காதலைப் படித்தால் போதும், காதல் பிறக்கும். ஆண்கள் அதுபோல படிக்கவே தேவையில்லை. அவர்களுக்குத்தான் பெண்ணைக் கண்டாலே பித்தம் தானாகப் பிறந்திடுமே.

இதுவரை விஞ்ஞானத்தின் விருந்தை நாம் சுவைத்தவர்களே தவிர, சமைத்தவர்கள் இல்லை. வெளிநாட்டார் படைத்து, அழைத்தால் போய் அருந்திவிட்டு, பிறகு குறையும் கூறி இருக்கிறோமே தவிர நாமாக எதையும் கண்டுபிடிக்கவில்லை.

அசுத்த இரத்தத்தில் இருந்து விஷக்கிருமிகள் வீறுகொண்டு எழுவதுபோல, மிதவாதத்திலிருந்து தீவிரவாதம் எனும் எழுச்சிவாதம் பிறக்கிறது.

கலை என்பது நெறிமுறை, வீரம், ஒழுக்கம், கற்பு, காதல் என்றும் பண்புகளை தரக்கூடியதாக இருக்கவேண்டும்.

அறிவுச் சிந்தனை எங்கிருந்தும் பிறக்கலாம். சிந்தனையில் உருவாகும் தெளிவில்தான் ஏக்கம் நிறையா இன்ப வாழ்வு நிலைத்திருக்கும்.

அறிவுக்கு அப்பாற்பட்ட இலக்கியங்கள் அப்பாலேயே நிற்கட்டும், மனிதனது அறிவுக்கு வேலை தரும் அறிவு இலக்கியங்களே தேவை, என்ற நிலமை, சூழ்நிலை உண்டாக்கித் தீரும் நாள், வெகு விரைவில் வந்தே தீரும் என்பது நிச்சயம் உறுதி.

தாழ்வுச் சிக்கல் என்பது ஒரு மனிதனை எவற்றையும் துணிந்து செய்யத் தூண்டும் பயங்கரவாதச் செயலாகும். இவற்றிற்கு அடிகோலி நிற்கும் முட்புதர்கள், பளிங்கு மண்டப வாசற்படியில் மட்டுமல்ல, குச்சு வீட்டின் சாக்கடையோரத்திலும் உருவாகலாம்.

எதிர்ப்பு உணர்ச்சிகளைத் தாங்கி கொள்ளும் ஒரு வலுவான நெஞ்சுறுதியைக்கொண்டு ஒரு மனிதனின் காழ்ப்புணர்ச்சியை குறைத்து மதிப்பீடு செய்யும் மடமையைப் போக்கிடுவோம்.

ஏழைகள் வாழும் இடத்தருகே வந்தபொழுது, இந்தத் திருக்கயிலாயப் பரம்பரைகள், அங்கே சென்று ஏழைகளுக்கு ஏதாகிலும் உதவி செய்திருக்கிறார்களா?

பொருந்தா மணத்தால் விளையும் சீர்கேடுகளே பெரிய குற்றங்களுக்கு அடித்தளமாக உள்ளது.

நாட்டுப் பற்றினையும், தேசிய நோக்கினையும் நெறி விளக்கக் கோட்பாட்டினையும் வலுப்படுத்தும் அரசு படைப்புகள் சமுதாயத்தை சீர்படுத்தும் அரணாகும்.

அடக்குமுறைக்கு எதிராக திரண்டெழுந்த சமுதாயத்தின் வரலாறு மட்டுமே உயிர் துடிப்பாக உள்ளது.

சதந்திரத்தைப் பெற்றுவிடுவதுகூட எளிது. அதைப் பாதுகாப்பது அதைவிடக் கடினம். பாதுகாப்பதுகூட எளிது. சுதந்திரத்தில் ஏற்படும் பயன் எல்லோருக்கும் சேரச் செய்வது கடினம்

விடுவிக்க முடியாத வாழ்வுச் சிக்கல்களும், ஒன்றுக்கொன்று முரண்பட்ட கொள்கைகளும்; மூட நம்பிக்கைகளும், சுய சிந்தனையற்ற சலிப்பான சத்தற்ற வாழ்க்கை முறையுமேதான் இன்றய வாழ்வை - மனித வாழ்வை - மிருக நிலைக்கே மீண்டும் கொண்டு செல்லுகின்றன.

எத்தகைய கருத்துக்கும் நீங்கள் மனதில் இடம் தருவதோடு மட்டும் நின்றுவிடுகிறது. மாணவ மணிகள் ஆகிய உங்களுக்கு ஆராயும் அறிவு வேண்டும். நீங்கள் அனைவரும் புத்துலகச் சிற்பிகளாக வேண்டும். உங்களிடம் தீரமும், திறமும் இருந்தால் மட்டும் போதாது இத்துடன் அறிவு, ஆராய்சிகளு.ம் தேவை. இதற்கான பண்பும் பயிற்சியும் மிக மிகத் தேவை. அறிவுத் தெளிவோடு ஆராய்ந்து இது சரி, இது தவறு என்று முடிவு கட்டும் மனப்பான்மை உங்களுக்கு வேண்டும். இதோடு திட்டவட்டமான கொள்கைகளும், பெருநோக்கும் உங்களுக்கு இருக்கவேண்டும்.

நம் நாட்டுச் சமுதாயம் சாதி வேற்றுமையினாலும், செல்லரித்துக் கிடக்கிறது. மேலும் செல்லரித்துக் கொண்டுவருகிறது. தீண்டாதார் என்போரைச் சால துறைகளிலும் சாதியின் பேரால் என்றென்றும் தீண்டாதாராக்கியுள்ளோம். அடிமைப்படுத்தியுள்ளோம். இது நல்ல தீர்ப்பா?

நாம் உலகிற்கு தரமுடிந்தது. அறிவுச் செல்வத்தைத்தான்! அதுதான் கொடுக்கக் குறையாத செல்வம்!

வழி தவறி அலைந்தவன், நேர்வழி தெரிந்து நடக்க ஆரம்பிக்கும்போது, செந்நாய் சீறினாலும், சிறுத்தை உறுமினாலும், சிந்தை கலங்கத் தேவையில்லை. நமது பாதையை நாம் விட்டு அகலோம் என்று உறதிகொள்ளவேண்டும். மனம் இருக்க மார்க்கம் இல்லாது போகுமா?

யோகிக்கு புலனடக்கம்! ஞானிக்கு நாவடக்கம்! தேனீக்கு தித்திப்படக்கம்! பூவைக்கு நுண்கலையும் அடங்கவேண்டும். தவறின், இழி மரபென்னும் இலையான்கள் அகத்தையும், பிறத்தையும் மொய்த்துப் பாழாக்கிவிடும்.

சிலர் அந்தரங்கமான கோட்பாடுகளை வெளியே சொல்ல முடியாமல் வடிகால்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இதில் சந்தனமும் இருக்கலாம், சாக்கடையும் இருக்கலாம்.

நாட்டிலே பரவிக் கிடக்கும் நானாவித கருத்துக்களையும் ஊன்றி கவனித்துப் பாருங்கள். மக்கள் தமது இல்லாமைக்கும் இழி நிலைக்கும் வித கர்மாவிலை ஆண்டவன் விட்ட வழி என்று வேதாந்தம் பேசி ஏதோ இருப்பதைக் கொண்டு திருப்தியடைய வேண்டும் என்ற அளவிலே இருப்பதைக் காணமுடியும்.

மேல் நாட்டினர் பொருளைத் தேடுவதிலும் அதனைச் சரியான முறையில் பயன்படுத்துவதிலும் காலம் கழித்தார்கள். ஆனால் நம்மவர்களோ பொருளை அறிந்தோம் என்று கூறிக்கொண்டு அதே பொருள் தரும் சுகத்தில் வாழ்ந்தார்கள், வாழ்கின்றார்கள்.

பகுதி: 1 2 3 4 5 6 7 8 9 10

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு
பொருளாதாரம்
|
பெண் | சமுதாயம்முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai